Tuesday, June 30, 2015

மூன்று வகை விதிமுறைகள்

'ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்! அது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது!' என்று கடந்த சனிக்கிழமை நம்ம அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. அமெரிக்க சொன்னத நீங்க ஏன் தம்பி எழுதுறீங்கனு கேட்குறீங்களா? அமெரிக்காவுல ஒருத்தர் செத்தா உலகமே அழணும், அங்கே ஒருவருக்கு முதுகில் அரித்தால் உலகமே சொரியணும், அவங்க என்ன சொன்னாலும் நாமலும் திரும்ப சொல்லணும், அவங்க என்ன சாப்பிடுறாங்களோ அத நாமும் சாப்பிடணும். ஏன்னா, அது அமெரிக்கா!

(மற்றொரு குறுஞ்செய்தி: ஐரோப்பிய ஒன்றியம்-கிரேக்கம் பிரச்சினையை தீர்க்க உலகத்தின் கட்டப்பஞ்சாயத்துக்காரர் களமிறங்கியிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி!)

அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது பற்றி பலர் பல கேள்விகளை எழுப்புகின்றனர்:

ஓரினச்சேர்க்கை திருமணம் முடித்தவர்கள் என்ன 'செய்வார்கள்'? என்பதிலிருந்து, 'இது தவறா, சரியா?' என்பது வரை கேள்விகள் நீள்கின்றன.

இந்த உலகில் நாம் மூன்று வகை விதிமுறைகளால் (three principles) கட்டப்பட்டிருக்கிறோம் (இதற்கு மேலும் இருக்கலாம்!)

ஒன்று. Good and Bad. நன்மை-தீமை. நன்மையானதை நாட வேண்டும். தீமையானதை விலக்க வேண்டும். உதாரணத்திற்கு எனக்கு உடல் பருமன் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். காலையில் எழுந்து தினமும் 1 மணிநேரம் ஓட வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார். ஆக, காலை 5 மணிக்கு எழுந்து 1 மணிநேரம் ஓடுவது எனக்கு நன்மையானது. ஓடாமல் ஓய்ந்து தூங்குவது தீமையானது. அல்லது பேருந்தில் செல்கிறேன். என்னிடம் 10 ரூபாய் இருக்கிறது. ஒருவர் ரொம்ப பசிக்குது என்று என்னிடம் பிச்சை கேட்டு வருகிறார். அவரிடம் 10 ரூபாய் கொடுத்து அவரின் பசியைப் போக்குவது நன்மையானது. அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தீமையானது.

இரண்டு. Pleasure and Pain.  இன்பம்-துன்பம். மேற்காணும் முதல் விதிக்கு எதிராக இருப்பது இரண்டாவது. அதாவது, இன்பமானதை நாடுவது, துன்பமானதைத் தள்ளிவிடுவது. காலையில் 5 மணிக்கு எழுவதற்கு பதிலாக இன்னும் ஒருமணிநேரம் தூங்குவது இன்பமானது. ஆக, மூளை துன்பத்தை விலக்கி இன்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது என்னிடமிருக்கும் 10 ரூபாயை எடுத்து நான் நீட்டப்போகும் வேளையில் என் மூளை என்ன சொல்கிறது? ஏன்டா, ஏன்? நல்லாத்தான போய்கிட்டு இருக்கு! உள்ள வை அந்த 10 ரூபாய! அது இருந்தா இறங்குனவுடனே ஒரு குச்சி ஐஸ் வாங்கலாம்ல. பெரிய தர்ம பிரபு. நீட்டுறாரு! இப்படி சொல்லி, என்னை இரண்டாம் விதிக்குள் இழுத்துவிடுகிறது.

மூன்றாவது விதி. Legal and Illegal - சட்டரீதியானது - சட்டத்திற்கு புறம்பானது. இந்த விதியின்படி சட்டத்திற்கு உட்பட்டதை செய்யவேண்டும். சட்டத்திற்குப் புறம்பானதை தவிர்க்க வேண்டும்.

இப்ப ஓரினச்சேர்க்கை திருமணத்தை எடுப்போம்!

மூன்றாம் விதிப்படி இது இப்பொழுது சட்டரீதியானது.

இரண்டாம் விதிப்படி இது இன்பத்தை நாடுவது.

ஆனால், முதல் விதிக்குள் வரும்போதுதான் பிரச்சினை வருகிறது. இது நல்லதா, கெட்டதா?

நாம் எங்கிருந்து இதைப் பார்க்கிறோம் என்பதில்தான் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறது. ஆக, ஒரு சின்ன விஷயத்திலேயே நமக்கு நல்லது, கெட்டது பார்ப்பதில் இவ்வளவு குழப்பம் இருக்கிறது. அப்படின்னா, இந்த உலகத்தில் எல்லாருக்கும் பொதுவான நல்லது அப்படி என்று எதுவும் இல்லையா?

இருக்கு...! என்னது! அதான் அமெரிக்காவே சொல்லிடுச்சே! அப்புறம் என்ன?

நாம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா?

இன்று நடந்த மூன்று நிகழ்வுகளில் என் மனம் ரொம்பவே பதிந்துவிட்டது. அவைகள் இதோ!

1. இன்று தூய பேதுரு, பவுல் திருநாள். இன்றைய நாளில்தான் உரோமை கத்தோலிக்கத் திருஅவையில் புதிதாக பேராயர்களாக நியமனம் பெற்றவர்கள் திருத்தந்தையிடமிருந்து 'பாலியம்' (Pallium) (ஆட்டு உரோமத்தால் நெய்யப்பட்ட பட்டை - உரோமை, உரோமம் நல்லா இருக்குல!) அணிவிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஆண்டு முதல் திருத்தந்தை இதை அணிவிப்பதில்லை என்பதால், அவைகளைப் புனிதப்படுத்தும் நிகழ்வும், பேராயர்கள் தங்கள் கீழ்ப்படிதலை திருத்தந்தைக்கு தரும் நிகழ்வும் (இந்தக் கீழ்ப்படிதலை கடவுளுக்குக் கூட அருட்பணியாளர்கள் கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு ஸ்ட்ரிக்டான கீழ்ப்படிதலை உரோம் தன் பேராயர்களிடம் எதிர்பார்க்கிறது. இந்த பயம் இருந்தா சரி!) நடைபெற்றது. திருத்தந்தை அவர்கள் திருப்பலி நிறைவேற்றும் பீடத்திற்குப் பின்புறம்தான் அமர்வதற்கு இடம் கிடைத்தது. ஆனால், இந்தப் பின்புறம்தான் நிறைய முக்கியமான விடயங்கள் இருக்கின்றன என்பதை நான் கண்டுபிடித்தேன். வழக்கமாக கேமராக்களில் திருத்தந்தையும், திருத்தந்தையின் உடன் இருப்பவர்களும், அவர்களின் ஆடைகளும், அவர்கள் பயன்படுத்தும் பொன்நிற பாத்திரங்களும்தான் மின்னுகின்றன. ஆனால், இந்த மின்னுதலுக்குப் பின், அல்லது இந்த ஆடம்பரத்திற்குப் பின் நிறைய முகங்கள் தங்களை மறைத்துக்கொள்கின்றன. அந்த மறைந்த முகங்கள்தான் இவ்வளவு ஆடம்பரத்தையும் திருத்தந்தைக்கும், அவர் உடன்  இருப்பவர்களுக்கும் சாத்தியமாக்குகின்றன. அந்த முகங்கள் யாருடையவை? பீடத்தைத் துடைத்து ஒழுங்குபடுத்தும் ஒரு முகங்களில் வரிகள் கொண்ட ஒரு வயதான அருட்சகோதரி, மெழுகுதிரி ஏற்றும் ஒரு வயதான அருட்சகோதரர், தூபத்தின் புகையை உள்வாங்கிக்கொண்டு அதைப் பக்குவமாக ஊதி, சரியான புகையைக் கொடுக்க அதை தயார்படுத்தும் அவரின் உதவியாளர், திருப்பலியின் இடையில் மணியடிக்கும் அவரின் மற்றொரு உதவியாளர், புன்முறுவலோடு இவற்றை மேற்பார்வை செய்யும் ஒரு தாத்தா சாமி, மின்சாரம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின்சாரமாற்றியின் அருகில் காத்திருக்கும் ஒரு அண்ணன், திருத்தந்தைக்கு ஒருவேளை ஏதாவது ஆகிவிட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஒரு ஸ்ட்ரெச்சர், உதவியாளர், மருத்துவர், திருத்தந்தையின் இரத்தவகை பாட்டிலை ஏந்திய தாதியர், தண்ணீர் பாட்டில், ஆடியோ-வீடியோ கண்காணிப்பாளர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, மற்றும் இன்னும் பலர். ஆக, பெரிய ஆடம்பரத்திற்கு முன் மறைந்திருக்கும் எளிய முகங்கள் வெளிச்சத்திற்கும், கேமராவிற்கு முன்னும் வருவதில்லை. ஆனால், இவர்கள் இருளில் இருப்பதால்தான் மற்றவர்கள் ஒளியில் மின்ன முடிகிறது.

2. இன்று சென்னையில் மெட்ரோ ரயில் தன் கன்னிப்பயணத்தைத் தொடங்கியது. 'வெளிநாட்டு ரயில் போல இருக்கு!', 'ஏஸி, ஜில்லுனு இருக்கு!', 'வானத்துல ஒரு வெள்ளைக் காக்கா தலைகீழா பறப்பது போல இருக்கு!' என்று நிறைய சிந்தனைத் தூறல்கள் மின்னித் தெறிக்கின்றன. ஆனால், இந்த மெட்ரோவுக்கு நாம் கொடுத்த விலை ஏராளம். பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களைக் கொடுத்துவிட்டு புலம்பெயர்ந்துள்ளனர். ஒரு சிலர் நீதி கேட்டு நீதிமன்றங்களின் படிகளில் ஏறியுள்ளனர். இந்தத் திட்ட வேலைகளுக்கு மாற்றி விடப்பட்ட போக்குவரத்து, தூசி, மழை, மேடுபள்ளங்கள், விபத்து, பாலம் இடிந்து விபத்து, கம்பங்கள் விழுந்து விபத்து என நிறைய உயிர்கள், உறவுகள், உடைமைகளின் விலைதான் இன்று ஜொலிக்கும் மெட்ரோ. இதை ஓட்டும் பாக்கியம் பெற்றது ப்ரீத்தி என்னும் 28 வயது இளவல். மெட்ரோவின் கலர் அடர்நீலம். நல்ல வேளை - ஜெயாவுக்கு பிடிக்கும் என்று பச்சை அடிக்காமல் விட்டார்கள். அப்படி அவர்கள் பச்சை அடித்தால், நம்ம திமுக க்ரூப் மஞ்சள் அடிக்கும். (நம்ம ஊர் மினி பஸ் மற்றும் சாலையோர பெயர்ப்பலகைகளுக்கு அப்படித்தான் நடந்தது!) 'நாங்கதான் தொடங்குனோம்!' என கருணாநிதி, 'நாங்கதான் முடித்தோம்!' என ஜெயா வீரப்பேச்சு. 'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!' 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!' என்று கீதையின் கண்ணன்போல எடுத்துக்கொள்வோம். இன்று நாம் தலைநிமிர்ந்து இந்த மெட்ரோவைப் பார்க்கும்போதும், தலைகுனிந்து உள்ளே ஏறி பயணம் செய்யும் போதும், இந்த இழப்புகளை ஒரு நிமிடம் நன்றியோடு நினைத்துப் பார்க்கலாமே!

3. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு நாடான கிரேக்கம் இன்று திவாலாகிவிட்டது. அது உலக வங்கிக்குத் தர வேண்டிய கடனை கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏறக்குறைய கைகழுவி விட்டது (இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை!). சில ஐரோப்பிய நாடுகள் கிரேக்கத்திற்கு உதவி செய்ய விழைகின்றன. மற்ற நாடுகள் முட்டுக்கட்டை போடுகின்றன. 'நானாவா வந்தேன்! நீதான கூப்பிட்ட!' என்று எதிர்கேள்வி கேட்கிறது கிரேக்கம். உலகத்திற்கே 'ரிபப்ளிக்' தந்து அதன்வழியாக புதிய அரசியலுக்கு வித்திட்ட பிளேட்டோ பிறந்த ஊரில், சில அரசியல்வாதிகளின் சுயநலத்தால், ஊழலால், தவறான நிர்வாகத்தால் இன்று முடங்கிக் கிடக்கிறது கிரேக்கம். உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லிக்கொடுத்தவர்கள் இன்று தன்னிடம் கற்றவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். இதில் பாதிக்கப்படப்போவது அன்றாடங்காய்ச்சிகளும், அடித்தள மக்களும்தான். அரசியல்வாதிகள் வேறு நாடுகளுக்குள் குடிபெயர்ந்து கொள்வார்கள். யூரோ நாணயமும் அவர்களிடமிருந்து பறிக்கப்படும் அபாயம். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம் வேடிக்கைதான்' என கண்ணதாசன் சொல்வது போல, எல்லா நாடுகளும் இன்று கிரேக்கத்தை வேடிக்கைதான் பார்க்கின்றன. அவர்களுக்காக செபம் செய்வோம் என்கிறார் திருத்தந்தை (ஆனால், 'முத்தமிட்டு எப்படி பசியாற முடியாதோ, அப்படித்தான் செபமாலை சொல்லி பசியாற முடியாது!').

இறுதியாக, பேதுருவோடு முடிப்போம்.

'மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்?' - இதுதான் இயேசுவின் கேள்வி.

சீடர்களும் பதில்களைச் சொல்லுகின்றனர்.

'நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?' - மீண்டும் கேட்கிறார் இயேசு.

'நீர் மெசியா - வாழும் கடவுளின் மகன்!' என்கிறார் சீமோன் பேதுரு.

'நீ பேறுபெற்றவன். தந்தை உனக்கு அறிவிக்காவிடில் இது உனக்குத் தெரியாது....' என இயேசு சீமோனை வாழ்த்துகின்றார்.

ஆக, எப்படி சீடர்களின் பதில்மொழி 'ஒரிஜினல்' இல்லையோ, சீமோனின் பதிலும் 'ஒரிஜினல்' இல்லை (ஏன்னா! கடவுள்தானே சீமோனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்). அப்படியென்றால் இயேசு ஏன் சீமோனை மட்டும் வாழ்த்த வேண்டும்?

அங்கதான் இருக்கிறது டுவிஸ்ட்.

'நாம் யாருடைய வார்த்தையை அல்லது குரலை கேட்க வேண்டும்?' - மக்களின் குரலையா, கடவுளின் குரலையா?

தன்னைச் சுற்றி எவ்வளவோ சத்தங்கள் கேட்டாலும், சீமோன் தன் உள்ளத்தில் கேட்கும் கடவுளின் சத்தத்தை மட்டும்தான் கேட்கிறார். இன்று நம்மைச் சுற்றி நடக்கும் திருப்பலிகள், நாம் கேட்கும் மறையுரைகள், வாசிக்கும் புத்தகங்கள், மறைக்கல்வி எல்லாமே மற்றவர்கள் போடும் சத்தங்கள்தான். உண்மையான விசுவாச அறிக்கை நம் உள்ளத்தில் கேட்கும் கடவுளின் குரலுக்கு செவிகொடுத்தால்தான் நாம் செய்ய முடியும்.

நாம் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பது நாம் யாருக்கு செவிகொடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.


Monday, June 29, 2015

என்னைத் தொட்டால்

இன்று மீண்டும் யாயிர் மற்றும் அந்தப் பெண் பற்றி எழுதுகிறேன்.

நற்செய்தியாளர்கள் இயேசுவின் வாழ்வை ஒரு டைரி போல தேதி போட்டு எழுதவில்லை. இயேசு இறந்து, உயிர்த்த பல ஆண்டுகளுக்குப் பின்தான் எழுதுகின்றனர். அப்படி எழுதும்போது நிறைய நிகழ்வுகளை அவர்கள் மறந்திருக்கவோ, அல்லது மாற்றி எழுதுவோ வாய்ப்பிருக்கிறது.

அவர்கள் என்ன எழுதினாலும், எழுதாவிட்டாலும், அவர்கள் எழுதியவைகளின் நோக்கம் என்னவென்றால், 'இயேசுவில் மற்றவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்!'

இரத்தப்போக்குடைய பெண் இயேசுவைத் தொடுவதற்கும், தோமையார் இயேசுவின் கைகளில் விரலை இட்டுப் பார்ப்பதற்கும் ஒரு தொடர்பு இருக்கலாமோ எனத் தோன்றியது எனக்கு.

அதாவது, தோமையார் நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே இருக்கிறது. மற்றவர்கள் இரத்தப்போக்குடைய பெண் பற்றி மட்டும் எழுதுகின்றனர்.

இயேசுவைத் தொடுவதால் நலம் பெறுகின்றார் பெண். இங்கே நலம் என்பதற்கு, 'சோசவோ' என்னும் கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பொருள் 'மீட்பு'. இயேசு. 'உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று' என்று சொல்லுமிடத்திலும், 'மீட்பு' என்னும் வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, என்னைத் தொட்டால் மட்டும் மீட்பு என நினைக்காதீர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரும் மக்களும், என்னைத் தொடாமல் அல்லது பார்க்காமல் போனாலும், என்னை நம்பினால் அவர்களுக்கு மீட்பு உண்டு என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

ஆக, இன்று நாம் தொடுவதால் மீட்பு பெறுவதில்லை. மாறாக, நம்பிக்கையால் பெறுகிறோம்.

தன்னம்பிக்கை, பிறர்மேல் நம்பிக்கை, இறைநம்பிக்கை என இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.


Sunday, June 28, 2015

என் அவசரம் அவருக்கு அவசரமல்ல!

யாயிர் ஒரு செபக்கூடத் தலைவர். அவர் தான் இவ்வுலகில் மிகவும் சிறந்ததாய் கருதிய படைப்பாகிய தன் பன்னிரண்டு வயது மகள் திடீரென காய்ச்சலால் வாடியது அவருக்கு மிகவும் கவலை தந்தது. 'எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் ஏதென்ஸிலிருந்து வந்திருக்கிறார், அவரை வீட்டிற்கு அழைத்து வரலாமா?' எனக் கேட்கிறார் அவரின் நண்பர். யாயிரின் மனைவி தான் நாசரேத்தூர் இயேசு என்ற ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டதாகவும், அவரை அழைத்து வரலாம் எனவும் ஆலோசனை தருகிறார். 'நானும்கூட அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்!' என்று சொன்னவர் உடனே குதிரை ஏறி, இயேசுவைத் தேடி விரைகின்றார். 'நீ அடிக்கடி வேலைக்காரர்களை என்னிடம் அனுப்பி நம் மகளின் உடல்நலம் பற்றி எனக்குச் சொல்!' என்று தன் மனைவியிடம் சொல்லிவிட்டு, வேகமாக குதிரை ஏறுகின்றார். அவரின் உள்ளம் தன் மகளுக்கும், நாசசேரத்தூர் இயேசுவுக்கும் இடையே ஊசலாடுகின்றது. 'அவரை எங்கே தேடுவது?' 'கூப்பிட்டவுடன் வருவாரா?' 'அவரை எப்படி அழைத்துச் செல்வது?' 'ஏன் மகளுக்கு திடீரென்று காய்ச்சல் கூடிற்று?' 'இந்த காற்று ஒத்துக்கொள்ளவில்லையோ?' என்று மனம் சிந்தனை செய்துகொண்டே இருக்கின்றது. யூதேயாவிலிருந்து கலிலேயா எவ்வளவு தூரம் என பார்த்துக்கொண்டே குதிரையை வேகமாக விரட்டுகின்றார். 'அதோ கலிலேயாக் கடல்!' 'கலிலேயாவை நெருங்கிவிட்டோம்!' என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கதிரவன் கடலில் மறைந்து மூழ்குகிறான். அருகிலிருக்கும் சத்திரத்தில் இடம் கேட்டு இரவைக் கழிக்க உள்ளே நுழைகிறார்.

'உங்க ஏரியாவுல இயேசு என்று ஒருத்தர் இருக்காரே! அவர் வீடு எங்க இருக்கு?' என சத்திரக்காரனிடம் பேச்சுக்கொடுத்து பார்க்கின்றார். 'அவருக்கு வீடு, வாசல் எதுவும் கிடையாது! எங்கயாவது மலை, மரத்தடி, கடற்கரை, அவருடைய நண்பர்களின் வீடு என்று பொழுதைக் கழிப்பார்! இன்றைக்கு சாயங்காலம் கூட இங்கே பெரிய கூட்டம்! ஐந்து அப்பங்களை வந்திருந்த எல்லாத்துக்கும் பகிர்ந்து கொடுத்தார். ஆனா, சாயங்காலம் படகேறி அடுத்த கரைக்கு போய்ட்டாரே!' என தனக்குத் தெரிந்ததையும், தெரியாததையும் அவசரமாகச் சொல்லி முடித்துவிட்டு தன் சத்திரத்தின் கணக்குப் புத்தகத்தில் தன்னைப் புதைத்துக்கொள்கிறான் சத்திரக்காரன். இரவு மிக நீண்டதாக இருக்கின்றது யாயிருக்கு. 'விடியும்முன் பரிசல் ஒன்றைப் பிடித்து அக்கரைக்குச் சென்றுவிட வேண்டும். குதிரையை இங்கேயே விட்டுவிடுவோம். வேலைக்காரரை அனுப்பி அப்புறம் எடுத்துக்கொள்வோம்.' என்று முடிவெடுத்தவாறு தூங்கிப் போகிறார் யாயிர்.

மறுகரைக்குப் போய் ஆயிற்று. காலையிலேயே கரையில் கூட்டம். 'என்ன கூட்டம்?' என்று கேட்க, 'நாசரேத்தூர் இயேசு வருகிறார். அதோ அது அவரின் படகுதான்!' என்று தூரத்தில் ஒன்றை அடையாளம் காட்டுகிறான் கூட்டத்தில் ஒருவன். 'அவர் வந்தவுடன் என்ன கேட்பது? யாரிடமாவது சிபாரிசு கடிதம் கொண்டுவந்திருக்கலாமோ? 'உன்னைத் தெரியாது' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?' இவன் மனம் கேள்விகள் கேட்டுக்கொண்டேயிருக்க, அவனின் தோளில் ஒரு கை. உற்றுப்பார்த்தால் இயேசு. தன்னையறியாமல் மண்டியிடுகிறார் யாயிர். 'என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்!' என்று மன்றாடுகிறார். 'வாரும்! போகலாம்!' புன்னகைக்கிறார் இயேசு. ஏதோ மந்திரத்தால் கட்டப்பட்டவர் போல இயேசுவைப் பின் தொடர்கின்றார் யாயிர். 'என்னை யாருன்னே கேட்கலயா? வீடு எங்கன்னு கேட்கலயே? இவருக்கு ஒருவேளை எல்லாம் தெரியுமோ!' என்று மனதில் குழம்பிக்கொண்டே, நடையில் தெளிவாக இருக்கின்றார் யாயிர்.

'எல்லாம் நல்லபடியா நடக்குது! நாம செஞ்ச புண்ணியம்தான் இயேசுவே நம்முடன் வருகிறார்! கண்டிப்பா மகள் பிழைச்சுடுவா!' என்று நம்பிக்கை ஒளி உதித்துக்கொண்டிருக்க, அதை ஊதித் தள்ளிவிடுகிறாள் ஒரு பெண். திடீரென கூட்டத்தை கிழித்துக்கொண்டு வந்த அவள் தன்னை உரசிக்கொண்டு இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொடுகிறாள். 'யாரு இவா! இப்படி வர்றது! அன்எசுகேடட் லேடி!' என மனதுக்குள் சாடுகின்றார். நடந்து கொண்டிருக்கும் இயேசு திடீரென நிற்கின்றார்.

'என்ன ஆண்டவரே நின்னுட்டீங்க! இன்னும் நிறைய தூரம் போகணும். சீக்கிரம் நடங்க. நீங்க சும்மாவே அன்னநடை போடுறீங்க! இதுல 'ஸ்டாப்' வேறயா?' என யாயிரின் வாய் முணுமுணுக்கிறது. 'என்னைத் தொட்டது யார்?' என்கிறார் இயேசு. 'இவ்வளவு கூட்டம் இருக்கு! இதுல போய் தொட்டது யாருன்னு கேட்குறீங்களே!' என்று சிரிக்கின்றனர் சீடர்கள். யாயிருக்கு அவர்கள் அடித்த ஜோக்கிற்கு சிரிப்பு வரவில்லை. இரண்டு காரணங்கள்: ஒன்று, தன் மகளின் கவலைக்கிடமான உடல்நிலையால் மனிதருக்கு சிரிப்பு மறந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இரண்டு, யாயிருக்குத் தெரியும் இயேசுவைத் தொட்டது யாரென்று! 'சொல்லிக்கொடுத்துவிடலாமா? இதோ இவள்தான்!' என்று வாயெடுக்க, வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொள்கிறது. 'என்னிடமிருந்து பவர் வெளியேறுச்சு!' இயேசு தொடர்கிறார். 'ஐயோ! ஆண்டவரே! சீக்கிரம் நடங்க! சும்மா நின்னுகிட்டு, 'பவர் வெளியேறுச்சு! டவர் வெளியேறுச்சுனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க!' மறுபடியும் மனக்குமுறல். இயேசுவின் தாமதம் யாயிரின் இதயத்துடிப்பை கூட்டுகின்றது. இப்போது தொட்ட பெண்ணும் உண்மையை ஒத்துக்கொள்கிறாள். தனக்கு நடந்ததை சொல்கிறாள். 'இங்க பாருடி இவள்தான் தொட்டாலாம்! என்ன தைரியம் இந்தப் பொம்பளைக்கு!' என பாராட்டுவதுபோல சாடுகின்றனர் கூட்டத்தில் சில பெண்கள். 'என்ன இரத்தப்போக்குடையவள் தொட்டாலா! ஐயோ! தீட்டு! தீட்டு!' எனக் கத்துகிறது மறைநூல் படித்த கூட்டம். 'என்ன நடக்கிறது இங்க! இப்படி தாமதிக்கிறார் இயேசு!' என நினைத்த யாயிர், 'ஆண்டவரே! கொஞ்சம் சீக்கிரம் போகலாமே!' என்கிறார். அவருக்குப் பதில் தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுடன் பேசத் தொடங்குகிறார் இயேசு.

பின்னால் யாரோ தன் அங்கியை இழுப்பது போல இருக்கின்றது. 'என் அங்கிய யாருடா தொடுறது!' என திரும்பிப் பார்த்தவர் இரண்டு பரிச்சயமான முகங்களைப் பார்க்கிறார். தன் வேலைக்காரர்கள். 'என்ன பாப்பா நல்லா இருக்கா!' என்கிறார் யாயிர். 'ஐயா! பாப்பா இறந்துடுச்சு! இன்னும் போதகரை ஏன் தொந்தரவு செய்கிறீர். வாங்க! நம்ம குதிரையிலயே போயிடலாம்! சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க! ஆக வேண்டியதைச் செய்வோம்!' பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாலும், இயேசுவின் காதுகளில் வேலைக்காரர்களின் வார்த்தைகள் விழுகின்றன. யாயிரை சாந்தமாகத் தொடுகின்றார் இயேசு. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்கிறார். 'என்னய்யா பெரிய நம்பிக்கை! காலையிலயே உங்களை நான் வீட்டுக்கு கூப்பிட, நீங்களும் 'வர்றேன்'னு சொல்லிட்டு, இப்படி பொடிநடை நடந்து வந்துட்டு இருக்கீங்க! ஐயோ என் மகளோட முகத்தை இன்னும் ஒரு முறை பார்த்திருக்கலாமே! நான் வீட்டுல இருந்தாவது அவ கையப்பிடிச்சுட்டு இருந்திருப்பேனே! அந்த ஏதென்ஸ் மருத்துவரையாவது வரச் சொல்லியிருக்கலாமே! நீங்கதான் ஆண்டவரே என் மகளை கொன்னுட்டீங்க! நீங்கதான் கொன்னுட்டீங்க!' என இயேசுவைச் சாடுகின்றார் யாயிர். மௌனமாக வழிநடக்கிறார் இயேசு. இப்போ கொஞ்சம் வேகமாகவும் நடக்கிறார். யாயிரின் வீடு வருகிறது. ஒரே அமளி. அழுகை. பந்தல் வேலை நடந்து கொண்டிருக்கிறது. 'பாப்பாவுக்கு ரொம்ப நாளா உடம்பு சரியில்லையா? எப்போ இறந்துச்சு? கூட யாரு இருந்தா?' என யாரோ, யாரிடமோ விசாரித்துக் கொண்டிருந்தது இயேசுவின் காதிலும், யாயிரின் காதிலும் விழுகின்றது. உடனே இயேசு நின்றுவிடுகிறார். 'ஐயோ! மறுபடியும் நின்னுட்டாரே! நடங்க ஆண்டவரே!' என அவசரப்படுத்துகிறார் யாயிர். இப்போதும் யாயிருக்குப் பதில் சொல்லாமல் இறப்பு வீட்டிற்கு வந்தவர்களிடம் பேசத் தொடங்குகிறார் இயேசு, 'ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை. உறங்குகிறாள்!'

உடனே உரைக்கின்றது யாயிருக்கு. 'என்னது இறப்பு என்பது வெறும் உறக்கமா? அப்படின்னா என் மகளை எழுப்பிவிடலாமே!' என்று சின்னதாய் வெளிச்சம் மின்னுகிறது. இயேசுவுக்கு முன் வேகமாக தன் மகளைக் கிடத்தியிருந்த இடத்திற்கு ஓடுகின்றார். தன் ஆசை மகள் உயிரற்றுக் கிடப்பதைக் காணச் சகிக்காமல் அவளின் உடலில் தன் முகம் புதைத்து அழுகிறார். 'தலித்தாகூம்!' என்று ஒரு குரல் தூரத்தில் கேட்பது போல பக்கத்தில் கேட்டது. சிறுமியின் உடல் அசைவை தன் முகத்தில் உணர்கிறார் யாயிர்.

'என் வழி இவரின் வழி அல்ல! என் அவசரம் இவருக்கு அவசரமல்ல!' என தனக்குள் சொல்லிக்கொள்கின்றார் யாயிர்.



Saturday, June 27, 2015

வாழ்க நீ எம்மான்!

இன்று மாலை உணவு என் கல்லூரி பேராசிரியருடன்.

அவருடன் ஒரு கருத்தரங்கிற்கு வேலை செய்ததால், வேலை செய்த எல்லாருக்கும் ட்ரீட் கொடுத்தார். பேருந்து வேலைநிறுத்தம் காரணமாக நிறையப்பேர் வரமுடியவில்லை.

அவரே எல்லாவற்றையும் வாங்கி சுமந்து கொண்டு வந்தார்.

என்ன சுமை என்று இறக்கி வைக்கும்போது பார்த்தால், உணவுடன் சேர்ந்து, சாப்பிடுவதற்கான பீங்கான் தட்டுகளும், எவர்சில்வர் கரண்டிகளும், கண்ணாடி டம்ளர்களும். ஆச்சரியமாக இருந்தது.

சுமப்பதற்கு எளிதானது, கழுவத் தேவையில்லை என பிளாஸ்டிக் தட்டுகளையும், டம்ளர்களையும், கரண்டிகளையும் பயன்படுத்தி தூக்கி எறியும் கலாச்சாரத்திற்கு மாற்றாக அவர் செய்த இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்தது.

பிளாஸ்டிக் செயல்பாடு கூடாது என வாசித்த எவ்வளவோ கட்டுரைகளைவிட அவரின் இந்த ஒற்றைச்செயல் பெரிய மாற்றத்தை என்னில் விதைத்தது.

வாழ்க நீ எம்மான்!


Friday, June 26, 2015

உனக்கு நல்லதாகப் படுவதை

ஆபிராம் சாராயிடம், 'உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்' என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். (தொநூ 16:6)
(எபிரேயத்திலிருந்து இந்த மொழிபெயர்ப்பை செய்தவர்கள் சாராயை 'அவர்' என்றும், ஆகாரை 'அவள்' எனவும் குறிப்பிடுகின்றனர். ஆண்டான்-அடிமை பேதம் விவிலிய மொழிபெயர்ப்பிலும் இருப்பது தவிர்க்கப்படலாம். எபிரேய மூலத்தில் இந்த பேதம் இல்லை!)

மனைவி பேச்சை அப்படியே கேட்கிற கிளிப்பிள்ளை ஆபிராமைதான் இன்றைய இறைவாக்கு சுட்டிக்காட்டுகிறது. சாராய் தன் பணிப்பெண்ணை அனுப்பி 'இவரோடு உறவுகொள்' என்றால், உடனே உறவு கொள்கின்றார். 'இவள் வேண்டாம்' என்றால், உடனே 'சரி! உனக்கு எது நல்லதுன்னு படுதோ அதைச் செய்!' என்கிறார். விவிலியத்தில் ஆணாதிக்கம் இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த இறைவாக்கைப் படித்தால் பின்வாங்க வேண்டும்.

'தனக்கு கிடைத்திருக்கும் இவன் தன்னை விட்டு போகமாட்டான் என தெரிந்தால், பெண்கள் அவர்களைப் படுத்தும் பாடு இருக்கிறதே!' என்று புலம்புவார் டாஸ்டாய்வ்ஸ்கி (ரஷ்ய எழுத்தாளர்). அப்படித்தான் இந்த சாராயும் படுத்தியிருக்க வேண்டும்.

'நல்லதுன்னு எது படுதோ அதைச் செய்!' என ஆபிராம் சொல்ல, சாராய், பாவம் அந்தப் பணிப்பெண் ஓடும் அளவிற்கு கொடுமைப்படுத்துகின்றார். (இது கடவுளின் திட்டம் என்று சிலர் சொல்வர். வாயில்லா பூச்சியை கொடுமைப்படுத்துவதுதான் கடவுளின் திட்டமா?)

நம் கண்ணுக்கு நல்லதுன்னு படுவது அடுத்தவர்களுக்கு துன்பமாகத் தெரிகிறது!

இன்று ஒரு பாட்டியை சந்திக்க முதியோர் இல்லம் சென்றேன். பாட்டி பெயர் கிளவுதியா. வயது ஏறக்குறைய 80 இருக்கும். சில நாட்களாக ஆலயத்திற்கு வருவதில்லை என்பதால் அவரின் தங்கைய எலிசாவிடம் (வயது 73) விசாரித்தேன். கிளவுதியாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டதாக அழாதகுறையாய் சொன்னார். பார்வையாளர் நேரம் விசாரித்து, பழம், காய்கறி என்று சென்றேன்.

இத்தாலியில் நான் இதுவரை பார்த்த முதியோர் இல்லங்கள் மருத்துவமனைபோல இருந்தன. ஆனால், இன்று நான் சென்றது ஒரு 'வில்லா' டைப் - அதாவது, பண்ணைவீடு போன்றது. ஒரு பெரிய வீடு. ஏறக்குறைய பத்து பாட்டிகள் இருந்தனர். இவர்களைக் கவனிக்க ஒரு கம்பெனி குத்தகை எடுத்திருந்தது - சாப்பாடு, அறை நிர்வாகம் மற்றும் மருத்துவம்.

கிளவுதியாவின் குடும்பத்தார் தினமும் வேலைக்குச் செல்வதாலும், வீட்டில் பணிப்பெண் வைப்பது அதிக செலவு என்பதாலும், முடிவெடுத்து தங்கள் அம்மாவை இங்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றனர்.

உண்ண உணவு, உடுத்த உடை, பார்க்க டிவி, பணிபுரிய தாதிகள் இருந்தாலும், பாட்டியில் கண்களில் ஒரு வெறுமை. இந்த பத்துப் பாட்டிகளும் ஒருவர் மற்றவருக்கு புதிது. இன்னும் பழகி, பேசி என்ன செய்ய முடியும் அவர்களால்? ஆக, எங்கும் நிசப்தம். சக்கரநாற்காலிகள் கிரிச் சத்தம் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.

ஆண்டவர் பேதுருவைப் பார்த்து சொன்ன வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தன:

'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார்!' (யோவான் 21:18)

நம் கண்ணுக்கு நல்லதெனப்படுவது, அடுத்தவருக்குத் துன்பமாக இருந்தால் என்ன செய்வது?


Thursday, June 25, 2015

எப்படிப்பட்டதாக இருக்குமோ?

"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?"
(லூக்கா 1:66)

இன்று திருப்பலியில் நற்செய்தி வாசகம் வாசித்தபோது, மேலே காணும் வாக்கியம் என்னைத் தொட்டது.

திருமுழுக்கு யோவானின் பெயர்சூட்டு விழாவிற்கு வந்திருந்த அக்கம், பக்கத்தார் நடந்தது அனைத்தையும் கண்டு, 'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' என்று வியக்கின்றனர்.

இந்தக் கேள்வியில் வியப்பும் இருக்கிறது. பயமும் இருக்கிறது.

அவர்கள் கேட்ட தொனியில் வியப்பு மட்டும்தான் இருக்கிறது.

இந்தக் கேள்வியை நாமும் பல தருணங்களில் கேட்கின்றோம்:

'நாளைய நாள் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

'தேர்வு முடிவு எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

'தேர்வு வினாத்தாள் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

'திருமண வாழ்வு எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

'புதிய பணித்தளம் எப்படிப்பட்டதாக இருக்குமோ?'

இந்தக் கேள்வியை நாம் கேட்கும்போதெல்லாம் நம்மில் அச்ச உணர்வே மேலோங்கியிருக்கிறது.

அச்சம் வியப்பாகலாமே!


Wednesday, June 24, 2015

இரண்டாம் இடமும் வெற்றியே

நாளை திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.

கத்தோலிக்கத் திருஅவை வழிபாட்டில் இயேசு, மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் என்னும் இந்த மூன்று பேரின் பிறந்தநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன.

இயேசுவின் பிறப்பைப் போலவே திருமுழுக்கு யோவானின் பிறப்பும் ஒரு அதிசயமே.

சக்கரியா - எலிசபெத்து - யோவான் இந்த மூன்று பெயர்களும் மனுக்குல மீட்பு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

சக்கரியா என்றால் 'ஆண்டவர் நினைவு கூர்ந்தார்' என்றும், எலிசபெத்து என்றால் 'என் கடவுளின் வீடு' என்றும், யோவான் என்றால் 'இரக்கம்' அல்லது 'அருள்' என்றும் பொருள்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை பெயரிடும் சடங்கு.
அந்தக் காட்சியை நான் அடிக்கடி நினைத்துப் பார்த்ததுண்டு.

எலிசபெத்துக்கு குழந்தை பிறந்திருக்கிறது. சுற்றும் சூழ மக்கள் வந்திருக்கிறார்கள். பெயரிட வேண்டும். என்ன பெயர் என்று கேட்டபோது, சிலேடு ஒன்று கொண்டுவரச் சொல்லி எழுதுகின்றார்.
தான் கேள்வி கேட்டதால் வாய் ஊமையாகிப்போனவர், மற்றவர்கள் கேள்வி கேட்டவுடன் வாய் திறக்கின்றார்.

இவரின் பாடல்தான் ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கள் கட்டளைச் செபத்தில் இடம்பெறுகிறது.

'இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது!' என்னும் வரி அவரின் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி.

மணமகனின் தோழனாய் இருப்பது போதும் என்று தன் வேலையை செவ்வனே செய்துவிட்டு விடைபெற்றவர் இவர்.

ஆக, முதலிடத்தில் இருப்பது மட்டும் வெற்றியல்ல. இரண்டாம் இடமும் வெற்றியே.



Monday, June 22, 2015

'உயிர்ப்பு' - லியோ டால்ஸ்டாய்

கடந்த ஒரு வாரமாக ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் 'உயிர்ப்பு' (Resurrection) என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கிண்டில் பதிப்பில் ஏறக்குறைய 2000 பக்கங்கள். டால்ஸ்டாய் அவர்களின் இறுதி நூல் இது. அவர் எழுதிய மற்ற புகழ்பெற்ற நூல்கள் 'அன்னா கத்தரீனா' (Anna Katherina), 'போரும், அமைதியும்' (War and Peace). 'போரும் அமைதியும்' வாசித்திருக்கிறேன். ஆனால், டால்ஸ்டாயின் இதயத்தை அறிய வேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக அவரின் 'உயிர்ப்பு' வாசிக்க வேண்டும்.

திமித்ரி இவானிக் நெக்ல்டோப், ஒரு இளவரசன். காலத்தின் கொடுமையாலும், தான் கடந்த காலத்தில் செய்த குற்றங்களுக்கு மனம் வருந்தி, தன் தவறுகளையெல்லாம்; சரி செய்ய விழைகின்றான். இந்தச் சரி செய்தலை பின்புலமாக வைத்து டால்ஸ்டாய் அவரின் காலத்தில் நிலவிய கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். அவரின் காலத்தில் நிலவிய நிலக்கிழார் முறை, கிறிஸ்தவம், அரசாங்கம், இராணுவம், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், சிறைச்சாலை என தான் சந்திக்கும் அனைத்தையும் இயல்பாக விமர்சிக்கிறார் டால்ஸ்டாய்.

நெக்ல்டோப், வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறந்த இளவல், சமூகத்தின் ஆசை வலைக்குள் விழுகிறான். தன் அத்தை வீட்டில் வேலைக்கு இருந்த ஒரு ஏழைப் பெண்ணின்மேல் காதல் கொண்டு, அவளை மயக்குகிறான். பின் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. சில வருடங்கள் கழித்து அவன் நீதிபதியாக இருக்கின்ற ஒரு நீதிமன்றத்திற்கு அவள் கொலைக்குற்றவாளியாக அழைத்துவரப்படுகிறாள். தன்னால் அன்று ஏமாற்றப்பட்டவள்தான் இன்று இந்த நிலைக்கு ஆகிவிட்டாள் என்ற குற்றவுணர்வினால் தள்ளப்பட்டு, அவளைக் காப்பாற்றவும், அவளை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறான். அவள் தண்டனை பெற்று சைபீரியா நாட்டிற்கு நாடுகடத்தப்படுகிறாள். இவனும் சைபீரியா வரை செல்கிறான். இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். சஸ்பென்ஸ்!

நிறைய இடங்கள் எனக்குப் பிடித்திருந்தன.

அவற்றில் மூன்றை மட்டும் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். டால்ஸ்டாயின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன்.

1. நிலாப் பார்வை. சூரியப் பார்வை.
நாம் அன்பு செய்யும் நம் உறவுகளை நிலா வெளிச்சத்தில் பார்க்கலாம். சூரிய வெளிச்சத்தில் பார்க்கலாம். நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது அவளின் பரிவு, கரிசணை, அக்கறை, அழகு, ஸ்பரிசம் நமக்குத் தெரிகிறது. சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது அவளின் கோபம், வெறுப்பு, கிண்டல், கன்னத்துக் கோடு, அடிக்கும் உதட்டுப்பூச்சு கண்ணுக்குத் தெரிகிறது. அன்று அவளை நான் சூரிய வெளிச்சத்தில் பார்த்தேன்.

2. ஆறும். மனிதர்களும்
மனிதர்களில் சிலரை நல்லவர் என்கிறோம். சிலரை கெட்டவர்கள் என்கிறோம். சிலர் மேன்மையானவர்கள் என்கிறோம். சிலர் தாழ்வானவர்கள் என்கிறோம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனிதர்கள் எல்லாரும் ஓடுகின்ற ஆறு போன்றவர்கள். ஆறு ஒன்றுதான். ஆனால், அது ஓரிடத்தில் ஆழமாகவும், மற்றொரு இடத்தில் மேலோட்டமாகவும், ஒரு இடத்தில் சிறியதாகவும், மற்றொரு இடத்தில் அகன்றதாகவும் ஓடுகிறது. அகன்ற இடத்தில் நிற்பவர்கள் அதை அகன்றது என்கின்றனர். குறுகிய இடத்தில் அதைப் பார்ப்பவர்கள் அதைக் குறுகியது என்கின்றனர்.

3. மணத்துறவு
திருமணத்தை விட மணத்துறவு எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமணம் எனக்குப் பிடிப்பதில்லை. ஏன்? இனியும் இந்தப் பூமிப்பந்தில் உயிர்களைக் கூட்ட எனக்கு விருப்பமில்லை. இருக்கின்ற உயிர்களைக் காப்பாற்றுவதே மேல் என நினைக்கிறேன். மணத்துறவில் இருக்கும் ஒவ்வொருவரும் நம் உடலில் இருக்கும் 'பாகோசைட்' (Phagocytes, from Greek 'phagein', meaning 'to eat' or 'devour' and 'kutos', meaning 'hollow vessel') என்ற செல் போன்றவர்கள். வலுவிழந்த செல்களைக் காப்பாற்றுவதும், உடலை நோய் தாக்கும்போது, தாக்கப்பட்ட செல்களைக் காப்பாற்றுவதும்தான் இவைகளின் பணிகள். இப்படிக் காப்பாற்றும்போது தாங்கள் அழிய நேரிட்டாலும் இவை கவலைப்படுவதில்லை.

இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னையே சுயஆய்வு செய்து பார்ப்பதுபோல இருந்தது. யார் வாசித்தாலும், இந்த நூல் வாசிப்பவரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

டால்ஸ்டாய்க்கு மரணமில்லை.

'உயிர்ப்பு' - என்றும்!



உமக்கே புகழ்

'லௌதாத்தோ சீ' - LAUDATO SI' - (உமக்கே புகழ்) என்னும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாம் சுற்றுமடல் இம்மாதம் 18ஆம் தேதி வத்திக்கானில் வெளியிடப்பட்டது. இந்த சுற்றுமடலின் துணைத்தலைப்பு: நம் பொதுவில்லத்தின்மேல் உள்ள அக்கறை. இந்தச் சுற்றுமடலில் திருத்தந்தை அவர்கள் நுகர்வுக்கலாச்சாரத்தையும், பொறுப்பற்ற முன்னேற்றத்தையும் சாடுவதோடு, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயல்பாட்டிற்கும், இதன் வழியாக நம் பூமிப்பந்தை காக்கவும் அழைப்பு விடுக்கின்றார்.

மே 24, 2015 அன்று இது வெளியிடப்பட்டதாக இதில் எழுதப்பட்டிருந்தாலும் ஜீன் 18ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது. அராபிக், ஜெர்மன், இஸ்பானியம், இத்தாலியன், ஆங்கிலம், பிரெஞ்சு, போலிஷ் மற்றும் போர்த்துகீசு என எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் சுற்றுமடல் லூமன் பிதெய் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் தொடங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது என்பதால், அவரின் இரண்டாம் சுற்றுமடலே முழுக்க முழுக்க பிரான்சிஸ் அவர்களுக்குரியது.

இது வெளிவந்த இரவே தரவிறக்கம் செய்து படித்து முடித்தேன்.

இந்த சுற்றுமடலில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

1. தலைப்பு. 'லௌதாத்தோ சீ' என்பது ஒரு உம்ப்ரியா எனப்படும் இத்தாலி நாட்டு மாகாணத்தில் பேசப்படும் ஒரு வழக்கு மொழியில் தூய பிரான்சிஸ் அவர்கள் பாடிய ஒரு பாடலின் முதல் வரி. 'லௌதாத்தோ சீ மியோ சிஞ்ஞோரே' என அப்பாடல் தொடங்கும். தூய பிரான்சிஸ் அசிசியாரின் பெயரைத் தாங்கியிருப்பதால், அவர் எழுதிய பாடலிலிருந்தே திருத்தந்தை அவர்கள் தலைப்பைத் தெரிவு செய்திருக்கிறார். மேலும், சுற்றுச்சூழல் பற்றிய இச்சுற்றுமடலுக்கு, இயற்கைக்காக இறைவனுக்கு நன்றி கூறும் தூய பிரான்சிஸ் அசிசியாரின் பாடல் வரி மிகவும் பொருத்தமானதே.

2. மொழி. வழக்கமாக திருத்தந்தையின் சுற்றுமடல்கள் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டு பின் மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படும். ஆனால் இந்தச் சுற்றுமடல் இலத்தீனில் எழுதப்படவில்லை. இதன் முதல் பிரதியை (டிராப்ட்) எழுதியவர் கர்தினால் பீட்டர் டர்க்ஸன் (ஆப்பிரிக்கா). எந்த மொழியில் முதல் பிரதி எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் திருச்சபை இலத்தீன் மொழியிலிருந்து விடுதலை பெற்றிருப்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

3. மண்ணைத்தொட வருவாயா. வான்நோக்கிய ஆன்மீகத்தை விடுத்து திருஅவை இந்தச் சுற்றுமடலில் மண்ணைத் தொடத் தொடங்கியிருக்கிறது. மண், தண்ணீர், காற்று என நாம் உணர்கின்ற, அனுபவிக்கின்றவைகளைத் தொடத் தொடங்கியிருப்பது ஒரு புதிய முயற்சி.

4. அறிவியல். அறிவியலும், விசுவாசமும் ஒன்றுக்கொன்று முரண்படும் என சொல்லிக்கொண்டிருந்த திருச்சபை இச்சுற்றுமடலில் அறிவியலோடு கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறது. சுற்றுச்சுழல் பற்றிய அறிவியல் கோட்பாடுகள் (புவி வெப்பமயமாதல் (global warming), பச்சை வீடு விளைவு (green house effect), உயிரியல் பன்மயம் (biodiversity), இன்னும் பல) மிக எளிதாக, சாதாரண மொழிநடையில் தரப்பட்டுள்ளது.

5. ஆர்த்தோடாக்ஸ். கத்தோலிக்கத் திருஅவையின் ஏடு வழக்கமாக கத்தோலிக்க புனிதர்களின் சொற்களைத்தான் மேற்கோள்காட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த சுற்றுமடலில் பயன்படுத்தப்படும் முதல் மேற்கோளே, கீழைத்திருச்சபையின் திருத்தந்தை பார்த்தலோமேயுவின் வார்த்தைகள் தாம். ஆக, கத்தோலிக்கத் திருஅவை தன்னிடமிருந்து பிரிந்து சென்றவர்களின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மை பெறத் தொடங்கியுள்ளது.

6. யூத-கிறிஸ்தவ விவிலிய விளக்கம். பழைய ஏற்பாட்டு பகுதிகளுக்கு விளக்கம் தரப்படும் இடங்களில் எல்லாம் யூதர்கள் இந்த விவிலியப் பகுதிகளை புரிந்து கொள்ளும் விதமும் தரப்பட்டிருக்கின்றது.

7. சுயஆய்வு. கத்தோலிக்கத் திருஅவை தான் விவிலியத்தை தவறாகப் புரிந்து கொண்டதை அறிக்கையிட்டிருக்கின்றது இச்சுற்றுமடலில். 'பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள்' என்ற தொநூ வார்த்தைகள் திருச்சபையில் தவறாக அர்த்தம் கொடுக்கபட்டுள்ளதாகவும், புதிய அர்த்தம் அவசியம் எனவும் சுற்றுமடல் தெரிவிக்கின்றது.

8. பாலினத்தை உள்ளடக்கிய மொழிநடை. வழக்கமாக 'ஆண்பாலில்' எழுதப்படும் சுற்றுமடல்களைப்போல அல்லாமல், மொழிநடை இருபாலரையும் உள்ளடக்கி இருக்கின்றது.

9. தந்தையர்களும், திருத்தந்தையர்களும். சுற்றுமடல்கள் வழக்கமாக பேட்ரிஸ்டிக் லிட்ரேச்சர் என்று சொல்லப்படும் தந்தையர்களின் இலக்கியம் (அகுஸ்தினார், அக்வினாஸ் போன்றோர்) சார்ந்தே இருக்கும். ஆனால் இச்சுற்றுமடல் தந்தையர்களின் ஆன்மீகத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், திருத்தந்தையர்கள் இரண்டாம் யோவான் பவுல் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் உரைகளும், மடல்களும் அதிகமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

10. ஆயர்களின் மாநாட்டு உரைகள். இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆயர்களும் திருத்தந்தையோடு இணைந்திருக்கிறார்கள் என்றும், ஆயர்களுக்கும் தங்கள் தலத்திருச்சபையில் முழுமையான அதிகாரம் இருக்கிறது (Collegiality of Bishops) எனவும் சொன்னது. ஆனால், இந்தக் கருத்து பல ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில்தான் இருந்தது. ஆனால், இந்தச் சுற்றுமடலில் கனடா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா போன்ற ஆயர்களின் குழும சுற்றுமடல்களும் மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆக, அந்தந்த நாடுகளில் ஆயர்கள் சொல்லும் கருத்துகள் ஒட்டுமொத்த திருஅவையின் கருத்தின்மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று ஆயர்களையும், திருத்தந்தையின் அளவுக்கு உயர்த்துகிறது இச்சுற்றுமடல். இது மிக மிக பாராட்டப்படவேண்டிய ஒன்று.

11. புதிய வார்த்தைகள். மிக நேர்த்தியான புதிய வார்த்தைகளை இந்தச் சுற்றுமடல் ஆங்கில மொழிக்குத் தந்திருக்கிறது: உதாரணத்திற்கு, rapidification, throwaway culture, water poverty, differentiated responsibilities.

12. மதம் ஒரு உட்கலாச்சாரம். உட்கலாச்சாரம் என்பது ஒரு சமூகவியல் வார்த்தை. அதாவது, கலாச்சாரத்தை எதிர்க்கும் சிலர் உருவாக்குவது உட்கலாச்சாரம். மதம் ஒரு உட்கலாச்சாரம் என்று சொல்வது மதத்தை தாழ்வாக்குவது. ஆனால், இப்படி மக்கள் நினைத்தாலும் தவறில்லை என்று திருச்சபை தன் மதத்தையே விட்டுக்கொடுத்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

13. இறுதி செபங்கள். சுற்றுமடலின் இறுதியில் எல்லாரும் செபிக்க ஒரு செபம், கிறிஸ்தவர்கள் செபிக்க ஒரு செபம் என இரண்டு செபங்களைக் கொடுத்துள்ளார் திருத்தந்தை. இதில், எல்லாரும் செபிக்க வேண்டிய செபத்தை முதலில் கொடுத்து, கிறிஸ்தவம் இரண்டாம் இடத்தில் தன்னையே தாழ்த்திக் கொண்டிருப்பதும் சால்பு.

14. யோசேப்பு. திருத்தந்தையரின் சுற்றுமடல்களும், அவரின் எல்லா உரைகளும் இறுதியாக அன்னை மரியாளைப் பற்றி எழுதி நிறைவு செய்யப்படும். ஆனால், இங்கே இன்னும் ஒருபடி மேலே போய் மரியாளின் துணைவர் யோசேப்பையும் பற்றி எழுதியிருக்கின்றார் திருத்தந்தை.

15. ஆறு அத்தியாயங்கள். 246 பத்திகள், 172 அடிக்குறிப்புகள் என நிமிர்ந்து நிற்கும் இச்சுற்றுமடல் கத்தோலிக்கத் திருஅவையின் புதிய மைல்கல். சுற்றுச்சூழல் சந்திக்கும் சவால்கள், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள், சுற்றுச்சூழலின்மேல் நமக்குள்ள பொறுப்புணர்வு, மற்றும் அன்றாடம் நாம் வாழ வேண்டிய எளிய வாழ்க்கை குறிப்புகள் என அலசி ஆராய்கிறது இச்சுற்றுமடல். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழையரின் திருத்தந்தை என அழைக்கிறோம். இந்த ஏழையர், எளியவர், பொருளாதார முதலைகளின் வாயில் சிக்கத்தவிக்கும் திராணியற்றோர் அனைவரின் மனச்சான்றாக ஒலிக்கின்றது இச்சுற்றுமடல்.

இந்தச் சுற்றுமடலை ஆங்கிலத்தில் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்:

Laudato Si' in English


Sunday, June 21, 2015

நாங்கள் சாகப்போகிறோமே!

கடந்த இரண்டு வாரங்களாக இத்தாலிய தொலைக்காட்சிகளில் புலம்பெயர் மக்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆப்பிரிக்காவின் பிரெஞ்சு பேசும் நாட்டவர்கள் பலர் கடந்த இரண்டு மாதங்களில் அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர் (ஏறக்குறைய 2 லட்சம் பேர் என்கிறது மீடியா). கடல்வழி வருபவர்களுக்கு இத்தாலிதான் ஐரோப்பாவின் முக்கியமான நுழைவாயில். இத்தாலிக்குள் நுழையும் இவர்களின் நோக்கம் இத்தாலியில் தங்குவது அல்ல. மாறாக, பிரெஞ்சு நாட்டுக்குச் செல்வது. இத்தாலிக்கும், பிரான்சுக்கும் சும்மாவே ஆகாது. 'நீ ஏன் அவங்கள விடுற!' என்று பிரான்சு இத்தாலியைக் கேட்கிறது. 'இங்கிருக்கக் கூடாது! வேறு எங்கு வேண்டுமானாலும் போய்க்கொள்!' என உள்ளிழுத்து அகதிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறது இத்தாலி.

பிரெஞ்சக்காரன் கொஞ்ச வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் சில நாடுகளை ஆக்கிரமித்து, அவர்களின் மொழியையும் அழித்து அவர்களுக்கு பிரெஞ்சு கற்றுக்கொடுத்துவிட்டான். இன்று அந்த ஆப்பிரிக்க நாட்டவர்கள் தங்கள் நாட்டில் வாழ வழியில்லாமல் இருக்கும்போது தங்களின் கைவசம் இருக்கும் அந்த மொழியையாவது பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். அவ்வளவுதான்!
'அவன் வர்றான்! கறுப்பன் வர்றான்!' என இப்போது ஐரோப்பிய நாடுகள் குய்யோ, முறையோ எனக் கத்துகின்றன. ஆனால் இந்த ஐரோப்பியர்களே சில பத்தாண்டுகளுக்கு முன் ஊர் ஊரா திருடிக்கொண்டிருந்ததை மறந்து விட்டார்கள்.

இந்த அகதிகளை இத்தாலியர்கள் கையாளும் விதம் மிகவும் மோசமானது. தங்கள் முகத்துக்கு முகமூடி, கையுறை, முழங்கால் வரை காலணிகள் என அணிந்துகொண்டு இந்த அகதிகளை ஏதோ வேற்று கிரகத்தவர் போல வரவேற்கின்றனர். சாப்பாடு, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை தூக்கி போடுகிறார்கள். மற்றவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்! இத்தாலிக்காரன் தன் வீட்டு நாயைக் கொஞ்சும்போது கையுறை அணிவதில்லை. இந்த நாயைவிட அகதிகள் மோசமானவர்களா? அல்லது இத்தாலிக்காரனும், நாயும் சொந்தக்காரர்களா?
இந்த அகதிகளின் வருகையால் ஏற்கனவே இங்கு தங்கி வாழும் மற்ற நாட்டவர்கள்மேல் கலாச்சாரப் போர் தொடுத்திருக்கின்றனர் இத்தாலியர்கள். எங்கு பார்த்தாலும் அந்நியர்களுக்கு எதிரான சுவரொட்டிகள். அரசியல்வாதிகள் இந்த அகதிகளை வைத்து தங்கள் ஆதாயம் தேடிக்கொள்ளப்பார்க்கிறார்கள்.

ஆக, வெள்ளை தவிர வேறு கலரில் இருந்தால், நாம் வெறும் பொருளே.

கடந்த 17 அமெரிக்க ஐக்கிய நாடுகளின், சார்ல்ஸ்டன் நகரில், 21 வயது வெள்ளை இளைஞன், ஆஃரோ-அமெரிக்கர்களின் தேவாலயத்திற்குள் சென்று 9 பேரை கொன்றிருக்கிறான். இதன் வழியாக ஒரு நிற போர் உருவாகவேண்டும் என நான் விழைகிறேன் என பத்திரிக்கைக்கு செய்தி கொடுக்கிறான். 'நீ செய்தது தவறு என்று ஏற்றுக்கொள்கிறாயா?' என்ற கேள்விக்கு 'இல்லை' எனவும் சொல்லியிருக்கிறான்.

இத்தாலியில் இருக்கும் நிறவெறிகூட ஓகே எனச் சொல்லிவிடலாம். ஆனால் அமெரிக்க ஒரு வந்தேறிகளின் நாடு. அல்லது குடியேற்ற நாடு. வெறும் 200 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. அன்றாடம் கண்டுபிடிக்கப்படும் ஒரு தீவு போலத்தான் அது. யாரும் அங்கே குடியேற உரிமை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஒரு வந்தேறி தன் நிறம் வெள்ளை என்பதற்காக மற்றொரு வந்தேறிமேல் வன்முறையை ஏவுவது தவறு. வெள்ளைத் தோலிலும் துப்பாக்கி குண்டு பாயும் என்பது அவனுக்குத் தெரியாதா?

நிறத்தில் என்னதான் இருக்கிறது?

இந்த நிறப்பிரச்சினைக்கு இத்தாலியின் வத்திக்கானின் கத்தோலிக்க கடவுளும் பதில் சொல்ல மறுக்கிறார். 9 பேரை சுட்டுக்கொன்றபோது அந்த ஆலயத்தில் இருந்த கடவுளும் பாவம் தன் பக்தர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

பாவம் கடவுள்! எத்தனை பேரை எத்தனை இடங்களில் காப்பாற்றுவார்?

நாளைய நற்செய்தியில் வரும் இயேசு போல படகின் ஓரத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாரா நம் கடவுள்?

'போதகரே! நாங்கள் சாகப்போகிறோமே! உமக்கு அக்கறையில்லையா?'


Friday, June 19, 2015

ஆய்வுத்தாளின் நிறைவாக

ஆய்வுத்தாளின் நிறைவாக நான் கற்றுக்கொண்டவை எவை?

1. இறையரசு
இந்த உவமையில் வரும் திராட்சைத்தோட்டம்தான் இறையரசு. இதற்கு உள் நுழையவும், வெளியே செல்லவும் உரிமை தோட்ட உரிமையாளரிடமிருந்துதான் வரும். அவரைப் போல சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்லது அவரின் செயலுக்கு எதிராக முணுமுணுப்பவர்கள் வெளியே அனுப்பப்படுவார்கள்.

2. கடவுளும், கிறிஸ்துவும்
நல்லோர் மேலும், தீயோர் மேலும் தன் கதிரவனை ஒளிரச் செய்யும் கடவுள், முதலில் வந்தவருக்கும், கடைசியில் வந்தவருக்கும் ஒரே கூலி கொடுக்கிறார். இறுதியில் வேலைக்கு வந்தவர்களுக்கு 12 மடங்கு அதிகம் கூலி கிடைத்தது அவர்களுக்கு நடந்த அற்புதம். வாழ்வில் அற்புதங்களை தேடும் ஒருவரால்தான் அற்புதங்களைக் கண்டுகொள்ள முடியும். மேலும், கடவுள் சின்னஞ்சிறியவர்களின் கடவுள். மனிதர்கள் கணக்கை எழுதி விடையை எழுதுகிறோம். ஆனால், அவர் விடையை எழுதிவிட்டு பின் அதற்கேற்ற கணக்கை உருவாக்குகிறார்.

திராட்சைத்தோட்ட உரிமையாளர் 'ஆண்டவர்' என 20:8ல் அழைக்கப்படுகிறார். இந்த வார்த்தை இயேசுவைச் சுட்டுகிறது.

3. சீடர்களும், சீடத்துவமும்
வழக்கமாக சீடர்கள் என்றால் வெளியில் அனுப்பப்படுபவர்கள் என்றுதான் நாம் நினைக்கிறோம். உரிமையாளர் தன் தோட்டத்திற்குள் வேலையாட்களை அனுப்பும்போதும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை 'அப்போஸ்தெல்லா' (அனுப்பப்படுதல்) என்பது. ஆக, அனுப்பும் திசை இங்கே உள்ளிருந்து வெளியே என்றல்லாமல், வெளியிலிருந்து உள்ளே என இருக்கின்றது. சீடர்களின் முதன்மையான பணி தன் தலைவரோடு உடனிருப்பதுதான். 'தம்மோடு இருக்கவும், அனுப்பப்படவும்தான்' (மாற்கு 3:14) அவர் சீடர்களைத் தெரிந்து கொள்கிறார். ஆக, முதன்மையான பணி தலைவரோடு தன்னையே இணைத்துக்கொள்வது. முதலில் வேலைக்கு வந்த கூலியாட்கள் தங்களுக்கு ஒரு தெனாரியம் கிடைத்தது என்று வருத்தப்படுகிறார்களே தவிர, திராட்சைத்தோட்டத்தின் குளுமையையும், தலைவரின் விருந்தோம்பலையும் 12 மணிநேரங்கள் அனுபவித்தார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மத்தேயு நற்செய்தியாளரின் திருச்சபையில் நிலவிய பிரச்சினை சீடத்துவம்தான். யார் பெரியவர்? இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரோடு மூன்று ஆண்டுகள் இருந்தவர்களா? அல்லது அவரைப் பார்த்திராத மூன்றாம் தலைமுறையினரா? யார் எப்போ சீடத்துவத்தில் இணைந்தாலும், சம்பளம் ஒன்றுதான் என சொல்கிறார் மத்தேயு.

