Tuesday, December 22, 2015

சுற்றமும் நட்பும்

'வீரபத்திரன் துணை...நிகழும் மங்களகரமான...'
என்று தொடங்கும் திருமண பத்திரிக்கை ('அழைப்பிதழ்' என்பது புது வார்த்தை)
எல்லாம் பெரும்பாலும்,
'தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து' என்று நிறைவடையும்.

ஒரு பேச்சுக்குத்தான், இல்லை ஒரு எழுத்துக்குத்தான், அப்படி எழுதுகிறார்கள். இதற்காக, நம் ஃபேஸ்புக் நண்பர்கள் 2000 பேரையும் கூட்டிக்கொண்டு போனால் என்ன ஆகும்?

எலிசபெத்தின் சுற்றமும், நட்பும்தான் நாளைய நற்செய்தி வாசகத்தின் மையம்.

'அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார். 'மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என் மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்' என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.' (லூக்கா 1:24-25)

கபிரியேல் தூதர் செக்கரியாவுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றி முன்னுரைத்ததும், எலிசபெத்தைப் பற்றி லூக்கா இப்படித்தான் எழுதுகிறார். இதில் இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. எலிசபெத்தின் வெட்கம் அல்லது கூச்சம். அதாவது, வயது முதிர்ந்த தனக்கு வளைகாப்பும், பேறுகாலமுமா என்ற கூச்சம். இதை அடுத்தவர்கள் கேள்விப்பட்டால் கேலி பேசுவார்களே எனப் பயந்து, தயங்கி, ஐந்து மாதங்கள் வீட்டிற்குள் இருக்கின்றார். (ஆனால், எலிசபெத்து மேடம், முதல் ஐந்து மாதங்கள் உடலில் காணத்தக்க மாற்றங்கள் இருக்காதே! நீங்க கடைசி ஐந்து மாதம்தானே யார் கண்ணில் படாமலிருக்க வேண்டும்! - ஏன் லூக்கா மாற்றி எழுதுகிறார்? எவ்வளவோ பேருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் லூக்காவுக்கு இந்த சின்ன மேட்டர் கூட தெரியாதா? தெரியும். பின் ஏன் மாற்றுகிறார்? அதுதான் இரண்டாவுது விடயம்.)

ஆ. 'அருள்கூர்ந்து இந்நாளில் ஆண்டவர் செய்தார்.' அதாவது, பிறக்கப்போகும் குழந்தையின் பெயர் அருளப்பர் (யோகான்னாஸ் - யோவான்). ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது அதன் முதல் ஐந்து மாதங்கள் மிக முக்கியமானவை. முதல் ஐந்து மாதங்களிலேயே குழந்தையின் மூளை மற்றும் உணர்வுகள் வடிவம் பெறத் தொடங்கிவிடுகின்றன. இந்த முக்கியமான பொழுதில் தன் ஒரே கடமையாக எலிசபெத்து செய்வது என்னவென்றால், தான் பெற்ற அருளை அப்படியே கருவில் இருக்கும் குழந்தைக்கு முழுமையாகக் கொடுக்கின்றார்.

அடுத்த நான்கு மாதங்கள் கண்டிப்பாக இவர் தன் சுற்றத்தோடு இருந்திருப்பார்.

ஆக, எலிசபெத்தின் தயக்கம் பயத்தினாலோ, கூச்சத்தாலோ வந்ததல்ல. மாறாக, தன் குழந்தைக்கு அருள் கொடுக்கும், தன் குழந்தை என்னும் மொபைலை ரீசார்ஜ் செய்யும் காலமாகத்தான் இருந்தது.

நாளைய நற்செய்தியில் வரும் எலிசபெத்தின் சுற்றத்தார்கள் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறார்கள்.

அ. குழந்தை பிறந்தவுடன் தாயுடன் சேர்ந்து மகிழ்கிறார்கள்
ஆ. 'என்ன பெயர் வைக்கலாம்?' என ஆர்வம் காட்டுகின்றனர்
இ. 'இந்த குழந்தை எப்படிப்பட்டதா இருக்குமோ?' என ஆச்சர்யப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றத்தார் அமைவது மிக அபூர்வம். ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு குடும்பம் எப்படி அவசியமோ, அதேபோலத்தான் சுற்றமும் அவசியம். தன் சுற்றத்தில், அக்கம் பக்கத்தில் தன் குழந்தைகளுக்கு வகுப்பு தோழர்கள் அல்லது தோழிகள் இருந்ததால், தங்களின் வெளியூர் வேலைக்கு 'நோ' சொன்ன பெற்றோர்களை அறிவேன்.

மற்றொரு எக்ஸ்ட்ரீம் என்னவென்றால், சில வீடுகளில் ஒரு குறிப்பிட்ட ஜன்னலைத் திறக்கவே மாட்டார்கள். ஏன்? திறந்தால் அடுத்த வீட்டுக்காரரின் முகம் தெரியும். அல்லது குரல் கேட்கும். இப்படியாக நாம் அறவே வெறுக்கும் சுற்றத்தார்களும் இருக்கிறார்கள்.

இது நம் மாநிலத்திற்கும், நம் நாட்டிற்கும் கூட பொருந்தும். நம் சுற்றத்து மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தருவதில்லை. நம் சுற்றத்து நாடுகள் எந்நேரம் நமக்கு அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

சுற்றமும், நட்பும் - என்னைப் பொறுத்தவரையில் - நாம் சாப்பாட்டில் போடும் உப்பு மாதிரி.
உப்பு போடாமலும் சாப்பிடலாம்.
உப்பு சரியான அளவில் இருந்தால் தான் அது ருசி.
இல்லையென்றால் அது சாப்பாட்டையே கெடுத்துவிடும்.

எலிசபெத்துக்கு அமைந்தது நல்ல சுற்றமும், நட்பும்.

அவரின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா அமைந்தது.

இவ்வளவு நாள் 'சைலண்ட்' மோட்ல இருந்ந நம்ம சக்கரியாவும் பேச ஆரம்பிச்சிட்டாரே!

வாழ்த்துக்கள் சக்கரி, எலிசா!


2 comments:

  1. தந்தை அவர்கள் கிறிஸ்துமஸ் சீசனின் இனிமையை சுவைக்கத் தொடங்கி விட்டார் என்பது அவரின் பதிவின் வார்த்தைகளில் எதிரொலிப்பதை உணரமுடிகிறது. கண்டிப்பாக..."ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குக் குடும்பம் எவ்வளவு முக்கியமோ அத்துணை முக்கியம் சுற்றம் அமைவதும்." ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை.கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு." பணக்கட்டு இலையெனினும் ஆள்கட்டு வேண்டும்" என்று."குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" போன்ற பழமொழிகள் சுற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பவை.இந்த வகையில் பார்த்தால் மரியாவும் சரி, எலிசபெத்தும் சரி...கொடுத்து வைத்தவர்களே! அதுமட்டுமல்லல..எலிசபெத் பெற்றெடுத்த யோவானும் கொடுத்து வைத்தவரே! தன் குழந்தை வயிற்றினுள் இருக்கும் போதே தன்னிடமுள்ள அருள் அத்தனையையும் கொடுத்து ரீசார்ஜ் செய்யும் அம்மாக்கள் எத்தனை பேர்? இத்தனை நாளும் எப்படியோ...இனிமேலாகினும் ...இந்த விழாக்காலத்திலேனும் நாம் நம் சுற்றங்களோடு உறவைப் புதுப்பிக்கலாமே! பண்டிகைகள் கொண்டுவரும் செய்தியே அதுதானே! சுற்றத்தின் பெருமையை உணரவைத்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்.எலிசபெத்துக்கு அமைந்த நல்ல சுற்றமும், நட்பும் போல மற்றும் அவரின் நல்ல மனசு போல நமக்கும் எல்லாமே நல்லா அமைய கூறும் தந்தைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete