Sunday, December 20, 2015

ஆர்மீக்காரன்

நேற்று காலை நூலகத்திற்குச் செல்ல மெட்ரோ ஏறுவதற்குச் சென்றேன்.

நவம்பர் 13ஆம் தேதி பாரிசு தீவிரவாத தாக்குதலுக்குப் பின் உரோமையின் எல்லா மெட்ரோ ஸ்டேஷன்களிலும், இரண்டு இராணுவ வீரர்களை நியமித்திருக்கிறார்கள்.

நேற்று வெள்ளிக்கிழமை வேறா. தீவிரவாத தாக்குதல்கள் வெள்ளிக்கிழமைகளில்தாம் அதிகம் நடத்தப்படுவதால், நேற்று இன்னும் அலர்ட்டாக இருந்தார்கள்.

டிக்கெட் சென்சாரில் என் டிக்கெட்டை வைத்து உள்நுழைந்தவுடன், இரண்டு இராணுவ வீரர்களில் வேகமாக வந்து, 'ஃபெர்மாத்தி!' (நில்!) என்றார். நானும் நின்றேன். இத்தனைக்கும் நேற்று என் பங்கைச் சார்ந்த ஒரு தாத்தாவோடு பேசிக்கொண்டேதான் உள்ளே சென்றேன். என்னை நிற்கச் சொன்ன ஆர்மீக்காரன் அந்த தாத்தாவை விட்டுவிட்டான்.

'ஆப்ரி இல் துவோ ஸைனோ எ ஜாக்கா!' (உன் பையைiயும், மேல் கோட்டையும் திற!' என்றான்.

'எதற்கு?' என்றேன்.

நான் கேட்ட கேள்வி எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

சற்று நேரத்தில் என் பின்னால் வந்த இன்னொரு இளைஞனையும் நிறுத்தி, நான் நிற்கும் இடத்திற்கு அழைத்து வந்தார்கள்.

அவன் தன் பேக்கைத் திறந்து காட்டிக் கொண்டிருந்தான்.

'உனக்கு சந்தேகம் இருந்தால் நீ திற! நான் திறக்க மாட்டேன்! ஆனால், திறந்து உள்ளே ஒன்றுமில்லையொன்றால், நீ என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில், என்னை எல்லார் முன்னாலும் நீ சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்திருக்கிறாய்!' என்றேன்.

அவன் மற்றவனுக்கு சைகை செய்து மற்ற ஆர்மிக்காரனும் வந்தான்.

இவனுக்கு அவன் மேலதிகாரி என நினைக்கிறேன்.

'பேக்கைத் திறக்க மறுக்கிறான்!' என்று என்னைப் பார்த்து அவனிடம் சொன்னான்.

'திறங்க!' என்று நக்கலான மரியாதையுடன் சொன்னான்.

'முடியாது! வேண்டுமானால் நீங்க திறங்க!' என்றேன்.

அவன் திறக்க மாட்டான் என எனக்குத் தெரியும். ஏனெனில் ஜிப்பைத் திறந்தால் வெடிக்கும் குண்டுகள் இருக்கின்றன அல்லவா. அவன் எச்சரிக்கையாகவே இருந்தான்.

இதற்கிடையில் என் நிறத்தை ஒத்த பலர் ஆர்மிக்காரர்கள் நிறுத்தப்பட்டு தங்கள் பைகளை திறந்துகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

'ஏன் வெள்ளை நிறத்தவரை நீங்கள் நிறுத்துவதில்லை?' என்று அவனிடம் அடுத்த கேள்வி கேட்டேன். மேலும்,

'என்னை நிறுத்தும் உன் அடையாள அட்டையைக் காட்டு!' என்றேன்.

'நான் ஆர்மீக்காரன்!' என்றான்.

'நீ அணிந்திருக்கும் இந்த உடையை யாரும் அணியலாம். 100 யூரோக்கு கிடைக்கும்!' என்றேன்.

'நீ அட்டையைக் காட்டினால்தான் நான் பேக்கைத் திறப்பேன்!' என்றேன்.

அவன் தன் அட்டையை நீட்டினான்.

நான் பேக்கைத் திறந்து காட்டினேன். உள்ளே லேப்டாப், புத்தகம், வாட்டர் பாட்டில் இருந்தது.

'மன்னிக்கவும்! போகலாம்! இந்த நாள் இனிய நாளாகட்டும்!' என்றான்.

எனக்கு ஒரு பக்கம் அவமானமாக இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. துடைத்தும் துடைக்காமலும் வந்து நின்ற இரயிலை நோக்கி ஓடினேன். கடைசி பெட்டியில்தான் இடம் கிடைத்தது. ஏறி, அப்படியே யாரையும் பார்க்காமல் ஜன்னலை நோக்கித் திரும்பிக் கொண்டேன். கத்தி அழவேண்டும் போல இருந்தது.

'இதுல அவமானம் என்ன இருக்கு! பாதுகாப்பு காரணத்துக்காகத்தானே செக் பண்ணுனாங்க!'

என மூளை சொன்னது.

'அப்படி பாதுகாப்பு காரணம்னா, எல்லாரையும்ல செக் பண்ணணும். ஏன் என்னய மட்டும்? நான் என்ன தீவிரவாதி மாதிரியா இருக்கேன்? என் கலர இவனுக சந்தேகப்பட்டா, இந்தக் கலருக்கு நானா பொறுப்பு? வெள்ளையா இருக்கிறவன் குண்டு வைக்கமாட்டான்னு யார் இந்த நாய்களுக்கு சொன்னா? பாரிசு குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவன் எல்லாம் வெள்ளைத் தோல்க்காரன்தானே!'
என்று மனம் மற்றொரு பக்கம் புலம்பிக் கொண்டிருந்தது.

நான் இறங்க வேண்டிய இடம் வந்து இறங்கினேன்.

வெளியே பெரிய கிறிஸ்துமஸ் மரம் வைத்து,

'கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!' என எழுதியிருந்தது.

'போங்கடா நொன்னைகளா! உங்க வாழ்த்தை நீங்க உட்காரும் நாற்காலியில் வைத்து அதன் மேல் உட்கார்ந்துகொள்ளுங்கள்!' என்று சொல்லிவிட்டு வழிநடந்தேன்.

மனமெல்லாம் ஒரே யோசனை.

'ஒருவேளை இந்த இயேசு கொஞ்சம் கறுப்பா பொறந்திருந்தா,
நாமெல்லாம் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடுவோமா?'



3 comments:

  1. தந்தையின் வார்த்தைகளில் எள்ளும்,கொள்ளும் வெடிக்கிறது.நியாயமான கோபம்தான்.ஆனால் நமது தேவைகளின் நிமித்தம் இப்படி அடுத்த இடங்கள்/ அடுத்தவர் என சார்ந்திருக்கையில் இம்மாதிரி சிறுமைகளுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதுதான்.' Necessary evil'... என்பார்களே! அதுமாதிரி.ஆனால் மனிதன் செய்யும் தவறுக்காக 'மாபரனை' வம்புக்கிழுப்பது சரியில்லை. நம் பிணக்குகளைப் போக்கி இணக்கத்தைக் கொண்டு வந்தவர் அவர்.அவர் ' கறுப்பா' மட்டும் இல்லை....எப்படிப் பிறந்திருந்தாலும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம். Cool down Father! Please cool down.ஞாயிறு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தையே! இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? 'கறுப்பு' என்பது நிராகரிக்கப்பட வேண்டிய நிறமல்ல.அதற்கு இன்னொரு பொருள்'வைரம்.' எனவே தாங்கள் இறுமாப்படைய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. So cheer up!!!

    ReplyDelete
  3. Dear Father,Good sharing on your personal experience.I too got angry after reading entire scribblings.Don't worry about it.One day that man will regret for that and God will answer to him.

    There is one saying in Tamil "பொறுத்தார் பூமி ஆழ்வார்.".So take heart in Jesus.Congrats!!!

    ReplyDelete