Sunday, December 13, 2015

நல்ல பாடம்தானே!

இன்று காலை திருப்பலி முடிந்தவுடன் எங்கள் கோவிலின் எதிரில் இருக்கும் ஒரு காஃபி பாருக்கு கார்மேலாவுடன் சென்றேன். காஃபி குடித்துக் கொண்டிருந்தபோது ருமேனிய நாட்டுப் பெண் ஒருவர் பாரின் உள்ளே வந்தார். வயது அவருக்கு 20 முதல் 25 இருக்கும். அழகாக இருந்தார். கையில் ஒரு வண்டிபோல இருக்கும் பெரிய பையைப் பிடித்திருந்தார். ருமேனிய நாட்டுப் பெண்கள் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் என்ற பேச்சு பரவலாக இருப்பதால், அவர்களை யாரும் பாருக்குள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், இவர் உள்ளே வந்தவர் நேராக கல்லாவில் இருக்கும் பார் ஓனரிடம் சென்றார். ரொம்ப நாளைக்கு அப்புறம் பார் ஓனரை நானும் இன்றுதான் பார்க்கிறேன். நம்ம ஊர் ஜெமினி கணேசனுக்கு கண்ணாடி போட்டது மாதிரி இருப்பார். அவ்வளவு உருவ ஒற்றுமை. நேரே அவரிடம் சென்ற அந்தப் பெண், 'இந்த பாரின் பாத்ரூமை கொஞ்சம் பயன்படுத்தலாமா?' என்று கேட்டார். வழக்கமாக இந்தப் பெண்கள் அடாவடியாக உள்ளே நுழைவார்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் அனுமதி கேட்பது ஆச்சர்யமாக இருந்தது எனக்கு. ஓனர் என்ன சொல்வார் எனக் காத்துக்கொண்டே இருந்தேன். ஒரு நொடி மௌனமாக இருந்த அவர் தலையை அசைத்து 'சரி' என அனுமதி கொடுத்தார். 'நன்றி' என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே பெண் நகர்ந்தார்.

'ஒரு பெண்ணை மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த சமூகத்தின் கலாச்சார வளர்ச்சி இருக்கிறது' என்பார் எனக்கு எபிரேயம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்.

இந்த பார் ஓனர் இத்தாலிய நாட்டு உயர்ந்த கலாச்சாரத்தின் ஒரு பருக்கை சோறு போல தெரிந்தார்.

கடந்த ஒரு வாரமாக நம்ம ஊரில் நம்ம அனிருத் மற்றும் சிம்பு க்ரூப் ஒரு 'பீப் சாங்க்' வெளியிட்டிருக்கிறார்கள். 'பீப் சாங்' என்றால் மாட்டுக்கறி சாங் என்று நான் நினைத்தேன். ஆனால், கேட்கக் கூடாத வார்த்தைகள் வரும் இடத்தில் 'பீப்' என்ற சத்தம் நிரப்பப்பட்டு வரும் பாடலே 'பீப் சாங்' என பின் கண்டேன். காதலில் தோல்வி அடைந்த ஆண்களைப் பார்த்து பாடுகிறார் சிம்பு. மிக மோசமான வார்த்தைகள். இது தன் சொந்தப் பாடல் என்று வேறு சொல்கிறார். சொந்தப் பாடல் என்றால் அதை சொந்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதுதானே. நேற்று நாம் பிறந்த நாள் கொண்டாடிய பாரதியின் மண்ணில், இன்று இந்த ஃபேஸ்புக், யுடியூப் கவிஞர்களால் பெண்கள் இழிவுபடுத்தப்படும்போது, நாம் கலாச்சாரத்தில் பின்நோக்கி போய்க்கொண்டிருக்கிறோமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நிற்க.

'சென்னை வெள்ளம் படித்தவர்களையும், படிக்காதவர்களையும், வசதியானவர்களையும், வசதிக்குறைவானவர்களையும் வரிசையில் நிற்க வைத்துவிட்டது' என்று ஒரு வாசகர் இந்த வாரம் ஆனந்தவிகடனில் புலம்பியிருக்கிறார்.

இதற்கு பதில் தரும் மற்றொரு வாசகர், 'வரிசையில் நிற்பதை ஏன் கேவலமாகப் பார்க்க வேண்டும்? ஜப்பானில் சுனாமி வந்தபோது வரிசையில் நின்று அவர்கள் உதவி பெறவில்லையா? நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டாலும், எதற்காக இந்த வறட்டு கவுரவம்? உதவி வேண்டி நிற்பது தவறில்லை. வரிசையில் நிற்பது தவறில்லை. கால்கடுக்க ரேஷனில் நின்று அரிசி வாங்கும் பெயர் தெரியாத ஒரு கிராமத்தானும் மனிதன்தான். வரிசையில் நிற்கிறான் என்பதற்காக அவன் தாழ்வானவன் அல்ல' என எழுதியிருந்தார்.

மதுரையில் நான் அருட்பணியாளராக இருந்தபோது, வங்கிக்குச் சென்றாலும், ரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு என சென்றாலும், ஓட்டலில் ஆர்டர் கொடுத்துவிட்டு பார்சல் வாங்க காத்திருந்தாலும், நான் வரிசையில் நின்றதில்லை. அங்கு வேலை செய்யும் நண்பர்கள் இருப்பதால் நேரிடையாக அவர்களிடம் சென்று வேலையை முடித்துவிடுவேன். வெளியே வரும்போது அங்கு நின்றுகொண்டிருக்கும் வரிசையைப் பார்த்தவுடன் எனக்குள் பெருமிதமாக இருக்கும். ஆனால், நான் செய்தது தவறு என்றே உணர்கிறேன். நான் என் நண்பரைப் பயன்படுத்தி என் வேலையை சீக்கிரம் முடித்தாலும், என் வேலை அடுத்தவரின் காத்திருப்பை இன்னும் அதிகரித்திருக்கிறதே. அவசரமாக நான் செல்ல வேண்டும் என்று நான் எனக்கே ஆறுதல் சொன்னாலும், மற்றவருக்கும் அவசரம் இருக்கத்தானே செய்யும். வரிசையில் நிற்பதை வெட்கம் என நானும் நினைத்ததற்கு வருந்துகிறேன்.

வரிசையில் நிற்பது எனக்கு எந்த அளவுக்குப் பிடிக்காதோ, அதே போல மற்றவர்களிடம் உதவி பெறுவதும் எனக்குப் பிடிக்காது. இதுவும் தவறு என்றே உணர்கின்றேன்.

எப்படி?

நான் திருமணம், புதுநன்மை என நண்பர்களின் குடும்ப நிகழ்வுகளுக்கு அழைக்கப்படும்போதெல்லாம் வெறுங்கையாய் செல்வதில்லை. ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன். என் அருட்பணி நண்பர்கள்கூட, 'இந்தா வாரான்யா கிப்ட் கடை' என்று கிண்டல் செய்வார்கள். அதாவது, ஒருவர் அழைக்கிறார் என்றால், அந்த அழைப்பிற்கு அல்லது அவர் செய்ததற்கு உடனடியாக பதில் அன்பு செய்துவிட வேண்டும் என்பதுதான் என் செயலின் பின்புலம். இதுகூட ஒருவகை ஆணவம்தான். அதாவது, யாருக்கும் நான் கடன்படக்கூடாது என்று நினைப்பது.

என் பிறந்த நாள் அன்று ரோசாப்பாட்டி விருந்துக்கு அழைத்தார். விருந்துக்குச் செல்லும்போது கையில் ஒயின் அல்லது கேக் கொண்டு செல்ல வேண்டும் என்பது இங்கே மரபு. இந்த மரபு எதற்காக? அதாவது அவர்கள் அளிக்கும் விருந்திற்கு பதில் விருந்தின் அடையாளமே இது. முந்தின நாளே நானும் இவை இரண்டையும் வாங்கி வைத்துவிட்டேன்.

ஆனால் விருந்துக்குச் செல்லுமுன் எனக்குள் உணர்வு. 'இன்று கையில் எதுவும் கொண்டு போகாமல் போவோம். என்ன நடக்கிறது?' எனப் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டேன். வெறுங்கையோடு போனேன். வீட்டிற்குள் நுழையும்போது கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் அந்த உணர்வை அப்படியே ஏற்றுக்கொண்டேன்.

விருந்து ரொம்ப விமரிசையாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே எனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு, அதை அப்படியே சமைத்து வைத்திருந்தார் பாட்டி. விருந்து என்றால் ஏழு ப்ளேட் வகை இருக்கும்: (0) அப்படைசர், (1) பாஸ்தா, (2) இறைச்சி (நான் முட்டை எடுத்தேன்), (3) சாலட், (4) பழம், (5) கேக் மற்றும் சாம்பைன், (6) ஐஸ்க்ரீம், (7) காஃபி. இவற்றில் ஐஸ்க்ரீம் தவிர நான் எல்லாம் எடுத்தேன்.

திகட்ட திகட்ட கவனித்தார் பாட்டி. அவரின் ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் வந்திருந்தனர். 'எங்கே அமர வேண்டும்' என்று இடத்தைக் காட்டியதிலிருந்து, 'கதவை வந்து திறந்துவிடும்வரை' கூடவே இருந்தார் பாட்டி. இந்தப் பாட்டிக்கு மற்றொரு பழக்கம் இருக்கிறது. செல்டிக் நாகரீகத்தின் பழக்கம் இது. அதாவது, வீட்டிற்கு வரும் விருந்தினர் தானே கதவு திறந்து செல்லக் கூடாது. அப்படி அவர் சென்றால் அவர் திரும்ப அந்த வீட்டிற்கு வரமாட்டாராம். ஆகையால் வீட்டின் உரிமையாளர்தான் கதவைத் திறந்து, விருந்தினரை வெளியனுப்ப வேண்டும். ஆக, யார் இந்த வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ளவர்கள்தாம் இறுதியிலும் கதவைத் திறந்து அனுப்புவார்கள்.

