Thursday, July 16, 2015

புளுட்டோ

அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய 'நியு ஹாரைசன்ஸ்' (New Horizons) மின்பறவை புளுட்டோ கிரகத்தை மிக நெருக்கமாகக் கண்டு எடுத்தனுப்பிய முதல் நிழற்படங்கள் இன்று பூமியை வந்து சேர, அமெரிக்காவும், அமெரிக்காவுடன் சேர்ந்து ஒட்டு மொத்த உலகமும் (அமெரிக்கா ஆர்ப்பரித்தால் எல்லாரும் ஆர்ப்பரிக்க வேண்டும்தானே! அதுதானே உலக நியதி!) ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என் மனம் நான் ஐந்தாம் வகுப்பு பயின்ற ஆர்.சி.தொடக்கப் பள்ளியின் ஓடு போட்ட வகுப்பறைக்குள் செல்கின்றது.

அன்று புவியியல் பாடம். ஆசிரியை தெரசா அவர்கள் சூரிய குடும்பத்தையும் அதன் கிரகங்களையும் பற்றி பாடம் நடத்தினார். பாடப்புத்தகத்தைத் திறக்குமுன் செயல்முறை விளக்கமாக சூரிய குடும்பத்தைச் செய்து காட்ட, ஒன்பது மாணவர்களையும், ஒரு மாணவியையும் அழைத்தார். உங்கள் யூகம் சரிதான். மாணவிதான் சூரியன். மாணவர்கள்தாம் கிரகங்கள். புளுட்டோதான் குட்டி கிரகம் என்று சொன்னவர், அதன் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். எனக்கு அருகில் இருந்த நெப்டியுன் கடற்கரைச்சாமி. என் வீடும், இவங்க வீடும் பக்கம் பக்கம் என்பதால், சூரியக் குடும்பத்திலும் நாங்கள் பக்கம் பக்கமாகவே இருந்தோம். சுப்புலட்சுமிதான் சூரியன். எங்கள் வகுப்பிலிருந்த தெலுங்கு பேசும் பெண். எங்கள் ஊரில் இன்றும் தெலு(ங்)கு பேசும் (ஆனால் எழுதத் தெரியாது!) நாயுடு அல்லது நாயக்கர் சமூகத்தவர் இருக்கின்றனர். சுப்புலட்சுமி நடுவில் நிற்க பெயர் தெரியாத கிரகங்கள் சுற்றிக்கொண்டே இருந்தன. புதனாக இருந்தவன் பாக்கியசாலி. சுப்புலட்சுமியை உரசிக்கொண்டே இருந்தான். புளுட்டோதான் ரொம்ப பாவம். சுற்றிச் சுற்றி வந்தாலும் கடற்கரைச்சாமி நெப்ட்யூன்தான் என்மேல் உரசினான். சுப்புலட்சுமி மிகவும் அழகான பொண்ணு. நல்ல வடிவான முகம். சுண்டுவிரல் படும் அளவிற்கு திருநீறு அணிந்து அதன் நடுவில் புள்ளியாய் மஞ்சள் வைத்திருப்பாள். பவுடர் கன்னங்கள். சுண்டி இழுக்கும் கண் மை. செருப்பு அணிந்து பள்ளிக்கு வரும் ஒரே பணக்காரி அவள். அவளின் செருப்பில் வரையப்பட்டிருக்கும் மிக்கி மவுஸ் பொம்மையைப் பார்ப்பதற்காகவே, வகுப்பறையிலிருந்து வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருப்போம். அவளை ஐந்தாம் வகுப்பிற்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊர் புளியமரத்து பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தேன். புதனும், சூரியனும் என்ற நெருக்கத்தில் இல்லையென்றாலும், பூமி சூரியன் என்ற நெருக்கத்தில் சந்திக்க முடிந்தது.

சரி நம்ம புளுட்டோ கிரகத்திற்குப் போவோம்.

'புளுட்டோ' என்றால் கிரேக்கத்தில் 'செல்வம் படைத்த' என்பது பொருள். கிரேக்க புராணத்தில் வரும் இறப்பின் அல்லது இருளின் கடவுளின் பெயரும் புளுட்டோதான். புளுட்டோ என்றால் சிறியது என்றும் பொருள்.

1930ஆம் ஆண்டு கிளைட் டோம்பாக் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் புளுட்டோ. இந்த டோம்பாக் அவர்களின் சாம்பலும் இந்த மின்பறவையில் பயணம் செய்கிறது. 1996 மார்ச் 7ல் ஹப்பிள் தொலைநோக்கி புளுட்டோவின் தெளிவான படத்தை எடுத்துத் தந்தது. 2011, ஜூலை 20 அதே தொலைநோக்கி எடுத்த படத்தில் புளுட்டோவைச் சுற்றிக் குட்டியாக மூன்று நிலாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 19, 2006ல் விண்ணிற்கு அனுப்பப்பட்ட 'நியு ஹரைசன்ஸ்' மின்பறவை முதன்முதலாக 2015, ஏப்ரல் 14ல்தான் தன் முதல் படத்தை அனுப்பியது. இதில் புளுட்டோ தன்னைத் தானே சுற்றிவர பூமியின் கணக்கில் 6.4 நாட்கள் தேவைப்படுகின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2005ல் புளுட்டோவை கிரகம் என்பதற்குப் பதிலாக 'குள்ளக் கிரகம்' (dwarf planet) எனப் பெயரிட்டு, சூரிய கிரகத்திற்கு வெறும் 8 கிரகங்கள்தான் என மாற்றி எழுதினர். ஆனால், புளுட்டோவைக் கடந்து சென்ற மின்பறவை அதை மிக நெருக்கமாக படம் பிடித்து, அது இன்று நம் கைகளுக்கு வந்துள்ளது. புளுட்டோவின் மர்மங்கள் இனி அவிழ்க்கப்படலாம்.

'நாங்கள் ஒன்பது கிரகங்களையும் கண்டு விட்டோம்!' என மார்தட்டுகிறது அமெரிக்கா. வாழ்த்துக்கள் தம்பி! ஆனா, நாங்க ஒன்பது கிரகங்கள் இருக்கிறது என்பதை 4000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து அவைகளை எங்கள் கோவிலின் கர்ப்ப கிரகத்துக்குள் அடக்கிவிட்டோம்.

இப்போ நாம பெருசா, அவங்க பெருசா என்பது கேள்வியல்ல.

மனிதர்களின் பார்வை இன்று பல கோடி மைல்களைத் தாண்டிப் பார்க்கும் அளவுக்கு விரிந்துள்ளது. நம் கண்களின் நீட்சிதான் இந்த மின்பறவை. நம்மைச் சுற்றியிருக்கும் பால்வழியை நாம் ஆராய, ஆராய நாம் அவற்றின் முன் கூனிக் குறுகி விடுகிறோம்.

'உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள
நிலாவையும், விண்மீன்களையும் நான் நோக்கும்போது
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?
மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?' (திபா 8:3-4)

என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள்தான் நம் நினைவிற்கு வருகின்றன.

மின்பறவை புளுட்டோவை படம் எடுத்துக்கொண்டிருந்த இதே நேரத்தில், விசாகப்பட்டினத்தில் ஒரு பிரசவ வார்டுக்குள், போலி டாக்டர் போல நுழைந்த ஒரு இளைஞன் அங்கிருந்த ஒரு பெண்ணை படம் எடுக்க முயன்று கைது செய்யப்பட்டான் என்ற செய்தியும் வலையில் மின்னியது.

உலகம் ரொம்ப பெருசு தம்பி!

இல்ல... இல்ல...

சூரிய குடும்பம் ரொம்ப பெருசுசுசுசுசுசுசுசுசுசுசுசு தம்பி!


(Info Source: Wikipedia.org)

1 comment:

  1. ப்ளூட்டோவைப்பற்றிப் பேச ஆரம்பித்து சந்தடிசாக்கில் தனக்குப் புவியியல் எடுத்த தெரசா டீச்சரையும், தனது சூரிய குடும்பத்தில் சூரியனாக்கப்பட்ட சுப்புலட்சுமியையும் பற்றிய வர்ணனைமளிகை சாமான் வாங்கும் போது கூடவே கிடைக்கும் ஓசிப் பொரிகடலை மாதிரி.சுவையாமவே இருந்தது.ஆனால் ஏன் இந்தத் தாக்குதல் அமெரிக்கா எனும் பெயர் சொல்லும் போதே??!! எத்தனை கிரகங்களை யார் வேண்டுமானாலும் கண்டு பிடித்துவிட்டுப் போகட்டுமே! அந்த மார்தட்டலின் ஒரு பகுதியை அமெரிக்காவும் தான் எடுத்துக்கொள்ளட்டுமே! இப்ப என்ன கெட்டுப்போச்சு? கொஞ்சம் ' ப்ராட்மைன்டைடா' இருங்க ஃபாதர்...ஆனாலும் அந்தத் திருப்பாடலின் வரிகளுக்கு முன்னே இவை எல்லாம் எம்மாத்திரம்??தந்தைக்கு ஒரு ஆறுதல் வார்த்தை....ஆம்..உங்கள் சூரிய குடும்பம் பெருசுசுசுசுசுசுசு தான்!!!

    ReplyDelete