Tuesday, July 7, 2015

மார்த்தா - மரியாள்

புனித நாடுகளுக்குச் சென்ற போது என்னை அதிகமாகக் கவர்ந்த இடம் பெத்தானியாவில் உள்ள மார்த்தா - மரியாள் வீடு. இதுதான் அவர்களது வீடா, இங்குதான் இயேசு வந்தாரா என்பதெல்லாம் நிரூபிக்க முடியாதது. ஆனால், இந்த இல்லத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தால் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை.

மார்த்தா - மரியாள் என்ற இரண்டு நபர்கள் யார் என்ற கேள்விக்கும் முழுமையான பதில் இல்லை. குறிப்பாக இந்த மரியாள் யார்? இவர்தான் மகதலா மரியாளா? இவர்தான் விபச்சாரத்தில் பிடிபட்டவரா? அல்லது இவர் வேறு மரியாவா?

காரவாஜோ அவர்கள் மார்த்தாவின் சகோதரி மரியாளும், மகதலா மரியாளும் ஒன்றே என நினைத்து, அதன் பின்புலத்தில் வரைந்ததே மார்த்தா - மரியாள் ஓவியம்.

இதில் மரியாள் தன் இடது கையை கண்ணாடி ஒன்றில் வைத்துக் கொண்டும், வலது கையில் ஒரு சிறிய மலரைப் பிடித்துக் கொண்டும் இருப்பது போல இருக்கும். அவரின் முன் இருக்கும் மேசையில் இரண்டு, மூன்று இடங்களில் பற்கள் விழுந்த ஒரு சீப்பும், பவுடர் அடிக்கும் பஞ்சும் இருக்கும். ஆக, தன்னை அடுத்தவர்கள் பார்க்க வேண்டும், தன்னிடம் வரவேண்டும் என்று பாலியல் தொழில் செய்யும் மகதலா தன் உடல் பராமரிப்பில் கவனமாக இருந்தார் எனவும், அவரிடம் வருகின்ற அவரது சகோதரி மார்த்தா அவரை மனமாற்றம் செய்கிறார் என்றும் சொல்கிறது இந்தப் படம்.

இதே பின்புலத்தில் மார்த்தா - மரியாளின் கதையாடலைத் தொடர்ந்தால் மரியாளின் செயல்பாடு இன்னும் அர்த்தமுள்ளதாகிறது. தன்னையே மையப்படுத்தியிருந்த இந்த மரியாள்தான் இயேசு வரும்போது அவரின் காலடிகளில் அமரும் அளவுக்கு மாற்றம் பெறுகிறார். ஆக, தன் முகத்தை மட்டுமே கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்த மரியாள், தன் முகத்தை இயேசுவில் பார்ப்பதே அவரின் மனமாற்றம்.


1 comment:

  1. இந்த ' மார்த்தா- மரியா' கதையை வாசிக்கையில் இதுவரை எனக்கு மார்த்தா மீது மரியாதையும் மரியாள் மீது கோபமும்..காரணம் விருந்தினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கும் போது அவருக்கு செய்யும் பணிவிடையே அவர் பேச்சைக்கேட்பதைவிட சிறந்தது என்பது என் எண்ணம்.ஆனால் இன்று காரவாஜோ ஓவியத்திற்கு தந்தை கொடுத்துள்ள விளக்கம் என்னை வியக்க வைக்கிறது.இயேசுவின் காலடியில் அமர்ந்து அவரின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மரியா ஒரு காலத்தில் பாலியல் தொழில் செய்தவர் என்று.இயேசுவின் கண்ணடி பட்டால் கல்லும் கூடக் கனியும் எனில் மரியா எம்மாத்திரம்??!!

    ReplyDelete