Monday, December 28, 2015

மாசில்லாக் குழந்தைகள்

யோசேப்பும், மரியாளும் தன் குழந்தை இயேசுவைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடிய அந்த இரவில், என் வீடு பட பட என தட்டப்படும் சத்தம். வேகமாக ஓடி வந்தேன் வெளியே. எனக்கு பிரசவம் பார்த்த என் பக்கத்து வீட்டு அம்மா நின்றிருந்தாள். அவளுடன் சில படைவீரர்கள் கையில் நீண்ட வாளுடன் நின்றிருந்தனர். குழந்தை பிறந்த வீட்டை அடையாளப்படுத்துவதற்காக அவளை உடன் அழைத்து வந்திருந்தார்கள். அவளும் முன்னுக்குப் பின்னாக பதில் சொல்ல படைவீரர்களை திசைதிருப்பப் பார்த்தாள். ஆனால் அவர்கள் அவளை விடுவதாயில்லை. என்னை நோக்கி அவளின் கை நீண்டது. 'உன் குழந்தையை எடுத்துக்கொண்டு வெளியே வா!' அதட்டியது ஒரு சிப்பாய் குரல். 'முடியாது!' என்றேன். விருட்டென்று உள்ளே நுழைந்த வீரன் ஒருவன் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த என் குழந்தையை எடுத்து தலைகீழாய்ப் பிடித்து என் முன்னே அறுத்தெறிந்தான். நான் அப்படியே மயங்கி விழுந்தேன்.

மயக்கம் தெளிந்த மூன்றாம் நாள், சோர்ந்து திண்ணையில் அமர்ந்திருந்தேன். என் வீட்டில் மட்டுமல்ல. எல்லார் வீட்டிலும் இதேதான் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.

வழக்கமாக பெற்றோரை இழந்த குழந்தைகள்தாம் அநாதைகளாகி நிற்பர். ஆனால் அன்று குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அநாதைகளாக நின்றனர்.

'யாரோ ஒரு அரசன் பிறந்திருக்கானாம்! அவனை கொல்லணும்னு நினைச்ச நம்ம ஏரோது நரி அரசன் இப்படி எல்லார் குழந்தையும் கொன்னுபுட்டனே!' என்று அழுகையோடு அழுகையாய் காரணத்தைக் கொட்டினாள் பெண்ணொருத்தி.

எனக்கு கோபம் வந்தது.

முதலில் பிறந்திருக்கும் அந்த அரசன் மேல். பிறந்த அந்த அரசன் இங்கு வந்துதான் பிறந்திருக்க வேண்டுமா?

இரண்டாவது, இந்த அரசனைத் தேடி வந்த ஞானியர்கள்மேல்! ஞானியர்களாம் ஞானியர்கள்! மடையர்கள்! 'அரசனிடமே போய் இன்னொரு அரசன் பிறந்திருக்கிறான்' என்று சொல்வது ஞானமா? மடையர்கள்!

மூன்றாவது, ஏரோது மேல். ஏன்டா உனக்கு அரசன்மேல கோபம்னா, அவனைப் போய் பார்த்து, அவனோட சண்டை போடணும்! அதை விட்டுட்டு சும்மா தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளைப் போய் கொலை செய்து...வெட்கமாயில்லை உனக்கு...அப்படி என்னடா உனக்கு அதிகாரத்தின் மேல பிடிப்பு. நீ என்னைக்கும் உயிரோடவாடா இருக்கப் போற!

ஐயோ! இப்படி புலம்புறேனே! இப்படி புலம்புவதால் என் மகன் உயிரோடு வந்துவிடுவானா?

நிற்க!

நாளை மாசில்லாக் குழந்தைகள் தினம்.

ஏரோது குழந்தைகளைப் படுகொலை செய்தது வரலாற்று நிகழ்வா? அவன் பலரை படுகொலை செய்திருக்கிறான். ஆக, இவர்களையும் செய்திருக்கலாம். குழந்தைகள் கொல்லப்பட்டது பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்ற கணக்கும் நமக்கு வேண்டாம்.

இந்த நிகழ்வு நடந்ததாகவே வைத்துக்கொள்வோம்.

ஏரோது செய்தது தவறு. ஆனால் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. அவர்களின் விவிலியத்தில் பாரவோன் மன்னன் எகிப்தில் (விப 1-3) இப்படித்தான் செய்தது என்று அவன் அறிந்திருந்தான். 'நான் நல்லாயிருக்கணும்னா யாரையும் அழிக்கலாம்!' என்ற சித்தாந்தத்தில் வளர்க்கப்பட்டவன் அவன். 'பவர்' இருக்கும் வரைதான் நம்மை மதிப்பார்கள் என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். ஆக, அந்த பவரை அவன் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. தன் கோபத்தை பாவம் எல்லா பிஞ்சுக்குழந்தைகள்மேலும் காட்டிவிடுகிறான்.

பாவம்...

ஊமையாக இருப்பவர்களும், வலுவிழந்தவர்களும் தான் அழிக்கப்படுவார்கள் என்பது வரலாற்று நியதிபோல!

'அரசே! நீ செய்வது சரியல்ல!' என்று சுட்டிக்காட்ட ஒரு மந்திரிக்கும் தைரியமில்லையா?

கொலை செய்ய சென்ற போர்வீரர்களுக்கும் குழந்தைகள் இருந்திருக்குமே! எப்படி தங்கள் மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவர்கள் இந்த இரத்தப்பழியில் பங்கேற்றார்கள்?

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கடையில் காஃபி குடித்துக்கொண்டிருந்தபோது, வெளியே கண்ணாடிவழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணாடி வழியாக என்னைப் பார்த்த ஒரு தாத்தா தன் மகளுடன் உள்ளே வந்தார். 'என்ன பார்க்குறீங்க?' என்று கேட்டார். 'அலங்காரங்களை!' என்றேன்.

'இந்த உலகத்துக்கு நாம வர்றதே பார்க்குறதுக்குத்தான். நல்லா பாருங்க!' என்றவர் தொடர்ந்து,

'வருகிறோம். பார்க்கிறோம். செல்கிறோம்! நாம வர்றதுக்கு முன்னால இந்த உலகம் இருந்துச்சு! நாம போன பின்னாலயும் இந்த உலகம் இருக்கும்!' என்றார்.

அவரின் மகள் குறுக்கிட்டு, 'வருகிறோம். பார்க்கிறோம். ஆனால் கொஞ்சம்தான் பார்க்கிறோம். நான் பார்ப்பதுதான் சரி என்று சண்டை போடுகிறோம். அப்புறம் பார்த்தும் பார்க்காமலும், செல்கிறோம்!' என்றார்.

இவர்களின் வார்த்தைகள் எனக்கு ஆச்சர்யமாவர் இருந்தன. மிக எளிதாக வாழ்வைப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
ஏரோது என்ன சாகாவரம் பெற்றவனா? அவனும் அழிந்தானே!

நாம் வாழும் இந்த கொஞ்ச நாட்களில், நாம் பார்க்கும் அனைத்தையும் அப்படியே இரசித்துவிட்டு, அடுத்தவர் பார்ப்பதையும், 'ஆகா' என தட்டிக்கொடுத்து, கடந்து சென்றால்,

நாமும் மாசில்லாக் குழந்தைகளே!

நாம் எல்லாருமே மாசில்லாக் குழந்தைகள்தாம்... வாழ்த்துக்கள்.


1 comment:

  1. ஒரு ' மோனோ ஆக்ட்' பாணியில் தந்தை பெண்ணொருத்தியின் புலம்பலாக பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்ட கோரத்தை வர்ணிக்கிறார்." ஊமையாக இருப்பவர்களும், வலுவிழந்தவர்களும் தான் அழிக்கப்படுவார்கள் என்பது வரலாற்று நியதி" ...கண்டிப்பாக அன்று ஏரோதரசனால் அரங்கேற்றப்பட்டக் கோரத்தாண்டவம் இன்று பல ஏரோதுகளின் வழியாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிறர் உயிரை மட்டுமல்ல...உணர்வுகளைக் கொல்லும் போது கூட நாமும் 'ஏரோதுகளே!' அந்த முதியவர் மற்றும் அவர் மகள் வழியாக தந்தை எடுத்துக்கூறும் உண்மையும் வரவேற்கப்பட வேண்டியதொன்றே! " நாம் வாழும் இந்தக் கொஞ்ச நாட்களில், நாம் பார்க்கும் அத்தனையையும் அப்படியே இரசித்துவிட்டு, அடுத்தவர் பார்ப்தையும் 'ஆகா' எனத்தட்டிக்கொடுத்து,கடந்து சென்றால் " நாமும் மாசில்லாக் குழந்தைகளே!" அது மட்டுமல்ல...என்னதான் மாசுமருவோடு இவ்வுலகிற்கு வந்திடினும் அதைக் களைய வேண்டி தினம் தினம் போராடிக்கொண்டிருக்கும் நாம் அனைவருமே 'மாசில்லாக் குழந்தைகள்'தான்! ....வாழ்வோம்; வாழ்த்துவோம். தந்தைக்கும் மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete