Friday, July 31, 2015

ஊருக்கு நாலு பேரு!

நேற்று காலை நாக்பூர் சிறையில் யாகூப் மேமன் அவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மனிதன் மனிதனைத் தண்டிக்கும், உயிரை எடுக்கும் கொடூரம் ஒன்றும் புதிதல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை நிகழ்வை நாம் நாளைய நற்செய்தியில் வாசிக்கின்றோம்.

ஊருக்கு நாலு பேரு என்பது மாதிரி இந்த நிகழ்விலும் நாலு பேரு - ஏரோது, ஏரோதியா, சலோமி மற்றும் (திருமுழுக்கு) யோவான்.

ஏரோதியா பற்றி லூக்கா பற்றி க்ளேட்வெல்லின் புதினத்தில் ஒரு குறிப்பு உண்டு. பிலாத்தின் அரண்மனை. விருந்து ஒன்று நடக்கிறது. விருந்திற்கு லூக்கானுஸ், ஏரோது, அவரது தம்பி பிலிப்பு அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பிலிப்பின் மனைவி ஏரோதியாவைத்தான் ஏரோது 'வைத்திருக்கிறார்'. விருந்தின்போது பிலாத்து ஏரோதிடம் அவரது அரசியல் நடவடிக்கைகள் ரோமிற்கு ஏற்றதுபோல இல்லாததால் அவரை அகற்றிவிட்டு பிலிப்பை நியமித்துவிட்டதாகச் சொல்கிறார். ஏரோதுக்கு தன் சகோதரன் பிலிப்பு மேல் கோபம். 'நான் உன் மனைவியை அபகரித்துக் கொண்டேன் என்பதற்காக என்னை ரோமிடம் போட்டுக் கொடுத்துவிட்டாயா!' என்று பிலிப்பு மேல் பாய்கின்றார் ஏரோது. அப்போது பிலிப்பு பின்வருமாறு சொல்வார்:

'ஏரோதியாவை நான் ஒருநாளும் அன்பு செய்ததில்லை.
அவளும் என்னை அன்பு செய்ததில்லை.
ஆகையால் அவள் என்னைவிட்டு உன்னிடம் வந்ததில்
அவள் மேலும், உன் மேலும் எனக்கு கோபமில்லை.
என் உலகத்தில் அவள் இருந்ததே இல்லை.
அவளுக்கும் எனக்கும் திருமணம் நடந்த நாளன்று,
நான் அவளைப் பார்த்து, 'I love us'
என்று சொல்ல நினைத்தேன். சொன்னேன்.
ஆனால் அவள் சிரித்தாள்.
'I love you' என்று சொல்வதைவிட,
'I love us' என்று சொல்வதுதான் சிறப்பு என நினைக்கிறேன்.
- ஏனெனில் நீயும், நானும் இணைந்தால்தானே காதல்.
நானில்லாமல் நீ எப்படி? -
ஆனால் இன்று ஏரோதியா என்னிடம் திரும்பினால்,
நான் 'I love you' என்றே சொல்வேன்.
ஏனெனில் 'I love wine', 'I love horseriding' என்பதுபோல
'I love you, Herodia'

ஏரோது, ஏரோதியா, சலோமி, யோவான் - இந்த நாலுபேரும் வெளியில் இருப்பவர்கள் அல்லர். நமக்கு உள்ளேயே இருக்கிறார்கள். இவர்கள் யார்?

அ. ஏரோது - மகிழ்விப்பவர் (Pleaser) - முதலில் தன் ஏரோதியாவை மகிழ்விக்க யோவானை தளையிடுகிறார். சலோமியை மகிழ்விக்க வாக்குறுதி கொடுக்கிறார். விருந்தினரை மகிழ்விக்க யோவானைக் கொலை செய்கிறார். கடைசி வரைக்கும் ஏரோது எப்படிப்பட்டவர் என்று நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவரை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், திருப்திப்படுத்துவதிலும் மட்டுமே அக்கறையாக இருக்கிறார் இவர். 'என் சந்தோஷத்தை விட உன் சந்தோஷம்தான் முக்கியம்' என்று நாம் அடுத்தவர்களை திருப்திப்படுத்துவதில் அக்கறை காட்டினோம் என்றால் நாம் அடுத்தவர்களுக்காக மட்டுமே வாழ்பவர்களாகிவிடுவோம். நம் மகிழ்ச்சியை அடுத்தவரிடம் கொடுத்துவிடுவோம். அடுத்தவர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுத்துவிடுவோம்.

ஆ. ஏரோதியா - பழிவாங்குபவர் (Avenger) - ஏரோதியா தன் குற்றத்தைச் சுட்டிக்காட்டிய யோவானை நேருக்கு நேர் பழிவாங்காமல் அந்தக் கோபத்தை மனத்தின் ஓரத்தில் வைத்து, தன் மகள் சலோமியைப் பயன்படுத்தி பழிவாங்குகிறார். இந்த வகை மனநிலை கொண்டிருப்பவர் எப்படி இருப்பார்? தன் கோபத்தை நேருக்கு நேர் காட்ட பயந்து கொண்டு, அதைத் தனக்குக் கீழ் உள்ளவற்றில் வடிகால் தேடுவார். 'திருட்டு' பற்றி ஒரு கதை படித்தேன் நேற்று. அதில் இறுதியாக என்ன புரிகிறது என்றால், திருடுபவர் எதற்காக திருடுகிறார்? தனக்கு இன்னும் வேண்டும் என்பதற்காகவா? இல்லை. சமூகத்தின் மேலுள்ள கோபத்தை இப்படித் திருட்டாக வெளிப்படுத்துகின்றார்.

இ. சலோமி - கிளிப்பிள்ளை (Duty-doer) - யார் சொன்னாலும் அதைச் செய்வார். நல்லதா, கெட்டதா என்று பார்க்க மாட்டார். இழுத்து இழுப்புக்கெல்லாம் வருவாள். இந்த மனநிலை நம்மிடம் இருக்கும்போது நாம் சூழ்நிலையின் கைதியாகிவிடுகிறோம். 'நான் என்ன செய்ய? அந்த சூழலில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செயல்பட முடியும்!' என்றும் சொல்லத் தொடங்கிவிடுகிறோம்.

ஈ. யோவான் - துணிச்சல்காரர் (Courageous) - அரசன் செய்வது தவறு என்று அவனிடமே சொல்வது. நேற்று அப்துல் கலாம் அவர்களின் நல்லடக்கம் நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். மேலும் அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்களும் வந்திருந்தார்கள். எனக்கு இப்படி நடந்திருக்க வேண்டும் என்ற ஆசை. என்ன ஆசை? கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் இணைந்து, வந்திருந்த அரசியல் தலைவர்களிடம், 'நீங்களும் இவரை மாதிரி எளிமையா, நாணயமா, கொள்கையோட இருப்பீங்கன்னு எங்களுக்கு சத்தியம் செஞ்சுட்டு இவருக்கு மரியாதை செய்யுங்க!' அப்படின்னு ஒரே குரலா சப்தம் போட்டு, வந்திருந்த சில நூறு அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும். இப்படித்தான் செய்தார் யோவான்.

இந்த நான்கு பேரும் நம்மில் இருக்கின்றனர். சில நேரம் ஏரோது அதிகாரத்தோடு இருப்பார். கொஞ்ச நேரம் ஏரோதியா கோபக்கணலோடு இருப்பார். சில நேரங்களில் சலோமி நடமாடுவார். சில நேரம் யோவான் வந்து போவார்.

நம்மில் யார் அதிகம் இருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கலாமே!

1 comment:

  1. ஒருவரை ஆத்தும சோதனைக்கு இட்டுச் செல்லும் அழகான பதிவு. ஒவ்வொரு பாத்திரமாக அவர்களின் குணாதிசயங்களைத் தந்தை கோடிகாட்டிய விதம் ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தது.கண்டிப்பாக எல்லாவிதமான குணாதிசங்களின் கலவைதான் மனிதன் என்று உணரமுடிகிறது.அடுத்தவருக்காகவே வாழும் ஏரோதானாலும்,பழிவாங்கும் குணம்கொண்ட ஏரோதியாவானாலும்,எடுப்பார் கைப்பிள்ளையான சலோமியானாலும் துணிச்சல்கார்ரான யோவான் ஆனாலும் சரி...ஒரு நாளின் முடிவில் நான் ஒரு ' மறிதனாயிருக்க' முயற்சித்திருக்கிறேனா?... இதுதான் நாம் யோசிக்க வேண்டிய, நம்மை நெறிப்படுத்தக் கூடிய விஷயம்.கலாம் அவர்களின் நல்லடக்கத்தின் போது நடந்திருக்கலாமே என நினைக்கும் தந்தையின் ஆதங்கம் புரிகிறது.பதவியில் உள்ள அனைவருமே ஏரோதுகளாய் மாறிப்போன இடத்தில் யோவான்களை எங்கே தேடுவது? கலாவின் மரணம் அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புவோம். நல்ல பதிவுக்கு நன்றி!!!

    ReplyDelete