Friday, July 24, 2015

இராங்கியம் சந்தனமாதா

நாளையும், நாளை மறுநாளும் இராங்கியம், உலகரட்சகர்புரத்தில் குடிகொண்டிருக்கும் சந்தனமாதாவின் திருநாள்.

இந்த ஆலயத்திற்குக் கடந்த ஆண்டு செல்லும் பாக்கியம் கிடைத்தது. நாங்கள் சென்றது யாருமில்லாத மதிய வேளை. நாங்கள் கோவிலுக்கு அருகில் செல்வதைப் பார்த்து, அந்தக் கோவிலின் சாவியைக் கொண்டிருக்கும் பெண் ஓடோடி வந்தார். (என்னதான் கடவுள் கோவிலுக்குள் இருந்தாலும் அதன் சாவி என்னவோ மனிதர்களிடம்தான் இருக்கின்றது!)

செபம் செய்துவிட்டுப் புறப்படும்போது, எல்லாருக்கும் சந்தனம் நிறைந்த குப்பி ஒன்றைக் கொடுத்தார். கொடுப்பதற்கு முன் ஒரு செம்பில் தண்ணீர் கொடுத்தார். அது தீர்த்தம் என்றே நினைக்கின்றேன். அது தீர்த்தம் இல்லையென்றாலும் பரவாயில்லை. அதற்கு என்ன அர்த்தம் என நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒருவேளை சந்தனமும், தண்ணீர் இணைந்தே செல்வதால்தான், இரண்டும் கொடுக்கப்படுகிறதோ என நினைத்தேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26ஐ தூய சுவக்கின்-அன்னாள் திருநாள் என்று நாம் கொண்டாடுகிறோம். பாரம்பரிய நம்பிக்கையின்படி இவர்கள்தாம் இயேசுவின் தாய் மரியாளின் பெற்றோர். இயேசுவின் அம்மா வழி தாத்தா-பாட்டி.

இராங்கியம் கோவிலில் இருக்கும் சந்தனமாதாவின் பெயர் 'சாந்த். அன்னா' என்பதன் மரூவாகத்தான் இருக்கும். 'சாந்தன்னா' என்பது 'சந்தன்னா', 'சந்தனா' என மாறியிருக்கலாம். ஏனெனில் இந்த ஆலயத்தின் மையமாக இருப்பது மாதா அல்ல. மாதாவின் அன்னையே. ஆக, சந்தனமாதா என்ற பெயரில் 'மாதா' என்பதை 'மரியாள்' என்று எடுத்துக்கொள்ளாமல், 'மாதா' என்பதை 'அம்மா' என எடுத்தால், 'சந்தன அம்மாள்', 'சாந்த். அன்னம்மாள்' என அன்னம்மாளின் பிரசன்னம் தெளிவாகிறது.

இந்த வாரம் வெளியான ஆனந்த விகடனில் மதுரையின் தென்கிழக்கேயிருக்கும் மணலூரில் 2500 ஆண்டுகளுக்கு முன்னிருந்த குடியிருப்பு பகுதி ஒன்றை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி குடும்பத்திலும், சமுதாயத்திலும் நம் தமிழ்மரபில் முதன்மையானவர்களாக இருந்தவர்கள் பெண்கள்தானாம். பெண்கள் தான் குடும்பத்தையும், ஊரையும் நிர்வகித்தனர். குடும்பத்தலைவிகள் தாம் சொத்துக்களை உரிமையாக்கிக்கொள்ளவும் முடியும்.

ஆக, பெண்களின் அரசியாம் மரியாளின் தாய்க்கே கோவில் எடுக்கத் துணிந்திருக்கின்றனர் இராங்கியத்து இனியவர்கள்.

நம்மைப் பற்றி அதிகம் நம் தாய்க்குத்தான் தெரியும். அவளின் வயிற்றில் நாம் 10 மாதங்கள் இருந்தோம். அவளின் மார்பில் பால் குடித்தோம். மடியில் படுத்துறங்கினோம். நம் முதல் பல், நம் முதல் சிரிப்பு, நம் முதல் அழுகை, நம் முதல் வார்த்தை என அனைத்தையும் பார்த்தவள் அவள்தான். அவள் நம்மைக் குளிப்பாட்டியவள். நாம் அழுக்காக்கிய ஆடைகளைத் துவைத்தவள். அவள்தான் நம் எல்லாம்.

இயேசுவுக்கு இந்த எல்லாமாக இருந்தவர் மரியாள். மரியாளுக்கு எல்லாமாக இருந்தவர் அன்னம்மாள்.

ஆக, அன்னம்மாளின்வழி மரியாளையும், மரியாள்வழி இயேசுவையும் நாம் இன்னும் அதிகமாக நெருங்கிச் செல்ல முடிகிறது.

சுவக்கீன் மற்றும் அன்னம்மாளின் திருநாளைக் கொண்டாடும் இந்த நாட்களில், தண்ணீர் போல சுவக்கீனையும், சந்தனம் போல அன்னம்மாளையும் நினைத்துக்கொள்வோம். இந்த இரண்டையும் கலந்து நம் நடு நெற்றியில் பொட்டிடும்போது, நம் தாத்தா-பாட்டி என்னும் வேர்களை நினைத்துப் பார்க்கலாமே!

உலகரட்சகர்புரம் சந்தனமாதா திருத்தலம் பற்றி அறிய பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடலாம்:

Santhana Matha



1 comment:

  1. "இராங்கியம்" சந்தனத்தாயின் கடைக்கண் பாதுகாப்பில் இயங்கும் ஒரு சிறு கிராம்ம்.அது நான் பிறந்த மண் என்று நினைக்கையில் உடலும்,உள்ளமும் ஒரு சேர சில்லிட்டுப் போகிறது.காரணம்...என்னைப்பெற்ற தாயும் இறைவனில் துயில் கொள்வது அங்குதான்.புனித அன்னம்மா..சந்தனத்தாய்....இரண்டுக்கும் என்ன சம்பந்தம்...யார் யாரிடமோ விளக்கம் கேட்டு இறுதியாக எனக்குப் புரியவைத்த தந்தைக்கு என் நன்றிகள்.ஆண்டு முழுவதும் வெறிச்சோடிக்கிடக்கும் கிராம்ம் இன்றும்,நாளையும் நிரம்பி வழியும் பக்தர் கூட்டத்தைப் பார்க்கும் போது அந்தத் தாயின் மகிமை விளங்கும்.இறைவனைப் பெற்றவளையே தன் மடிமீதிட்டு சீராட்டிப் பாராட்டிக் காத்த புனித சந்தனத்தாய் நம் அனைவரையும் காப்பாளாக! கண்டிப்பாக இன்று சந்தனத்தையும்,நீரையும் கலந்து என் நெற்றியிலிடுகையில் என் வேர்களை
    மட்டுமல்ல என்னுடன் தொடர்புடைய அத்தனை பேருக்காகவும் வேண்டுவேன்.நான் நேசிக்கும் 'இராங்கியம்' கிராமத்தையும்,தன் கண்ணின் கருவிழியென அந்தக் கிராமத்தைக் காத்து நிற்கும் சந்தனத்தாயையும் உலகறியச் செய்த தந்தைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    ReplyDelete