Thursday, December 3, 2015

கண்ணீரும், தண்ணீரும்

மழை வெள்ளம் வீட்டுக்குள் வந்து கொண்டிருந்ததால், வீட்டைக் காலி செய்து வேறொரு வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த தன் மகளைக் காண வந்திருந்தாள் அவளின் தாய்.

மகளின் கோலம் கண்டவள் வெளியே சென்றாள். நகரின் மேலான இடம் எது என்று தேடினாள். வீடு ஒன்று வாடகைக்கு தயாராக இருக்கக் கண்டாள்.

தன் மகளின் வீட்டுக்கு மீண்டும் ஓடியவள், ஒரு 'குட்டியானையைப்' பிடித்து விறுவிறுவென்று எல்லாவற்றையும் ஏற்றி, முன்னிருக்கையில் தான், தன் மகள், மகளின் இரு குழந்தைகள் என அமர்ந்து புதிய வீட்டுக்குப் பயணமானாள்.

புதிய வீட்டின் பிரமிப்பு கண்டு, 'அப்பாடா' என ஆச்சர்யப்பட்டாள் மகள்.

'ஆச்சி, நீ மட்டும் வரலைன்னா அம்மா இன்னும் அழுதுகிட்டே அந்த வீட்டுல இருந்திருப்பா' என்றாள் மகள்.

'உன் அம்மாவின் கண்ணீரும் அப்போ அந்தத் தண்ணீரில் சேர்ந்து இன்னும் நம்மை ஆழ்த்தியிருக்கும்' என்றாள் ஆச்சி.

சென்னை மற்றும் கடலோர நகரங்கள் இன்று தண்ணீரில் மிதக்கின்றன.

'நெருப்பு, தண்ணீர்' - இந்த இரண்டும் எந்தப் பொருளில் பட்டாலும் ஆபத்து பொருளுக்கே.

நிறைய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட சென்னைக்கு மட்டும் ஏன் இத்தனை கூப்பாடு? என்றான் என் நண்பன்.

சென்னை என்பது ஒரு டைட்டானிக் கப்பல் போல. இது தங்கள் வாழ்வை மேம்படுத்தும் என்று இங்கே தொங்கிய கயிற்றையவாது பிடித்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் ஊர்களை விட்டு வந்து இங்கே குடியேறியவர்கள் பலர். ஆiகாயல்தான் இதன் பெயர் வந்தாரை வாழ வைக்கும் சென்னை. சென்னைக்குப் போனா எப்படியும் பிழைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்வார்கள். இது பொய் இல்லை. உண்மைதான். எனக்கும் சென்னைமேல் தீராத காதல் உண்டு. வாழ்ந்தால் சென்னையில்தான் வாழணும் என நினைத்திருக்கிறேன். டைட்டானிக்கில் எல்லா வசதிகளும் இருந்தும் அது மூழ்கிவிட்டது. இதற்கான காரணங்கள் மூன்று:

அ. 'கடவுளே நினைத்தாலும் இதைக் கவிழ்க்க முடியாது' என்று டைட்டானிக் நிறுவனம் விளம்பரம் செய்தது. இந்த நம்பிக்கையில்தான் தேவையான மீட்பு கருவிகள்கூட அவர்கள் கொண்டு செல்லவில்லை. சென்னை வாழ் மக்களும், அரசும் இதுவரை அப்படித்தான் நினைத்திருந்தது.

ஆ. தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை டைட்டானிக் ஏற்கவில்லை. 'பனிப்பாறை இருக்கிறது. வேறு பாதையில் செல்லுங்கள்' என்ற படகின் எச்சரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை டைட்டானிக். வானிலை எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை சென்னை.

இ. வாழ்க்கைப் படகுகள் குறைவாக இருந்தன டைட்டானிக்கில். இதே நிலைதான் சென்னையிலும்.

