ரோமில் கடந்த வாரம் நடைபெற்ற குடில் கண்காட்சிக்கு சென்றேன்.
40ஆம் ஆண்டாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகின் பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100 குடில்களை வைத்திருந்தார்கள்.
அதில் ஒரு குடில் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது (படத்தில் காண்பது).
வளனார் குழந்தை இயேசுவை கையில் தூக்கி வைத்திருக்க, மரியா களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருப்பார்.
நல்ல கற்பனை.
கிறிஸ்து பிறப்பு காலத்தில் மரியாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வளனாருக்கு அவ்வளவாக கொடுக்கப்படுவதில்லை.
ஆண்கள், என்னதான் வல்லவர்கள் என்றாலும், பிறப்பைக் காணும்போது, இறப்பைக் காணும்போது அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள்.
சத்திரத்தில் இடம் இல்லை! என்று சொல்லப்பட்டதே.
சத்திரத்தில் இடம் கேட்டவர் வளனாகத்தானே இருக்கும்.
மாட்டுக்கொட்டிலை கண்டுபிடித்தது யாராக இருக்கும்?
அதாவது, சாதாரண மக்களின் மனதில் இடம் பிடிக்க சாதாரண மனிதர்களால்தான் முடியும். பெரிய மனிதர்களின் பிரசன்னம் சாதாரண மனிதர்களுக்குப் பயமாக இருக்கும்.
வளனார் சாதாரண மனிதராக இருந்ததால் தான் என்னவோ, எளிதில் மாட்டுக்கொட்டிலில் இடம் வாங்கிவிட்டார்.
இயேசு பிறந்த அந்த இரவுப்பொழுதில் வளனார் அடைந்த அங்கலாய்ப்பு அளவில்லாமல்தான் இருந்திருக்கும்.
நிறைய குழப்பமும் இருந்திருக்கும்.
இது கடவுளின் மகனா? கடவுளின் மகன் என்றால் ஏன் இடம் கிடைக்கவில்லை? கடவுள் எல்லார் கனவுலயும் தூதரை அனுப்பியவர், இந்த சத்திரக்காரன் கனவுலயும் ஒரு தூதரை அனுப்பியிருக்கலாமே? அல்லது கடவுள் தூதரை அனுப்பியிருக்க, இந்த சத்திரக்காரன் அதை கண்டுகொள்ளவில்லையா?
யார் இந்த இடையர்கள்? ஏன் இந்த நட்சத்திரம்?
என நிறைய கேள்விகள் கேட்டிருப்பார்.
ஒருவேளை இவரின் எல்லாக் கேள்விகளுக்கும் கடவுள் அவரது கனவில் பதில் தந்திருக்கலாம். அதை நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாமல் விட்டிருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், வளன் என்றும் ஆச்சர்யமே!
உண்மைதான்....உடலில் இருக்கும் பலம் ஆண்களிடம் உள்ளத்தில் இல்லைதான்.அவர்கள் பிறப்பு,இறப்பு இவற்றைக் காணும் போது கைகளைப் பிசைந்துகொண்டு நிற்பார்கள் என்பதும் உண்மைதான்.ஆனால் இந்த ஆண்களிலிருந்து சிறிது மாறுபட்டு நிற்கிறார் நம் வளன். ஏழ்மைக்கு,எளிமைக்குச் சொந்தக்கார்ர் .....ஆனால் காரியத்தில் வல்லவர்.அதனால் தான் கோடான கோடி மக்களின் மனத்தில் ' புனிதராக'க் குடியிருக்கிறார்.சாதாரண மக்களின் மனத்தில் இடம்பிடித்த மிகச் சாதாரணமானவர் எனினும் மீட்பரைப் பெற்றடுத்த மரியாளின் துணைவர் என்பது இவரை அசாதாரண' புருஷனாக'ஆக்கி விட்டது.ஆம்....பல கனவுகளுக்குச் சொந்தக்கார்ரான இவர் ஒரு " ஆச்சரியம்" என்பதும் உண்மையே! இங்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் குடிலின் படமும் கூட மிக வித்தியாசமானதுதான். வித்தியாசங்களைத் தேடிப்பிடித்துத் தரும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
ReplyDelete