Thursday, July 9, 2015

சோகங்களை யார் தீர்ப்பார்?

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருத்தூதுப் பயணமாக எக்வதோர், பொலிவியா மற்றும் பராகுவே என்னும் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்.

செல்லும் இடமெல்லாம் ஒரே கூட்டம் என்று வத்திக்கானின் ஊடகங்களும், உலக ஊடகங்களும் படம் காட்டுகின்றன.

கூடியிருக்கும் மக்களைப் பார்க்கும்போதெல்லாம் பாவமாக இருக்கிறது.
வெளிப்புறத்தில் எல்லாம் நல்லாதான் இருக்கு. 'பிரான்சிஸ்' என்று போட்ட டிசர்ட்டுகள், வத்திக்கான் கொடிகள், கைதட்டல்கள், மாலைகள், பூக்கள். ஆனால், இந்த மக்களின் கண்களை உற்றுப்பார்த்தால் ஒரு சோகம் தெரிகிறது.

1. சிலுவைகளும், சிலுவையில் சுற்றிய செபமாலையும். காலனியாக்கப்பட்ட நாடுகளில், ஐரோப்பிய கிறித்தவ மறைபோதகர்கள் போதித்த இடங்களில் கிறிஸ்தவத்தின் பழக்கம் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகிறது. உதாரணத்திற்கு, நம்ம மதுரைக்கு போப்பாண்டவர் வந்தால் நாம் கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்? போப்பாண்டவரைப் பார்க்கச் செல்லும்போது நாம் என்ன கொண்டு செல்வோம்? தனியாகப் பார்க்க அல்ல. கூட்டத்தில் பார்க்க. பெரும்பாலும் சும்மாதான் போவோம். ஆனால், இந்த மக்கள் கைகளில் சிலுவைகளும், சிலுவையில் சுற்றிய செபமாலையுமாய் காட்சி தருகிறார்கள். இது எதற்காக என்று அங்கிருந்து வந்திருக்கும் ஒரு அருட்தந்தையிடம் கேட்டேன். அவர் சொன்னார்: 'தொடக்கத்தில் பழங்குடியினர் கிறிஸ்தவர்களாக மாறியபோது, அவர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டது இந்த சிலுவையும், செபமாலையும்தான். கொஞ்ச ஆண்டுகள் கழித்து கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கொன்றழிக்கப்படுகிறார்கள் கிறிஸ்தவர்களால். அந்த நேரத்தில் யாரெல்லாம் சிலுவையையும், செபமாலையையும் ஏந்தியிருக்கிறார்களோ, அவர்கள் மட்டும் கொல்லாமல் விடப்பட்டனர். ஆக, இந்த பழக்கம் அப்படியே பதிந்து எங்கெல்லாம் பொதுக்கூட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் இவர்கள் தற்காப்புக்காக இதை எடுத்துச்செல்ல தொடங்கினர். அந்தப் பழக்கம் அப்படியே தொடர்கிறது!' இயல்பிலேயே பாதுகாப்புடன் இருக்கும் ஒரு மனித இனத்தின் மனத்தில் பயத்தை விதைத்துவிட்டு, பின் அந்த பயத்தை போக்க ஒரு மருந்து என சிலுவையைத் தருவது சரியா?

2. இஸ்பானிய மொழி. மற்ற திருத்தூதுப் பயணங்களில் இத்தாலியன் மொழியில் மட்டும் உரை நிகழ்த்திய, திருப்பலி நிறைவேற்றி திருத்தந்தை அவர்கள் இங்கு மாய்ந்து, மாய்ந்து இஸ்பானியம் பேசுகின்றார். கேட்டால் மக்களின் தாய்மொழியில் பேசுகிறாராம். ஆனால், இந்த மக்களின் தாய்மொழியைத்தான் இந்த கிறிஸ்தவம் நான்கு நூற்றாண்டுகளாகத் திட்டமிட்டு அழித்துவிட்டதே. ஐரோப்பியர்கள் திட்டமிட்டு இனவழிப்பு செய்ய கையில் எடுத்தது மொழி அழிப்பு. இந்த நாட்டவர்கள் தங்கள் தாய்மொழி இஸ்பானியம் என சொல்வது இவர்கள்மேல் நமக்கு பரிதாப உணர்வையே தருகிறது. யூதர்களுக்கு எதிராக, ஆர்மேனியர்களுக்கு எதிராக ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் அநீதிகளுக்காக ஓடி, ஓடி மன்னிப்பு கேட்கும் திருத்தந்தை, இந்த மக்களிடம் 'நாங்கள் உங்கள் மொழியை, இனத்தை அழித்துவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள்!' என்று ஏன் கேட்கவில்லை? ஏன்னா, ரொம்ப சிம்பிள். யூதர்களிடமும், அர்மேனியர்களிடம் காசு இருக்கிறது. பாவம். இந்த மக்களிடம் கடவுள் நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது. காசு இருந்தால் அங்கே கடவுளும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார்.

3. வன்முறை அழிய வேண்டும். போகிற இடங்களில் எல்லாம் வன்முறை அழிய வேண்டும் என்று சொல்லும் திருத்தந்தையின் பேச்சு, அடிப்பனைப் பார்த்து அடிக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக, அடி வாங்குபவனைப் பார்த்து, 'யாரும் யாரையும் அடிக்கக் கூடாது!' என்று சொல்வது போல இருக்கிறது. இந்த மக்களிடம் வன்முறை இருக்கிறதுதான். திருடுவார்கள். போதைப் பொருள்கள் விற்பார்கள். ஆனால், இவர்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் மேற்கத்திய நாடுகள் எடுத்துவிட்டால், எடுத்தவனிடமிருந்து இவன் எடுக்கத்தானே செய்வான். ஆக, எடுத்தவர்களையல்லவா 'கொடுங்க' என்று சொல்ல வேண்டும். 'விடுங்க' என்று சொல்ல வேண்டும்.

இந்த மக்களின் சோகங்களை யார் தீர்ப்பார்?




1 comment:

  1. தன்னுள் உறையும் கோபத்தை வெளிக்கொணரும் ஒரு பதிவு.கொடுப்பவன் இருக்கும் வரை பிடுங்குபவனும் இருக்கத்தானே செய்வான்? எல்லாம் இழந்த நிலையில் என்ன செய்ய முடியும் திருச்சிலுவைக்கு முன்னும்,செபமாலைக்குமுன்னும் மண்டியிடுவதைத் தவிர.பல நேரங்களில் சுற்றி நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் நாம் நாமாகவே இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.கொஞ்சம் சுயநலம்தான்....ஆனால் கையாளாகாத்தனத்தை விட இது பரவாயில்லை அல்லவா??

    ReplyDelete