Friday, July 3, 2015

உடலில் தைத்த முள் போல்

'...பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது!' (2 கொரி 12:7)

உடலில் தைக்கும் முள். 'என் சதையில் தைத்த முள்போல' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. உடலில் தைக்கும் முள் என்றால் காலில் தைக்கும் முள் கூட உடலில்தானே தைக்கிறது. நம் காலில் குத்தும் முள் தரும் வலியும், கன்னத்தில் அல்லது உதட்டில் குத்தும் முள்ளும் ஒரே வலியையா தருகிறது. இல்லை. முள் குத்தும்போது அல்லது நம் உடலில் ஊசி போடும்போது நமக்கு ஏன் வலிக்கிறது? மென்மையான ஒன்றின் மேல், வன்மையான ஒன்று பாயும் போது அங்கே வலி வருகிறது. இரண்டும் மென்மையாக இருந்தால் வலி இருப்பதில்லை. ஊசி போடுவதற்கு முன் உடலில் தேய்க்கப்படும் பஞ்சு நமக்கு வலி தருவதில்லை. இரண்டும் வன்மையாக இருந்தால் சத்தம் மட்டும்தான் வரும். வலி வராது. நம் உடலின் நகத்தின்மேல், இன்னொரு நகத்தைத் தேய்க்கும்போது அங்கே சத்தம்தான் வருகிறது. ஆக, எதிரெதிர் குணங்கள் கொண்டவை ஒன்றுக்கொன்று மோதும்போது வலி வருகிறது. நாம் இறுக்கமாக பேண்ட் அணியும்போது அதன் பொத்தான்கள் நம் இடுப்பு பகுதிக்கு கொடுக்கும் வலியையே நம்மால் தாங்க முடிவதில்லை. அப்படியிருக்க அதே இடுப்பு பகுதியில் ஒரு முள் அமர்ந்து நம்மை குத்திக்கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா?

பவுலடியாரின் சதையில் குத்திய முள்ளாக அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதற்கு பல யூகங்கள் இருக்கின்றன. இது அவரை வாட்டி வந்த உடல் நோயைக் குறிக்கிறது, அல்லது அவரின் திருச்சபையில் நிலவிய ஏதோ ஒரு பெரிய பிரச்சினையைக் குறிக்கிறது, அல்லது கொரிந்து மக்களால் ஒதுக்கப்பட்ட எதிர்மறை உணர்வைக் குறிக்கிறது என்று பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. உடலில் உள்ள நோய், மனதில் உள்ள வருத்தம், வெளியில் உள்ள குறை என எதுவாக இருந்தாலும், வலி என்னவோ பவுலடியாருக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்தக் குறை அல்லது வலிக்கு ஒரு நோக்கம் இருப்பதாகவும் சொல்கிறார் அவர். என்ன நோக்கம்? 'நான் இறுமாப்பு அடையாதவாறு!' சின்னக் குழந்தைக்கு அல்லது திருமண மணப்பெண்ணுக்கு நன்றாக அலங்காரம் செய்துவிட்டு, கன்னத்திற்கும், நாடிக்கும் இடையே வைக்கப்படும் திருஷ்டி பொட்டு போல! ஆக, எல்லாம் நல்லாயிருக்கக் கூடாது என்பதற்காக தானாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட ஒரு குறை. மேலும் இந்தக் குறையை சாத்தான் அனுப்பியதாகவும் சொல்கிறார் பவுலடியார்.

இதை இன்றைய நவீன சொல்லாடலாகச் சொன்னால், 'செருப்புக்குள் கல்!' அல்லது 'கண்ணில் விழுந்த தூசி!' என்று சொல்லலாம். நாம் நடந்து கொண்டிருக்கும்போது, நம் செருப்பிற்குள் நுழையும் ஒரு கல் நம் காலையும் சேதப்படுத்துகிறது, நடையையும் தாமதப்படுத்துகிறது. செருப்புக்குள் நுழைந்த கல்லை ஒரு நிமிடம் நின்று எடுத்துவிடலாம். ஆனால், சதையில் குத்திய முள்ளை எப்படி எடுப்பது?

(வருகின்ற ஞாயிறு மறையுரை சிந்தனையின் ஒரு பகுதிதான் இன்றைய பதிவு.)


1 comment:

  1. சிறிது சோகம் தட்டும் பதிவு. எல்லாமே நாம் விரும்பும் வண்ணம் வாழ்க்கையில் அமைந்து விட்டால் 'இறைவன்' எனும் சொல் பொருளற்றதாகி விடும்.அதனால் வாழ்வில் பல வலிகள்; வேதனைகள்.ஒரு எதிரியைக் கூட சமாளித்து விடலாம்...இந்த கண்ணில் விழுந்த தூசியோடும், செருப்புக்குள் புகுந்து கொண்ட கல்லோடும் ஒப்பிடும் போது. ஆனால் இந்த விஷயங்கள் நம் உடலைப்பதம் பார்த்தபின் 'ஆண்டவனே! ஆண்டவனே' என்பதைவிட வருமுன் காப்பது விவேகம் இல்லையா??

    ReplyDelete