Monday, July 13, 2015

வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது!

மேலும் அவர், 'நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும் வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.' (மாற்கு 6:10)

பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் வெளியான 'வீடு' (1988) என்ற திரைப்படத்தை நான்கு நாட்களாகப் பார்த்து முடித்தேன்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் இல்லாத மகள் ஒருத்தி தன் தாத்தாவின் உடனிருப்புடன், தன் குடும்பத்திற்காக கட்டும் ஒரு வீட்டைச் சுற்றி இருக்கிறது கதையாக்கம். கதைக்கரு வீடு என்றாலும் காதல், நாட்டு நடப்பு, இலஞ்சம், நல்லவர்கள், கெட்டவர்கள், ஊழல், ஏமாற்றுதல், காமம், களவு என எல்லாவற்றையும் சொல்லி முடிக்கின்றார் பாலு மகேந்திரா.

நாம் உலகையே சுற்றி வந்தாலும், நாம் நாமாக இருக்கக் கூடிய ஒரே இடம் நம் வீடுதான். இறப்பதற்குமுன் சொந்தவீடு ஒன்று கட்ட வேண்டும் என்பது எல்லாருடைய ஆசையாகவே இருக்கின்றது. வீடு வெறும் கட்டிடம் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். அதுதான் ஒரு மனிதரின் முகவரி.

வீட்டை விட்டு வந்துவிடும் அருட்பணியாளருக்கு செல்லுமிடமெல்லாம் வீடு என்று சொல்வார்கள். நேற்றும் இன்றும் திருப்பலி நிறைவேற்றுவதற்காக நாப்போலி என்ற நகருக்குச் சென்றிருந்தேன். என் வீட்டிற்கு வெளியில் இருக்கும்போதுதான் என் வீட்டின் அருமை தெரிகிறது. நான் செல்லும் வீடு எனக்கு அசௌகரியம் தந்தது என்ற பொருளில் அல்ல. மாறாக, ஏதோ ஒரு வெறுமை என்னையறியாமல் தொற்றிக் கொண்டது. 'எப்படா வீட்டுக்கு வருவோம்!' என்று மனதுக்குள் தோன்றியது.

இந்த உணர்வு எனக்கு இன்றைய நற்செய்தியை ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கத் தூண்டியது.

'நீங்கள் போகுமிடத்தில் ஒரு வீட்டில் தங்குங்கள்!' என்கிறார் இயேசு. அதாவது நீங்கள் செல்லுமிடத்தில் உங்கள் உள்ளம் ஒன்றிப்போகுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் இயேசு. ஆக, பணிக்கு அனுப்பப்படுபவருக்கு பணி பிடிக்க வேண்டும். பிடித்திருந்தால் பணி செய்ய முடியும். பிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும். பணியிடத்தை வீடு போல கண்டுபாவிக்க வேண்டும்.

படிப்பு முடிந்து விடுமுறையில் இருக்கும் இந்த நாட்களில்தான் எனக்கு என் ஊர் ஞாபகம், மறைமாவட்டம் ஞாபகம் அடிக்கடி வருகிறது. 'வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது!' என்று குருமடத்தில் சேர்ந்த புதிதில் குருமட அதிபரின் அறைக்கு வெளியில் அமர்ந்து அழுதது போல, இன்றும் அழத் தோன்றுகிறது.


1 comment:

  1. கூட்டை விட்டு வெளியேறிய பறவை தன் கூட்டின் ஞாபகங்களின் வயப்படுவது சகஜம் தான்.அதற்குத் தந்தையே, தாங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?கண்டிப்பாக ஒருவருக்கு 'வீடு' என்பது முகவரி தான்; அடையாளம் தான்.ஆனால் ஒன்றை இழப்பதால் தானே அடுத்ததைப் பெற முடியும்? வீடு கட்டியவனுக்கு ஒரு வீடென்றால் தங்களை மாதிரி வீட்டைத் துறந்தவர்களுக்கு எத்துணை வீடுகள்!? கண்ணீர் வேண்டாம்; கவலை வேண்டாம்.தங்களைச் சேர்ந்தவர்களும் கூடத் தங்கள் நினைவோடு தான் இருக்கிறார்கள். இப்போதைக்குத் தங்களின் வார்த்தைகளில் பணியிடத்தை வீடாகப் பாவிக்க வேண்டும்.அது தங்களுக்குப் பெரிய காரியமா என்ன? அழகான பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete