Saturday, July 11, 2015

செபமும், வேலையும்

இன்று தூய ஆசீர்வாதப்பரின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவர் ஐரோப்பா கண்டத்தின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுகின்றார். 'பெனடிக்டைன்ஸ்' என்று சொல்லப்படும் ஆசீர்வாதப்பர் சபையை நிறுவியவரும் இவரே.

தினமும் நான் சைக்கிள் பயிற்சி செய்யும்போது 60 நிமிடங்களில் 30 கிமீ என 'டைமர்' தொடக்கிவைத்து சைக்கிள் மிதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் சைக்கிள் ஓட்டும்போது, குறித்து வைத்த வேகத்தை விட அதிக வேகமாக ஓட்டுகிறேன். 60 நிமிடங்கள் ஒதுக்கியிருக்க, 55 நிமிடங்களில் நான் ஏன் முடிக்க நினைக்க வேண்டும் என யோசித்தபோது, என்னிடம் உள்ள ஒரு குறை தெரிந்தது. அந்தக் குறை என்னவென்றால் 'வேகம்'.

'வேகம் செயல்திறனையும், செய்யப்படும் வேலையின் தரத்தையும் குறைக்கிறது!' என்று சொல்வார்கள்.

என்னைச் சுற்றியிருக்கும் வேகம் என்னையும் தொற்றிக்கொள்ள வி;ட்டுவிட்டேன் என்றே நினைக்கிறேன். வேகமாக சைக்கிள் ஓட்டுவது, வேகமாக காஃபி குடிப்பது, வேகமாக சாப்பிடுவது, வேகமாக டைப் அடிப்பது என்று வளரும் அந்தக் குறை, வேகமாக செபிப்பது, வேகமாக திருப்பலி நிறைவேற்றுவது, வேகமாக மறையுரை நிகழ்த்துவது என மலர்ந்து நிற்பதைக் கண்டு நான் வருத்தப்படவே செய்கிறேன்.

இந்த அருட்பணி நிலை வேகத்திற்கு வேகத்தடை போட்டவர்தான் ஆசீர்வாதப்பர். 'தெ ரூல் ஆஃப் பெனடிக்ட்' என்ற அவருடைய நூல் இன்றும் ஐரோப்பிய இராணுவப் பயிற்சியில் பயன்படுத்தப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். காட்டிலும், மேட்டிலும் ஓடிக்கொண்டிருந்த வைக்கிங்ஸ் மற்றும் ஜெர்மானிக் மக்களை கொஞ்சம் நிற்க வைத்து, யோசிக்க வைத்து, அவர்களின் வாழ்வையே மாற்றி அமைத்தவர் ஆசீர்வாதப்பர். துறவிகள் என்றால் நாட்டை விட்டு, ஊரைவிட்டு ஓடி மறைந்திருக்க வேண்டும் என்றல்லாமல், 'ORA ET LABORA' (செபமும், வேலையும்) என ஆன்மீகத்திற்கும், செய்யும் வேலைக்கும் முடிச்சுப்போட்டவர் அவர்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒரு மனிதருக்கு தேவை வேரூன்றுதலும் (rootedness), விழுதுபரப்புதலும் (openness). வேர்கள் இல்லாமல் விழுதுகள் மட்டும் இருந்தால் (openness without rootedness) அவை சாய்ந்து விடும். விழுதுகள் இல்லாமல் வேர்கள் மட்டும் இருந்தால் (rootedness without openness) அவை கடினப்பட்டு விடும்.

செபம் நம்மை வேரூன்றவும், வேலை நம்மை விழுதுபரப்பவும் செய்கின்றது.

இன்று நம்ம ஊர்க்காரங்க எல்லா நாட்டுலயும் வேலை பார்க்கிறாங்க என்று பெருமைப்படுகிறோம். ஆனால் விரல் விட்டு எண்ணும் சில இடங்களில் மட்டுமே முதலாளிகளாக இருக்கிறார்கள். மற்ற இடங்களில் வெறும் வேலைக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். சராசரி இளைஞனின் கனவும் இப்படித்தான் இருக்கின்றது. 10ஆம் வகுப்பில் நல்ல மார்க். அப்புறம் ஃபர்ஸ்ட் க்ரூப். என்ஜினியரிங் காலேஜில் இடம். ஒரு எம்.என்.சி அவுட்சோர்ஸிங்கில் வேலை. சிகப்பான ஒரு பொண்ணு. குறையாத பேங்க் பேலன்ஸ். இப்படிப்பட்ட வேலையை ஆசீர்வாதப்பர் முன்வைக்கவில்லை. மாறாக, மனிதர் தன் தான்மையை வெளிப்படுத்தி, தன்னைப் படைத்தவரோடு ஒருங்கிணைத்துக் கொள்ளக்கூடிய வேலையைத்தான் அவர் முன்வைக்கின்றார்.

வேலை என்பது நம் முதற்பெற்றோரால் வந்த சாபம் அல்ல. இது ஒரு வரம். இந்த வேலையினால்தான் நாம் கடவுளின் படைப்புச்செயலில் பங்கேற்கிறோம். ஆக, என் வேலையினால் நான் என்னிலிருந்து வளர்ந்து பிறரைத் தொட வேண்டும்.

ஆக, செபத்தின் வழி இறைவனைத் தொட வேண்டும்.

வேலையின் வழி எனக்கு அடுத்திருக்கும் மனிதரையும், இயற்கையையும் தொட வேண்டும்.

நேற்று முன்தினம் திருப்புகழ்மாலையின் மாலைசெபத்தின் மன்றாட்டுகள் பகுதியில் இப்படி ஒரு செபம் இருந்தது:

'உம் பணிக்கென நீர் தேர்ந்து கொண்டவர்களை ...

ஏழ்மையில் அவர்களை வளப்படுத்தும்,

கற்பில் அவர்களை அன்பொழுகச் செய்யும்,

கீழ்ப்படிதலில் அவர்கள் மனத்தை எளிதாக்கும்!'

'செபம்' மற்றும் 'வேலையில்' தன்னை ஒருங்கிணைத்துக்கொள்ளும் அருட்பணியாளருக்கு மேற்காணும் மூன்று வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது மிக எளிது!



1 comment:

  1. புனித பெனடிக்ட் பற்றி ஏதோ கேள்விப்படுவது இதுவே முதல்முறை. ஆகவே தந்தைக்கு நன்றிகள். ஒரு மனிதருக்குத் தேவை " வேரூன்றுவதும்,விழுது பரப்புவதும் என்பதும் செபம் நம்மை வேரூன்றவும் வேலை நம்மை விழுதுபரப்பவும் வைக்கிறது என்ற வரிகள் மிக அழகானவை. நம் மத்தியில் செயல்படும் அருட்பணியாளர்களுக்காக " ஏழ்மையில் அவர்களை வளப்படுத்தவும்,கற்பில் அவர்களை அன்பொழுகச்செய்யவும்,கீழ்ப்படிதலில் அவர்கள் மனதை எளிதாக்கவும் நாமும் செபித்து அவர்களுக்குத் துணை நிற்போம்.......

    ReplyDelete