Saturday, January 2, 2016

புதியது

புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்.

புதியது ஒரு பக்கம் வியப்பாகவும், மறுபக்கம் பயமாகவும் இருக்கும்.

நாணயத்திற்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இல்லையா?

இந்த நேரத்தில் எனக்கு எண்ணிக்கை நூல் 13-14தான் நினைவிற்கு வருகிறது.

இஸ்ராயேல் மக்கள் கானான் என்னும் புதிய நாட்டிற்குள் நுழையப் போகின்றனர். புதிய நாடு எப்படி இருக்கம் என எல்லார் கண்களிலும் ஏக்கம். புதிய நாட்டை வேவு பார்க்க, மோசே குலத்திற்கு ஒன்றாக 12 பேரை அனுப்புகின்றார். திரும்பியவர்கள் தாங்கள் சென்ற இடத்தில் கண்ட திராட்சை குலையை தடியில் கட்டி, இரண்டு பேர் சுமந்து வருகின்றனர். அந்த அளவிற்கு செழுமையாக திராட்சை பழுத்திருந்தது. குலையை மோசேயின் காலடிகளில் போடுகின்றனர்.

உளவாளிகளில் ஒரு குழுவினர்: 'நாம் உடனடியாக போய் நாட்டைப் பிடித்துக் கொள்வோம். ஏனெனில் நாம் அதை எளிதில் வென்றுவிடமுடியும்!' என்றும்,

மற்றவர்கள், 'நாம் அம்மக்களுக்கு எதிராக போக முடியாது. ஏனெனில் அவர்கள் நம்மிலும் வலிமை மிக்கவர்கள்' என்றும் சொல்கின்றனர்.

மக்கள், முதலாவது குழுவினரின் நம்பிக்கை வார்த்தைகளை விடுத்துவிட்டு, இரண்டாமவர்களின் அச்சத்தின் வார்த்தைகளைப் பற்றிக் கொள்கின்றனர்.

புலம்பல்.

'எகிப்து நாட்டில் இறந்திருந்தால் எத்துணை நலம்! நாம் எகிப்து நாட்டுக்கு திரும்பி செல்வது நலமன்றோ!'

நம் மனத்தில் பயம் வரும்போது, ஒன்று இறந்துவிட நினைக்கிறோம். அல்லது, கடந்த காலத்தின் பாதுகாப்பு போர்வைக்குள் பதுங்கிக்கொள்ள விழைகிறோம்.

மோசேயும், ஆரோனும் செய்வதறியாது முகங்குப்புற விழுகின்றனர். இப்போது அவர்களுக்கு வயதாகிவிட்டது. தங்களின் வலிமையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை.

அப்போது இரண்டு இளம் ரத்தங்கள் - யோசுவா மற்றும் காலேபு - பாய்ந்து வருகின்றனர்:

'ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் நாம் இந்த நாட்டை அடைவோம்.
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.
அஞ்ச வேண்டாம்.'

இந்த புதிய ஆண்டில் ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால்

நாமும் நமக்கு நாமே வாக்களிக்கும் நாட்டை அடைவோம்.

ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.

அஞ்ச வேண்டாம்.


3 comments:

  1. என் சிறு வயதிலிருந்து இந்தக் 'கானான்' எனும் வார்த்தை எனக்கு ஞாபகப்படுத்துவது ஒரு சாக்லேட்டை...காரணம் ஞானோபதேச வகுப்பில் இது பாலும் தேனும் பொழியும் நாடு எனப் படித்ததால்.இப்படிப்பட்டதொரு செழுமையான நாட்டைத் தங்கள் கைவசப்படுத்த நினைக்கின்றனர்,மோசேயும்,ஆரோனும்.ஆனால் அவர்களின் முதுமை அவர்களுக்கு கலக்கத்தையும்,மருட்சியையும் தருவதால் யோசுவாவும், காலேபும் களத்தில் குதிக்கின்றனர்.'இளங்கன்று பயமறியாது' என்பதற்கேற்ப அவர்கள் ஆண்டவரில் தங்களின் நம்பிக்கையை மட்டுமே நம்பி முன்னேறுகின்றனர்.புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் நமக்கு இவர்கள் வழியாக இறைவன் கூறுகிறார்.." அஞ்சாதே! மகனே!/ மகளே.நான் உன்னோடு இருக்கிறேன்". ஆம் கலக்கத்தை விட்டு நம்பிக்கையை அணிந்து கொள்வோம்." என் தேவன் வாழும் பூமி இது; எத்துணை அழகு இது" எனப்பாடும் நேரமிது. நம்மில் நம்பிக்கை விதைகளைத் தூவிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்.அஞ்ச வேண்டாம்.இந்த வார்த்தைகள் போதும் இந்த ஆண்டை இனிமையாக துவங்க. புத்துயிரும், புதிய ஆற்றலும் தரும் தந்தையின் வார்த்தைகளுக்கு நன்றியும், பாராட்டுக்களும் !!!

    ReplyDelete
  3. புதிய ஆண்டில் புது பொலிவுடன் ... பளீச் கலரில் .... நியூ லுக் blog ... வாழ்த்துக்கள்...

    ReplyDelete