Monday, December 14, 2015

குரலும், வார்த்தையும்

இன்று காலை கட்டளை செபத்தின் இரண்டாம் வாசகமாக, தூய அகுஸ்தினாரின் கட்டுரை ஒன்றிலிருந்து ஒரு பகுதி கொடுக்கப்பட்டிருந்தது.

'குரலும், வார்த்தையும்'

இதுதான் வாசகத்தின் தலைப்பு.

என் நினைவில் பதிந்ததை அப்படியே மொழிபெயர்ப்பு செய்கிறேன்:

'திருமுழுக்கு யோவான் குரல். இயேசுவே வார்த்தை.

குரல் மாறக் கூடியது. வார்த்தை மாறாதது.

குரல் அழியக் கூடியது. வார்த்தை அழியாதது.

நாம் அன்றாடம் ஒருவர் மற்றவரோடு உரையாடுகிறோம். குரலை எழுப்பி உரையாடுகிறோம். உரையாடல் முடிந்தவுடன் நம் நினைவில் குரல் தங்குவதில்லை. வார்த்தைதான் தங்குகிறது.

குரலிலிருந்து வார்த்தையைப் பிரித்துவிட்டால் அது வெறும் சத்தமே.

வார்த்தை தங்குவதற்குப் பதிலாக குரல் தங்கிவிட்டால் எப்படி இருக்கும்? நம்மால் பொருள் எதுவும் புரிந்து கொள்ள முடியாது.

ஆகையால்தான் யோவான் எப்போதும், 'நான் குறைய வேண்டும். அவர் வளர வேண்டும்' என்று சொன்னார். அதாவது, குரல் குறைய வேண்டும். வார்த்தை நிறைய வேண்டும்.'

நிற்க.

'குரல், வார்த்தை' என இரண்டு சொற்களை மட்டும் வைத்து இரண்டு பக்கங்கள் எழுதியிருக்கும் அகுஸ்தினார் ஓர் அறிவுக்கடல்.

நாளைய முதல் வாசகத்தில் பிலயாம் என்ற இறைவாக்கினரைச் சந்திக்கிறோம்.

இஸ்ராயேல் மக்களை சபிப்பதற்கு அழைத்து வரப்படுகின்றார் இவர். ஆனால், இஸ்ரயேல் மக்களைப் பார்த்தவுடன், ஆண்டவரின் ஆவி இவர்மேல் இறங்க, சபிப்பதற்கு பதிலாக அவர்களை ஆசீர்வதிக்கின்றார்.

அவரின் குரல் ஒன்றுதான். ஆனால் வார்த்தை வேறாகிவிடுகிறது.

இந்த நாட்களில் நாம் அதிகமாக பரிசுப்பொருட்களை கொடுப்போம். வாங்குவோம். அவற்றை பெரும்பாலும் கலர் கலரான பேப்பரில் சுற்றிக் கொடுப்போம்.

நாம் வெறும் பேப்பரை மட்டும் வைத்துக்கொண்டு, பொருட்களை தூக்கி எறிவோமோ?

இல்லை.

ஏன்? பேப்பரைவிட பொருளே சிறப்பானது. மேலும், பேப்பர் எந்த விதத்திலும் பொருளின் மதிப்பை கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை.

அப்படியே, வார்த்தையைத் தழுவிக்கொள்வோம். குரலை விட்டுவிடுவோம்.


2 comments:

  1. தந்தையே!அழகான, பொருள் செறிந்ததொரு பதிவு இன்றையது.'குரலும்,வார்த்தையும்'...ஒன்றை மற்றொன்று சார்ந்திருத்தலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். சில விஷயங்கள் சேர்ந்து வருகையில் தான் அவற்றிற்கு அழகு."திருமுழுக்கு யோவான் குரலென்றால் அவர் குரலினின்று உதிர்க்கும் வார்த்தைகளே இயேசு" சில சமயங்களில் இவற்றில் எது பெரிது,சிறிது என நாம் ஒப்புமை செய்திடினும் பல சமயங்களில் இரண்டுமே சேர்ந்து வருவது கூட அழகுதான்.வார்த்தைகளின் பொருள் கூட நம் குரலின் ஏற்ற இரக்கங்களுக்கேற்ப அர்த்தம் தர வல்லவை.ஆனால் இன்றையப் பதிவில் வரும் " வார்த்தை" நிச்சயமாக " குரலோடு" இணைந்து நிற்க முடியாதுதான். பல சமயங்களில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களில் நமக்குத் தேவை எது என்பதில் குழம்பி விடுகிறோம்.நித்தியத்தை விட்டு அநித்தியத்தை நமதாக்க விழைகிறாம். கனியிருக்க காய்களின் மேல் நாட்டத்தைச் செலுத்துகிறோம்.நம்மில் 'தங்க வேண்டியது' தங்கினால் மட்டுமே " நாம் குறையவும்,அவர் வளரவும்" ஏதுவாக இருக்கும்.பரிசுப்பொருட்களின் நாட்களின் இவை.நாம் ஒவ்வொரு முறையும் அதைக் கொடுக்கும் போதும்,பெறும்போதும் இன்றைய ' வார்த்தைகளைத்' தழுவிக் கொள்வோம்! குரலை விட்டுவிடுவோம். புனித அகுஸ்தினாரின் பெட்டகத்திலிருந்து வரும் அனைத்துமே விலையேறப்பெற்றவை என்பதை மீண்டும்,மீண்டும் மெய்ப்பிக்கிறீர்கள்.யோசிக்க வைத்த பதிவுக்காக நன்றிகள் தந்தைக்கு.இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."குரலும், வார்த்தையும்" என்ன ஒரு அழகான பதிவு.இந்த பதிவை நம் நம் நடைமுறை வாழ்கையில் வைத்து சிந்தித்தோம் என்றால் நிறைய பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.அன்று திருமுழுக்கு யோவான் குரலை மட்டுமே கேட்டு எரிச்சல் ஆனார்கள்.ஆனால்,அவரின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவில்லை.அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு இருந்ததை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.மாறாக அவரை கொல்லவே திட்டமிட்டார்கள் இன்றும் சில இடங்களில் இதே சூழ்நிலைதான்.எழுப்பும் குரலோடு ஒலிக்கும் வார்த்தையின் அர்த்தத்தை நம்மால் புரிய முடியவில்லை.ஆக,தந்தை கூறியுள்ளவாறு வார்த்தையைத் தழுவிக்கொள்வோம். குரலை விட்டுவிடுவோம்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete