Friday, July 17, 2015

ரமலான் பெருநாள்

நம் இசுலாமிய சகோதர, சகோதரிகள் இன்றைய நாளில் ரமலான் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.

இசுலாம் நாட்காட்டியின்படி இன்றுதான் ரமலான் மாதம் நிறைவடைகின்றது. கிரகோரியன் நாட்காட்டியில் நாளை முடிவதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால், நம்ம ஊரிலும் இந்தக் குழப்பம் - ரமலான் இன்றா? அல்லது நாளையா?

ரமலான் என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன், இசுலாம் மதத்தின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படும் அவர்களின் முக்கிய போதனையை தெரிந்து கொள்வோம்.

இசுலாம் என்பது மதம் என்று சொல்லப்படுவதை விட மார்க்கம் என்றே சொல்லப்படுகிறது. திருக்குரான் இசுலாம் மார்க்கத்தினருக்கு ஐந்து கடமைகளை பரிந்துரை செய்கின்றது. ஒவ்வொரு இசுலாமியரும் தன் வாழ்நாளில் இந்த ஐந்துக் கடமைகளையும் நிறைவேற்றிய ஆகவேண்டும். இந்து ஐந்து கடமைகளே, இசுலாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள்.

அவை யாவை?

1. ஷஹாதா (நம்பிக்கை அறிக்கை). கடவுள் ஒருவர் என்று அறிக்கையிடுவதும், அவரின் ஒரே இறைவாக்கினர் முகமது என நம்புவதும். இசுலாமைப் பொறுத்தவரையில் முகமது நபி ('நபி' என்றால் எபிரேயத்திலும், அராபிக் மொழியிலும் இறைவாக்கினர் என்று அர்த்தம்) அவர்கள் கடவுளின் தூதர்தான். அவர் கடவுள் அல்லர். 'லா இலஹா இல்லா-லஹ முகமதுன் ரசுலல்லா' என்று அவர்கள் ஓதுவதன் அர்த்தம் இதுதான்: 'கடவுளைத்தவிர வேறு கடவுள் இல்லை. முகமது அவரின் தூதர்'. கத்தோலிக்கர்கள் நிசேன் அல்லது அப்போஸ்தலிக்க விசுவாச அறிக்கை செய்து கிறிஸ்தவராக மாறுவதுபோல, இசுலாம் மதத்தைத் தழுவும் ஒருவர் இந்த ஷஹாதா அறிக்கை செய்ய வேண்டும்.

2. சலாத் (செபம்). ஐந்துமுறை செபிக்கும் செபம். அதிகாலை, மதியம், பிற்பகல், மாலை மற்றும் இரவு என ஐந்து நேரங்களில் இசுலாமியர்கள் தொழுகை செய்ய வேண்டும். தொழுகைக்கு முன் தங்கள் கைகளையும், கால்களையும் சுத்தம் செய்ய வேண்டும். முகமது நபி அவர்களின் கல்லறை இருக்கும் காபா (மெக்கா)வை நோக்கி நிற்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் இயக்கும் வானூர்திகளில் மெக்கா இருக்கும் திசையும் காட்டப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை அடுத்தமுறை நீங்கள் பயணம் செய்யும்போது கவனியுங்கள்! இசுலாமியர்கள் தாங்கள் வசிக்கும், பணி செய்யும், படிக்கும், பயணம் செய்யும் இடத்திலிருந்தும் இந்த செபத்தைச் செய்ய அனுமதி தந்தாலும், மசூதியில் தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து செய்யவே அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

3. ட்சகாத் (ஈகை). மணிரத்னம் அவர்கள் இயக்கிய பம்பாய் திரைப்படத்தில் கதாநாயகி மனிஷா கொய்ராலா திரையில் காட்டப்படும்போது, அவரின் முதல் செயலே ஈகையாகத்தான் இருக்கும். இதில் இரண்டு விடயங்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது. ஒன்று, நாம் வைத்திருக்கும் எல்லாம் இறைவனுக்குச் சொந்தமானவை. பொருள் இல்லாமல் இருப்பவனும் இறைவனின் சாயல்தான். ஆக, அவனுக்கு உரியதை அவனுக்குக் கொடுக்க வேண்டும். இரண்டு, தன் இனத்தின் மீதுள்ள பற்று. தன் இனத்தைச் சார்ந்த எவனும் வறுமை என்று அழிந்துவிடக்கூடாது. ஆக, இருப்பவர் இல்லாதவருக்கு உதவ வேண்டும்.

4. ஸ்சாம் (நோன்பு). இசுலாம் நாட்காட்டியின் ஒன்பதாம் மாதமான ரமலானில் சூரிய உதயம் முதல் மறைவு வரை தண்ணீர் மற்றும் உணவு அருந்தாமல் இருப்பது. இந்தச் செயலால் தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாக செல்வதாக இசுலாமியர்கள் நம்புகின்றனர். மேலும், இந்த நோன்பு காலத்தில் மனத்தில் உள்ள வன்மம், காமம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் அணை போட வேண்டும் என்பது அவர்களின் படிப்பினை.

5. ஹஜ் (திருப்பயணம்). ஹஜ் என்பது அவர்களின் நாட்காட்டியின் பன்னிரண்டாம் மாதம். இந்த மாதத்தின் ஒரு குறிப்பிட்ட வாரத்தில் (ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது - நம்ம ஈஸ்டர் மாதிரி!) மெக்காவுக்கு இசுலாமியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வேண்டும்.

ரமதான் திருநாளின் முக்கியத்துவம் என்ன?

ரமதானை அடையாளம் காட்டுவது பிறைநிலா.
ரமதான் மாதத்தில் தான் இறைவன் முகமது நபி அவர்களுக்கு திருக்குரானைக் கற்பித்தார். இந்த மாதத்தில் நிறைய இசுலாமியர்கள் திருக்குரானையும் முழுமையாக வாசிக்க முயற்சி செய்கின்றனர். (நானும் தொடங்கினேன். ஆனால் 10 பக்கங்கள்தான் வாசிக்க முடிந்தது!)
இன்றைய நோன்பு சுகூர் மற்றும் இப்தார் என்ற இரண்டு பெரிய விருந்துகளால் நிறைவடைகிறது.
இன்றைய நாளில் சிறப்பான வழிபாடுகளும் மசூதிகளில் நடைபெறும்.

யூதர்கள், இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்னும் மூவரின் மதம் 'புத்தகத்தின் மதம்' அல்லது 'ஒரு கடவுள் மதம்' என அழைக்கப்படுகிறது. இந்த மூன்று பேருக்கும் ஒரு தொப்புள் கொடி உறவு உண்டு (இசுலாமுக்கம், கிறிஸ்தவத்திற்கும் நேரடியாக இல்லையென்றாலும்!). 'இசா இப்ன் மரியாம்' என்று இயேசுவும், மரியாளும் திருக்குரானில் இடம்பெறுகின்றனர்.

நோன்பு, கடவுளோடும், பிறரோடும் நெருக்கம் என இன்றைய நாளை இனிய நாளாகக் கொண்டாடும் நம் இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.


1 comment:

  1. "எந்த மதத்தையும் தன் மதமாக நேசித்து மதிப்பதே ஒரு இறையடியாருக்கு அழகு"என்பதற்கேற்ப இஸ்லாமின் முக்கிய பண்டிகையான ரமலான் பற்றியும், ஒவ்வொரு இஸ்லாமியரும் கருத்தில் கொள்ள வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்திருக்கும் தந்தைக்கு என் பாராட்டும் நன்றியும்!அவர்கள் கடைபிடிக்க வேண்டிய அந்த ஐந்து தூண்கள் பலவற்றில் கிறித்துவ மதக் கொள்கைகளும் ஒத்திருக்கின்றன என்பது நல்ல விஷயம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் அவர்களில் உணர்ந்து பாராட்ட வேண்டிய விஷயம்....தாங்கள் செபிக்க வேண்டிய நேரத்தில் செபிக்க வேண்டிய முறையில் செபிப்பதற்காக யாருக்காகவும் வெட்கப்பட மாட்டார்கள்.பிரயாணங்களின் போது நம் ஆலயங்களைப் பார்த்து சிலுவை வரையக் கூசிக் குனியும் நம்மவர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்......நல்ல பதிவு...

    ReplyDelete