Saturday, July 18, 2015

பெர்க்மான்ஸ் பாடல்கள்

நான்கு நாட்களுக்கு முன் மெல்லிசை மன்னரைப் பற்றி எழுதிய பதிவில் அருட்தந்தை. பெர்க்மான்ஸ் அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன்.

அவரின் பாடல்களை அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் கேட்டிருக்கிறேன்.

ஆனால், அன்று அவர் வெளியிட்டுள்ள ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் பாகம் 1ஐ (Last volume is the 34th) முழுவதுமாகக் கேட்டேன். பாடல்களைக் கேட்டதோடு அல்லாமல் அவரைப் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றும் வாசித்தேன்.

ஆகஸ்ட் 3, 1949ல் சூசைப்பட்டி என்ற ஊரில் பிறந்த அவர், மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளராக 1978ஆம் ஆண்டு திருநிலைப்படுத்தப்படுகின்றார். சிவகங்கை மறைமாவட்டம் தனியாகப் பிரிந்தது 1987ஆம் ஆண்டுதான். அவர் கத்தோலிக்கத் திருஅவையை விட்டு விலகிய ஆண்டு 1983. 1979-1980ல் அவர் திருவில்லிபுத்தூரில் உதவிப்பங்குத்தந்தையாக இருந்திருக்கிறார். 1981வரை என் ஊரும் இந்தப் பங்கைச் சார்ந்ததே. அதன்பின் நாங்கள் இராஜபாளையத்தின் உறுப்பினராகிவிட்டோம். அவர் திருவில்லிபுத்தூரில் இருந்த ஆண்டு என் ஊருக்கு திருப்பலிக்கு வந்திருந்ததாகவும், அன்று இரவு என் மாமை (அம்மாவின் அம்மா, ஆச்சி) வீட்டில் சாப்பிட்டதாகவும் பின்னொரு ஆய்வில் தெரிந்தது.

இவ்வளவு ஆராய்ச்சி எதற்கு என்று கேட்கிறீர்களா?

அருட்திரு. பெர்க்மான்ஸ் (இன்றும் அவர் தன்னை அருட்தந்தை எனவே அழைக்கின்றார்!) அவர்கள் ஒரு தோட்டத்திலிருந்து தன்னைத்தானே பிடுங்கி, ஜெபத்தோட்டத்தில் தன்னை நட்டுக்கொண்டார்.

இது சரி அல்லது தவறு என்பது என்னுடைய விவாதம் அல்ல.

அப்படி அவர் தன்னைப் புதிய இடத்தில் நட்ட போது அவரின் உள்ளத்தில் என்ன போராட்டம் இருந்திருக்கும் என்பதையே நான் நான்கு நாட்களுக்கு முன் கேட்ட அவரின் முதல் வால்யூம் பாடல்கள் பிரதிபலிக்கின்றன.

வெள்ளை சட்டையாகப் போட்டுக்கொண்டிருந்துவிட்டு, திடீரென கறுப்பு சட்டையாக நான் போடத் தொடங்கியபோது, எனக்கே முதலில் விகாரமாக இருந்தது. அசைவ உணவாகச் சாப்பிட்டுவிட்டு திடீரென ஒருநாள் அசைவம் அனைத்தையும் விட்டுவிட்டு, சைவத்தை தழுவியது இரண்டு மாதங்கள் துன்பமாக இருந்தது. இவ்வளவு ஏன்? மெட்ரோவில் போவதற்குப் பதில் பேருந்தில் போகலாம் என முடிவெடுத்துவிட்டு, பேருந்து நிறுத்தம் வந்து, நிறுத்தத்திற்கு பேருந்து எதுவும் வராததால், 'நிற்போமா?' அல்லது 'போவோமா?' என முடிவெடுப்பதற்கே எனக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது நேற்று. இப்படி உடை, உணவு, சின்ன சௌகரியம் என ஒரு மாற்றத்திற்கு என்னை உட்படுத்தும்போதே என் உடலும், மனமும் துன்பப்பட ஆரம்பிக்கிறது.

ஆனால், 34 வருடங்கள் கத்தோலிக்க நம்பிக்கையில் பிறந்து, வளர்ந்து, ஆளாகி, அருட்பணியாளராகி அன்றலர்ந்த மலராக நின்ற அருட்திரு. பெர்க்மான்ஸ், ஜெபத்தோட்டதிற்கு இடம்பெயர்ந்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கு எதுவும் காரணமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவர் முடிவெடுத்தார். தன் முடிவில் உறுதியாக நின்றார்.

நாம் ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தரைப் பார்க்கவில்லை. நிறையப் பேர் அந்த மார்ட்டின் லூத்தரையும், அமெரிக்காவின் மார்ட்டின் லூத்தர் கிங்கையும் கூட குழப்பி விடுவார்கள். ஜெர்மனியின் மார்ட்டின் லூத்தர், கத்தோலிக்க திருஅவையை விட்டு பிரிந்து சென்று தன் '95 கோட்பாடுகளை' (The Ninety-Five Theses) வித்தென்பர்க் ஆலயக் கதவுகளில் ஒட்டி வைத்த நிகழ்வு, திருஅவையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படக் காரணமானது. தான் செய்தது சரி என்று நினைத்துக் கொண்டிருந்த கத்தோலிக்கத் திருஅவையும் ஒரு நிமிடம் அமர்ந்து, 'நான் போகும் வழி சரிதானா?' என்று சுயஆய்வு செய்து பார்க்கும் வாய்ப்பாக இருந்தது.

மார்ட்டின் லூத்தர் போலவே, அருட்திரு. பெர்க்மான்ஸ் என்றாலும் மாற்றம்தான் நினைவிற்கு வரவேண்டும்.

வெறும் விவிலியம், வழிபாடு, நற்கருணை, மணிச்சத்தம், பங்கு வரிக்கட்டணம் என்றிருந்த தமிழகக் கத்தோலிக்கத்தை இசையால் தட்டி எழுப்புகின்றார். எல்லார் வாயிலும் தன் பாடலை முணுமுணுக்க வைத்து கடவுளை எல்லார் வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டார்.

'விண்ணப்பத்தைக் கேட்பவரே' என்ற அவருடைய பாடல் இல்லாமல் நம் ஊரில் நடைபெறும் நற்கருணை வழிபாடுகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எளிய வார்த்தைகள். எளிய ராகம். எளிய மனிதர். அருட்திரு. பெர்க்மான்ஸ்.

ஜெபத்தோட்ட ஜெயகீதங்களின் முதல் பாகம் 10 பாடல்களையும் கேட்க முடியவில்லை என்றாலும், அதிலுள்ள 'ஆண்டவரே உன்பாதம்', 'இஸ்ரவேலே பயப்படாதே', 'இயேசு கூட வருவார்' என்ற மூன்று பாடல்களையாவது கேட்டுப்பாருங்கள்.

'ஆண்டவரே உன்பாதம்' கேட்கும்போது, அகுஸ்தினாரின் 'மனக்கிடக்கைகள்' (Confessions) வாசித்ததுபோன்ற உணர்வு.

இறையனுபவத்தின் புதிய மைல்கல் கிறிஸ்தவ இசை.

கிறிஸ்தவ இசையின் புதிய மைல்கல் அருட்திரு. பெர்க்மான்ஸ்.


1 comment:

  1. பல வருடங்களுக்கு முன் ஒரு பெரிய வியாழன்ன்று எங்கள் பங்கிற்கு இரவு ஆராதனைக்கு வந்திருந்தார் தந்தை பெர்க்மான்ஸ்.நான் அவரைப் பார்த்தது அதுவே முதல்முறை. மனிதர் தன் இறை உரையாடலின் மூலம் கோவிலிலிருந்த அனைவரையும் கதறடித்து விட்டார்.அவரின் தாக்கம் என்னில் நெடுநாள் இருந்ததும்,திடீரென்று ஒருநாள் அவர் கத்தோலிக்க அவையை விட்டு விலகிவிட்டதாக்க் கேள்விப்பட்டு நான் ஆடிப்போனதும் நிஜம். அவரைப்பற்றி தந்தை ஒரே வரியில் கூறியிருப்பது அழகான உண்மை...ஆம்!! ஒரு தோட்டத்திலிருந்து தன்னைத்தானே பிடுங்கி ஜெபத்தோட்டத்தில் தன்னை நட்டுக்கொண்டார்." 34 வருடங்கள் ஒரு 'கத்தோலிக்கக்ககுரு' என்பது சாதாரண விஷயமில்லை.ஏன், எப்படி ...இதைக்கேட்க யாருக்கும் உரிமையில்லை.அவருக்கும் அவரைப்படைத்தவருக்குமே வெளிச்சம்.ஆனாலும் " விண்ணப்பத்தைக் கேட்பவரே" என்று மக்கள் ஒரே குரலில் பாடும்போது கண்டிப்பாக அவரின் விண்ணப்பத்தையும், உள்ளக்குமுறலையும் இறைவன் கேட்பார் என்பதில் ஐயமில்லை.தந்தை பெர்க்மான்ஸைப் பற்றித் தெரியாத பலருக்கு அவரைப்பற்றித் தெரிய வைத்த தந்தைக்கு ஒரு 'ஸ்டார்'.

    ReplyDelete