Thursday, December 31, 2015

இரண்டு மகன்கள்

இரண்டு மகன்கள்.

31 டிசம்பர். ஆண்டின் இறுதிநாள்.

மூத்தவன் எழுந்தான். குளித்தான். அறையில் மெழுகுதிரி ஏற்றினான். தன் செப புத்தகத்தை எடுத்து விரித்தான். செபம் முடித்தான். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தான்.

'இறைவா, உனக்கு நன்றி!' என தலைப்பிட்டான்.

1. எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை செய்தேன்
2. என் அப்பாவுக்கு கீழ்ப்படிந்தேன்
3. கடினமாக உழைத்தேன்
4. புதிய நிலம் வாங்கினேன்
5. புதிய பட்டம் பெற்றேன்
6. எனக்கு கீழிருப்பவரை நன்றாக நடத்தினேன்
7. கோவிலுக்கு தவறாமல் சென்றேன்
8. என் சம்பளத்தில் தேவைக்கு போக மற்றதை சேமித்து வைத்தேன்
9. என் உறவினர்களோடு நெருக்கமாக இருந்தேன்
10. என் நண்பர்களோடு விருந்துண்டேன்

'இந்த ஆண்டு செய்யக்கூடியது' என மற்றொரு தலைப்பிட்டான்.

1. புதிய ஊருக்குப் பயணம் செய்வது
2. புதிய நண்பர்களைத் தேடுவது
3. புதிதாக எதையாவது கற்றுக்கொள்வது

எழுதியும், முடிக்காமலும் தந்தையின் குரல் கேட்டு கீழே ஓடினான்...

இளையவன் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். தான் அயர்ந்து கிடந்த இடத்தின் பன்றிகள் எழுப்பிய அரவம் கேட்டு எழுந்தேன். கண்களை கசக்கினான். பசி வயிற்றைக் கிள்ளியது. கையை எட்டி தூரத்தில் இருந்த பானையை சாய்த்துப் பார்த்தான். தண்ணீர் இல்லை. தன் இடுப்பில் கட்டிய ஒற்றைத் துண்டை சரி செய்து, குச்சியால் பன்றிகளை விலக்கி மெதுவாக நடந்தான். நடக்க முடியவில்லை. அப்படியே ஒரு மரத்தின் நிழலில் சாய்ந்தான். சூரியன் தலைக்குமேல் மின்னிக் கொண்டிருந்தான். அவனுக்கு வேலை கொடுத்த வீட்டுக்காரனின் வீட்டிற்குள் சலசலப்பு. 'புதுவருடம்', 'புதுவருடம்' என்று ஏதோ பேசக் கேட்டான். 'ஓ புதிய ஆண்டு பிறக்கப்போகிறதா!' என்று நினைத்துக் கொண்டு, தன் வீட்டில் தான் கடந்த ஆண்டு கொண்டாடிய புத்தாண்டை நினைத்துப் பார்த்தான். இந்த ஓர் ஆண்டிற்குள் எவ்வளவோ நடந்துவிட்டது.

இந்த ஆண்டு நான் என்ன செய்தேன்...

தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்...

1. என் அப்பாவுடன் சண்டை போட்டேன்
2. சொத்தைப் பிரித்து வீட்டைவிட்டு வெளியேறினேன்
3. சீட்டாடினேன்
4. நன்றாக குடித்தேன்
5. நண்பர்களுடன் சண்டை போட்டேன்
6. கிடைக்கும் பெண்களையெல்லாம் தழுவினேன்
7. எதையும் சேமித்து வைக்கவில்லை
8. பசியால் வாடினேன்
9. ஆடையின்றி அவமானப்பட்டேன்
10. பன்றிகள் மேய்க்கும் நிலைக்கு வந்தேன்

புத்தாண்டில் ஏதாவது செய்யலாமே என நினைத்தவன்...

ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்தான். உறுதி செய்தான். புறப்பட்டான்.

ஆம், என் தந்தையின் இல்லத்திற்குப் போவேன்...

மற்றதெல்லாம் தந்தை பார்த்துக்கொள்வார்.



4 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்."இரண்டு மகன்கள்" என்ற பகிர்வு மிகவும் அருமையான பகிர்வு.தந்தைக் கடவுள் மேல் பாரத்தைப்போடுவோம்.அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.கடவுளின் மக்களாக வாழ வலியுறுத்தி இருக்கும் தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. புத்தாண்டிற்காக சொல்ல வந்த கருத்தை மிக எளிமையாக, யாரும் புரிந்து கொள்ளும் வடிவில்( கண்டிப்பாகப் புரிய வேண்டும் என்பதால்) எடுத்துக் கூறிய தந்தைக்கு என் பாராட்டுக்கள்.இன்னும் விடியவில்லையாதலால் ஆண்டின் முதல் நாள் என்று போட முடிவில்லை.இந்த ஆண்டின் தங்களின் அத்தனை முயற்சிகளுக்கும் நன்றிகள்; பாராட்டுக்கள்!!!

    It's not out of our own merit but because of His Mercy that we are stepping into a New Year. A very Happy and Merciful New Year 2016 to My Beloved Son Fr.Yesu, all the Fathers.Sisters and all those who are in some way connected to & benefitted by this Blog. May The Good Lord bless us all in abundance!!!

    I

    ReplyDelete
  3. Happy New year to you Father...
    The second son's new year resolution is apt for this year of mercy..

    ReplyDelete