Monday, July 6, 2015

சுயகாதல்

நம் கண்முன்னேயே சில இருக்கும். ஆனால், நாம் அதைக் கடைசி வரை காணாமல் இருப்போம்.

நான் படித்த கல்லூரிக்கு மிக அருகில் உள்ள தூய ஆகுஸ்தினாரின் பேராலயத்தை நான் மூன்று ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறேன் என நினைக்கும்போது அப்படித்தான் தோன்றியது. நான் நேற்று தற்செயலாக இதுவரை செல்லாத ஒரு சாலையில் செல்வோம் எனச் செல்ல, அங்கே என்னை ஆட்கொண்டது இந்தப் பேராலயம். ஒருசிலரை பார்த்தவுடன் அவர்கள்மேல் காந்தம் போல் ஒட்டிக்கொள்வோம். இது ஆலயங்களுக்கும் பொருந்தும். நான் இந்தப் பேராலயத்தோடு ஒட்டிக்கொள்ள காரணங்கள் நான்கு:

(அ) இது அகுஸ்தினாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது,
(ஆ) அகுஸ்தினாரின் தாயார் மோனிக்கம்மாளின் கல்லறை இங்கே இருக்கிறது,
(இ) காரவஜோ (Caravaggio) என்ற இத்தாலிய ஓவியரின் புகழ்பெற்ற ஓவியங்கள் பல உள்ளன,
(ஈ) இந்தக் கோவிலின் நுழைவாயிலில் உள்ள பேறுகால மாதா (இந்த மாதாவை நான் பார்ப்பது முதல்முறை. வளைகாப்பு மாதா அல்ல இவர். கையில் வளையல்கள் இல்லை. அப்படிப்பட்ட ஒரு மாதாவை கற்பனை செய்து பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது!)

காரவாஜோ அவர்களின் ஓவியங்கள்தான் இன்றைய பதிவில் நான் பகிர்ந்து கொள்ள விழைவது. மறுமலர்ச்சி ஓவியத்திலிருந்து ஓவியக்கலை பாரோக் அமைப்பிற்கு மாறிக்கொண்டிருந்தபோது உதித்தவர்தான் இவர். வண்ணங்களும், இருள்-ஒளி பிம்பங்களும் இவரின் ஓவியத்தில் நிறைந்திருக்கும். நான் குருமடத்தில் பயின்றபோது (2002) இவரின் 'மத்தேயுவின் அழைப்பு' என்ற ஓவியம் பற்றி வாசித்தேன். அதன்பின் இவரை மறந்தேபோயிருந்தேன்.

இவரின் ஓவியங்கள் (நிழற்படங்கள்) அனைத்தையும் (16) வாங்கினேன். இன்றிலிருந்து ஒவ்வொன்றாக அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

இன்று நம் வலைப்பதிவில் உள்ள ஓவியத்தின் பெயர் 'நார்சிஸ்சுஸ்' (Narcissus) (1590). நார்சிசம் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். கிரேக்க புராணம் ஒன்றின்படி நார்சிசுஸ் என்ற இளைஞன் தன் அழகை தண்ணீரில் பார்த்து தன் மேல் காதல் கொள்கின்றான்.

இந்த இளைஞனைவிட ஒரு பெண் இன்னும் முன்னேறி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தெற்கு கரோலினாவில் ('கரோலைனா' என்பர்கள் அமெரிக்கர்கள்! எல்லாரும் 'லி' சொன்னா அவங்க மட்டும் 'லை' சொல்வார்கள்...ஏன்னா அவங்க அமெரிக்கன்ஸ்!) தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த ஓவியத்தில் இருக்கும் இளைஞன் ஆசையாக தன் நிழலைத் தண்ணீரில் பார்ப்பதை அப்படியே பதிவு செய்திருக்கின்றார் காரவாஜோ.

நார்சிசம் (Narcissim) நல்லதா, கெட்டதா என்று கேட்டால் சிலர் நல்லது என்றும், சிலர் கெட்டது என்றும் சொல்வர்.

என்னைப் பொறுத்தவரையில் நார்சிசம் நல்லது.

எப்படி?

காலை எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை நாம் ஏதோ ஒரு வகையில் இந்த நார்சிஸ்சுஸ் போலத்தான் இருக்கிறோம். முகம் கழுவுதல், சவரம் செய்தல், ஆடை அணிதல், நறுமணத்தைலம் பூசுதல், பவுடர் அடித்தல் என்று தொடங்கும் நார்சிசம், செல்ஃபி வரை நீள்கிறது.

இத்தனையும் நான் செய்கிறேன் என்றால் அதற்குக் காரணம் முதலில் நான் என்னையே 'அழகன்' என்று ஏற்றுக்கொள்வது. ஆக, என்னை நான் அழகன் என்ற சொல்லும்போது, முதலில் நான் என் நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னை நானே ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் பின் யார் ஏற்றுக்கொள்வார்?

நார்சிசம் உள்ள ஒருவர்தான் தன்மதிப்பில் (self-esteem), தன்மானத்தில் (self-respect) வளர முடியும். தனக்குத்தானே உண்மையாக இருக்க முடியும்.

இது வரை நல்லது.

ஆனால். நான் என் அழகை தண்ணீரில் பார்த்து, அதன்மேல் காதல் கொண்டு, அதைக் கட்டித்தழுவ நினைத்தால் நான் மூழ்கித்தான் போவேன். என் அழகே என் ஆபத்தாக மாறிவிடும்.

ஆக, என்னை நான் பார்த்தவுடன், அந்த தண்ணீரில் நான் வானத்தையும், என்னைச் சுற்றியிருப்பவற்றையும் பார்க்கத் தொடங்கினேன் என்றால் நார்சிசம் நல்லதுதான்.



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete