Friday, March 14, 2014

சாப்பிடு! இது உனக்காக!

பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார். மேலும் சாமுவேல் சமையல்காரனை நோக்கி, 'நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப்படுத்தச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை' என்றார். சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்கு முன் வைத்தான். அப்போது சாமுவேல், 'சாப்பிடு! இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது!' என்றார். (1 சாமுவேல் 9:22-24)

சவுல் அரசனான கதை தெரியுமா? காணாமற்போன தன் தந்தையின் கழுதையைத் தேடி வருகின்றார் சவுல். கழுதையைத் தேடி வந்தவர் அரசனாகத் திரும்புகிறார். இதுதான் கடவுளின் திருவுளம். எங்கே எப்போது திருப்பம் வரும் என்பது அவருக்கே தெரியும்.

ஒவ்வொரு முறையும் நாம் காலண்டரில் திட்டமிடும்போது கடவுள் சிரிப்பார் என்று சொல்வார்கள். ஏனெனில் அவருக்குத் தான் தெரியும் நாளை என்ன நடக்கும் என்று. நாம் நமக்குப் போடும் திட்டங்கள் சாதாரணமானவை. ஆனால் அவர் நமக்குப் போடும் திட்டங்கள் மிகவும் நேர்த்தியானவை.

இன்று வீடுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனக்குள் தோன்றியது: 'எத்தனை வீடுகளில் நம் காலடி படுகின்றது.' 'நற்செய்தியை அறிவிப்பவர்களின் பாதச்சுவடுகள் எத்தனை அழகானவை' என்று எசாயா உரைத்ததும் நினைவிற்கு வந்தது. கடவுள் எப்போதும் நமக்கென நல்ல பங்கையைத் தெரிவு செய்கின்றார். ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் நான் காலடியை விடுகின்றேனா? தடயத்தை விடுகின்றேனா? இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. காலடித்தடம் பாதுகாக்கப்படும். தடயம் ஆய்வு செய்யப்படும். காலடித்தடங்கள் மற்றவர்களின் மேல் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தடயங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சவுல் பெற்ற முதலிடத்தைப் பாருங்களேன். அவர் தேடி வந்ததோ தன் கழுதையை. ஆனால் பங்கேற்பது விருந்தில். அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களைவிட அவருக்கே முக்கிய இடம் தரப்படுகின்றது. முக்கிய இடம் மட்டுமல்ல உணவிலும் சிறப்பான பகுதியே அவருக்குப் பரிமாறப்படுகின்றது. சவுல் அந்நேரம் என்ன நினைத்திருப்பார்? 'எனக்கெதுக்கு இதெல்லாம்?' என்று கேட்டிருப்பார். 'கடவுளின் வழிகள் கடவுளின் வழிகளே!'

இன்று நான் கற்றுக் கொண்டது இதுதான். வாழ்க்கை கழுதையைத் தேடுவது போல இருந்தாலும், எங்கே போகிறோம், என்ன நடக்கிறது என்பது புரியவில்லையென்றாலும் தொடர்ந்து கழுதையைத் தேடுவோம். நமக்கும் எங்காவது ஒரு விருந்து தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். யாராவது ஒருவர் சிறப்பான இறைச்சியை நமக்காக எடுத்து வைத்துக் கொண்டிருக்கலாம். அழைக்கப்பட்டவர்களை விட நமக்கு முதன்மையான இடம் வழங்கப்படலாம்!

2 comments:

  1. Anonymous3/14/2014

    அழைக்கப்பட்டவர்களோ பலர்.ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவரோ சிலர்.அந்த சிலரில் கண்டிப்பாக நீங்களும் ஒருவர்.நல்ல பங்கைத் தேர்வு செய்தது மட்டுமன்றி பலரின் இதயங்களில் தங்கள் காலடித்தடம் பதித்து நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.கண்டிப்பாகத் தங்களுக்கு விருந்து மட்டுமல்ல,சிறப்பான இறைச்சியும் தயாராகிக் கொண்டிருக்கிறது.தொடரட்டும் தங்கள் நற்பணி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anonymous3/14/2014

    "தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது." அன்று மரியாவை நோக்கி கூறிய நம் ஆண்டவர் இன்று "யாரை நான் அனுப்புவேன்? என் பணிக்காக யார் போவார்?" இந்த அழைப்பின் குரலுக்கு செவிகொடுத்து "இதோ நானிருக்கிறேன் உம் பணிக்காக அடியேனை அனுப்பும்." என்று கூறிய உங்களைப் பார்த்து நம் ஆண்டவர் கூறுவதாக உணர்கிறேன். விண்ணகத்தில் உங்களுக்கு கிடைக்கும் கைமாறு மிகுதியாகும். தூய ஆவியின் வல்லமையும் காலம் முழுவதும் உங்களோடு இருப்பதாக.

    ReplyDelete