Monday, July 27, 2015

எலைட் டாஸ்மாக்

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம்' என்று கடந்த வாரம் அறிக்கை விட்டார் கலைஞர் கருணாநிதி.

இதே கலைஞர்தான் 1971ஆம் ஆண்டில் இராஜாஜி இவரின் காலில் விழாத குறையாக, 'மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள்' என்று சொன்னபோது அதைக் கண்டுகொள்ளாமல் இரத்து செய்து, மதுக்கடைகளைத் திறந்துவிட்டார்.

45 வருடங்களுக்குள் கலைஞருக்கு ஞானம் பிறந்துவிட்டதா, அல்லது ஆட்சியைப் பிடிக்க வேறு அஸ்திரம் இல்லாததால் அதைக் கையில் எடுத்திருக்கிறாரா?

'டாஸ்மாக்கை மூட வேண்டும்!' என்று ஒரு பக்கம் குரல் பலமாக எழும்ப, நம்ம அம்மா மறுபக்கம் 'எலைட் டாஸ்மாக்' திறந்து கொண்டிருக்கிறார்.

குழந்தைகளுக்கு தாய்மாமனே மது கொடுப்பது, மகளிரும் மதுக்கடையில் மது வாங்குவது, குடித்துவிட்டு பேருந்து நிலையத்தில் ரகளை செய்வது என 'கலாச்சாரம்' வளர்ந்து கொண்டிருக்கிறது மறுபக்கம்.

இன்னொரு பக்கம் படிக்காமல் ஊர்சுற்றிக் கொண்டு, பாரில் அமர்ந்து குடித்துக்கொண்டு, வம்பு செய்து, அந்தப் பக்கம் வரும் ஒரு பணக்காரப் பெண்ணை 'வளைத்துக்' காதல் செய்வதே, 'இப்பிறவிப் பயன்' என்று சொல்லிக்கொடுக்கிறது இன்றைய சினிமா. குடிக்கின்ற காட்சிகளை வைத்துவிட்டு, 'குடி நாட்டுக்கு, வீட்டுக்கு கேடு!' என்று போடுவதைப் போல ஒரு அபத்தம் இருக்கவே முடியாது.

குடி எப்போதுமே தவறா? சிகரெட்ரோடு ஒப்பிடும்போது குடி பரவாயில்லை. குடியால் குடிப்பவன் மட்டும் கெடுகிறான். ஆனால் சிகரெட்டால் அருகிலிருப்பவரும் அவஸ்தைக்கு உள்ளாகிறார்.

குடி பழக்கமாக மாறிவிட்டால், அதிலிருந்து வெளிவர இன்று மூலைக்கு மூலை உதவி மையங்களும் திறக்கப்பட்டுவிட்டன.

ஒரு குடி தனிநபரின் பழக்கமாக (addiction) மாறுகிறது என்பதற்கு ஆறு காரணிகள் உண்டு:

1. சுய கட்டுப்பாடு இல்லாமை
2. அடக்கமுடியாத ஆர்வம்
3. அதிக நேரத்தையும், ஆற்றலையும் அதற்கே செலவிடல்
4. குடும்ப மற்றும் சமூக பொறுப்புக்களை தட்டிக்கழித்தல்
5. அதன் எதிர்மறை தாக்கம் தெரிந்தாலும் அதையே நாடித் தேடுதல்
6. கிடைக்காத பட்சத்தில் ஒதுங்கிக் கொள்ளுதல்

இந்த ஆறும் இப்போது தமிழக அரசுக்கும் இருக்கிறது. ஆக, தமிழக அரசுதான் இப்போது உதவி மையத்திற்குச் செல்ல வேண்டும்.


1 comment:

  1. அரசு நாற்காலியில் உட்காருபவர் கலைஞராயிருப்பினும் சரி, ஜெயல்லிதாவானாலும் சரி அவர்கள் விருப்பமெல்லாம் அரசு கஜானா நிரம்புவதை விட அவர்கள் பை நிரம்புவதே. இக்காரணத்திற்காக அவர்கள் அப்பாவி மக்களைப் பலி கொடுக்கத்தயார் என்பது யாரும் அறிந்த இரகசியம்.குடி தனி நபரின் மாறக் காரணமான ஆறு காரணிகளைப் பட்டியலிட்டு ,இவை அனைத்தையும் தன்னுள்ளே கொண்டுள்ள தமிழக அரசு இப்போது செல்ல வேண்டிய இடம் ' உதவி மையமே'....சரியான சாட்டையடி.ஆனால் இதற்கெல்லாம் மசியக்கூடியதா நம் அரசு?மக்கள் யோசிக்க வேண்டிய விஷயமும்...ஏன் நேரமும் கூட....

    ReplyDelete