Monday, December 28, 2015

சிமியோன்

நாளைய நற்செய்தியில் இயேசுவை அவரது பெற்றோர்கள் கோவிலில் அர்ப்பணிக்கச் செல்ல, அங்கே சிமியோன் வருவதை வாசிக்கின்றோம்.

இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை:

1. சிமியோன் தானாகவே வருகின்றார். நம்ம எல்லாருக்கும் சப்கான்சியஸ் மைன்ட் என்று ஒன்று இருக்கிறது. இதுதான் நம் பிரபஞ்சத்தின் ஆற்றலோடு நம்மை நினைக்கிறது. அதாவது, அடுத்து நடக்கப்போவது என்ன என்பது சில நேரங்களில் நமக்கு முன்னதாகவே தெரியும். இன்று மாலை யாரோ வரப்போகிறார் என்பது போல இருக்கும். அன்று மாலையே அந்த நபர் வந்து நிற்பார். ஒரு சின்ன உதாரணம். என் ஆலயத்தில் மாலை திருப்பலிக்கு உதவி செய்ய வயதான தாத்தா ஒருவர் வருவார். நற்கருணை கொடுத்து முடிந்ததும், அவர்தான் நற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போய், பேழையில் வைப்பார். ஒருநாள் அவரிடம் கொண்டு போகச் சொல்லிக் கொடுத்த போது, 'இன்று இவர் இதை கீழே போடுவார்!' என எனக்குத் தோன்றியது. நான்கு வருடங்களாக அவர்தான் இதைச் செய்கிறார். என்றும் எனக்குத் தோன்றாத ஒன்று அன்றி தோன்றியது. அவர் போன கொஞ்ச நேரத்தில் 'டமார்' என்ற சத்தம். பாத்திரம் விழுந்தது. நல்லவேளை எதுவும் கொட்டவில்லை. அப்படியே நேராக கீழே விழுந்ததால் மூடி மட்டும் கழன்று விழுந்தது. அவரின் அங்கி பேழையின் அருகிலிருந்த ஓர் ஆணியில் சிக்கியதால் இப்படி நடந்தது.

இயேசுவை அவர் பெற்றோர்கள் தூக்கிவர, இவ்வளவு நாள் காத்திருந்த சிமியோன் தானாகவே வருகிறார். ஆக, நம் சப்கான்சியஸ் மைன்ட்டோடு நாம் தொடர்பில் இருந்தால், நம் எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் நிறைவேறும் நாள் தெளிவாகத் தெரியும்.

2. சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார். ஏதாவது ஒன்றை நன்றாகச் செய்தால் 'கை வந்த கலை' என்கிறோம். குழந்தையை கையில் ஏந்துவதும் ஒரு கலைதான். சிலர் கை பட்டவுடன் குழந்தை அழும். சிலர் கை பட்டால் சிரிக்கும். மென்மையான உடல் குழந்தையின் உடல். சின்ன அசௌகரியமும் அதன் முகத்தில் சுளிப்பை வரவைத்துவிடும். சிமியோனுக்கு குழந்தையை ஏந்தும் கலை தெரிந்தது. வாழ்வை முழுமையாக வாழ்ந்த ஒருவருக்கு வாழ்வை இப்போதுதான் வாழத் தொடங்க அரும்பியிருக்கும் குழந்தையை கையில் தூக்கியது கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

1 comment:

  1. இயேசுவைக் கோவிலில் அர்ப்பணிக்க அவர் பெற்றோர் தூக்கி வரும்போது ' சிமியோன்' அங்கே வருவதை ' சப்கான்சியஸ் மைன்டின்' உந்துதல் எனக்கூறும் தந்தை அதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார்.இம்மாதிரி செயல்களுக்கு இன்னொரு காரணமும் இருப்பதாக என் அனுபவம் சொல்கிறது.அதாவது நாம் நடக்க வேண்டும் என விரும்பும் காரியம்( wishful thinking) ஒரு நல்ல காரணத்திற்காக இருக்குமேயானால் அங்கே அது நடக்க எந்த சாத்தியக்கூறும் இல்லையெனினும் அது கண்டிப்பாக நடக்கும்.....நம் எண்ணம் மட்டும் சுத்தமாக இருக்க வேண்டும்.அவ்வளவே! இதைப்பலமுறை அனுபவத்தில் உணர்ந்தவள் நான்.அடுத்து தந்தை குறிப்பிடும் 'கை வந்த கலை'. கண்டிப்பாக ஒரு குழந்தையைக் கையில் ஏந்துவதும் கலைதான்.ஆனால் இந்தக் கலையைக் கற்க எந்தக் கல்லூரிக்கும் செல்லத் தேவையில்லை.தேவையெல்லாம் குழந்தையைத் தூக்குபவருக்கும்,குழந்தைக்கும் இடையேயுள்ள ' வைப்ரேஷன்' மட்டும்தான்.இலையெனில் புதிதாக குழந்தை பெற்ற ஒரு இளம் தாய் ....எந்தக் குழந்தையையும் அதற்குமுன் தூக்கியிராவிடினும் கூட வெகு இலாவகமாக,நேர்த்தியாக,தன் குழந்தையை ஒரு பூப்போலத் தூக்குகிறாளே அது எப்படி சாத்தியமாகும்? ஆமாம் ..உண்மைதான்.வாழ்வை முழுமையாக வாழ்ந்த ஒருவருக்கு இப்போதுதான் வாழத்தொடங்க அரும்பியிருக்கும் குழந்தையை கையில் தூக்கியது கண்டிப்பாக மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.இதை நானும் அண்மையில் உணர்ந்தேன். முதுமையின் விளிம்பில் இருக்கும் நான் போன வாரம்,பிறந்து ஒரு மாதமே ஆன ஒரு குழந்தையை என் மடியில் வைத்திருக்கும்போது மீண்டும் ஒரு தாயான சில்லிப்பு என்னுள் ஏற்பட்டதை உணர முடிந்தது. குழந்தையும் இன்னொரு தெய்வமில்லையா? இந்த என் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளக் காரணமான தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete