Tuesday, December 1, 2015

கண்ணைத் திறந்து பார்

'மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்.
பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.
என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்.
என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.'
(காண்க. எசாயா 25:6-10)

இன்று (டிசம்பர் 1) உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்.

'You can't add Years to their Life.
But You can add Life to their Years'

- என்ற வாசகத்துடன் இயங்கி வந்த புனேயில் உள்ள எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் ஒரு பதினைந்து நாட்கள் வேலை செய்தேன் (2006ஆம் ஆண்டு!).

அவர்களுக்கு உணவு கொடுங்கும்போதும், அவர்களைப் பார்த்துப் பேசும்போதும் அவர்கள் குனிந்து கொண்டே இருக்கக் கண்டேன். நேருக்கு நேர் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். குனிந்து கொண்டோ, மறு பக்கம் திரும்பிப்கொண்டோதான் கேட்பதற்குப் பதில் பேசுவார்கள்.

மனித மனம் குற்றத்தால் குறுகுறுக்கும்போதும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று கண்முன் இருக்கும் போதும் முகத்தைக் குனிய வைத்துவிடுகிறது.

(காதலனுடன் பேசும்போது கால் பெருவிரலால் தரையில் கோலம் போட்டுக்கொண்டே தலைகுனிந்து நிற்கும் காதலி எக்ஸெப்ஷன்)

(தன் கையில் இருக்கும் டச் ஸ்க்ரீன் மொபைலில் டெக்ஸ்ட் செய்து கொண்டிருக்கும் தலைநிமிராப் பெண்ணும் எக்ஸெப்ஷன்)

இறப்பு வீட்டில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர் முகத்தை மூடிக்கொண்டு அழுவார்கள். இன்றும் தேவர் சமூகத்தில் இறப்பு வீட்டில் பெண்கள் தங்கள் முகத்தை சேலைத்தலைப்பால் மறைத்தபடிதான் அமர்ந்திருப்பார்கள். ஆக, பார்க்க முடியாத ஒரு இழப்பை நாம் பார்க்க நேரிடும்போது நம் உள்ளங்கைகளால் நம் முகத்தை மூடிக்கொள்கிறோம். சேலைத்தலைப்பு கூட நம் உள்ளங்கைகளின் நீட்சியே.

நம் கண்முன் தன் முகத்தை மூடி அழுதுகொண்டிருக்கும் குழந்தை அல்லது நண்பியைப் பார்த்து, நாம் என்ன சொல்கிறோம்? 'ஏய்...இங்க பாரு...அழாத...' முகத்தை மூடிக்கொள்ளாவிட்டாலும் கண்களை மூடிக்கொள்கின்றனர் சிலர். கண்களை மூடிக்கொள்வதும் ஒரு போராட்டம். ஆகையால்தான் கண்களைக் கட்டிக்கொண்டு வீதியிலும் போராட்டம் நடத்துகிறார்கள்.

எதையாவது நாம் மறைப்பதற்கு உள்ளங்கைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆக, நாம் அணியும் ஆடைகள் கூட நம் உள்ளங்கைகளின் நீட்சி என்று சொல்லலாம்.

நாளைய முதல் வாசகத்தில் எசாயா முன்மொழியும் கடவுள் மக்களின் முகத்தை மூடியிருக்கும் முக்காட்டை அகற்றுகின்றார்.

இழப்பு, வெறுமை, இறப்பு, கண்ணீர் - இந்த நிகழ்வுகளில் நாம் கண்களை மூடிக்கொள்கிறோம்.

ஒரு நத்தை போல நமக்குள் நாமே நம்மைச் சுருட்டிக்கொள்கிறோம். கட்டிலில் ஏறிப்படுத்து முகத்தை போர்வையால் மூடிக்கொள்கிறோம். இந்த உலகை நாம் பார்க்கப்போவதில்லை என கங்கணம் கட்டிக்கொள்கிறோம். நீண்ட நேரம் தூங்குகிறோம். அல்லது நிரந்தரமாகக் கண்களை மூட முயற்சிகள் எடுக்கத் துணிகிறோம்.

இறைவன் செய்வது இதுதான்: கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்...

வாழ்க்கை இன்னும் பெரியது...

அழுகையை நிறுத்து...

எங்கே இதைச் செய்கிறார் கவனித்தீர்களா?

மலைமேல்.

மலைமேல் நிற்பவருக்கு தன் சொந்த ஊர் இன்னும் அழகாகவும், முழுமையாகவும் தெரியும். இதுவரை பார்க்காதது அவர் கண்களுக்குத் தெரியும்.

3 comments:

  1. 'திருவருகைக் காலம்' என்றாலே 'காத்திருத்தலின்' காலம் என்றாகி விடும்போல. இயேசு பாலனின் பிறப்புக்காக மட்டுமா காத்திருக்கிறோம்? இல்லை....இவ்வுலகப் பிரமாண காரியங்களான புதுணத்துணிகள்,பலகாரங்கள்,வெடிகள்,விருந்தினர்கள்....இப்படி எத்தனையோ! ஆனால் இங்கு ஏசாயா குறிப்பிடும் விஷயங்களைப் பார்த்தால் காத்திருத்தலில் ஒரு புது சுகமே கிடைக்கும் போல் தெரிகிறது.ஆம்! "மக்களினங்களின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை அகற்றவும், பிற இனத்தார் அனைவரின் துன்பத்துகிலைத் தூக்கி எறியவும்,என்றுமே இல்லாதவாறு சாவை ஒழிக்கவும்,எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைக்கவும் " ஒருவர் வருகிறார் எனில் அது சரித்திரம் படைக்கும் விஷயமில்லையா? அப்பேற்பட்ட சரித்திர நாயகன் ஒருவரின் கண்களுக்கு நாம் மட்டும் விசேஷமாகத் தெரிகிறோம் எனில் அது நம் பிறவிப்பயனல்லவா! இது நாம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்; கண்களை அகலத் திறக்க வேண்டிய நேரம்;கண்ணீர்த்துளிகளைக் களைய வேண்டிய நேரம்.மகிழ்ச்சிப் பண் பாட வேண்டிய நேரம். ஏனெனில் மலைமேல் நின்று காணும் இறைவனுக்கு " நாம் அழகானவர்கள்; முழுமையானவர்கள்." அழகான வரிகள் தந்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!ஆமாம்! அதென்ன... மனதைப்பிழியும் வார்த்தைகள்?"You can't add years to their life.But you can add life to their years." இன்றே ஒரு ஏய்ட்ஸ் நோயாளி கண்ணில் தெரிய மாட்டாரா...என ஏங்குகிறது உள்ளம்.ஏங்கத் தூண்டிய வார்த்தைகளைக் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Dear Father, thanks for the courageous word for the people who has affected due to AIDS.

    'You can't add Years to their Life.

    But You can add Life to their Years'.

    To have God's compassion in their life let us pray for all the people who are affected by AIDS.

    I was happy to know that you worked for these people.May God bless you abundantly for your generous heart and service.You will become great one day. What your heart aims that you will become.Congrats.

    ReplyDelete
  3. Dear Father, How are you ? This two Line Teach me so many Lesson Thank u, i cannot do but can pray for them in my lifelong

    ReplyDelete