Thursday, July 30, 2015

இனிய இனிகோ

இனிகோ என்ற தென்றலுக்கு

இன்று திருநாள்.

கடவுளுக்காக காயம்பட்ட வீரர்கள் மத்தியில்
காயம் பட்டதால் கடவுளைக் கண்டவர் இனிகோ

இனிகோ என்றால் வெற்றி

இந்த வெற்றி வந்தது வெற்றிடத்தில் இருந்துதான்

மன்ரோசா குகையில் அடிபட்டுக் கிடந்த
இந்த வீரருக்கு

குண்டடிபட்டது காலிலும், இதயத்திலும்

காலில் வலி

இதயத்தில் வெறுமை

என்ன செய்வது வெறுமை என்னும் இந்த நிறைவைக் கொல்ல?
கேட்கின்றார் விவிலியம்

கொடுக்கின்றார்கள் புனிதர்கள் வரலாறு

வாசிக்க வாசிக்க

அந்தப் புத்தகம் இவரை வாசிக்கும் வரை வாசிக்கின்றார்.
'அவருக்கும், இவருக்கும் இந்தப் புனிதம் சாத்தியமென்றால்,
எனக்கு ஏன் இல்லை?'

புத்தகத்தை மூடிய பின்னும் தொடர்ந்து வாசிக்கின்றார் தன் எண்ணங்களை.
உறுதி எடுக்கின்றார் புனித வாழ்விற்கு.
வாழ்வின் முதல் வெற்றி.

வாழ்வைப் பெற்ற வெற்றி.
மருத்துவனின் கத்தி போல் இந்த அனுபவம் வலித்தது
ஆனால் வலி போக்கியது!

இனிகோ என்றால் எளிமை.

குருவாக மாற வேண்டும் என்ற ஆசை.
இலத்தீன் படிக்க வேண்டுமே.
இவ்வளவு வயதான பிறகு எப்படி?
புறப்படுகின்றார் ஒரு மாணவனாக.
சின்னஞ்சிறு பிள்ளைகளோடு அமர்ந்து படித்தது இலத்தீன்
ஆனால் கற்றுக் கொடுத்தது எளிமை

நோக்கம் தெளிவாக இருப்பவனுக்கு

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டா?

இனிகோ என்றால் நெருப்பு

பற்றி எரிந்த ஒரு கனவு

திருச்சபையின் தீமைகளை அழிக்க வந்த நெருப்பு

வெறும் ஏழுபேருடன் உருவாக்கப்பட்ட சபை

இந்த நெருப்பை அணைக்க முற்பட்டனர் திருத்தந்தையர்

ஊதி அணைப்பதற்கு இனிகோ என்ன மெழுகுதிரியா?

அவன் கதிரவனல்லவா?

கோடிப்பேர் மூடி மறைத்தாலும்
ஆதவனை மறைக்க முடியுமா என்ன?

வெற்றி எளிமை நெருப்பு கனவு இனிகோ!

தனது சபையை கிறிஸ்துவுக்கு, கிறிஸ்துவுக்கு மட்டும் அர்ப்பணித்தவர்.
'எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே'
என்று தனக்கு முன்பாக இறைவனை மட்டும் வைத்துப் புறப்பட்டதுதான்

சேசு சபை என்ற ஆலமரம்

இனிகோ என்ற ஆணிவேர் வித்திட்ட இம்மரம் உலகமெங்கும் இன்று விழுதிட்டு நிற்கின்றது.
இவரின் சுவாசம் இன்று நம் சுவாசம்

இவரின் கனவு இன்று நம் கனவு

இவர் கண்கள் வழியாகத்தான் இன்று நாம் உலகம் பார்க்கின்றோம்.
இவர் கரம் பிடித்துத்தான் நாம் நடை பயின்றோம்.

காலில் அடிபட்டதால் தன்னைக் கண்டார்.
அன்றாடம் அடிபடும் மனித முகங்களில் தொடர்ந்து
இறைவனைக் காண்போம்.

இனி
 இனிகோவுக்கு அழிவில்லை.

2 comments:

  1. அழகான ஆனால் அழுத்தமான பதிவு. தந்தை ஒவ்வொரு முறையும் 'இனிகோ' எனும் பெயரைக் குறிப்பிடுகையில் வாயில் ஒரு இனிப்பு உணர்வு தட்டுப்படுவது உண்மை.'எல்லாம் இறைவனின் மகிமைக்கே' என்ற விருது வாக்கோடு தன் விழுதுகளை வேர் வரை விட்ட இந்த ஆலமரத்தின் நிழலில் இன்று கோடான கோடி மக்கள் இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் உண்மை." நோக்கம் தெளிவாக இருப்பவனுக்கு மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் ஒரு பொருட்டாக?"... மனிதனாக வாழ நினைக்கும் யாரும் ஒத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள். காலில் பட்ட அடி வழியே தன்னையே கண்ட இனிகோ மாதிரி அன்றாடம் அடிபடும் மனித முகங்களில் இறைவனைக் காண்போம்....தந்தையின் சாரம் மிக்க, யோசிக்கத் தூண்டும் வார்த்தைகளுக்கு நன்றி! திருவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous7/31/2015

    Dear Yesu, How are you? As i have been reading your blogs through email i was not able to write here. Today's write up is so good reflective and prayerful. May God bless us.

    ReplyDelete