Monday, December 14, 2015

ஒரு அப்பாவும், இரண்டு மகன்களும்

'ஒரு அப்பா, இரண்டு மகன்கள்' இலக்கிய நடை விவிலியத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலக்கிய நடைகளில் ஒன்று: 'ஆதாம் - காயின், ஆபேல்,' 'ஆபிரகாம் - இஸ்மயேல், ஈசாக்கு,' 'ஈசாக்கு - ஏசா, யாக்கோபு,' 'யாக்கோபு - 11 மகன்கள், யோசேப்பு,' 'தந்தை - மூத்த மகன், ஊதாரி மகன்'. இந்த நிகழ்வுகளில் இளையவர் தந்தைக்கு ஏற்புடையவராவார். மூத்தவர் தள்ளிவைக்கப்படுவார்.

ஆனால் நாம் நாளைய நற்செய்தியில் காணும் நிகழ்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. மூத்தவர் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இரண்டாமவர் தள்ளிவிடப்படுகிறார்.

'வேலைக்குப் போ!' என்ற தந்தையின் கட்டளைக்கு, 'போக மாட்டேன்' என சொல்லிவிட்டு பின் போகிறார் மூத்தவர். 'போகிறேன்' எனச் சொல்லிவிட்டு போக மறுக்கிறார் இளையவர்.

இந்த இரண்டு வார்த்தைகளையும் உவமையிலிருந்து விலக்கி அப்படியே நம் வாழ்க்கைக்குக் கொண்டுவருவோhம். எப்படி?

இந்த இரண்டு சகோதரர்களுமே நம்மில் குடியிருக்கிறார்கள். எப்போது?

அ. நெடிய பயணம் செய்து வீட்டுக்கு நான் போகிறேன் என வைத்துக்கொள்வோம். வீட்டில் ஃப்ரீயா இருக்கலாம் என்று நினைத்து நான் போக, அங்கே என் உறவினர்கள் குடும்பம் ஒன்று வந்திருக்கிறது. அவர்களைப் பார்த்தவுடன் கோபம் வந்துவிடுகிறது. வந்தவர்கள் ஒரு வாரமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் கோபம் இன்னும் அதிகமாகிவிடுகிறது. உடனே நான் என்ன செய்கிறேன்? எனக்குள் முணங்குகிறேன். அல்லது அவர்கள்முன் என் அம்மாவை ஜாடையாகக் கடிந்து கொள்கிறேன். அல்லது அவர்களிடம் நேருக்கு நேர் கோபத்தைக் காட்டுகிறேன். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அப்படியே மனம் மாறி, அம்மாவிடம், 'அவங்க சாப்பிட்டாங்களா?' எனக் கேட்கிறேன். என் கோபம் எப்படி கரிசணையாக மாறியது? இப்படி நான் கனிவாக மாறுவேன் என்றால், எதற்காக நான் கோபப்பட்டிருக்க வேண்டும்? ஏன் இந்த விதண்டா வாதம்? யாரிடம் என்னை நிரூபிக்க இந்த கோபம்?

'அன்பு செய்ய மாட்டேன்' என்று சொல்லிவிட்டு 'அன்பு செய்வதும்', 'போக மாட்டேன்' என்று சொல்லிவிட்டு, பின் தோட்டத்திற்குப் 'போவதும்' ஒன்றுதானே.

ஆ.என்னிடம் ஒரு இ-புத்தக ரீடர் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். ரொம்ப நாளாக நான் பயன்படுத்தாமல் இருக்கிறேன். 'என்ன இது சும்மாவே இருக்கிறது!' என நினைத்துக்கொண்ட நான் அதை எடுத்து நான் என் நண்பனுக்குக் கொடுத்துவிடுகிறேன். அவன் அதற்கு கவர் போட்டு, பஸ், ட்ரெயின் என எல்லா இடங்களிலும் புத்தகம் வாசித்துக்கொண்டே இருக்கிறான். சில மாதங்கள் கழித்து எனக்கு ஒரு புத்தகம் வாசிக்க வேண்டிய சூழல். அதை என்னால் எலக்ட்ரானிக் சாதனத்தில் தான் வாசிக்க முடியும். 'நான் கொடுத்ததை திரும்ப கொடு! நான் உனக்கு சும்மாதான் வாசிக்க கொடுத்தேன்! நீ வைத்துக்கொள்வதற்கு அல்ல!' என்று நண்பனிடம் வெட்கத்தைவிட்டு சொல்லி அதை நான் திரும்ப வாங்கிவிடுகிறேன்.

'வைத்துக்கொள்' என்று சொல்லி கொடுத்துவிட்டு, 'திரும்ப கொடு' என்று சொல்வதும், போகிறேன்' என்று சொல்லிவிட்டு 'போகாமல் இருப்பதும்' ஒன்றுதானே.

இந்த இரண்டு சகோதரர்களிடம் உள்ள பிரச்சினை என்ன?

எடுக்கின்ற முடிவில் உறுதியாக இல்லாமல் இருப்பது!

நாம் ஒரு முடிவு எடுத்தால், அது தவறோ, சரியோ, அதில் நிலையாயிருந்தால்தான் வெற்றிபெற முடியும். இல்லையா?

4 comments:

  1. தந்தைக்கு வணக்கம்.ஒரு அப்பாவும், இரண்டு மகன்களும் நல்ல ஒரு பதிவு. ''அன்பு செய்ய மாட்டேன்' என்று சொல்லிவிட்டு 'அன்பு செய்வதும்', 'போக மாட்டேன்' என்று சொல்லிவிட்டு, பின் தோட்டத்திற்குப் 'போவதும்' ஒன்றுதானே. இந்த மாறி ஒரு சூழ்நிலையில் அன்று இயேசு வாழவில்லை.எல்லோரிடமும் அன்புக் காட்டினார்,அரவணைத்தார்.எல்லோரையும் தேடிப்போனார்.அவர் எதைச் செய்தாலும் அறிவுத் தெளிவோடு செய்தார். ஆக, இயேசுவை பின்பற்ற வந்த நாம் அனைவரும் எடுக்கும் முடிவில் உறுதியா இருப்போம்.தந்தைக்கு,நன்றியும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. இன்றையப் பதிவு நாம் அடிக்கடி அடுத்த வீட்டில்,பக்கத்து வீட்டில் என்று கேட்டுப் பழக்கப்பட்ட ஒன்றுதான்.இரண்டு மகன்கள் இருக்கும் எல்லாக் குடும்பங்களிலுமே இந்த பாசப் போர் உண்டு.இல்லையென்றாலும் கூட இருப்பதாக்க் கற்பனையில் வாழும் மகன்கள் உண்டு. எல்லா நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவனும் உண்டு; எல்லா கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவனும் உண்டு.எது எப்போ,எப்படி ஆதிக்கம் செலுத்துகிறதோ அதை வைத்தே நம் குணாதிசயம் மாறுகிறது. கண்டிப்பாக அன்பு செய்யமாட்டேன் என சொல்லிவிட்டு அன்பு செய்வதும்,தோட்டத்திற்குப் போகமாட்டேன் என சொல்லிவிட்டுப் போவதும் ஒன்றுதான்.அதேபோல் வைத்துக்கொள் எனசொல்லிவிட்டு திரும்பக் கொடு என்பதும்,போகிறேன் எனச் சொல்லிவிட்டுப் போகாமல் இருப்பதும் ஒன்றுதான்.ஆனால் முந்தையதும் பிந்தையதும் ஒப்பிடக்கூடியவைகள் அல்ல என்னைப்பொறுத்தவரை.நம்மூர் பாஷையில் சொல்லவேண்டுமெனில் முன்னவன் 'ஏமாளி', பின்னவன் ' ஏமாற்றுபவன்'. இருவரையும் எப்படி ஒரே தராசில் வைக்க முடியும்? விவிலியம் சொல்கிறது..." சூடாகவோ,குளிராகவோ இரு; ஆனால் வெதுவெதுப்பாக இராதே!" Be either hot or cold; Never warm).ஆம், ஒரு முடிவெடுத்தால் அதில் நிலைநிற்பவனுக்குப் பெயர்தான் 'மனிதன்.' இம்மாதிரி மனிதர்களால் தான் இந்த உலகமே இயங்குகிறது.நல்லதொரு பதிவைத் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  3. Yes Father... The two brothers live within oneself...

    ReplyDelete
  4. Yes Father... The two brothers live within oneself...

    ReplyDelete