Wednesday, July 8, 2015

இரண்டு தீர்ப்புகள்

ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நம் நாட்டின் உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகள் மிக முக்கியமானவை என நினைக்கிறேன்.

அப்படி என்ன தீர்ப்புதான் வழங்கப்பட்டது?

தீர்ப்பு 1: கார்டியனாக இருப்பது (ஜூலை 6, 2015)

ஒரு காதலன். ஒரு காதலி. திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டதில் காதலி கர்ப்பம். கர்ப்பம் கண்ட காதலன் பின்வாங்குகிறான். காதலி துணிச்சல்காரி. 'போடா! எனக்கு குழந்தை வளர்க்கத் தெரியாதா என்ன?' இப்போது ஒரு சட்டச் சிக்கல் வருகிறது. பிறக்கப்போகும் குழந்தைக்கு இவர் அம்மாவா அல்லது கார்டியனா (வளர்ப்புத்தாயா)? இவர் அம்மாவாக இருக்க சட்டம் அனுமதிக்காது. ஏனெனில் சட்டப்பூர்வமாக இவருக்குத் திருமணம் ஆகவில்லை. கார்டியனாக இருக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது. ஏனெனில் ஆண்களின் துணையோடுதான் பெண்கள் கார்டியனாக இருக்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை எதிர்த்து 2011ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்த ஒரு இளவலின் வழக்கில், (திருமணம் செய்யாத) பெண்கள் ஆண்களின் துணையின்றி சட்டப்பூர்வமான கார்டியனாக இருக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பு 2: பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் தேவையில்லை (ஜூலை 7, 2015)

வழக்கு ஏறக்குறைய முன்னதைப் போலத்தான். ஆனால் பிரச்சினை வேறு. திருமணமாகாத பெண் குழந்தை பெற்றுவிட்டாள். இந்தக் குழந்தைக்கு யார் தந்தை? என்ற கேள்வி வருகிறது. 'அப்பா பேர் தெரியாதவன்' என்ற சினிமாகுப்பையை சுத்தமாக்கியிருக்கிறது இரண்டாம் தீர்ப்பு. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் தந்தை பெயர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆக, பெண்கள் தனிநபராக குழந்தை பெற்றுக்கொள்ளலாம். வளர்க்கலாம்.

தீர்ப்புகளின் பயன் என்ன?

அ. பெண்களுக்கு சம உரிமை அல்லது பெண்களும் தன்னிலேயே முழுமையானவர்கள் என்பதையும் இந்த தீர்ப்பு நினைவுபடுத்துகிறது. இந்த வகையான தீர்ப்பு பெண்களின் தன்னம்பிக்கையையும், தற்சார்பையும் இன்னும் அதிகப்படுத்தும்.

ஆ. சாதிகள் ஒழியும். இரண்டாம் வகைத் தீர்ப்பு சாதி ஒழிப்பிற்கு முதல்படி. நம் ஊர் வழக்கப்படி, தந்தையின் இனிஷியல் ஒரு குழந்தைக்கு கொடுக்கப்படும்போது, மறைமுகமாக அவரின் சாதியும் அந்தக் குழந்தையை தொற்றிக்கொள்கிறது. பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் வெறும் குழந்தையாக இருந்த ஒரு உயிர், தந்தையின் இனிஷியல் பெற்றவுடன் நாடார் குழந்தை, உடையார் குழந்தை, வேளாள குழந்தை, கிறிஸ்தவ குழந்தை, இந்து குழந்தை என்று மாறிவிடுகிறது. குழந்தை என்ன தவறு செய்தது இந்த அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதற்கு? எதற்காக இந்த தேவையற்ற அடையாளங்கள்? யாரின் இனிஷியல் வைக்கணும் என்ற பிரச்சினை வந்தால், தாயின் இனிஷியல் வைக்கலாம். அல்லது தாயின் பெயரையே இரண்டாம் பெயராக வைக்கலாம். உதாரணத்திற்கு, யேசு கருணாநிதி என்பதற்குப் பதிலாக யேசு மரிய செல்வம். தந்தையர்கள் சாதிகளையும், மதங்களையும் பிடித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு தாய்மார்கள் பிடித்துக்கொண்டிருப்பதில்லை. தாய் என்றும் பரந்த பார்வை கொண்டவள். தன் பிள்ளைக்கு எது நல்லதோ அதை சரி என்று ஆமோதிப்பவள். சாதியத்தின், மதத்தின் கோரம் அவளுக்குத் தெரியும். ஆகையால் தன் குழந்தையை சாதியையும் தாண்டி சிந்திக்க வைப்பாள்.

இ. ஏளனப்பேச்சு குறையும். நம்ம ஊரில் கர்ப்பமாக இருப்பது பல நேரங்களில் ஒரு அறநெறி பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கும் உதவாத, குடிகார, நோய்வாய்ப்பட்ட ஒரு கணவனுக்கு மனைவி குழந்தை பெற்று வாழ்நாள் முழுவதும் அடிவாங்கி, மிதிவாங்கி, தன் வியர்வை சிந்தி அந்த குழந்தையை வளர்க்கலாம். இதை சட்டம் அனுமதிக்கும். ஏன்னா, அவங்க திருமணம் ஆனவங்க. அவன் தாலி மட்டும்தான் கட்டினான். மற்ற கஷ்டங்களை அனுபவிக்கிறவள் பெண். ஆனால், ஒரு தோழன், ஒரு தோழி. இரண்டுபேரும் நல்லவர்கள். இரண்டு பேரும் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். இரண்டுபேரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்கிறார்கள். இந்த தோழமையின் அடையாளமாக குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கின்றனர். சட்டம் இதை அனுமதிக்காது. ஏன்னா, தாலியோ, மோதிரமோ அவர்கள் மாற்றவில்லை. இப்போது தரப்பட்டுள்ள இந்த சட்டப்படி இரண்டாம் வகை உறவும் சாத்தியம். இறுதியாக ஒருவர் மற்றவருக்கு தேவை தாலியோ, மோதிரமோ அல்ல. ஒருவர் மற்றவர் தரும் நம்பிக்கையும், வாக்குறுதியும்தான். மேலும், திருமணத்திற்கு புறம்பாக குழந்தை பெற்றுக்கொள்வது ஏளனம் என்ற நிலையும் மாறும். திருமணத்திற்கு புறம்பாக பிறந்தால்தான் என்ன?

என்னைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு தீர்ப்புகளும் நம் இந்தியா ஒரு பரந்த மனப்பான்மையை நோக்கி வளர்ச்சியடைகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஒரு நாடு வல்லரசாகிறது என்பது அது வைத்திருக்கும் அணு ஆயுதங்களைப் பொறுத்தது அல்ல. மாறாக, அது எந்த அளவிற்கு அறிவு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது என்பதில்தான் இருக்கிறது.

வாழ்க அரசியலமைப்புச் சட்டம்!


1 comment:

  1. நானும் கூடப் படித்தேன் இந்த செய்தியை. இந்த மாதிரி தீர்ப்புகள் பெண்களின் தற்சார்பையும்,தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்பது ஒரு வகையில் சரிதான்.ஆனால் யாருக்கு??! இது மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.ஆனால் அடுத்த வேளைச் சோற்றுக்கே ஆண்களின் கையை நம்பியிருக்கும் நம் பாமரப்பெண்களுக்கு இம்மாதிரிச் சட்டங்கள் எவ்வித்த்தில் உதவும்? புரியவில்லை.திருமணத்திற்கு புறம்பாக்க் குழந்தை?? யோசித்துப் பாருங்கள்...நாளை எந்தக் குழந்தைக்கு யார் தகப்பன்? பெற்றவளுக்கே வருமே சந்தேகம்.கொஞ்சம் ஓவர்தான்...ஆனால் அப்படி நடக்கவும் சாத்தியக்கூறுகள் இல்லாமலில்லை.ஆண்டவன் காப்பாற்றட்டும்...நம் பெண்களையும்,பிள்ளைச்செல்வங்களையும்......

    ReplyDelete