Saturday, March 8, 2014

தைலம் ஊற்றிய தையல்

இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்த போது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. (அதன் விலை ஏறக்குறைய முந்நூறு தெனாரியம்). அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். (மாற்கு 14:3)

நாளை அகில உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

பெண்ணைத் தமிழ் இலக்கியம் தையல் என்று அழைக்கிறது. விவிலியம் காட்டும் தையலோடு தொடங்குவோம்.

இன்று நாம் சிந்திக்கும் நற்செய்திப் பகுதியை கிரேக்க மொழியில் படித்தோம். இதுவரை காணாத பல விஷயங்கள் எனக்குப் புலப்பட்டன. அந்த விஷயங்களோடு பெண்கள் தினத்தையும், பெண்களையும் கொண்டாடுவோம்.

1. பெத்தானியா. இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதும் நற்செய்தியாளர்கள் இரண்டு ஊர்களின் பெயர்களை மட்டும் அடிக்கடி குறிப்பிடுகின்றனர்: ஒன்று, எருசலேம். இரண்டு, பெத்தானியா. எருசலேமைப் பற்றி எழுதும்போதெல்லாம் இயேசுவுக்கு வரும் எதிர்ப்பையும், அவரின் பாடுகளையும், இறப்பையும் குறிப்பிடுவார்கள். பெத்தானியாவைப் பற்றி எழுதும் போதெல்லாம் ஒருவகையான அமைதி, மகிழ்ச்சி இருப்பது போல எழுதுவார்கள். பெத்தானியா இயேசுவின் செல்லப்பிள்ளை. இயேசுவைச் செல்லப் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட ஊர் பெத்தானியா. ஒவ்வொரு பெண்ணும் ஒரு பெத்தானியா. அப்படியென்றால் ஒவ்வொரு ஆணும் எருசலேமா எனக் கேட்காதீர்கள். பெண்ணால் மற்றவருக்கு அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்கும். பெண்மை இனிமையானது. அதன் இனிமை ஒருசில நேரங்களில் கசப்பது போல இருக்கும். ஆனால் அந்தக் கசப்பு கூட, 'என் இனிமையை நீ புரிந்து கொள்ள மாட்டியா?' என்று கேட்பது போலத்தான் இருக்கும்.

2. தைலம். தைலத்தைப் பற்றிச் சொல்லும் போது மாற்கு நற்செய்தியாளர் இரண்டு பெயரெச்சங்களையும், ஒரு வினைச்சொல்லையும் பயன்படுத்துகிறார். கலப்பற்றது. விலையுயர்ந்தது. பெண்ணின் அன்பும் அப்படித்தான். கலப்பற்றது. ஒரு ஆணைப் பொறுத்தவரையில் தான் செய்யும் பலவற்றில் ஒன்றுதான் அன்பு. ஆனால்; பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் செய்யும் ஒன்றே அன்பு மட்டும்தான். படிப்பு, வேலை, பொழுதுபோக்கு, அன்பு என எல்லாவற்றிலும் ஒன்றாக அன்பைப் பார்ப்பர் ஆண்கள். ஆனால் பெண்கள் படிப்பிலும், வேலையிலும், பொழுதுபோக்கிலும், உறவுநிலைகளில் அன்பு என்ற ஒன்றை அப்படியே கலந்துவிடுவர். 'ஏன் நான் பிசியா இருக்கேன்னு தெரியாதா?' என்று கோபப்பட்டுப் பாருங்களேன். அவள் அழகாகக் கேட்பாள்: 'பிசியா இருக்குற சரி. சாப்பிட்டியா?' இதுதான் கலப்பற்ற அன்பு. தைலம் முந்நூறு தெனாரியம் மதிப்பு உடையது என்கிறார் நற்செய்தியாளர். இயேசுவின் காலத்தில் ஒருவரின் நாள் சம்பளம் ஒரு தெனாரியம். அப்படியென்றால் இந்தப் பெண் தன் ஒரு ஆண்டு சம்பளத்தை இயேசுவுக்குச் செலவிடுகிறாள். இயேசுதான் பெரிதாகத் தெரிந்தாரே தவிர அவளின் வேலைப்பளு பெரிதாகத் தெரியவில்லை. பெண்களுக்குத்தான் முதன்மைப்படுத்தத் தெரியும். தைலச்சிமிழை உடைக்கிறாள் பெண். இது எதைக் காட்டுகிறது? தைலம் முழுமையாக இருந்தது. தைலம் புதிதாக இருந்தது. சிமிழை உடைத்தால் உடனே அதைப் பயன்படுத்த வேண்டும். பியர் பாட்டில் போல! உடைத்தால் உடனே குடித்துவிட வேண்டும். அப்படியே அடுத்த நாள் வைத்தால் அது கசந்து விடும்! அங்கே கூடியிருந்த ஆண்களுக்கு 'ஏன் வீணாக்குகிறாய்?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பெண்களின் அளவுகோல்கள் வேறு. ஆண்கள் மற்றவரின் வங்கிக் கணக்கை வைத்து ஒருவரை எடைபோடுகின்றனர். ஆனால் பெண்கள் மனிதர்களை மனிதர்களாய் மட்டுமே எடைபோடுகின்றனர். ஒருவர் மேல் அன்பைக் காட்டத் தொடங்கிவிட்டால் காட்டிக் கொண்டே இருப்பார்கள். 'ஏய் லூசா! ஏன் இப்படி கிறுக்கு மாதிரி பண்ணுற?' என்று கேட்டுப் பாருங்களேன். மெல்லியதாய்ச் சிரிப்பார்கள். 'ஆம்...பாசமென்றால் கிறுக்குதானே!' என அவர்கள் சொல்வது போல இருக்கும்.

3. துணிச்சல். பெண்கள் என்றாலே பல நேரங்களில் துணிவு இல்லாதவர்கள் என்று தான் நாம் வரையறை செய்து வைத்திருக்கிறோம். ஆனால் பெண்ணிற்கு இயல்பாகவே துணிச்சல் உண்டு. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை பலரை எதிர்கொள்கின்றாள் பெண்: கணவனை, பிள்ளைகளை, பெற்றோரை, உடன் பணியாளர்களை, உடன் பயணிப்பவர்களை, அண்டை வீட்டாரை. ஒவ்வொரு கட்டத்திலும் துணிச்சல் இருந்தால் தான் அவள் வெற்றி பெற முடியும். அவளின் அளப்பறிய துணிச்சல் வெளிப்படும் நேரம்...நம்மைப் பெற்றெடுக்கும் நேரம். ஒரு குழந்தை பிறக்கும் போது குழந்தை மட்டும் பிறப்பதில்லை. அங்கே பெண்ணும் புதிதாய்ப் பிறக்கிறாள். தைலம் உடைத்த தையிலின் துணிச்சல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நம் வாழ்வில் தங்கள் அன்பினால் நம் தலைகளில் தைலம் ஊற்றும் தையல்களை நினைத்துப் பார்ப்போம்.

பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!


2 comments:

  1. Anonymous3/08/2014

    "தைலம் ஊற்றிய தையல்" ..ஒரு சங்கீத ரசனையுடன் கூடிய தலைப்பு.பெண்களைப் பற்றி இத்துணை அழகான விஷயங்களைக் கூறியுள்ளீர்கள். எல்லா ஆண்களும் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால் பெண்களின் வாழ்வே சொர்க்கமாகிவிடும்.இதனாலும் பயனடையப். போகிறார்கள் ஆண்கள் தானே! தாய்மையைப் போற்றும் அனைத்துப் பெண்களுக்கும் " மகளிர் தின் வாழ்த்துக்கள்".

    ReplyDelete
  2. Anonymous3/08/2014

    அழகான பதிவு நன்றி Father. சமூகத்தின் அச்சாணிகளான மகளிருக்கு வாழ்த்துக்களுடன் ஒரு சல்யூட்...

    ReplyDelete