Friday, December 18, 2015

புது நம்பர்

நேற்று மாலை ரொம்ப சீரியஸா படித்துக்கொண்டிருந்தபோது, அலைபேசியில் டிங் என்று ஒரு சத்தம். மெசஜ் வந்திருக்கு. கையை நீட்டி எட்டி எடுத்து, ஸ்கீரினை ஸ்லைட் பண்ணாமல் அப்படியே என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.

புதிய எண். அதன் முன் இத்தாலி நாட்டின் கோட் 39 என்று இருந்தது.

'ஹாய்' என்று மட்டும் இருந்தது.

'ஸ்லைட் டு அன்லாக்' என்பதை ஸ்லைட் செய்து திறந்தால்,

'ஹாய்! ஐ லவ் யூ சோ மச்!'

என்று இருந்தது.

புது நம்பரா இருக்கிறதே என்றாலும்,

'இது ஏதோ நம்ம பயபுள்ளையோட விளையாட்டுதான்' என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன், என்னுடன் படிக்கும் அருட்தந்தை, 'டேய்! புது நம்பர்ல இருந்து மெசேஜ் அனுப்புனா பதில் அனுப்ப மாட்டாயா?' என்றார்.

'புது நம்பர் யாராக இருக்கும்' என்ற கிளுகிளுப்பு சட்டென்று அடங்கியது.

நிற்க.

நாளைய முதல் வாசகத்தில் சிம்சோனின் அம்மாவுக்கும், நாளைய நற்செய்தியில் எலிசபெத்தின் வீட்டுக்காரர் சக்கரியாவுக்கும், புது நம்பரிலிருந்து மெசேஜ் வருவதை வாசிக்கின்றோம்.

சக்கரியாவின் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.

ஆலயத்தில் தூபம் காட்டிக் கொண்டிருந்தவருக்கு அடிக்கிறது ஜாக்பாட். அங்கு வந்த வானதூதர், 'உனக்கொரு மகன் பிறப்பான்...அவன் உன்னைப் போலவே இருப்பான்' என்று பாடுகிறார்.

இவருக்கு தலையும் புரியல, காலும் புரியல.

பதட்டத்தில், 'இது எப்படி எசமான் ஆகும்?' என்று கேட்டுவிடுகிறார்.

'நான் கடவுள் முன்னிலையில் நிற்கும் கபிரியேல் தூதர். நான் சொல்றதையே நீ நம்பலயா?' என்று சொன்னவர், அப்படியே ரிமோட் கன்ட்ரோலை சக்கரியாவை நோக்கி நீட்டி, 'ம்யூட்' பட்டனை அமுக்கி விடுகிறார்.

'ஏன்யா கேள்வி கேட்டது குத்தமா?' என்று நினைத்துக்கொண்டு வெளியே வருகிறார் சக்கரியா.

ஒரு ஆறு மாதம் கழித்து இதே வானதூதர் நாசரேத்துக்குப் போறார்.

அங்கே மரியாவுக்குத் தோன்றுகிறார். இதே மாதிரி, 'உனக்கொரு மகன் பிறப்பான்...அவன் கடவுளைப் போல இருப்பான்...' என்று பாடுகிறார்.

அங்கேயும் அதே கேள்வி, 'இது எப்படி எசமான் ஆகும்?'

ஆனால், நம்ம கபிரி ம்யூட் பட்டன் போடல. 'இது இப்படித்தான் ஆகும்' என்று விலாவாரியாக பதில் சொல்கின்றார்.

இப்ப நம்ம கேள்வி இதுதான்:

'ஏம்ப்பா கபிரி...சக்கரியா கேட்டா  ம்யூட் பண்றீங்க! மரியா கேட்டா விளக்கம் சொல்றீங்க!'

'ஆம்பளைக்கு ஒரு நியாயம்...பொம்பளைக்கு ஒரு நியாயமா?'

ஆனா, பொண்ணுங்க என்ன சொன்னாலும், மனசு இளசாகிவிடும் என்பது உண்மைதான்.

இரண்டு வாரங்களாக ஜெயா மேலிருந்த கோபம், இரண்டு நாட்களுக்கு முன் அவரின் வாட்ஸ்ஆப் பேட்டியை யுடியூபில் கேட்டவுடன், அவர்மேல் கொஞ்சம் இரக்கம் வந்துவிட்டது.

எதற்காக கபிரியேல் தூதர் சக்கரியா மேல் கோபப்படுகிறார்? அவரின் கோபம் நியாயமானதா?

நியாயமானதே.

எப்படி?

சக்கரியா ஒரு அருட்பணியாளர். திருச்சட்டம் கற்றவர். ஆலயத்தில் பணியாற்றுபவர்.

ஆக, அப்படிப்பட்ட ஒருவர் கடவுளின் செய்தியை நம்பாமல் இருக்கலாமா?

மரியா பாவம். கிராமத்துப் பொண்ணு. கடவள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆக, கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் அவரின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், ஆபத்து அதிகம். ஆனால், பல நேரங்களில் அருகில் இருப்பவர்கள்தாம் கடவுளின் செய்தியை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.

இல்லையா?


4 comments:

  1. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே/சென்றாளே, கடவுள் இவனுக்கு/இவளுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார்.தந்தை மிகவும் அழகாக சித்தரித்துக் காட்டியுள்ளார்.

    நாம் கடவுள் மீது அதிக பற்று வைத்திருக்கிறபோது, நாம் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், துன்ப வேளைகளில், நெருக்கடி வேளைகளில் வெகுஎளிதாக நாம், சோர்ந்து போவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. அத்தகைய தருணத்தில் செக்கரியாவைப் போல, மனஉறுதி உள்ளவர்களாக வாழ்வோம்.
    உண்மையான அன்புக்கு செக்கரியா சிறந்த எடுத்துக்காட்டு. பணத்திற்காக, பகட்டிற்காக, அழகிற்காக பெண்களை விவாகரத்து செய்யும் பழக்கம், இருக்கிற இந்த காலச்சூழ்நிலையில், பெண்களின் நிலை அடிமைப்பட்டிருந்த அன்றே, பெண்ணை முழுமையாக, உண்மையாக அன்பு செய்த செக்கரியா உண்மையில் போற்றுதற்குரியவர்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும் !!!

    ReplyDelete
  2. என்ன ஃபாதர் ! ஏதேனும் படத்துக்கு 'ஸ்டோரி ரைட்டரா'ப் போற உத்தேசமா என்ன? ரொம்ப அழகான ஒரு குறும்படம் பார்த்த உணர்வைக் கொடுத்துவிட்டீர்கள்.'ஏம்ப்பா கபிரி....சக்கரியா கேட்டா ம்யூட் பண்றீங்க!மரியா கேட்டா விளக்கம் சொல்றீங்க!'.... வாய் விட்டு சிரித்து விட்டேன்.சாதாரணமாவே பொண்ணுங்க என்ன சொன்னாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்பது உலகறிந்த உண்மை எனும் போது உலக மீட்பரை சுமக்க விருந்த மரியாளின் எண்ண ஓட்டத்தில் ஒரு நியாயம் இருக்கும் என்பது கபிரியேலுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?தாங்களே சொல்லி விட்டீர்கள்....கடவுளுக்கு அருகில் இருப்பவர்கள் அவரின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்து அதிகம் என்று.இதில் ஒருபடி மேலே போய் திருமுழுக்கால் இறைவனை ஏற்றுக்கொண்ட அத்தனை பேருமே அவருக்கருகில் இருப்பதாக எடுத்துக் கொண்டால் யார் இறைவனின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும் ஆபத்து அதிகமே.நாம் எந்தப் பக்கம்?? யோசிக்க வைக்கும் பதிவு.ரொம்ப காஷுவலா ஆரம்பித்து சீரியஸான விஷயத்தைப் பகிர்ந்துள்ள தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  3. The illustration is beautiful...

    ReplyDelete
  4. The illustration is beautiful...

    ReplyDelete