Monday, July 20, 2015

கடவுளின் கருணை

கடந்த மாதம் 20ஆம் தேதி நற்செய்தியாளர் லூக்காவைப் பற்றி டேய்லர் க்ளாட்வெல் அவர்கள் எழுதிய வரலாற்றுப் புதினம் Dear and Glorious Physician படிக்க ஆரம்பித்தேன். வெளியூர் பயணங்களால் அதை தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன் அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

புதினத்தை வாசிக்காமல் அதைப் பற்றிய விமர்சனம் அல்லது திறனாய்வுக் கட்டுரையை மட்டும் வாசித்து புதினத்தைப் புரிந்து கொள்ளலாமா என்ற சின்ன சபலமும் வந்தது. No shortcut to great things in life. அதனால், வாசித்துவிடுவது என முடிவெடுத்தேன்.

பெரிய புத்தகம். மலைப்பாக இருந்தது.

'கொஞ்சம், கொஞ்சமாகத் தின்றால் பனைமரத்தையும் தின்னலாம்!' என்பது மலையாளத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு பழமொழி. இதில் ஒரு நல்ல மேலாண்மை கருத்து இருந்தாலும், சேர நாட்டின் தென்னை மரங்களை வளர்த்தெடுப்பதற்காக, நம் பாண்டி நாட்டின் பனை மரங்களை அழிக்க சேர அரசு (கேரள அரசு) ஏற்படுத்திய பழமொழியாக இது இருக்குமோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழியை அப்படியே புத்தகத்திற்குப் பொருத்தி, தினமும் 40 பக்கங்கள் எனத் திட்டமிட்டு ஓடிக்கொண்டிருக்கிறேன்.

லூக்கா நற்செய்தி மற்ற நற்செய்திகளை விட ஒரு விதத்தில் அதிகம் மாறுபடுகிறது. எதில்? இந்த நற்செய்தியில் எல்லாருக்கும் இடமுண்டு? இவர்களுக்கெல்லாம் இடமில்லை என்று சொல்லப்பட்ட பெண்கள், புறவினத்தார், அடிமைகள், தொழுநோயாளர்கள், இன்னும் பலர்.

மேலும், லூக்கா இப்படித் தன் நற்செய்தியை எழுதக் காரணம் அவரிடமிருந்த இந்த நல்ல குணமே.

நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தானே நாம் நம் எழுத்துக்களில் நம்மை வெளிப்படுத்துகிறோம்!

வருகின்ற டிசம்பர் 8 அன்று 'கருணையின் யூபில ஆண்டை' தொடங்கவிருக்கின்றோம். 'உங்கள் வானகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல' (லூக்கா 6:36) என்பதுதான் இந்த யூபிலி ஆண்டின் மையக்கருத்து.

கருணை ஆண்டை ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால், 'இறைவனின் பிரசன்னத்தில் எல்லா மனிதர்களுக்கும் இடம் இருப்பது போல, நம் வாழ்விலும், திருஅவை வாழ்விலும் எல்லார்க்கும் இடம் இருக்க வேண்டு;ம்.'

யூபிலி ஆண்டிற்காக வத்திக்கான் ஒரு சின்னத்தையும் (logo) ('பதாகை' என்றும் சொல்லலாம்) வெளியிட்டுள்ளது.

இதை உருவாக்கியவர் இயேசுசபை அருட்பணியாளர் அருட்திரு. மார்க்கோ ரூப்னிக் அவர்கள். இவர் சிறுகற்களைக் கொண்டு ஓவியங்கள் வடிவமைப்பதில் திறமையானவர்.

இரண்டு பேர் இருக்கின்றனர் இந்த லோகோவில். ஒருவர் நின்று கொண்டிருக்கின்றார். மற்றவர் நிற்பவரின் தோள்மேல் கிடக்கின்றார்.

முதலில், இந்த ஓவியத்தில் இயேசுவும், அவரின் தோளில் இருக்கும் ஓர் ஆடும் என நம் மனம் கற்பனை செய்கிறது. ஆக, நல்லாயன் இயேசு தன் கருணையால் தன் மந்தையை தன் தோளில் சுமக்கின்றார் என்பது முதல் கருத்து. இந்த ஓவியத்தில் நிற்பவர் இயேசுதான் என்பதைக் காட்டும் மற்றொரு அடையாளம் நிற்பவரின் கைகளிலம், பாதங்களிலும் இருக்கும் சிலுவைக் காயங்கள்.

இரண்டாவதாக, நிற்பவர் கடவுளாகிய தந்தை. தோளில் கிடப்பவர் ஆதாம். இதில் சிறப்பு என்னவென்றால், ஆதாமின் ஒரு கண்ணும், கடவுளின் ஒரு கண்ணும் இணைந்து இரண்டு கண்களாக இல்லாமல் ஒரே கண்ணாக இருப்பது. (இதை இந்து ஆலய சுவர்களில் உள்ள நந்திகளிலும் பார்க்கலாம். சுவர்கள் இணையும் மூலையில் உள்ள நந்திக்க தலை ஒன்றாக இருக்கும். ஆனால், உடல்கள் இரண்டாக இருக்கும். இரண்டு சுவர்கள் பக்கம் நின்று பார்த்தாலும் நந்தியின் தலை அழகாகப் பொருந்தியிருக்கும்) ஆக, கடவுளின் கண்கள் போல நமது கண்களும் இருந்தால் நாமும் கருணையுள்ளவர்களாக இருப்போம் என்பதே ஓவியம் சொல்லும் யூபிலி ஆண்டுப் பாடம்.

'கருணை உன் வடிவல்லவா, கடவுள் உன் பெயரல்லவா!' என்ற தமிழ் கிறிஸ்தவ பாடலும், கடவுளை கருணை என்றே வர்ணிக்கிறது.

கடவுளின் கருணை முகத்தை நமக்கு அடையாளம் காட்டியதில் லூக்காவுக்கு சிறந்த பங்கு உண்டு.

1 comment:

  1. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 ம் தேதி எனக்குப் பிடித்த நாள் பல காரணங்களுக்காக.இந்த ஆண்டு இறைவனின் கருணையின் யூபிலி ஆண்டைத் தொடங்க விருக்கிறோம் என்பதும் அதற்கான மையக்கருத்து " உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல" என்பதும் என் நெஞ்சைத்தொட்ட விஷயங்கள்.லோகோவுக்கான தந்தையின் இரு மாறுபட்ட விளக்கங்களைப் படித்து விட்டுப் பார்க்கையில் மனம் ' ஆமால்ல!'என வியப்பது
    நிஜம்.கண்டிப்பாக அவரைப் பார்க்கும் நம் கண்கள் அவரின் 'கருணை'யைப் பிரதிபலித்தால் நம்மிலும் யாரும் கடவுளைப் பார்க்கலாமே! அழகான விஷயமல்லவா?!

    ReplyDelete