Monday, July 20, 2015

மணிமண்டபம்

மெல்லிசை மன்னரின் இறப்பு செய்தி கேட்டவுடன் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த திரு. ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம். 'மெல்லிசை மன்னருக்கு அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும்' என்று சொன்னார். அங்கிருந்த எல்லாரும் கைதட்டினார்கள்.

நேற்று சென்னையில் சில சமூக ஆர்வலர்கள் இணைந்து ஒரு வழக்கு போட்டிருக்கிறார்கள். யாருக்கு எதிராக? சிவாஜி சமூக நலப்பேரவைக்கும், நடிகர் சங்கத்திற்கும் எதிராக. என்ன வழக்கு? சிவாஜிக்கு அரசு மணிமண்டபம் கட்டக்கூடாது.

மணிமண்டபம் என்றால் என்ன?

கடைசியாக தமிழகத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது மேதகு. பென்னிகுயிக் அவர்களுக்காக. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி ஐந்து மாவட்டங்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தன் சொந்த நாட்டிலிலுள்ள தன் சொத்துக்களையெல்லாம் விற்று அணையைக் கட்டிய அவருக்கு மணிமண்டபம் கட்டியது சரியா? அல்லது தவறா? தவறு என்றே நான் சொல்வேன். ஐந்து மாவட்டங்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக ஜெயா அவர்கள் மணிமண்டபத்தை வாக்களித்து அதை அரையும், குறையுமாகக் கட்டியும் முடித்து, அதன் தொடக்க விழாவை மதுரையில் நிகழ்த்தி தன் கல்லாவைக் கட்டிக்கொண்டார். ஆனால், இந்த மணிமண்டபம் கட்டுவதற்கு அரசு செலவிட்டதை, கேரள அரசுடன் அமர்ந்து முறையான பேச்சுவார்த்தை நடத்த செலவிட்டிருக்கலாம்.

சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?

இதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.

தன் குடும்பத்திற்கு அவர் வேண்டியவர் என்பதாலும், தன் குடும்பத்தோடு திருமண உறவு இருக்கிறது என்பதற்காகவும், தன் சுயநலத்திற்காக திரு. கலைஞர் அவர்கள், சிவாஜிக்கு ஒரு சிலையை நிறுவி போக்குவரத்து பிரச்சினையை சென்னையில் இன்னும் அதிகமாக்கிவிட்டார்.

அதைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திடம் மணிமண்டபம் கட்டுவதற்காக அவரே இடத்தையும் இலவசமாகக் கொடுத்தார். இப்போது அரசு கட்டியும் தர வேண்டுமாம்? என்ன ஒரு முட்டாள்தனமான கோரிக்கை!

அவர் கலைக்குச் சேவை செய்தாராம்.

சேவை செய்தார்.

ஆனால் என்ன காசு வாங்காமலா செய்தார்.

'உலகம் சிரிக்கிறது' திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவின் உரையாடல்தான் நினைவிற்கு வருகிறது:

'இந்த வீட்டைக் கொத்தனார் கட்டினான், கட்டினான் என்கிறாயே? காசு வாங்காமலா கட்டினான்? சல்லிக் காசு குறைந்தாலும் கட்ட மாட்டேன் என்று சட்டம் பேசியல்லவா கட்டினான்!'

இன்னும் அரசே கட்ட வேண்டும் என்றால் அது எப்படி இருக்கும் தெரியுமா?

அரசாங்கம் அந்த மணிமண்டபத்திற்கு டெண்டர் விடும். அதில் கமிஷன். லஞ்சம். ஊழல். அப்புறம் சிவாஜி பயன்படுத்திய பொருட்கள் என்று சிவாஜி குடும்பத்தாரிடமே கொள்ளைக் காசு கொடுத்து வாங்கி, அதை மக்களுக்குத் திறந்து வைத்து, வருகின்ற காசை சிவாஜி குடும்பத்திடமே திரும்ப கொடுக்கும். ஆக, லாபம் சிவாஜி குடும்பத்தாருக்கே.

ஆக, மெல்லிசை மன்னரோ, செவாலியே சிவாஜியோ தங்களின் கலைத்திறனை வியாபாரமாக்கினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் தங்கள் கலைக்கேற்ற சன்மானத்தையும், பெயரையும், புகழையும் பெற்றுவிட்டனர்.

நம்ம ஊருல உச்சி வெயிலில் நின்னு வயற்காட்டில் பாத்தி கட்டும் ஒரு மாடசாமியோ, கோவந்தசாமியோ செய்யும் வேலையை நானோ, நீங்களோ, சிவாஜியோ, எம்.எஸ்.வியோ செய்ய முடியாதுதான். அவரவருக்குரிய வேலையை அவரவருக்கிரிய திறமையில் நாம் எல்லாரும் செய்து முடிக்கின்றோம். இதில் ஒரு சில நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஏன் மற்றவர்களின் வரிப்பணம் செலவிடப்பட வேண்டும்?

இப்படியே போனா அடுத்து நம்ம ஜெயாவுக்கும், கலைஞருக்கும் மணிமண்டபம் கட்டணும்.

நினைச்சாலே கோபம் வருதுல்ல!


1 comment:

  1. கண்டிப்பாக நம் கோபத்தைக் கிளறி விடும் விஷயம் தான் நம் வரிப்பணத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு 'மணிமண்டபம்' கட்டும் செயல்.அவரவர் சொந்தக் காசில் ஒரு பைசாவேனும் அடுத்தவருக்குக் கொடுக்கும் போதுதான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.வெளிச்சத்திற்குக் கொணரப்படவேண்டியவர்கள், பெருமைப்படுத்தவர்கள் என்று இருட்டில் எத்தனையோ பேர் இருக்கையில் இவர்கள் இன்னும் ஊரறிந்த பாப்பான்களுக்கே பூணூல் கட்டிக்கொண்டிருப்பது நியாயம் இல்லைதான்.( மன்னிக்கவும்...இந்தப் பழமொழி இந்த இடத்திற்குப் பொருத்தமாயிருந்ததால் போட்டுள்ளேன்.வேறு காரணமில்லை..)

    ReplyDelete