Monday, December 21, 2015

அன்னா

நாளைய முதல்வாசகத்தின் கதாநாயகி சாமுவேலின் அம்மா அன்னா.

முதல் ஏற்பாட்டு அன்னா எனக்கு என்றும் ஆச்சர்யம் தரக்கூடிய கதாபாத்திரம்.

எதற்காக?

'இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவரின் சக்களத்தி அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.' (1 சாமு 1:7)

அன்னாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதை ஒரு குறையாகச் சொல்லி அவளின் சக்களத்தி அவளைத் துன்புறுத்துகிறாள்.

இந்தக் கண்ணீரை ஆண்டவரிடம் முறையிட வருகிறார் அன்னா.

அங்கு என்ன நடக்கிறது?

ஏலி அவரை நோக்கி, 'எவ்வளவு காலம் நீ குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து' என்றார். அதற்கு அன்னா, 'இல்லை! என் தலைவரே! நான் உள்ளம் நொந்த பெண்...ஆண்டவர் திருமுன் என் உள்ளத்தைக் கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்குப் போனா, அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடுச்சாம் என்கிற கதையா, சக்களத்தி கொடுமையை கடவுளிடம் முறையிடப்போன அன்னாவுக்கு, குடிகாரி என்ற பட்டம் கிடைக்கிறது.

ஆனால், இங்கே எனக்கு அன்னாவிடம் பிடிச்சது என்னவென்றால், அவரின் திடமான உள்ளம். 'யார் என்ன சொன்னாலும், யார் என்னை எப்படிப் புரிந்து கொண்டாலும், என்னைப் பற்றி எனக்குத் தெரியும். என் அருமை எனக்குத் தெரியும். என் குறை எனக்குத் தெரியும்' என துணிவாக நிற்கிறார்.

இது எனக்கு நல்ல பாடம். என் அருமையை அடுத்தவரின் பாராட்டில் அல்லது தட்டிக்கொடுத்தலில் அல்லது உற்சாகப்படுத்துதலில் கட்டி வைக்காமல், நானே உணர்வதற்கு அன்னா என்னைத் தூண்டுகிறார்.

இரண்டாவதாக,

'இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே, நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன்.' (1 சாமு 1:27-28)

ரொம்ப வருஷமா குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது. அப்படி பிறந்தால் அவள் என்ன செய்ய வேண்டும்? தன்னைக் கேலி செய்த எல்லாரையும் கூப்பிட்டு, 'ஏன்டி, என்னயவா கிண்டல் பண்றீங்க? இங்க பாருங்க லட்டு மாதிரி ஒரு பையன் எனக்கு பிறந்திருக்கான்' என்று காட்டுவாள். அல்லது அவனைத் தன்னுடனே வைத்திருந்து, 'நீ தவமிருந்து பெற்ற மகன்' என்று அவனைப் பார்க்கும்போதெல்லாம், உள்ளம் குளிர்ந்திருப்பாள்.

ஆனால், அன்னா இப்படிச் செய்யவில்லை.

ஆண்டவருக்கு அர்ப்பணித்து விடுகிறார்.

இதை இவர் செய்ய இரண்டு காரணங்கள் இருந்திருக்க வேண்டும்:

அ. 'நான் என்னையே யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை.' அதாவது, கேலி பேசியவர்களின் கேலிப் பேச்சை ஒரு பொருட்டாகவே அவர் கருதவே இல்லை. தன் வாழ்வை தான் தேர்ந்து கொண்ட வழியில் வாழ்கிறார். நம்ம வாழ்க்கை பல நேரங்களில் நம்மை அடுத்தவர்களுக்கு 'ப்ரூவ்' பண்ணுவதிலேயே கழிந்துவிடுகிறது. இல்லையா? 'நான் படித்தவன், பட்டம் பெற்றவன், பணம் படைத்தவன், செல்வாக்கு படைத்தவன்' என ஒவ்வொரு நொடியும் அடுத்தவர்கள் முன் நம்மை நிரூபிக்க நினைக்கிறோம். அல்லது அடுத்தவர்களின் கேலிப் பேச்சை பொய்யாக்க நினைக்கிறோம். இந்த முயற்சியில் நமக்கு மிஞ்சியதெல்லாம் களைப்பும், இளைப்புமே. 

ஆ. 'தான் அதிகம் அன்பு செய்கின்ற ஒன்றை கடவுளுக்கு கொடுப்பது.' தான் பயன்படுத்தியதையோ, அல்லது தனக்கு தேவையில்லாததையோ கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதை விடுத்து, தன் உயிர், ஆவி என நினைக்கின்ற உயரிய தன் குழந்தையை கொடுத்து விடுகிறார். இது என் அர்ப்பண வாழ்வுக்கு அன்னா விடுக்கும் அழைப்பாகவே பார்க்கிறேன். கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. வருத்தப்படவும் கூடாது. அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது.


3 comments:

  1. எந்த ஒரு பெண்ணின் மனத்தையும் வருடி விடக்கூடிய பதிவு. நானும் கூட ஒவ்வொரு முறையும் ' சாமுவேல்' ஆகமத்தைப் புரட்டுகையில் இந்த 'அன்னா' என்னை வெகுவாக்க் கவர்ந்துள்ளார்.அவரை அவரது கணவன் எல்கானா உயிருக்குயிராய் நேசித்தும் தன் சக்களத்தியின் ஏச்சையையும்,பேச்சையும் எதிர்க்க இயலாமையால் வாயில்லாப் பூச்சியாய் வாழ்ந்தவள் அவள் தான் ஒரு பிள்ளைக்குத் தாயாகாத காரணத்தால். பின் இறைவன் கருணையால் ஒரு ஆண் மகவுக்குத் தாயானபோதும் அந்தக்குழந்தையை ஆண்டவனுக்கே அர்ப்பணிக்கும் பெரிய மனது இவருக்கு. துன்பம் வருங்கால் துவண்டுவிடாமலும், செல்வம் வருங்கால் செருக்கு வராமலும் தன்னைக் காத்துக்கொண்ட இவள் நமக்கெல்லாம் ஒரு பாடமாக உயர்ந்து நிற்கிறார். " போற்றுவார் போற்றினும்,தூற்றுவார் தூற்றினும் ஆண்டவரே எனக்கெல்லாம்" என்றிருந்த இவர் வாழ்வின் இருளில்,மற்றவரின் எகத்தாளப் பேச்சில் சுருண்டு போயிருப்பவர்களுக்குச் சுடரொளியாவார்.அந்த இறுதிப் பாராவில் தந்தை இவள் எப்படி ஒரு 'அர்ப்பண வாழ்வுக்கு'ஆணிவேராயிருக்கிறாள் என்பதைத் தனக்கே உரித்தான தெளிவோடு கூறியிருப்பினும், இவள் என்னைப் போன்ற குடும்பப் பெண்களுக்கும் ஒரு குத்துவிளக்காக ஜொலிக்கிறாள்.மனத்தைத் தொட்ட வரிகளைத் தந்த தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. கண்களில் ஏக்கத்தைத் தேக்கி நிற்கும் அந்தத் தாயையும்,சேயையும் விட்டு என் கண்களை எடுக்க இயலவில்லை.தந்தைக்கு மீண்டும் ஒரு பாராட்டு!!!

    ReplyDelete
  3. தந்தைக்கு வணக்கம்.கடவுளுக்குக் கொடுத்துவிட்ட ஒன்றோடு நான் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. வருத்தப்படவும் கூடாது. அதை ஒரு இழப்பாகவும் கருதக்கூடாது.நல்ல ஒரு கருத்தாழமுள்ள பதிவிற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete