Monday, July 13, 2015

முன்பின் அறிந்திராத...

'அந்நாள்களில், யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.' (விடுதலைப் பயணம் 1:8)

'அவரை எனக்கு முன்னப்-பின்ன தெரியாது ... நான் எப்படி அவர்கிட்ட போய்...' இந்த மாதிரி நாமே பேசியிருப்போம். அல்லது மற்றவர் பேசக் கேட்டிருப்போம்.

முன்பின் அறிந்திருத்தல் என்பது விவேக் காமெடியில் வருவது போல, ஒருவரின் உடலின் முன்னும், பின்னும் அறிந்திருப்பது அல்ல.

விவிலியத்தின் முதல் ஏற்பாட்டில் ஒருவர் மற்றவரை புதிதாக சந்திக்கும்போது என்ன கேட்டுக்கொள்வார்கள் தெரியுமா?

'எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்கிறாய்?'

இந்தக் கேள்வியை வானதூதர் ஆகாரிடம் கேட்கின்றார் (தொநூ 16:8), நகர வாயிலில் இருந்தவர்களிடம் வயல் வெளியிலிருந்து திரும்பும் முதியவர் கேட்கிறார் (நீத 19:17).

அதாவது, உன் இறந்தகாலம் என்ன? உன் எதிர்காலம் என்ன?

அல்லது நீ கடந்து வந்த பாதை என்ன? நீ செல்லப் போகும் பாதை என்ன?

ஆக, 'முன்' என்பது ஒருவரின் எதிர்காலம். 'பின்' என்பது ஒருவரின் இறந்தகாலம்.

நமக்கு இன்று யாரெல்லாம் தெரியும் என்று ஒரு லிஸ்ட் போடுவோம்.

ஒரு சிலரின் முன்னும் தெரியும், பின்னும் தெரியும் நமக்கு.

மற்ற சிலரின் முன் மட்டும்தான் தெரியும் பின் தெரியாது.

மற்ற சிலரின் பின் மட்டும்தான் தெரியும். முன் தெரியாது.

இந்த இரண்டுமே தெரியாதவர்கள்தாம் நாம் சந்திக்கும் அந்நியர்கள். அந்நியர்கள் ஒரு மெட்ரோவில் ஏறுவதுபோல ஒரு நிறுத்தத்தில் ஏறி, மறு நிறுத்தத்தில் இறங்கிவிட்டால் நமக்கு பயம் இல்லை. ஆனால், அவர் நம்முடன் நடக்கத் தொடங்குகிறார் என்றால் நம்மை ஒரு பயம் தொற்றிக்கொள்கிறது.

'அறியாதவைகளின் பயம்'தான் (fear of the unknown) மனித மனச்சோர்வுக்கு மிக முக்கியமான காரணம் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

நேற்று ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் பெயர் அல்மா. அவர் ஒரு வயதான பாட்டியின் உதவியாளராக இருந்தார். அந்த பாட்டி திடீரென இறந்து போனார். இப்போது இவராக இன்னொரு வேலையும் தேட வேண்டிய கட்டாயம். தேடினார். வேலையும் கிடைத்தது. 'இந்தப் பாட்டி வீட்டில் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். 'அவரை ஏற்கனவே தெரியுமா?' என்றேன். 'இல்லை' என்றார்.

'பின் எப்படி வேலை பார்க்க முடிகிறது?' என்று கேட்டேன்.

'பொதுவானவைகளில் தொடங்க வேண்டும் ... பின் எல்லாம் பழகிப் போகும்.' என்றார். தொடர்ந்தார். 'அவர் பணிவிடை பெறுபவர். நான் பணிவிடை புரிபவர். எனக்கு சில கடமைகள் உண்டு. சில உரிமைகள் உண்டு. அவருக்கும் என்மேல் சில உரிமைகள் உண்டு. சில கடமைகள் உண்டு. இந்த இரண்டில் தொடங்கினால் பின் படிப்படியாக என் உள்ளம் அவருக்குத் தெரியும். அவரின் உள்ளம் எனக்குத் தெரியும். அவ்வளவுதான், முன்பின் தெரியாதவரும் நமக்கு நெருக்கமானவராகிவிடுவார்.'

ஒரு பங்குத்தளத்திற்கு புதிய பங்குத்தந்தை வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் யாரையும் முன்பின் தெரியாது. ஆனால், ஐந்து வருடங்கள் கழித்து அவர் பணிமாற்றம் செய்யப்படும்போது, மக்கள் கண்ணீர்விட்டு பிரியாவிடை கொடுக்கின்றனர். எப்படி? முன்பின் தெரியாதவர் எப்படி நெருக்கமானார்? பொதுவானவைகளில் தொடங்குவதால்தானே.

அல்மாவின் மேலாண்மை தத்துவம் மிகப்பெரியது. ஹார்வர்டின் ஒட்டுமொத்த செமஸ்டரையும் ஓரிரு நிமிடங்களில் சுருக்கி விட்டார்.

யோசேப்பை அறிந்திராத பாரவோன் மன்னன் இஸ்ராயேல் மக்களின் மேல் உள்ள உரிமைகளையும், கடமைகளையும் மறந்தான். அவர்களின் உரிமைகளையும், கடமைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்தான். ஆக, முன்பின் தெரியாதாவர்கள் வேண்டாதவர்கள் ஆகிப்போனார்கள்.

ஆக, இன்று முன்பின் தெரியாத ஒருவரைப் பார்க்க நேர்ந்தால், முதலில் அவருக்கும் நமக்கும் பொதுவானவைகளைப் பார்ப்போம். வேற்றுமைகளைக் பார்த்தால் பிரிவோம். ஒற்றுமையைப் பார்த்தால் இணைவோம்.


1 comment:

  1. "அறியாதவைகளின் பயம்தான் மனித மனச்சோர்வுக்கு முக்கிய காரணம்"... மிகச்சரியான உண்மை.அடுத்த நிமிடம் நமக்கு நிச்சயமில்லை எனும் போது எப்படி அன்னியர்களின் 'முன்', 'பின்' பற்றிக் கவலைப்படவோ, தெரிந்து கொள்ளவோ முடியும்? முடியவேண்டும் என்கிறார் தந்தை.ஆம்,நம்மிருப்பிடத்திற்குப் புதிதாக வரும் ஒருவரிடம் நம்மையும் அறிமுகப்படுத்தி, அவர்களையும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஒற்றுமைகளப் பாராட்டியும்,வேற்றுமைகளை மிகைப்படுத்தாமலும் இருப்பின் அந்த உறவு நெடுநாள் நீடிக்கக்கூடியதொன்றாக மலரும்.இத்தகைய குணத்தைத்தான் இயேசு மலைப்பிரசங்கத்தில் ' எளிய மனத்தோர் பேறுபெற்றோர்'...எனக் கூறினார் போலும்... யோசிக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete