Saturday, July 4, 2015

கிராவிட்டி

இந்த வாரம் (08.07.2015) வெளியான ஆனந்த விகடனின் அஞ்ஞானச் சிறுகதை எனக்கு ரொம்ப பிடித்தது. அந்தக் கதையின் தலைப்பு 'ஆப்' (App), அதாவது 'செயலி'. இந்தக் கதையின் ஆசிரியர் சந்தோஷ் நாராயணன். முதலில் கதை. பின் விடயம்.

'மச்சி... இந்த ஆப் பேர் 'கிராவிட்டி'.
என்னுடைய இன்வென்ஷன். இதை இன்ஸ்டால் பண்ணினா,
நீ கேட்கிற எதையும் ஏராளமா உன்னை நோக்கிக் கவர்ந்து இழுக்கலாம்'' - கடற்கரையில் உட்கார்ந்தபடி சொன்னான் தாணு.
'இதை எப்படி மச்சி போன்ல இன்ஸ்டால் பண்றது,
வழக்கம்போலத்தானா..?'' என்றான் ஷிவ்.
இருவரும்இ இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு சயின்ஸ் மாணவர்கள்.
'அட லூஸு... இதை போனுக்காக நான் பண்ணலை. இது ஒரு ஹ்யூமன் பாடி ஆப். இதை அப்படியே முழுங்கிடணும். அது உன் உடம்புக்குள்ள போய் ஆட்டோமெட்டிக்கா இன்ஸ்டால் ஆகிடும். அப்புறம் நீ எதைக் கேட்டாலும் அது தாராளமா உன்னை நோக்கி வரும்' என்றான் தாணு.
'சூப்பர் மச்சி...'' என்றபடி விழுங்கினான் ஷிவ். தொண்டையில் சூடாக உரசிக்கொண்டு இறங்கியது. உடலில் அசாதாரண மாற்றத்தை உணர்ந்தான். மூச்சு இரைத்தது. தொண்டை வறண்டுபோவதுபோல இருந்தது.
''தண்ணி... தண்ணி...'' எனக் கேட்டான் ஷிவ்.
வழக்கத்துக்கு மாறான பேரிரைச்சல் கேட்கவும்இ தாணு திரும்பி ஒரு கணம் கடலைப் பார்த்தான்.
ஒரு கணம்தான் பார்த்தான்!

இந்தக் கதையை வாசித்தவுடன் என்னையறியாமல் ஒரு பயம் பற்றிக்கொண்டது. 'கிராவிட்டி' என்னும் அந்த செயலியை நான் விழுங்கியதுபோலவும், நான் 'தண்ணீர்', 'தண்ணீர்' எனக் கத்துவது போலவும், கடலே என்னை நோக்கி வந்தது போலவும் இருந்தது. ஒருவேளை கடலே நம்மை நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

இன்று ரோம் நகரில் சேல்ஸ் டே. அதாவது, இன்று பெருங்கடைகளில் வாங்கும் எந்தப் பொருளுக்கும் வரி கிடையாது. மக்கள் வாங்கிக் குவிக்கிறார்கள்.

பொருள்கள் என்னும் கடல் முன்னால், மக்கள் 'கிராவிட்டி' என்னும் செயலியைப் பொருத்தியவர்கள் போல் நின்று கொண்டு, 'இன்னும் வேண்டும்!' 'இன்னும் வேண்டும்!' எனக் கத்துவது போலவே இருக்கின்றது.

இன்று நம்மைச் சுற்றியிருக்கும் மேகம் நுகர்வுக் கலாச்சாரம் (consumerism). இதில் நுழைந்த யாரும் அவ்வளவு எளிதாக வெளியே வந்துவிட முடிவதில்லை.

உதாரணத்திற்குப் பாருங்களேன். என்னிடம் சாம்சங் குரு அல்லது நோக்கியா 103 என்ற பேசிக் மாடல் அலைபேசி இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் சோனி எக்ஸ்பீரியா, சாம்சங் கேலக்சி, ஐஃபோன் ஆறு-ப்ளஸ், மோட்டோ இ என வைத்துக்கொண்டிருக்க எனக்கும் ஒரு சின்ன ஆசை வருகிறது. ஐஃபோன் ஆறு வாங்க கடைக்குச் செல்கிறேன். ஆறு வாங்குவதற்கு ஆறு போல காசு வேண்டும் என்பதை அறிந்து என் கைக்கு எட்டிய ஐஃபோன்-4எஸ் வாங்கி வருகிறேன் என வைத்துக்கொள்வோம்.

வந்து பெட்டியைத் திறந்து வெளியே எடுத்து சிம் கார்டை நுழைக்கும்போதே முதல் பயம் தொற்றிக்கொள்கிறது. இந்த மெட்டலில் ஸ்க்ரேட்ச் ஆனால் என்ன செய்வது. கடைக்கு மறுபடி ஓடுகிறேன். ஸ்க்ரீன் கார்டு (guard), ஸ்க்ரேட்ச் கார்டு (guard), கவர் என வாங்கியாயிற்று. என் பழைய சிம் கார்ட் இதில் நுழையாது. நான் நெட்வொர்க் கடைக்கு ஓடி, என் சிம்கார்டை மைக்ரோ சிம்மாக மாற்ற வேண்டும். இண்டர்நெட் வசதி ஆக்டிவ் செய்ய வேண்டும். ஐடியூன்ஸ் ஐடி கிரியேட் செய்ய வேண்டும். இதை கிரியேட் செய்ய என் கிரெடிட் கார்டை பதிவு செய்ய வேண்டும். கிரெடிட் கார்டில் உள்ள பணம் எடுக்கப்பட்டுவிடுமோ என்று பதறிக்கொண்டே இருக்க வேண்டும். நோக்கியா 103ல் வாரக்கணக்கில் சார்ஜ் நிற்க, இந்த ஃபோனில் காலை முதல் மாலை வரை நிற்பதே பெரும்பாடு. அதற்கு சார்ஜர் பேங்க் (power bank). இத்தனை சமாச்சாரங்களையும் வைக்க ஒரு கிட். இப்படியே என்னை அறியாமலேயே வர்த்தகம் அல்லது சந்தை என்ற கடலுக்குள் நான் விழுந்துவிடுகிறேன்.

வடக்கு அட்லாண்டிக் கடலில் பெர்முடா முக்கோணம் (Bermuda's Triangle) என்ற ஓர் இடம் உண்டு. இந்தப் பகுதியைக் கடக்கும் கப்பலும், விமானமும் மறைந்து விடுகின்றன. கடல் அப்படியே அவைகளை உள்வாங்கிக்கொள்கிறது. இது அவிழ்க்க முடியாத மர்மமாகவே இருக்கிறது.

இதைப்போலவே அண்ட சராசரத்தில் கருந்துளைகளைக் (black holes) கண்டறிந்துள்ளனர். இவைகள் நட்சத்திரங்களையே உட்கொள்ளக்கூடிய திறன் பெற்றவை. இவைகளுக்குள் சென்றுவிட்டால் மீண்டு வரவே முடியாது.

சந்தைப் பொருட்கள் இன்று நம்மை ஈர்க்கும் அளவுக்கு கடவுளோ, உண்மை, நீதி, அன்பு போன்ற மதிப்பீடுகளோ ஈர்ப்பதில்லை என்பதே வேதனைக்குரிய விடயம்.

இன்று நாம் காலூன்றி நிற்க கிராவிட்டி தேவைதான். ஆனால், கையூன்றி நிற்க நாம் சந்தைகளைச் சார்ந்திருக்கத்தான் வேண்டுமா?




1 comment:

  1. உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் இன்றையப் பதிவு என் புத்திக்கும், சக்திக்கும் அப்பாற்பட்டது.அதனால் விமர்சிக்க ஒன்றுமில்லை...அந்த இறுதி வரிகளைத்தவிர.சந்தைப்பொருட்கள் நம்மை ஈர்க்கும் அளவுக்கு கடவளோ, உண்மை, நீதி,அன்பு போன்ற மதிப்பீடுகளோ ஈர்ப்தில்லை...உண்மைதான்.கைக்காசு கொடுத்து வாங்கும் பொருட்களுக்குத்தானே நம் ஊரில் மதிப்பு. யார் கண்டது? ஒரு காலம் வரலாம்....கடவுளையும் காசுக்கு வாங்கும் நிலை வரலாம்.என்ன விலைக்கு இறைவன் மசிவார்??!!... அவருக்கே வெளிச்சம்......

    ReplyDelete