நேற்று காலை முதல் சமூக வலைத்தளங்கள் வழியாக உதவிகள் கேட்கப்படுகின்றன, வழங்கப்படுகின்றன.

அதில் ஒருவரின் டுவிட்டர் எனக்குப் பிடித்தது:

'உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்யணும்னா சொல்லுங்க. நான் செய்றேன். என்னால் முடிந்த அளவு!'

மற்றொரு இடத்தில், 'எங்களுக்கு உணவு போதும், அடுத்த வீட்டில் கொடுங்கள்' என்று தன் பசி பொறுத்து அடுத்தவருக்கு உதவுகிறாள் ஒரு மாடிவீட்டுப்பெண்.

தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள், கூடங்கள் அனைத்தும் மக்களுக்காக திறந்துவிடப்படுகின்றன.

வீட்டை இவர்கள் விட்டுவிட்டு வந்தாலும் இவர்கள் எண்ணம் தங்கள் வீட்டின்மேல்தானே இருக்கும்.

சின்னக் குழந்தைகள் ஆசையாய் சுவரில் தீட்டிய பென்சில் ஓவியங்கள்,

நடுத்தர வர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்து வாங்கிய டிவி, பிரிட்ஜ், அடுப்பு, பைக்,

பாடப்புத்தகம், சான்றிதழ், ரேஷன் கார்டு,

நாய்க்குட்டி, கன்று, ஆடு, மாடு, வீட்டிற்கு வெளியே கழற்றிப்போட்ட செருப்பு, விலக்குமாறு,

போர்வை, பாய் எல்லாவற்றையும் வாரி அணைத்துக் கொண்டது தண்ணீர்.

இந்தத் தண்ணீரால் சிறு குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் பாடும் பாட்டை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ஆபத்து என்றாலும் ஆம்புலன்ஸ் வராது.

இறந்து போனாலும் புதைக்க முடியாது, எரிக்க முடியாது.

சாலை, இருப்புப்பாதை, வான்வழி - எல்லாம் அடைபட்டுவிட்டது.

எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம் என்பதுபோல அரசியல் கட்சிகள் ஓட்டு சேகரிக்கின்றன. 'மாதம் மும்மாரி பொழிகிறதா' என்று அந்தக் காலத்து அரசன் கேட்பது போல அடிக்கடி நிலவரம் கேட்டுக்கொள்கிறார் அம்மா.

வானம் தன் கண்களை மூடட்டும்.

நோவா காலத்துப் பெருவெள்ளம் போல இருக்கும் இந்த நிலையில்,

இந்த நோவாக்கள் அனுப்பும் புறாக்கள் விரைவில் ஒலிவக் கிளையோடு கூடு திரும்பட்டும்.

கண்ணீரும்,

தண்ணீரும்

காயட்டும்.


3 comments:

