Wednesday, December 2, 2015

பெரிய தகப்பன்

நாளைய தூய சவேரியாரின் திருநாள்.

தூத்துக்குடி மற்றும் கோட்டாறு போன்ற கடலோர நகரங்களில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அழைக்கப்பெற்று, இன்றும் கோவாவில் அழியா உடலோடு துயில் கொண்டிருக்கிறார் இவர்.

நான் பயின்ற புனே பாப்பிறை பாசறையின் பாதுகாவலரும் இவரே.

நாளைய கட்டளை செபத்தில் இவர் இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடல் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் நான் இரசித்தவற்றை இன்று பதிவு செய்கிறேன்:

1. கடிதத்தின் தலைப்பு: 'நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு!'

2. தென் இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து இதை எழுதுகிறார். நாள், இடம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

3. 'இங்கு வந்த நாளிலிருந்து நான் ஓய்வெடுக்கவேயில்லை. கிராமங்கள்தோறும் சென்றேன். 'வலது எது இடது எது' என தெரியாத குழந்தைகளும், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளும் என்னைச் சுற்றியே இருக்கின்றார்கள். எனக்கு கட்டளை செபம் சொல்லக் கூட முடியவில்லை.

இதில் இரண்டு விடயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று, நற்செய்திப் பணி அல்லது பங்கின் மேய்ப்புப் பணி குழந்தைகளிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். குழந்தைகள் வந்துவிட்டால் வளர்ந்தவர்களும் உடன் வந்துவிடுவார்கள். இரண்டு, தன் வேலையை செபத்தோடு இவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. 'நான் செய்யும் வேலையே என் செபம்' என சில அருட்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னதான் நாம் மக்களுக்காக வேலை செய்தாலும், அவை நம் செபத்தோடு சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது.

4. 'நல்ல அறிவாளிகளையும் நான் கண்டேன்.' அதாவது, தான் பணியாற்றும் இடத்தில் தனக்குக் கீழ் இருப்பவர்களும், தன்னால் பயன்பெறுபவர்களும் அறிவற்றவர்கள் அல்லர், மாறாக, அறிவாளிகள் என்கிறார். அதாவது, மற்றவர்களின் திறனை மதிக்கின்றார். என் பணித்தளத்திலும் கூட, என்னைவிட அறிவாளிகள், திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திறனை நான் மதிப்பதே சால்பு.

5. 'என்னை எங்கு வேண்டுமாலும் அனுப்பும்!' - இது இவரின் செபம்.

இந்தக் கடிதத்தில் புதிய இடத்தில் தான் அனுபவிக்கும் வெயில், குளிர், மழை, பாதுகாப்பின்மை, நோய், வசதிக்குறைவு எதைப்பற்றியும் ஒரு வார்த்தைகூட இல்லை.

'நான் விரும்பித்தானே வந்தேன்!' என்று எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்த ஒருவரால்தான் இப்படி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும்.

சவேரியாரின் வாழ்வியல் விருதுவாக்கு: 'மேன்மை' (Excellence)

நாம் செய்யும் எல்லாவற்றிலும் இந்த மேன்மை இருக்க இவர் நம்மைத் தூண்டுவாராக.

3 comments:

  1. புனித சவேரியார்....இயேசு சபையின் முக்கியத்தூண்களில் ஒருவர்.தென் முனையின் 'கோட்டாறில்' நாளைக்கு 'லோக்கல் ஹாலிடே' என்பதிலிருந்து இவருக்கு மக்களிடம் உள்ள மவுசு விளங்கும்இவர் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலின் சாராம்சம் எல்லோருமே இரசிக்கக் கூடியவைதான். இவற்றில் உள்ள பல விஷயங்கள் ஒரு 'அருட்பணியாளரை'க் குறி வைத்தே இருப்பினும் அந்த மடலின் தலைப்பு " நற்செய்தி அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு! கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவருக்குமே பொருந்தக்கூடியது.பைபிளைக் கையில் எடுத்து செய்யும் பிரசங்கங்களை விட நம் மனத நேயத்தால்,வாழும் வாழ்க்கை முறையால் கிறிஸ்துவை, அவரின் நற்செய்தியைப் பொது நிலையினரும் நம்மைச் சுற்றி இருப்பவரும் எடுத்துச் செல்லலாம் என்று அழைப்பு விடுக்கிறது இன்றையப் பதிவு. ''மேன்மை" எனும் அவரது விருதுவாக்கை நாமும் நம் கைபதிக்கும் அனைத்திலும் பிரதிபலிப்போம் என்று சபதமெடுப்போம். இவரைத் தங்கள் பாதுகாவலராக ஏற்றுக்கொண்டிருக்கும் இயேசு சபைக் குருக்களுக்கும்,மற்ற அனைத்து அருட்பணியாளர்களுக்கும், மிக முக்கியமாக நல்லதொரு பதிவைத்தந்த தந்தைக்கும் " திருநாள் " வாழ்த்துக்கள்!! நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. அம்மாவுக்கு பெரியதகப்பனின் பெருநாள் வாழ்த்துக்கள்.என்னுடன் Google ப்ளஸில் இணைந்ததற்கு நன்றிகள் பல.

      Delete
  2. தந்தைக்கு வணக்கம். நல்ல ஒரு அர்த்தமுள்ள பதிவு.அருள்நிலையில் உள்ளவர்களுக்கு கொடுத்த நெற்றி அடி போன்று உள்ளது இன்றைய பதிவு .இதற்க்கு மேல் என்ன வேணும் நமக்கு."நான் விரும்பித்தானே வந்தேன்!'' என்று எல்லாவற்றையும் விரும்பி ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்த ஒருவரால்தான் இப்படி குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும்.என் மனதை கவர்ந்த வார்த்தைகள்.இந்த ஒரு பரந்த மனப்பான்மையோடு நாம் நமது காரியங்களை மிக அருமையாகவும் தெள்ளத்தெளிவாகவும் மேன்மையை நோக்கி செய்யவும் இறைஅருள் வேண்டுவோம் தூய சவேரியார் வழியாக.தந்தைக்கு நன்றிகள்.பெரிய தகப்பன் தூய சவேரியார் பெருநாள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete