Wednesday, December 9, 2015

மென்மை வன்மை

'யாக்கோபு என்னும் புழுவே,
இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு!
நான் உனக்குத் துணையாக இருப்பேன்.'

(காண்க. எசாயா 41:13-20)

மெசியாவின் வருகை செய்யும் மற்றொரு மாற்றம் மென்மையானவை வன்மையாகும்.

மென்மைக்கு உருவகமாக புழுவும், வன்மைக்கு உருவகாக போரடிக்கும் கருவியும் சொல்லப்படுகிறது.

புழு - நெளியக் கூடியது. ஏனென்றால் அதற்கு முதுகெலும்பு அல்லது எலும்பு இல்லை. திடமானது எதுவும் அதில் கிடையாது. நாம் எலும்பு இல்லாமல் வெறும் சதையாக இருந்தால் எப்படி இருக்கும்? நம்மைக் கொடியில்தான் தொங்கவிட வேண்டும். நம்மால் உட்கார, நிற்க முடியாது.

இப்படிப்பட்ட மென்மையான ஒன்றை இறைவன் எப்படி மாற்றுகிறார் என்றால் போரடிக்கும் கருவியாக.

கிராமங்களில் தட்டைப்பயிறு, பாசிப்பயிறு போன்றவற்றை போரடிப்பதற்காக சாலைகளில் பரப்பி வைத்திருப்பார்கள். அவற்றின் மேல் செல்லும் வாகனங்களின் வன்மை அவற்றை உடைத்து பிரித்துவிடும். நெல்லைப் போரடிக்க, பயிறைப் போரடிக்க சில நேரங்களில் நீண்ட குச்சி அல்லது கம்பியையும் சிலர் பயன்படுத்துவதுண்டு. இதன் தன்மை எப்படி இருக்க வேண்டுமென்றால் வளைந்து போகாததாக, உடையாததாக, நெளியாததாக இருக்க வேண்டும். சிறிய நெளிவு இருந்தாலும் முழுமையான பலன் கிடைக்காது.

முழுமையான மென்மையை முழுமையான வன்மையாக மாற்றுகிறார் இறைவன்.

இப்படி வன்மையாக மாற்றியது நெளியாது என்பதற்கு இறைவாக்கினர் இன்னும் ஒரு உருவகம் தருகின்றார். இந்த போரடிக்கும் கருவியை வைத்து எதை அடிப்பார்களாம்? மலைகளையும், குன்றுகளையும். கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவிற்கு இருக்கிறது இறைவாக்கினரின் கற்பனை.

2 comments:

  1. பல சமயங்களில் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்கள் நம்மை ஒரு ' புழு பூச்சி' நிலைக்குத் தள்ளிவிடும்.நம் இயலாமை நமக்கே சுமையாக,நம்மையே நாம் வெறுக்கக் கூடியதாக மாற்றிவிடும்.ஏதேனும் ஒன்று நடந்து நாம் பழைய நிலைக்குத் திரும்ப மாட்டோமா என்ற ஆதங்கம் நம்மை தின்றுவிடும்.ஆனால் புழுபூச்சிக்கும் 'மேட்டிமை' அளிப்பவர் நம்மருகில் இருக்கிறார் என்று நமக்கு ஆறுதல் சொல்கிறது இன்றையப்பதிவு.நாம் வெறுக்கத்தக்க மென்மை கொண்ட ஒரு 'புழு'வைத் தானியங்களைப் பிரித்தெடுக்கும் கடினத்தன்மை கொண்ட ஆயுதமாக மட்டுமின்றி மலைகளையும்,குன்றுகளையும் கூட சரிசெய்யும் கருவியாகவும் மாற்றலாம் எனில் அவர் சாயலாகப் படைக்கப்பட்ட நமக்கு எத்துனை மேன்மையான விஷயங்களைச் செய்ய வல்லவர் அவர்." அஞ்சாதிரு! பொடிப்பூச்சியே, நான் உனக்குத் துணையாக இருப்பேன்." இறைவன் என்னையே பார்த்துச் சொல்வதாக உணர்கிறேன்.நாம் நம்பும் தெய்வம் நம்மோடிருக்கையில் நமக்கென்ன மனக்கவலை? ஆறுதல் மிக்க வார்த்தைகளுக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."மென்மை வன்மை" பதிவிற்கு நன்றி.முழுமையான மென்மையை முழுமையான வன்மையாக மாற்றுகிறார் இறைவன்.மிக அருமையான வார்த்தை."சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற சொல்லாடாலும் இதற்க்கு பொருந்தும்.எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.எல்லையை மீறினால் கடவுளே நமக்குச் சரியான ஒன்றை காட்டுவார்.மேலும், கடவுளை நம்பினால் எல்லாம் கூடும் என்பதையும் நம்புவோம்.தந்தைக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.கரம் தட்டி பாராட்டுக்களும்!!!

    ReplyDelete