  1. சாந்தம் மேலிட இருக்கையில் நாம் 'நீர்த்திவலை'என்றும்,'தீபம்'என்றும் கூறும் விஷயங்கள் தங்களின் இன்னொரு முகத்தைக் காட்டும்போது 'வெள்ளம்' எனவும்,'நெருப்பு' எனவும் தங்களின் விசுவரூபத்தைக் காட்டுகின்றன. இதுதான் இன்றைய சென்னையின் நிலை.நேற்றுவரை தங்கள் டி.வி முன் ஒய்யாரமாக்க் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஆடவரும்,பெண்டிரும் இருக்க இடமின்றி,உண்ண உணவின்றி,குடிக்க நீரின்றி திணருவதைப் பார்க்கையில் ' இதுதான் வாழ்க்கையா என்ற விரக்தி கேள்வியாக வெளிப்படுகிறது.' புதிய தலைமுறை' யில் ஒருவரின் பேச்சு.... "இப்படிக் கொட்டித் தீர்க்கும் இந்த மழை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் எதிரி அல்ல; மனிதனுக்கு மட்டுமே.காரணம் மனிதன் இயற்கையை மதிப்பதில்லை".இப்படி ஒரு நிலமை வருமென்று பலவிதமான எச்சரிக்கைகள் இருந்தும் அதைக் கண்டு கொள்ளாத அரசாங்கமும்,அரசியல் வாதிகளும் எதற்காக என்ற கேள்வியை முன் வைக்கின்றனர் மக்கள்.இந்த நிலையிலும் நாம் பாரத்துப் பெருமைப்படும் வித்த்தில் எத்தனையோ ' உதவும் கரங்கள்!' என்னுடைய தம்பி மகள்...ஆறு பேர் அடங்கிய குடும்பம்....கணவன், மனைவி இருவர் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டனர் என்பது ' மனித நேயம்' இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.இந்த நிலை நமக்கு இரு பாடங்களைப் புகட்டுவதாக உணர்கிறேன்.1.என்ன தான் மனிதன் வித்தைகளைப் பயின்றாலும் ஒருநாளும் அவனால் இயற்கையை மேற்கொள்ள இயலாது.2. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள்....நேற்று வீட்டிற்குள் இருந்தவர் இன்று வீதிக்கு வருவதென்றால் ...அதுதான் வாழ்வின் அநித்தியம்.தந்தையின் இறுதிவரிகள் ..." இந்த நோவாக்கள் அனுப்பும் புறாக்கள் விரைவில் ஒலிவக் கிளையோடு கூடு திரும்பட்டும்....கண்ணீரும்,தண்ணீரும் காயட்டும்" தந்தையின் இந்த ஆறுதலான வார்த்தைகள் துயரிலிருக்கும் அனைவருக்கும் போய்ச் சேரட்டும்.மனிதாபிமானம் கசியும் வரிகளுக்காக தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."கண்ணீரும், தண்ணீரும்" இந்த நிலையை சென்னையிலும் கடலூரிலும் பார்த்தால் நம் கண்களும் குளம் தான்.நம் மக்களின் நிலை எல்லோரையும் ஆழ்கடலில் அமர்த்தியுள்ளது. தனக்கு முன் சென்ற படகின் எச்சரிக்கையை டைட்டானிக் ஏற்கவில்லை. 'பனிப்பாறை இருக்கிறது. வேறு பாதையில் செல்லுங்கள்' என்ற படகின் எச்சரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை டைட்டானிக். வானிலை எச்சரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை சென்னை.மேற்கூறிய இந்த வார்த்தைகளின் படி 2008 - ம் வருடம் சென்னைக்கு வர இருக்கும் diaster management-ஐக் குறித்து சர்வதேச வானிலை மையம் அப்போது இருந்த அரசிடம் பேசியுள்ளார்கள்.நமக்கு வரப்போகும் வெள்ள பேரழிவை குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.ஆனால் அப்போது இருந்த அரசு 2026 வரைக்கும் சென்னைக்கு ஒன்னும் நடக்காது என்று கூறி சேப்டரேயே க்ளோஸ் பண்ணிவிட்டார்கள்.அதனால் தான் இன்று மக்களின் கூப்பாடு அதிகமாயுள்ளது.
    கடவுள் கருணை உள்ளம் கொண்டவர். அவர் படைத்த மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.கடவுளும் நம்மேல் இரக்கம் கொண்டே அன்றைக்கு வானிலையை வைத்து நல்ல மனிதர்கள் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்.ஆனால் நாம் தான் பிறர் மூலம் வந்த அவரின் குரலை கேட்கவில்லை.சரி எல்லாவற்றிற்கும் நன்றி கூறிவிட்டு வரப்போவதை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.கடவுள் நம்மை கண்டிப்பாக தொடர்ந்து ஆசீவதிப்பார் என்பதை நம்புவோம்.

    ReplyDelete
  3. அந்நிய நாட்டில் இருந்தாலும் நம் மக்களின் நிலை கண்டு கலங்கும் தந்தைக்கு ஆறுதலும்,நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete