இன்று என் அப்பா விண்ணில் பிறந்த 10ஆம் ஆண்டு நாள்.
நேற்று மாலை என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, இதைச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் பேச முடியாமல் தவித்தார்கள். தன் வாழ்க்கைத்துணை இல்லாமல் அவர்கள் இந்த 10 ஆண்டுகள் பட்ட கஷ்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
10 ஆண்டுகளுக்கு முன் இதே நாள், புனேயில் மதியம் நான் பார்த்த எக்ஸ்டரா லைப்ரரி வேலையிலிருந்து திரும்பி வந்து அறையில் கிடந்த செல்ஃபோனைப் பார்த்தபோது நிறைய தவறிய அழைப்புகள். அத்தனையும் புதிய எண்கள். யார் என்று நானே கூப்பிட்டேன். எதிர்முனையில் என் அம்மாவின் அழுகைச்சத்தம். அழுகையிலும் என் அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லிமுடித்தார்கள்.
எனக்கு அதிர்ச்சியோ, அழுகையோ வரவில்லை. என் நண்பனிடம் சொன்னேன். குருமட அதிபரிடம் சொன்னார்கள். விமான டிக்கெட் புக் செய்தார்கள். யார் யாரோ வந்து ஆறுதல் சொன்னார்கள். நான் அமைதியாக மட்டுமே இருந்தேன். அடுத்தநாள் அடக்கத்திலும் அழுகை வரவில்லை.
ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்று கண்ணீர் வருகிறது.
என் அப்பாவின் மறைவு இன்றுதான் எனக்குத் துயரம் தருகிறது. என் மகிழ்ச்சிதான் அவருக்கு எல்லாம் என்று இருந்த ஒருவர் இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அதைப்பார்த்து மகிழ்ந்திருக்க அவர் இல்லை.
உடலோடுதான் இல்லை. அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார் - என்று எனக்கு நானே சம்மதம் சொல்லிக்கொள்ளவும் முடியவில்லை.
'கருணாலயா'
இப்படித்தான் தன் பெயரை அடிக்கடி எழுதிக்கொள்வார்.
தன் பிறந்தநாள் தெரியாது. ஆனால், எங்கள் பிறந்தநாளை நினைத்து, நினைத்து கொண்டாடுவார்.
செருப்பு அணியமாட்டார். வாட்ச் கட்ட மாட்டார். லுங்கி உடுத்த மாட்டார். வெள்ளை வேஷ்டி மட்டும்தான் அணிவார். அரைக்கை சட்டை மட்டுமே வைத்திருந்தார். 'முழுக்கை சட்டை போட மாட்டீர்களா?' என்று ஒருமுறை கேட்டதற்கு, உடலை மறைக்க அரைக்கை போதாதா என்பார். வெள்ளைநிற கர்ச்சீஃப்தான் பயன்படுத்துவார். தேய்க்காமல் என்றும் உடை அணிந்ததில்லை. என் அம்மா சமைத்த உணவைத் தவிர வேறு யார் வீட்டிலும் வாங்கி சாப்பிட்டதில்லை.
எல்லா சாமியையும் நம்புவார். ஆனால் எந்த சாமியையும் கும்பிட்டதில்லை.
எல்லாக் கோவிலுக்கும் வரி கொடுப்பார். எந்தத் திருவிழாவுக்கும் போகமாட்டார்.
ஆஸ்துமாவால் ரொம்ப கஷ்டப்பட்டார். அவரின் அப்பா அவருக்கு விட்டுச்சென்ற சொத்து அது ஒன்றுதான். ஆனால், கஷ்டத்தை எங்களிடம் சொன்னதில்லை, எந்த சாமியிடமும் சொன்னதில்லை.
எனக்கு எதுவும் பிரச்சினை இருக்கிறதா என்று ஒருநாளும் கேட்டதில்லை. தன் பிரச்சினை இதுதான் என்று என்னிடமும் எதுவும் சொன்னதில்லை.
பரந்த மனப்பான்மை கொண்டவர் அவர். என் வீட்டின் பின்புறம் இருக்கும் ஒருவர் தன் கொழுந்தியாவின் கணவர் இறந்தவுடன், கொழுந்தியாவைக் கூட்டிக்கொண்டு தன்னுடன் வைத்துக்கொண்டார். 'அவர் கொழுந்தியாவைச் சேர்த்துக்கொண்டாராம்!' என்று என் அம்மா எதேச்சையாக பேச்சு வாக்கில் சொல்ல, 'ச்சூ, வாயை மூடு! நாம் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அந்தப் பொண்ணை நினைச்சுப் பாரு. அதுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? அவர் நல்லவர்.' என்று உடனடியாக அந்த நாயக்கருக்காக வரிந்து கட்டிக்கொண்டு சென்றவர்.
கையில் காசு இருக்காது. ஆனால் யாரிடமும் அவர் கடன் வாங்கியது கிடையாது.
சின்னக் குழந்தைகள் வந்தாலும், 'நீங்க! நாங்க!' என்று மரியாதையாகத்தான் பேசுவார்.
உள்ளத்தில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், ஒருநாளும் அவர் சிரிப்பை மறந்தது கிடையாது.
உடல்நலம் இல்லை. உடல்நலம் இல்லாததால் வேலையில்லை. வேலையில்லாததால் காசு இல்லை. காசு இல்லாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் அவர் தன் தன்மானத்தை ஒருநாளும் எதற்காகவும் அடகு வைத்தது கிடையாது.
அவர் இறந்தபோது நானும் அருகில் இல்லை. என் தங்கையும் அருகில் இல்லை. தன் அருகில் என்றும் இருந்த என் அம்மா மட்டும்தான் அன்றும் இருந்தார்கள்.
இறப்பு வரப்போகிறதென்று அந்த வருடம் அவருக்குத் தெரிந்ததுபோல!
அதனால்தான், எப்போதும் அல்லாமல் நான் ஜூன்மாதம் குருமடம் புறப்பட்டுப் போனபோது, என்னை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டே இருந்தார். நான் போன கொஞ்ச நேரத்தில் 'இன்னும் அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கணும்போல இருக்கு!' என்று என் அம்மாவிடம் சொன்னாரம். ஆறு வருடங்களாக என்னை வழியனுப்ப வராதவர் அந்த ஆண்டு மதுரை இரயில்நிலையம் வரை வந்தார். அதுவரை நான் அருட்பணியாளராக மாறுவதற்கு அனுமதி தராதவர், அன்று ரயிலின் ஜன்னலின் அருகில் நின்றுகொண்டு, 'உனக்குப் பிடித்தால் மட்டும் நீ குருவாக இரு! உன் அம்மாவுக்காகவோ, எனக்காகவோ இராதே!' என்றார்.
அவர் இறந்தவுடன் உடலைக் குளிப்பாட்டி நாற்காலியில் அவரை அமர வைக்கத் தயாரித்தவர்கள் அவரின் உள்பாக்கெட்டில் பணம் இருக்கக் கண்டு என் அம்மாவிடம் எடுத்துக் கொடுத்தார்களாம். 'உள்ளே வைத்துவிடுங்கள்!' என்றாராம் என் அம்மா. 'இல்லக்கா! ரொம்ப இருக்கு! இந்தாங்க!' என்று கொடுத்தாராம் வந்திருந்தவர். எண்ணிப்பார்த்ததில் நான்காயிரம் ரூபாய் இருந்ததாம். தான் ஒருவேளை இறந்துவிட்டால், தன் மனைவி எப்படி செலவைச் சமாளிப்பாள் என்று நினைத்தவர் அதை தன் உள்பாக்கெட்டிலேயே வைத்திருந்திருக்கிறார். தன் இறுதிப் பயணத்திற்குக்கூட யாரையும் நம்பியிருக்கவில்லை அவர்.
இறந்து, அடக்கச் சடங்கு முடிந்து நான் புனே திரும்பியபோது, அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று வந்து சேர்ந்தது. 'எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும். முடிந்தால் கொடு!' என்று எழுதியிருந்தார். நான் குருமடத்தில் படித்துக்கொண்டே மாலைநேரங்களில் வேலைக்குப் போகத் தொடங்கியிருந்தேன். அதனால்தான் கேட்டிருக்கிறார். அவருக்குக் கொடுக்குமுன் அவர் இறந்துவிட்டாரே என்ற கவலைதான் என் மனத்தின் ஓரத்தில் அம்மைத் தளும்பாக விழுந்து நிற்கிறது.
'அப்பா! உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்!' என்று அவரைப் பார்த்துக் கேட்க வேண்டும்போல இருக்கிறது. ஆனால், இன்று அவர் இல்லை.
அவரோடு பயணித்த பேருந்து பயணங்கள், மூச்சிரைக்க அவர் கூட்டிச் சென்ற சைக்கிள் பயணங்கள், நான் புதிய பள்ளிக்குச் சென்றபோது அவர் கொடுத்த சிகப்புநிற ஒற்றை இரண்டு ரூபாய்த்தாள், அவருடன் நாங்கள் குடும்பத்தோடு சென்ற சுற்றுலாக்கள், பிறந்தநாளுக்கும், கிறிஸ்து பிறப்புக்கும் கேட்காமலேயே வந்து கிடைக்கும் புத்தாடைகள் என எண்ணற்ற நினைவுகளை விட்டுச்சென்றார்.
இன்று நான் இருப்பதும், இயங்குவதும் அவரில்தான்.
ஏதாவது சாமி வந்து வரம் கேட்டால், என் அப்பாவின் ஆட்காட்டிவிரலை ஒருமுறை தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற வரத்தை மட்டுமே நான் கேட்க விரும்புகிறேன்.
கருணாலயா - இன்றும் எங்களுடன்!

தந்தையே ! தங்களின் தந்தை பற்றிய நினைவுகளில் தாங்கள் கரைந்து போனது மட்டுமின்றி என்னையும் கரைத்து விட்டீர்கள்.இப்படியொரு தந்தையைப் பெற்ற தனயனா, இல்லை இந்தத் தனயனைப் பெற்ற தந்தையா....யார் அதிர்ஷ்டசாலி??? விளங்கவில்லை எனக்கு.பத்தாண்டுகளாகத் தாங்கள் அசைபோடும் விஷயங்களுக்கு இன்று எழுத்து வடிவம் கொடுத்துள்ளீர்கள். மகிழ்ச்சி.எனக்கும் கூடத் தங்களுக்காக இறைவனிடம் ஒரு வரம் கேட்கவேண்டும் போல் தோன்றுகிறது." இன்று கனவில் தங்கள் தந்தை வரவேண்டும்; அவரின் ஆட்காட்டி விரலை மட்டுமல்ல அவரின் மொத்த உடலையும் தாங்கள் ஆரத்தழுவ வேண்டும்" தாங்கள் ஒரு அதிர்ஷ்டக்கார மகன் என்பதில் சந்தேகமே இல்லை; ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள்.....
ReplyDelete