Wednesday, July 15, 2015

அம்மா அக்கா இளவரசி

இன்று காலை கனடாவின் டொரொண்டோவிலிருந்து ஒலிபரப்பாகும் 'கலசம்' என்ற இணையவழி பண்பலையில் சுகி சிவம் அவர்களின் சிற்றுரை ஒன்று ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர், 'உலகிலிருக்கும் எல்லா மதங்களிலும், கடவுளை 'ஆண்-பெண்' என்று ஜோடியாகச் சித்தரிக்கும் மனப்பான்மை இந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது. சிவன் என்றும் சக்தியோடு இருக்கிறார். மேலும் ஆண்-பெண் இணைந்த அர்த்தனாரீஸ்வரர் என்னும் சித்தாந்தம் இந்துக்களுக்கு மட்டுமே உண்டு. ஆகவே, இந்து மதம் எல்லா மதங்களையும் விட ஒரு படி உயர்ந்தது' என்றார்.

இன்று மாலை திருப்பலியில் நாம் வாசித்த முதல் வாசகம் எனக்கு சுகி சிவத்தை நினைவூட்டியது. அப்படி என்ன வாசித்தோம் இன்று? எல்லா ஆண்குழந்தைகளையும் எகிப்தின் பாரவோன் கொல்லத் தேடிக்கொண்டிருக்க மோசே மட்டும் காப்பாற்றப்படுகிறார். மீட்பு வரலாற்றின் தொடக்கம் இந்த நிகழ்வுதான். இஸ்ரயேலின் முதற்கனியாக மோசே மீட்கப்படுகிறார். பின்பு இஸ்ரயேல் இனமே அவர் வழியாக அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது. ஆனால் ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். என்ன? இந்த முதல் மீட்பு நிகழ்வில் இறைவனுக்கு உதவி செய்வது ஆண்கள் அல்ல. பெண்கள். அதுவும் மூன்று பேர். ஒரு அம்மா. ஒரு அக்கா. ஒரு இளவரசி. ஆக, இந்து மதத்தில் கடவுள் தன் துணையோடு வான்வீட்டில் இருக்கிறார். ஆனால் முதல் ஏற்பாட்டில் கடவுள் தன் துணையை, தன் பெண்ணை மனுக்குலத்தில் தேடி, அவளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார். இதனால் தான் ஒசேயா இறைவாக்கினர்கூட யாவே இறைவனை கணவனாகவும், இஸ்ரயேல் இனத்தை மனைவியாகவும் சித்தரிக்கின்றார். ஆக, இந்து மதத்தில் தூரத்தில் துணையோடு நிற்கும் கடவுள், யூத மதத்தில் துணையை மனக்குலத்தில் தெரிவு செய்துகொள்கிறார். இதிலிருந்து யூத மதம் அல்லது அதன் வழி வந்த கிறிஸ்தவம் இந்து மதத்தைவிட பெரியது என நான் வாதிட விரும்பவில்லை. ஆனால், மனித இனத்தின் ஆழ் அனுபவம் மற்றும் இறை அனுபவம் எல்லாருக்கும் பொதுவானது என்றே சொல்ல விழைகிறேன்.

நம்ம கதைக்கு வருவோம்.

இது கதையா? ஆம். கதாநாயகன் ஆற்றில் எறியப்பட்டு காப்பாற்றப்படுவது எல்லா உலக இலக்கியங்களுக்கும் பொதுவானது. அக்காடிய இலக்கியத்தில் கில்கமேஷ் இப்படித்தான் காப்பாற்றப்படுகிறார். மகாபாரத்தில் கர்ணன், தமிழ் மரபில் ஒளவையார் என நிறைய சான்றுகளை நாம் சொல்லலாம்.

மீட்பு வரலாற்றுத் தொடக்கம் யாக்கோபு கட்டிய பெத்தேல் ஆலயத்தில் தொடங்கவில்லை. ஒரு ஆற்றங்கரையில் தொடங்குகின்றது.

ஒரு அம்மா. செங்கல் சுடவே கோரைப்புல் கிடைக்காதபோது இவளுக்கு பெட்டி செய்ய கோரைப்புல் எங்கே கிடைத்தது? கூடையின் ஓட்டைகளை அடைக்க அவளுக்கு தார் அல்லது கீல் எங்கிருந்து கிடைத்தது? அதை அவள் பூசியபோது அவளின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருந்திருக்கும்? ஆக, ஒரு பெண் தன் கைகளை அழுக்காக்கியதால் தான் ஒட்டுமொத்த மனித இனமே மீட்பை, விடுதலையை பெற முடிந்தது.

ஒரு அக்கா. இந்த சிறுமிதான் வாசகத்தின் கதாநாயகி. இவர்தான் மிரியம் என்கின்றனர் சிலர். எபிரேய இனத்திற்கும், எகிப்திய இனத்திற்கும், எபிரேயத்தாய்க்கும், எகிப்திய பாரவோனின் மகளுக்கும் இணைப்புக் கோடாக நிற்கிறாள் இந்த இளவல். தானும் அடுத்தவர்களைப் பார்க்க வேண்டும். ஆனால் தன்னை யாரும் பார்த்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில்தான் இந்த இளவல் அந்த நைலின் குளிரையும், கோரைப்புற்களின் அரிப்பையும் பொறுத்துக்கொண்டு ஒளிந்திருக்கிறாள். 'ஒரு அக்கா தன் தம்பி அல்லது தங்கையின் இரண்டாம் தாய்' என்பார்கள். மோசேயின் சின்ன அக்காவும் தன் கண்களை மோசேயின் மேல் பதித்துக்கொண்டே இருக்கிறாள்.

ஒரு இளவரசி. எல்லாக் கதையில் வரும் இளவரசிகளையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமா? இந்த இளவரசிகள் நினைப்பது கண்டிப்பாக அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் எதிர்பார்க்காததும் கிடைக்கும். மேலும் இருப்பதில் 'பெஸ்ட் கண்ணா பெஸ்ட்தான்' இந்த இளவரசிகளுக்குச் சொந்தமாகும். என் அன்புக்குரியவர்களை நான் அடிக்கடி இளவரசி என்று அழைப்பதுண்டு. இளவரசி அல்லது இளவரசனாய் இருப்பதில் இன்னொரு அட்வான்டேஜ் என்றால் இவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இவர்கள் அதிர்ஷ்டத்தின் தூதர்கள். இவர்கள் நம்பிக்கை தருபவர்கள். நைலுக்கு இளவரசி குளிக்க வந்த நிகழ்வு மற்றொன்றையும் சுட்டிக்காட்டுகிறது. இயற்கை வாழ்வாதாரங்கள் ஆள்பவருக்கும், அடிமைகளுக்கும் ஒன்றே. இயற்கை யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை. ஆகையால்தான், அடிமை அக்காவும், ஆளும் இளவரசியும் ஒரே நைலுக்குள் இறங்குகின்றனர்.

இந்த மூன்றுபேரும் இணைந்ததில் இறைவனின் அருட்கரம் செயலாற்றுகிறது. ஆக, இறைவனின் துணையாக நின்றவர்கள் பெண்களே. ஆகவேதான், படைப்புச் செயலும் இன்றுவரை பெண்கள்வழியாகவே நடைபெறுகிறது.

இறைவனின் துணையே நம் அருகிருக்கும் பெண்ணும்!


1 comment:

  1. இம்மண்ணின் மீட்பிற்குப் பிள்ளையார் சுழியிட்ட வரலாற்றை தனக்கே உரித்தான மெருகோடு ஒரு 'fairy tale'ன் சுவையோடு கொடுத்திருக்கும் தந்தைக்கு ஒரு சபாஷ்!இளவரசனோ,இளவரசியோ...இவர்கள் நம்பிக்கையின் தூதுவர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் நம் பக்கம் இருப்பது அதிர்ஷ்டமே!" இயற்கை வாழ்வாதாரங்கள் ஆள்பவருக்கும் அடிமைகளுக்கும் ஒன்றே"... உண்மையை உரக்கச்சொல்லும் வரி. பரவால்லையே ஃபாதர்! நீங்களும் அப்பப்ப உண்மையை ஒத்துக்கொள்கிறீர்களே! " படைப்புச் செயலும் இன்றுவரை பெண்கள் வழியாகவே நடைபெறுகிறது " என்ற உண்மையைத்தான் சொல்கிறேன்...பாராட்டுக்கள்!!!

    ReplyDelete