அன்று இரவு நான் கற்ற நல்ல பிறந்தநாள் பாடம் இதுதான்:

'வாழ்வில் நாம் அனுபவிக்கும் எல்லாவற்றிற்கும், நாம் திரும்ப கைம்மாறு செய்துவிட முடியாது. அப்படி செய்துவிட நினைக்கவும் கூடாது. நம் அன்பிற்குரியவர்கள் அள்ளிக் கொடுக்கும் கொடைகளை ஏந்த கைகளை விரிக்கவும் ஒரு மனப்பக்கவம் மற்றும் திறந்த உள்ளம் வேண்டும். இந்த உலகிற்கு நம்மை அனுப்பிய கடவுள் நம்மை வெறுங்கையாகத்தானே அனுப்பினார். 'நீ போ, அங்க உன் பெற்றோர்கள் இருப்பாங்க! உன் டாக்டர் இருப்பாங்க! இந்தா, இந்த கிப்ட் அவர்களுக்கு கொண்டு போ' என்று சொல்லி நம் கைகளில் ஒன்றும் கொடுத்துவிடவில்லையே. பெறுவதற்கு இதுதான் நமக்கு நேரம் என்றால் பெறுவோம். ஏனெனில் கொடுப்பதற்கு நேரம் வரும். அந்த நேரம் வரும்போது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.'

நல்ல பாடம்தானே!



4 comments:

  1. Indeed a good lesson Father....
    John expressed his humility in the last words of the Sunday's gospel...
    our humbleness exists in let going our pride of self sufficiency... chennai floods taught the message to many of us...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சென்னை வெள்ளம் இருப்பவர்களுக்கும்,இல்லாதவர்களுக்கும்...ஏன் அவர்களைச் சுற்றியிருக்கும் நமக்கும் எத்தனையோ வாழ்க்கைப்பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தாங்கள் வாழும் மண்ணுக்குச் சொந்தமான பல கலாச்சாரங்களிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல பாடங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது மட்டுமின்றி கடந்த காலத்தில் தெரியாது செய்த சிறிய தவறுகளுக்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறீர்கள்.இது தங்களின் பரந்த மனதை வெளிப்படுத்துகிறது. ரோசாப்பாட்டி தங்களுக்குக் கொடுத்த விருந்தைத் தாங்கள் விமரிசித்துள்ள விதம் மனமிருந்தால் எதிலிருந்து வேண்டுமானாலும் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதை சொல்லாமல் சொல்கிறது.ஆனாலும் நீங்கள் அன்று இரவு கற்றுள்ள பாடத்தை வெளிப்படுத்தியுள்ள விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளதால் அதை அப்படியே நானும் திருப்பித்தர விழைகிறேன்." வாழ்வில் தாம் அனுபவிக்கும் எல்லாவற்றிற்கும் நாம் திரும்பக் கைமாறு செய்து விட முடியாது.அப்படி செய்துவிட நினைக்கவும் கூடாது.நம் அன்பிற்குரியவர்கள் அள்ளிக்கொடுக்கும் கொடைகளை ஏந்த கைகளை விரிக்கவும்,ஒரு மனப்பக்குவம் அல்லது திறந்த உள்ளம் வேண்டும்.இந்த உலகிற்கு நம்மை அனுப்பிய கடவுள் நம்மை வெறுங்கையாகத்தானே அனுப்பினார். " நீ போ.அங்கே உன் பெற்றோர்கள் இருப்பாங்க ! உன் டாக்டர் இருப்பாங்க! இந்தா,இந்த கிஃப்ட் அவர்களுக்குக் கொண்டு போ" என்று சொல்லி நம் கைகளில் ஒன்றும் கொடுத்துவிட வில்லையே.பெறுவதற்கு இதுதான் நமக்கு நேரம் என்றால் பெறுவோம்.ஏனெனில் கொடுப்பதற்கு நேரம் வரும்.அந்நேரம் வரும்போது நாம் விரும்பினாலும்,விரும்பாவிட்டாலும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்." அந்த இறுதி வரி...சாட்டையடி.கண்டிப்பாக மிக நல்லதொரு பாடத்தைத் தந்திருக்கிறார்கள் தந்தையே! நன்றியும்,பாராட்டும்!!!

    ReplyDelete
  4. தந்தைக்கு வணக்கம்."நல்ல பாடம்தானே" என்ற பதிவு நல்ல ஒரு படம் பார்த்தது போல் இருந்தது.வரிசையில் நிற்பது எனக்கு எந்த அளவுக்குப் பிடிக்காதோ, அதே போல மற்றவர்களிடம் உதவி பெறுவதும் எனக்குப் பிடிக்காது. இதுவும் தவறு என்றே உணர்கின்றேன் என்னை வருடிய வார்த்தைகள்.நிறைய நேரங்களில் எனக்கும் இது அறவே பிடிக்காத ஒன்று. டெல்லிக்கு ராஜாவா இருந்தாலும் பாட்டிக்கு பேரன்தான் என்ற சொல்லாடல் நாம் அடிக்கடி கேட்டா ஒன்று.இது எனக்கும் பொருந்தும்.ஆக,நேரம் வரும் போது காலம் என்ன சொல்கிறதோ அதன்படியும் வாழக் கற்றுக்கொள்வோம்.தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete