Tuesday, July 21, 2015

கையை நீட்டி

இன்று நாம் திருப்பலியில் வாசித்த முதல் வாசகத்தில் யாவே இறைவன் மோசேயை நோக்கி, 'கையை கடல் மேல் நீட்டு!' என்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் பக்கம் 'கையை நீட்டி', 'இவர்களே என் தாயும், என் சகோதரர்களும்' என்கிறார்.

பெரியவர்களிடம் பேசும்போது கையை நீட்டிப் பேசக் கூடாது என்பார்கள்.

ஏன்?

கையை நீட்டுதல் என்பது அதிகாரத்தின் அடையாளம். ஆக, பெரியவர்களை நோக்கி நாம் கைகளை நீட்டும்போது அவர்கள் மேல் அதிகாரம் கொண்டவர்களாக ஆகிவிடுகிறோம்.

நம்ம ஊருல ஒரு டீச்சர் மாணவனை அடித்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். மாணவனின் தாய் கோபப்பட்டு தெருவில் சத்தமிட்டுக் கொண்டு வரும்போது என்ன சொல்வார்?

'ஏன்டி! உனக்கு எவ்வளவு தைரியம்னா என் புள்ளைமேல கையை நீட்டுவ!'

மோசே கடலின் மேல் கையை நீட்டியவுடன், கடல் கட்டுப்படுகிறது. உலர்ந்த தரை உண்டாகிறது.

இயேசு தன் சீடர்கள் தன்னவர்கள் என நினைத்ததால் அவர்களை நோக்கி தன் கையை நீட்ட அவரால் முடிகிறது.

இன்றும் நாம் கையை நீட்டத்தான் செய்கிறோம்.

எப்போது?

நம்மை உரசி ஓவர்டேக் செய்து செல்லும் ஆட்டோக்காரனை முறைத்து, கெட்ட வார்த்தை சொல்லிக் கொண்டு!

அல்லது

வீட்டில் ரிமோட் கண்ட்ரோலை வைத்துக்கொண்டு 'கனிமொழி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்' என்ற செய்தியிலிருந்து 'ரெட்டை வால் குருவி'க்கு மாறும்போது!

அல்லது

இனி பட்டன்களே தேவையில்லை, எல்லாம் 'டச்'தான் என நாம் அப்டேட் செய்த புதிய செல்ஃபோனின் கொரில்லா கிளாஸ் திரையை நோக்கி!

அல்லது

'ஆண்ட்டி! எனக்கு இன்று பிறந்தநாள்! அங்க்கிள்! நான் இன்று காலேஜ் போறேன்!' என்று நம் முன் வந்து நிற்கும் நம் நண்பர்களின் குழந்தைகளை ஆசீர்வதிக்க!

அல்லது

கட்டியணைக்க,

அல்லது

திருட

அல்லது

தேட

அல்லது

அடிக்க

என நாம் கைகளை நீட்டிக் கொண்டே இருக்கின்றோம்.

கைகளை நீட்டுவதால் சிலவற்றில் அதிகாரம் பெறுகிறோம்.

அதிகாரம் இருப்பதால் சிலவற்றில் கையை நீட்டுகிறோம்.


1 comment:

  1. கைகளை நீட்டுவதால் பெறுகிறோமா....இல்லைஅதிகாரம் இருப்பதால் கையை நீட்டுகிறோமா ....தெரியவில்லை.என்னைப் பொறுத்தவரை சில பல காரணங்களுக்காக கண்களில் நீர்மல்க என்னிடம் வரும் என் மாணாக்கர்களை ஆசுவாசப்படுத்த அவர்களின் தோளில் கை போட்டுப் பேசுவது மிகப் பிடித்தமான விஷயம்.கண்டிப்பாக இம்மாதிரி சமயங்களில் இயேசு என்னையும் கூடத் தன் தாயாகவும், சகோதரியாகவும் நேசிப்பார் என நம்புகிறேன்.உடம்பு சிலிர்க்கிறது.இப்படியொரு அழகான எண்ண ஓட்டத்திற்குக் காரணமான தந்தைக்கு என் 'நன்றி!'....வாழ்த்துக்கள்!!

    ReplyDelete