மேதகு. கலாம் அவர்களின் இந்த மாத நிகழ்வுகளில் ஏறக்குறைய இறுதியாக இருந்தது அவரின் திண்டுக்கல் பயணம். திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் தங்கியிருக்கும் தன் இயற்பியல் பேராசிரியர் அருட்தந்தை. சின்னதுரை அவர்களைக் காணச் சென்றார் கலாம். கலாமின் வாழ்க்கை அடித்தளம் தொடங்கியது இயேசு சபையினரின் கைகளில்தாம் என்று நினைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அருட்தந்தை. சின்னதுரை அவர்களைக் கண்டபோது கலாம் என்ன நினைத்திருப்பார்? அல்லது அருட்தந்தை அவர்கள் என்ன நினைத்திருப்பார்?
ஏணி ஒரே இடத்தில் நிற்க ஏறியவர் என்னவோ கலாம்தான். ஒவ்வொரு ஆசிரியரும், பேராசிரியருக்கும் இருக்கும் பெருமிதம் இதுதான் - ஏணியாக இருப்பது. தன்மேல் ஏறிச்சென்ற மாணவ, மாணவியர் தங்களைவிட மேலான புகழோடு இருந்தாலும், இந்த ஆசிரியர்களுக்கு ஒருபோதும் பொறாமை வருவதில்லை. 'இவர் என் மாணவர்' என்ற பெருமிதம்தான் வருகிறது. ஆகையால்தான் ஆசிரியர்களைக் கடவுள் நிலையில் வைத்துக் கொண்டாடுகிறோம். கடவுள் தன் குழந்தைகள் மேல் என்றாவது பொறாமைப்படுவாரா? பெருமிதமே அடைவார்.
நாளை கலாம் அவர்களின் இறுதிச் சடங்கு. நாளை மறுநாள் (31 ஜூலை) இயேசு சபையின் நிறுவனர் புனித இஞ்ஞாசியாரின் திருநாள் (அவரின் இறந்த நாளும் இதுவே!). இரண்டு நாட்களும் அடுத்தடுத்து வருவது இயல்பாக நடந்ததுபோல எனக்குத் தெரியவில்லை.
இயேசு சபையினரின் கரங்கள் பிடித்து தன் வாழ்வைத் தொடங்கிய கலாம், இயேசு சபையினருக்கு நன்றியால் கரம் கூப்பி விடை பெறுகிறார்.
இனிகோவிற்கும் ('இனிகோ' என்பது இஞ்ஞாசியரை மற்றொருமாதிரியாக விளிக்கும் விதம்) கலாமிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன:
1. இனிகோ பிறந்த இடம் பிஸ்கே கடல் தாலாட்டும் லொயோலா கடற்கரை.
கலாம் பிறந்த இடம் வங்கக் கடல் தாலாட்டும் ராமேஸ்வரம் கடற்கரை.
2. படைவீரராக வாழ்க்கையைத் தொடங்கியவர் இனிகோ.
இந்திய வான்வழிப்படையில் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் கலாம்.
3. இனிகோ என்றால் நெருப்பு என்று பொருள்.
கலாமின் வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பும் 'அக்கினிச் சிறகுகள்' என்பதுதான்.
4. தன் 30ஆம் வயதிலும் மாணவர்களோடு அமர்ந்து இலத்தீன் கற்றார் இனிகோ.
தன் இறுதி நிமிடம் வரை மாணவர்களோடு அமர்ந்திருந்தார் கலாம்.
5. இயேசு சபையின் தலைமகனாய், ஆன்மீகத் தலைவராக உயர்ந்தவர் இனிகோ.
இந்திய நாட்டின் தலைமகனாய், அரசியல் தலைவராக உயர்ந்தவர் கலாம்.
6. 'அனைத்தும் இறைவனின் மகிமைக்கே' என்று வாழ்ந்தவர் இனிகோ.
'அனைத்திலும் இறைவனை மகிமையடையச்;' செய்தவர் கலாம்.
7. இனிகோவும் மணத்துறவு மேற்கொண்டவர்.
கலாமும் மணத்துறவு மேற்கொண்டவர்.
8. இனிகோவின் கனவு இறையரசு மலர வேண்டும் என்பது.
கலாமின் கனவு வல்லரசு மலர வேண்டும் என்பது.
9. காலில் பட்ட குண்டை தடையாகக் கருதாதவர் இனிகோ.
வாழ்வில் பட்ட வறுமை எனும் குண்டை தடையாகக் கருதாதவர் கலாம்.
இனிகோவின் கனவு இன்று இயேசுசபையாக விரிந்து நிற்கிறது. விளிம்புகளை நாடிச் செல்லும் இயேசுசபையார் தாங்கள் சந்திக்கும் அனைவரின் உள்ளங்களிலும் புன்னகையை விதைக்கின்றனர்.
இந்தியாவின் கோடானு கோடி மக்களும் புன்னகைக்க வேண்டும் என்பதே கலாமின் கடைசி ஆசையும்கூட.
இருவருக்கும் மரணமில்லை.
மலர் தூவினோம். அஞ்சலி செலுத்தினோம். அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிட்டோம்.
இப்படி இருந்தவிடாமல்,
நாமும் இவர்களைப் போல இனி இருக்கலாம்!
அருமையான படைப்பு! எப்படி...எப்படி தந்தையே தங்களால் வாழ்வின் எந்த ஒரு நிகழ்வையும் இப்படி ஒரு த்த்துவக்கண்ணோட்டத்தோடு பார்ப்பது மட்டுமின்றி அதைக் கவிதையாகவும் தர முடிகிறது? கண்டிப்பாக கலாம் அவர்களின் இறுதிநாளும், இஞ்ஞாசியாரின் திருநாளும் அடுத்தடுத்து வருவது கண்டிப்பாக இயல்பாக வரும் செயல் இல்லைதான்.கலாமுக்கும்,இனிகோவுக்கும் உள்ள ஒற்றுமைகளின் பட்டியல் rare coincidence! சென்றவாரம் கலாமின் திண்டுக்கல் பயணத்தை டி.வியில் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாகப் புரிந்திருக்கும் அவரை
ReplyDeleteஏற்றிவிட்ட ஏணியின் மேல் அவருக்குள்ள பக்தியும், பாசமும்.இவருமே ஒரு ஆசிரியர் என்பதில் எனக்கெல்லாம் அதீதப் பெருமை.கண்டிப்பாகத் தந்தையின் வார்த்தைகளை சிரமேற் ஏற்று நாமும் இவர்களைப் போல 'இனி' இருக்'கலாம்'....ஒரு துண்டு கேக்கின் தலைமீது வைத்த 'செர்ரி'....வாழ்த்துக்கள்!
அருமையான படைப்பு. வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான படைப்பு. வாழ்த்துகள்
ReplyDelete