Thursday, July 16, 2015

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி

இருள் மற்றும் வெளிச்சத்தின் சரிநிகர் கலவை ஓவியம் என்றால், சப்தம் மற்றும் மௌனத்தின் சரிநிகர் கலவை இசை.

மனித மனத்தின் உச்சகட்ட வலியிலும், மகிழ்ச்சியிலும் நம்மையறியாமல் இசை ஆரவாரமாகவோ, முனகலாகவோ வெளிப்படுகிறது.

இயல், இசை, நாடகம் என தமிழ்த்தாய்க்கும் மூன்று முகங்கள் உண்டு.

பக்கம் பக்கமாக சிந்திக்கிடக்கும் வார்த்தைகளை ஓரிரு வரிகளில் சுருக்கி விடுகிறது இசை. ஆகையால்தான், 'ஒருமுறை பாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம்' என்றார் அகுஸ்தினார்.

திருவழிபாட்டில் இசைக்கு மிக முக்கியமான இடம் உண்டு. எல்லா மதத்தினரும் தங்கள் கடவுள்களை பாடல்கள் கொண்டே புகழ்கின்றனர். ஆக, மனிதருக்குப் பாடல் பிடிப்பதால், கடவுளுக்கும் அது பிடிக்கத்தானே வேண்டும்.

கருநாடக சங்கீதத்திற்கு சாட்டையடியாக வந்தது நாட்டுப்புறப் பாடல்கள்.

மேற்கத்திய இசைக்கு எதிர்ப்பாக வந்தது பாப் எனப்படும் பாடல்வகை.

ஆக, ஒரு கலாச்சாரத்திற்கு மனிதர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும் இசையைக் கையில் எடுக்கின்றனர்.

எவ்வளவு பெரிய விடயத்தையும் மிக எளிதாகச் சொல்லிவிடுகிறது பாடல்.

நாம் தமிழ்க் கத்தோலிக்க வழிபாட்டில் பாடும் பாடல்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

அ. இறையியல் மிகுந்தவை. ஆனால், எளிதில் புரியாதவை. உதாரணத்திற்கு, திருப்பாடல்களை மையமாக வைத்து இயற்றப்படும் அல்லது திருப்பாடல்களே இசையோடு பாடப்படுவது.

ஆ. இறையியல் இல்லாதவை. ஆனால் யாரும் பாடக்கூடியவை. உதாரணத்திற்கு, அருட்திரு. பெர்க்மான்ஸ் அவர்களின் 'இயேசப்பா ஸ்தோத்திரம்' வகை. இயேசுவை கத்தோலிக்க இறையியல் சகோதரன் என்றுதான் சொல்கிறதே தவிர, தந்தை என்று சொல்வதில்லை. ஆக, இந்தப் பாடல் கத்தோலிக்க இறையியலுக்கு முரணானது. ஆனால், எளிதில் எந்த உள்ளத்தையும் தொடக்கூடிய வரி இந்தப் பாடல் வரி.

இ. இறையியிலும் இருக்கும். எளிதாகவும் புரியும். எ.கா. 'உன்னில் நான் ஒன்றாக' என்னும் பாடல். இதில் வரும் ஒரு வரி எனக்கு மிகவும் பிடிக்கும்: 'முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி மூன்றாகி ஒன்றானவா'. மூவொரு இறைவன் இறையியலை மிக எளிதாக உணர்த்தும் பாடல் இப்பாடல்.

இந்த மூன்றாம் வகைப் பாடலைப் பற்றிப் பேசும்போது நாம் கண்டிப்பாக நினைவுகூர வேண்டிய ஒரு நபர் எம்.எஸ்.வி.

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட, தமிழ்ச்சமூகத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி என்று அன்புடன் அழைக்கப்பட்ட திரு. எம். எஸ். விஸ்வநாதன் நேற்று (14 ஜூலை 2015) அதிகாலை இயற்கை எய்தினார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மூன்றுமொழித் திரைப்படங்களிலும் இவர் இசையமைத்து முத்திரை பதித்திருந்தாலும், இவரின் இசை சினிமாவையும் தாண்டி நிற்கின்றது. 'விடை கொடு நாடே' என்று இவர் கசிந்துருகிய பாடல் இன்றும் புலம்பெயர் தமிழர்களின் அடிநாதமாய் ஒலிக்கின்றது.

ஞான ஒளி திரைப்படத்தில் வரும் 'தேவனே என்னைப் பாருங்கள்' என்ற பாடலைக் கேட்டவுடன் நமக்கு என்னவெல்லாம் நினைவிற்கு வரும்?

அ. கத்தோலிக்க திருஅவையில் இருக்கும் ஒப்புரவு என்னும் அருட்சாதனம்.

ஆ. நம் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு என்னும் இறையியல்.

இ. இயேசுவின் காணாமற்போன ஆடு உவமை (லூக்கா 15:1-7)

ஈ. செல்வனின் உவமை (லூக்கா 12:13-21)

உ. மான்கள் நீரோடை தேடும் உருவகம் (திபா 42:1)

ஊ. இயேசுவின் சிலுவைச் சாவு

ஆக, ஒரு பாடலைக் கேட்பதன் வழியாக இவ்வளவு இறையியல் பயணம் செய்துவிடுகிறது நம் ஆன்மா. இதைச் சாத்தியமாக்கியவர் எம்.எஸ்.வி.

இசைக்கு மரணமில்லை. இந்த இசை மன்னருக்கும்!


1 comment:

  1. " சப்தம் மற்றும் மௌனம் இவற்றின் சரி நிகர் கலவை தான் இசை"... மிகச் சரியான அழகான வார்த்தைகள்.எம்.எஸ் விஸ்வனாதன் அவர்கள் மறைவில் ஆரம்பித்து அதை இறையியல் வரைக் கொண்டுசெல்லும் வித்தை தந்தைக்கு மட்டுமே சாத்தியம்.ஞான ஒளி பாடலைக் கேட்டவுடன் ஞாபகத்திற்கு வரும் சங்கதிகளின் அட்டவணை அபாரம்.எந்த ஒரு கலைஞனுக்குமே நாடோ, இனமோ, மொழியோ ஒரு தடுப்புச்சுவரில்லை என்பதை நிருபித்த மற்றுமொரு மகா புருஷன் இந்த எம்.எஸ்.வி அவர்கள். தன் இசையால்,எளிமையால் சாகரங்களைத் தொட்ட இவரின் புகழ் கண்டிப்பாக என்றென்றும் சரித்திரமாய் நிற்கும் என்பதில் ஐயமில்லை.அழகானதொரு பதிப்பிற்காகத் தந்தைக்கு மீண்டுமொரு 'சபாஷ்!'

    ReplyDelete