Saturday, December 26, 2015

கொண்டாட்டம்

'நதாலே கொன் இ துவோய்!' (Natale con i tuoi!)
'பாஸ்க்வா கொன் கி வோய்!' (Pasqua con chi vuoi!)
என்பது இத்தாலிய சொலவடை.

அதாவது, கிறிஸ்துபிறப்பு (கொண்டாட்டம்) உன் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புக்களோடு. உயிர்ப்பு (கொண்டாட்டம்) நீ விரும்புபவர்களோடு!

இத்தாலியனில் கிறிஸ்துமஸ் என்பது ஆண்பால். உயிர்ப்பு பெருநாள் என்பது பெண்பால்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா இல்லக் கொண்டாட்டத்தில் இங்கு முதன்மையானது உணவு:

24 டிசம்பர் மாலை 7 மணி. இந்த நேரத்தில் உண்ணும் உணவிற்குப் பெயர் 'செனோனி' (அதாவது, பெரிய இரவு உணவு). இந்த விருந்தில் முதன்மையாக இருப்பது மீன். குடும்பத்தினர் ஒரே மேசையில் அமர்ந்து இதை உண்பர். இந்த விருந்திற்கு பெரும்பாலும் மற்றவர்கள் அழைக்கப்படுவதில்லை.

25 டிசம்பர் மதியம் 1 மணி. இதுதான் முதன்மையான உணவு. இங்கே வீட்டில் உள்ளவர்களும், அழைக்கப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் இணைந்து உண்பர். இது ஏறக்குறைய 5 மணி வரை நீடிக்கும்.

26 டிசம்பர் மதியம் 1 மணி. 'சாந்தோ ஸ்தேஃபனோ' என்றழைக்கப்படும் இந்த நாளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் உண்பர்.

சிகப்பு - கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகளில், விருந்துகளில், இல்லத்தின் அலங்காரங்களில் சிகப்பு நிறம் மேலோங்கி நிற்கும். கடந்த தலைமுறையினர் இந்த நாளில் சிகப்பு நிற மேலாடை, உள்ளாடைகளும் அணிவார்களாம்.
நட்சத்திர பூ. நட்சத்திர பூக்கள் என்றழைக்கப்படும், சிகப்பு மற்றும் பச்சை கலந்த செடிகள் வீடு முழுவதும் வைக்கப்படும்.

பரிசுகள். இந்த நாட்களில் குழந்தைகளும், பெரியவர்களும் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். குழந்தைகளுக்கு பெரியவர்கள் கிறிஸ்து பிறப்பு நாளில் 'சாந்தா கிளாஸ் கிப்ட்' என்றும், திருக்காட்சி நாளில் 'ஞானியர் கிப்ட்' என்றும் பரிசுகள் வழங்குவர்.

பானத்தோனே. பந்தோரோ. இந்த இரண்டும் இந்த நாட்களில் உண்ணப்படும் கேக் வகை. இவற்றோடு ஸ்புமாந்த்தே (அதாவது, ஷேம்ப்பைன்) அருந்துவர்.

குடில். எல்லா வீடுகளிலும் குடில் அமைத்திருப்பர். குடில் டிசம்பர் 8 அன்று அமைக்கப்பட்டு ஜனவரி 6 அன்று கலைக்கப்படும். வீட்டிற்கு உள்ளே, வெளியே நட்சத்திரங்கள் கட்டுவது கிடையாது. ஆனால் நட்சத்திரங்கள் கட்டுவது நம் ஊரில் அதிகம்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மதிய உணவிற்கு என் பங்குத்தந்தையின் சித்தி வீட்டிற்குச் சென்றோம். இனிய கொண்டாட்டம்.


1 comment:

  1. " கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம் உன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புக்களோடு"... எந்தக் கொண்டாடத்திற்குமே அர்த்தம் தருவது நம் பெற்றோரும்,உடன் பிறந்தோருமே! நண்பர்களும் இந்த வட்டத்திற்குள் வந்தாலும் அந்த வட்டம் மாறக்கூடியது சூழ்நிலைக்கேற்ப.ஆனால் முந்தைய வட்டமோ என்றுமே நிலையானது. ந்த்தம் பட்டியின் புதல்வன் தான் தேர்ந்து கொண்ட நாட்டை மட்டுமின்றி, அந்த மக்களையும்,அவரின் சகல பழக்கவழக்கங்களையும் தனதாக்கிக் கொண்டது மட்டுமின்றி, அவற்றை நம்முடனும் பகிர்ந்து கொண்டுள்ள விதம் அவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது."Be a Roman in Rome" என்பது தந்தையின் விஷயத்தில் முழுக்க முழுக்க உண்மையாகிறது.பொருட்களைப் பகிர்வது மட்டுமா பகிர்தல்? இல்லை....இந்த மாதிரி விஷயங்களையும்,அனுபவங்களையும் கூடத்தான்.தன் வயது நண்பர்களையும் தாண்டி ரோசாப்பாட்டி போன்ற முதியவர்களோடு ,அவர்களது குடும்பங்களோடு ...குடும்பத்தில் ஒருவராகப் பழகும் தந்தைக்கு என் பாராட்டு.இறைவன் தங்களையும்,தங்கள் செயல்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக! அன்புடன்.....

    ReplyDelete