4. திருச்சபையும், பணியும்
உரிமையாளர் வெளியில் செல்லும்போது முதலில் பார்க்கின்றார், பின் தேடுகின்றார். மற்றவர்களால் பயனில்லாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்களையும் தன் பணிக்கு எடுத்துக்கொள்கிறார். திருச்சபையின் உறுப்பினர் நிலையில் இருக்கும் அனைவரின் கடமையும் இதுதான் - பயனற்றவர்களையும் தெரிந்து கொள்வது.

5. அருளா? செயல்களா?
லூத்தர் அவர்கள் கத்தோலிக்க திருஅவையை விட்டு பிரிந்து செல்ல அவர் சொல்லக் காரணம் இதுதான்: 'கத்தோலிக்கத் திருஅவை நம் செயல்களின் வழியாகத்தான் மீட்பு பெற முடியும் என சொல்கிறது. ஆகையால்தான் அது பூசைக்கருத்துகள், அருளிக்கம் வணக்கம் போன்றவற்றை உற்சாகப்படுத்துகிறது. ஆனால், இயேசுவின் அருள்தான் நம்மை மீட்கிறது. ஆக, நம் செயல்களால் கடவுளின் அருளுக்கு மேல் ஒன்றையும் கூட்டுவதில்லை.' இந்த உவமையில் முதலில் வந்தவர்கள் தங்கள் செயலினால் ஏற்புடையவர்களாகின்றனர். இறுதியில் வந்தவர்கள் அருளினால் ஏற்புடையவர்களாகின்றனர்.

6. மனிதர் என்பவர் யார்?
'மனிதர் என்பவர் வேலைக்காரர்' என்று சொல்கிறார் மார்க்ஸ். வேலைக்காரர்களுக்குள் உவமையில் நிலவக்கூடிய ஒன்று 'பொறாமை'. இதை 'கெட்ட பார்வை' அல்லது 'தீய கண்' என்கிறது உவமை. நாம் அனைவரும் வேலைசெய்யப் பிறந்தவர்கள்தாம். நாம் செய்கின்ற வேலையை செவ்வனே செய்தல் போதுமே. தீய கண் தேவையா?

7. மேலாண்மை
அ. இந்த உவமை மேலாண்மைக்குப் பொருந்தாத ஒன்று. எல்லாருக்கும் ஒரே சம்பளம் என்றால், நல்லா வேலை பார்ப்பவரும், 'என்ன வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம்தானே என்று தன் வேலைத்தரத்தைக் குறைத்துக்கொள்ளமாட்டாரா?

ஆ. உரிமையாளரின் இந்தச் செயல் சமூகத்திலும் குழப்பம் உண்டாக்கும். எப்படி? இந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்து வீட்டுக்குப் போய், சாப்பிட்டுவிட்டு, பொதுவிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். குறைவான வேலை பார்த்து நிறைவான சம்பளம் வாங்கியவர், அதிகமான நேரம் வேலை செய்தவரைப் பார்த்து கிண்;டல் செய்கிறார்: 'இந்தா! இவன்! ஓடுனான் வேலைக்கு! ஆனா பாரு! இவனுக்கும் இதே சம்பளம்தான்!' முதலில் வேலைக்குப் போனவருக்கு கோபம் வந்து, கிண்டல் செய்தவர் மேல்தான் பாய்வார். ஆக, காயின்கள் உருவாவதற்குக் கடவுள்தான் காரணம்!

இ. ஆன்மீகம் - பரந்த மனப்பான்மைதான் ஆன்மீகத்தின் அடிப்படை. திராட்சைத்தோட்டத்திற்குள் உரிமையாளரோடு அதிக நேரம் இருந்தாலும், அவரின் தாராள உள்ளத்தை கண்டுகொள்ள மறுக்கின்றனர் முதலில் வந்தவர்கள். அவரின் பரந்த மனத்தைக் கண்டு, அதை நாமும் பெற்றுக்கொள்வதுதான் ஆன்மீகம்.

இந்த எளிய ஆய்வுத்தாளை இப்படி நான் அர்ப்பணம் செய்தேன்:

'என் இனிய அப்பாவுக்கு,
அவர், திராட்சைத் தோட்டத்தில் ஒரு மணிநேரம் மட்டுமே
வேலை செய்யும் வாய்ப்பு பெற்றார்.
ஆனாலும், கடவுள் அவரின் சம்பளத்தை 12 மடங்காகக் கொடுத்தார்.
முதலில் வந்தவர்களோடு அவரைச் சேர்த்துக்கொண்டார் -
இம்மையிலும், மறுமையிலும்!'

ஆய்வுத்தாள் நிறைவுற்றது.



Thursday, June 18, 2015

20:1-16 ஐந்து பிரிவுகள்

மத்தேயு 20:1-16 உள்ள இறைவாக்கு பகுதியின் அமைப்பை முதலில் ஆராய்வோம். வழக்கமாக இந்த உவமையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்:

1. 20:1-7 வேலையாட்கள் பணியமர்த்தப்படுதல்
2. 20:8-16 வேலையாட்களுக்கு ஊதியம் தரப்படுதல்

இப்படிப் பிரிக்கத் தூண்டுவது 1 மற்றும் 8 வசனங்களில் இருக்கும் 'காலை' மற்றும் 'மாலை' என்ற நேரக்குறிப்புகள். இந்த நேரக்குறிப்புகள் மிக முக்கியமானவைதான். ஆனால், இந்த வகை பிரித்தலில் வேலையாட்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், வேலையாட்கள் சும்மா வந்து போகக்கூடியவர்கள்தாம். ஆனால், இந்த உவமையின் கதாநாயகன் தோட்ட உரிமையாளர்தான். ஆக, அவரையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் இந்த உவமையில் ஐந்து பிரிவுகள் இருப்பதாக முன்வைத்தேன்:

1. 20:1அ முன்னுரை
2. 20:1ஆ-7 வெளியே
3. 20:8 உள்ளே-வெளியே
4. 20:9-15 உள்ளே
5. 20:16 முடிவுரை

20:1அ வில் இந்த நிகழ்ச்சி இறையாட்சிக்கு ஒப்பிடப்படுவதாகச் சொல்லப்படுவதுதான் முன்னுரை. இத்தோடு இணைந்து செல்வது 20:16ல் இருக்கும் முடிவுரை. இறையாட்சியில் முதன்மையானவர்கள் கடைசியாவார்கள், கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.

'வெளியே', 'உள்ளே' என்று சொல்வது தோட்டத்தைப் பொறுத்தது. உவமையின் முதல் பகுதியில் தோட்ட உரிமையாளரும், வேலையாட்களும் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு பேரும் தோட்டத்திற்கு உள்ளே இருக்கிறார்கள். மேலும், தோட்டத்திற்கு வெளியே, வேலைக்காரர்கள் ஓரிடத்தில் நிற்கின்றார்கள். உரிமையாளர் முன்னும் பின்னும் செல்கின்றார். ஆனால், தோட்டத்திற்கு உள்ளே உரிமையாளர் ஓரிடத்தில் நிற்கின்றார். வேலைக்காரர்கள் முன்னும், பின்னும் செல்கின்றனர்.

20:8ல் உரிமையாளர் தன் கணக்கரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்து கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை கூலி கொடும்!' என்கிறார். இதுதான் கதையின் மையம் அல்லது உச்சம். 'கடைசியிலிருந்து தொடங்கி முதலில் வந்தவர் வரை செல்ல வேண்டும்!' - இதே வார்த்தைகள்தாம் 'கடைசியானவர் முதலாவர்' என்று 20:16ல் தீர்வாக அல்லது முடிவுரையாக அமைகிறது.

'உள்ளே-வெளியே' (Inside-Out) என்பது ஸ்டீபன் கோவே அவர்கள் தன் Seven Habits for Highly Effective People நூலில் உருவாக்கிய ஒரு சொல்லாடல். அதாவது, கான்செப்ட் சிம்பிள்தான். பேண்ட்ல உள்ள பாக்கெட்ல பென்-டிரைவ் போட்டு அது காணாம போயிடுச்சுனு வச்சிக்கிவோம். அதைத் தேடும் முயற்சியில் பேண்டின் பாக்கெட்டை அப்படியே வெளிப்புறமாக எடுத்து தேடுவோம். இதுதான் inside-out இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை. ஆக, ஒருவரின் உள்ளக்கிடக்கையை முழுவதுமாகத் தெரிவிப்பதுதான் 'உள்ளே-வெளியே'. 20:8ல்தான் உரிமையாளரின் உள்ளக்கிடக்கை அப்படியே வெளிப்படுகிறது.

மேலும் இந்த ஐந்து வகை பிரிவில் நேரக்குறிப்புகள், வேலையாட்கள்-உரிமையாளர், காலை-மாலை, உள்ளே-வெளியே, என எல்லா இருமைநிலைகளும் எளிதில் துலங்குகின்றன.


Wednesday, June 17, 2015

ஐந்து கேள்விகள்

நான் மதுரை ஞானஒளிவுபுரம் தூய வளனார் ஆலயத்தின் வளாகத்திலிருந்த, பத்தாம் பத்திநாதர் குருமட மாணவர்களின் கண்காணிப்பாளராக இருந்தபோது, அங்கே குருமட இயக்குநராக இருந்தவர் அருட்பணி. பிரிட்டோ பாக்கியராஜ் அவர்கள். அவரைப் பார்க்க யாரேனும் வரும்போது, நான் அவரிடம் போய், 'ஃபாதர் உங்களைப் பார்க்க யாரோ ஒருவர் வந்திருக்கிறார்?' என்று சொல்வேன். 'யார் வந்தாலும், அவங்க யாரு, என்ன, எங்கிருந்து வந்திருக்காங்க, ஏன் வந்திருக்காங்க, கண்டிப்பா பார்க்கணுமா என ஐந்து கேள்வி கேட்கணும்!' என்று சொல்வார் அவர். 'உங்களைப் பார்க்க வந்தவங்ககிட்ட நான் ஏன் கேள்வி கேட்கணும்!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே அவரின் அறையை விட்டு வெளியே வருவேன்.

விவிலியத்தின் எந்த ஒரு பகுதியை ஆராய்ச்சி செய்யும்போதும் நாம் ஐந்து கேள்விகள் கேட்க வேண்டும்:

1. யார் எழுதினார்?
2. யாருக்கு எழுதினார்?
3. என்ன எழுதினார்?
4. எப்படி எழுதினார்?
5. ஏன் ஏழுதினார்?

இந்த ஐந்து கேள்விகளும் எழுதியவரை மையப்படுத்திய கேள்விகள்.

1. யார் எழுதினார்?

எழுதுகின்ற நபரை வைத்து எழுதப்பட்டதை ஏறக்குறைய புரிந்து கொள்ளலாம். பவுலின் நடை ஆசிரிய நடை போல இருக்கும். யோவானின் நடை காற்றில் எழுதியது போல இருக்கும். லூக்காவின் நடை கதை சொல்லி போல இருக்கும். ஆக, எழுதியவர் யார், அவரின் பின்புலம் என்ன என்பது முதல் கேள்வி.

2. யாருக்கு எழுதினார்?

விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் யாரோ ஒருவரை மனதில் வைத்து எழுதப்பட்டது. நற்செய்தியாளர் தங்கள் நற்செய்திகளை முதலில் தங்கள் திருச்சபைகளுக்குத்தான் எழுதுகின்றனர். இரண்டாயிரம் வருடத்திற்குப் பின்னும் இந்த நூல்களை மக்கள் படிப்பார்கள் என அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆக, ஒவ்வொரு நற்செய்தி நூலிலும் அந்தந்த நற்செய்தியாளரின் திருச்சபை சந்தித்த வாழ்வியல் பிரச்சினைகள் பிரதிபலிக்கின்றன.

3. என்ன எழுதினார்?

எழுதியது உரைநடையா அல்லது பாடலா என்று நாம் பார்க்க வேண்டும். உரைநடையையும், பாடலையும் ஒரே மாதிரி நாம் புரிந்து கொள்ள முடியுமா? இல்லை.

4. எப்படி எழுதினார்?

'மையை வைத்து எழுதினார்!' அல்லது 'பேனாவை வைத்து எழுதினார்' என்பது இதற்கு விடையல்ல. 'எப்படி' என்பது எழுத்து அமைப்பை ஆராய்ச்சி செய்வது. அவன் கட்டடம் கட்;டினான் என்று சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். எப்படிக் கட்டினான்? செங்கலை வைத்து என்று சொல்லக் கூடாது. அவன் அதை வீடாகக் கட்டினானா, அல்லது மருத்துவமனையாகக் கட்டினானா, அல்லது பள்ளிக்கூடமாகக் கட்டினானா என்று நாம் சொல்ல வேண்டும். எல்லாம் கட்டிடம்தான். ஆனால், 'அமைப்பு' தான் வீட்டை, வகுப்பறையிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. ஒவ்வொரு இலக்கிய அல்லது விவிலியப் பகுதியிலும் ஒரு அமைப்பு இருக்கும். அந்த அமைப்பைக் கண்டுபிடித்துவிட்டால் அதன் பொருளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

5. ஏன் எழுதினார்?

நாம் பேசும் வார்த்தைகளுக்குக் காரணம் அல்லது நோக்கம் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆனால், நாம் எழுதும் ஒவ்வொன்றுக்கும் காரணம் அல்லது நோக்கம் இருக்க வேண்டும். 'நான் சும்மாதான் எழுதினேன்!' என்று நாம் எதையும் சொல்ல முடியாது. நாம் எழுதும் கடிதம், மறையுரை, ஏன் டோபி லிஸ்ட் அல்லது மளிகை லிஸ்ட் கூட ஒரு காரணம் அல்லது நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் மத்தேயு 20:1-16ஐயம் பார்க்க வேண்டும்?

1. யார் எழுதினார்? மத்தேயு.
2. யாருக்கு எழுதினார்? அவரின் திருச்சபைக்கு.
3. என்ன எழுதினார்? ஒரு உவமை.
4. எப்படி எழுதினார்? திருச்சபையில் நிலவிய இரட்டிப்புத்தன்மையை பிரதிபலித்து.
5. ஏன் எழுதினார்? தன் திருச்சபையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண.



Tuesday, June 16, 2015

ஒரு ஆண்டவரின் கதை

'இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர்.
முதன்மையானோர் கடைசியாவர்' என்றார். (மத்தேய 20:16)

கடந்த புதன்கிழமையோடு என் முதுகலைப்படிப்பு முடிந்தது. எபிரேயம், கிரேக்கம், அரமேயம், இலத்தீன், இத்தாலியன் என்று ஓடிக்கொண்டிருந்துவிட்டு இந்த ஒரு வாரம், ஒரு வருடம் போல இழுக்கிறது. செய்வதற்கு ஒன்றுமில்லையென்றால் நாளும் நீண்டுவிடுகிறது.

முதுகலைப்படிப்பின் நிறைவாக ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆய்வுத்தாள் எழுதி அதை வழிநடத்தும் பேராசிரியர்முன் விவாதிக்க வேண்டும்.

நான் எழுதி, விவாதித்த ஆய்வுத்தாள் பற்றி பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

மத்தேயு 20:1-16. இதுதான் நான் என் ஆய்வுக்காக எடுத்த பகுதி. இது ஒரு உவமை. மத்தேயு நற்செய்தியில் மட்டுமே வரும் உவமை. இது ஒரு சிக்கலான உவமை. ஏனென்றால், மனித கணிதத்திற்கு எதிராகச் செல்லும் இதன் நிறைவு. 12 மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும், ஒரு மணி நேரம் வேலை செய்தவர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கும் உவமை இது. வழக்கமாக இதை 'திராட்சைத் தோட்ட வேலையாட்கள் உவமை' என்று அழைக்கிறோம். ஆனால், நான் 'கணிதம் தெரியாத ஒரு ஆண்டவரின் கதை' (Parable of an Illogical Lord) என்று பெயரிட்டேன்.

உவமை என்று சொல்லும்போது அதை பல நிலைகளில் ஆய்வு செய்யலாம். இதை இயேசுதான் சொன்னாரா என்று வரலாற்று ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமை எப்படி கருத்தை சொல்கிறது என்று மொழியியில் ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமையில் வரும் சமூக நடைமுறை குறித்து சமூகவியல் ஆராய்ச்சி செய்யலாம். அல்லது உவமையின் வழியாக இயேசு சொல்ல வரும் இறையியல் செய்தி என்ன என்று இறையியல் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நான் செய்ததோ, உவமையை வெறும் கதையாக பார்ப்பது. இதை ஆங்கிலத்தில் Narrative Analysis or Narrative Criticism என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு கதைக்கும் ஒரு தளம் உண்டு. அந்தத் தளத்தைப் புரிந்து கொண்டால் கதை புரிந்துவிடும். தளம் ஐந்து காரணிகளைக் கொண்டது: (1) தொடக்கம், (2) பிரச்சினை, (3) திருப்புமுனை, (4) தீர்வு, (5) முடிவு.

உதாரணத்திற்கு, எந்திரன் திரைப்படம் எடுத்துக்கொள்வோம். (1) எந்திரன் உருவாகிறான் - தொடக்கம், (2) ஒரு பெண், இரண்டு காதல். மனித காதல். எந்திரக் காதல் - பிரச்சினை, (3) பகைவன் கையில் எந்திரன் - திருப்புமுனை, (4) எந்திரனை செயலிழக்கச் செய்தல் - தீர்வு, (5) தீமை அழிகிறது, நன்மை வெல்கிறது - முடிவு.

இந்தக் காரணிகளை எல்லாக் கதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாமா?

நாளை பார்ப்போம்.


கொஞ்சம் எக்ஸ்ட்ரா

'உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்?'

ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம். ஒரு இருண்ட சிறைச்சாலை. தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள். பல்வேறு வகையில் சாவு. வாழ்வா, சாவா என்பதே தினசரி கனவாகிப் போனது சிறைவாசிகளுக்கு. மறுபுறம் சண்டை சச்சரவுகள். கைதிகளுக்குள்ளே கலவரங்கள். புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கையில் சிக்கியும் துன்புற்றனர். எந்த நேரமும் குழப்பம். ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம். நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாலை வேளை. கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். ஒரு மண்வெட்டியைக் காணவில்லை. அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும். அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுடக் கட்டளையிடுகிறான். அனைவருக்கும் பயம். வரிசையாக நின்றவுடன் ஒரு கைதி மட்டும் முன்னே வந்து தான் திருடியதை ஒப்புக் கொள்கிறான். படைவீரர்கள் பாய்ந்தோடிப் பிடித்து அவனைச் சுட்டுக் கொள்கின்றனர். ஆழ்ந்த அமைதி. அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் ஆச்சர்யம். நிசப்தம். எதற்காக அந்த மனிதன் பிறருக்காகத் தனது உயிரை இழந்தான்? அன்றிலிருந்து ஒரு புதிய நிலை சிறைச்சாலையில்: கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகினர். படைவீரர்கள் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருந்தனர். புதிய கைதிகளை நன்முறையில் நடத்தினார்கள். எப்படி இவ்வளவு மாற்றம்? எல்லாம் அந்த ஒரு மனிதனின் தற்கையளிப்பு.

இன்றைய மற்றும் நாளைய நற்செய்தி வாசகங்களில் இயேசு தன் மலைப்பொழிவு போதனையாக சொல்வது இதுதான்: 'செய்யுங்க...கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யுங்க!'

Sunday, June 14, 2015

அறிகுறிகளை நாடுவோர்

போஸ்னியா நாட்டில் அமைந்திருக்கும் ஒரு நகரம் மெட்சுகோர்யே. மெட்சுகோர்யே என்றால் 'மலைகளுக்கிடையே' என்று பொருள். 1981ஆம் ஆண்டு முதல் இந்தப் பங்கில் உள்ள ஆறு பேருக்கு அன்னை மரியாள் தொடர்ந்து காட்சி தருவதாக மக்கள் நம்புகின்றனர். வியாழன் மற்றும் சனிக்கிழமை ஒப்புரவு மற்றும் நற்கருணை வழிபாடுகளில் எண்ணற்ற பேர் கலந்து கொள்கின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெட்சுகோர்யே வழிபாட்டுத்தலத்திற்குச் செல்வோரை, 'அறிகுறிகளை நாடுவோர்' என்று சாடி மறையுரை நிகழ்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மதம் என்று பார்க்கும்போது அதில் இரண்டு அம்சங்கள் உண்டு: ஒன்று, நிறுவனமயமாக்கப்பட்ட மதம். மற்றொன்று, சாமானியர்களின் மதம். கிறிஸ்தவ மதத்தில் நிறுவனமயமாக்கப்பட்ட மதம் என்று சொல்லும் போது, திருத்தந்தை, வத்திக்கான், திருச்சபைச் சட்டம், விதிமுறைகள், சுற்றுமடல்கள் இவற்றில் அடங்கும். சாமானியர்களின் மதம் என்று சொல்லும்போது அந்தோணியார் பக்தி, மாதா பக்தி, காட்சி, பரவசம், குணமளிக்கும் வழிபாடு, ஊற்று, தண்ணீர் இவற்றில் அடங்கும். நிறுவனமயமாக்கப்பட்ட மதத்திற்கும், சாமானியர்களின் மதத்திற்கும் எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும்.

1981 முதல் மெட்சுகோர்யேக்கும், வத்திக்கானுக்கும் இடையே நடந்த பனிப்போர் 2013ஆம் ஆண்டு முற்றியது. இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க முன்னாள் திருத்தந்தை ஒரு குழுவையும் ஏற்படுத்தினார். ஆனால், பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை.

லூர்துநகர் மற்றும் போர்ச்சுகல் போகும் கூட்டம் இப்போது மெட்சுகோர்யே செல்வதால், அவர்கள் வத்திக்கானைத் தூண்டிவிட்டு மெட்சுகோர்யே வெளிப்பாடுகள் போலி எனச் சொல்லச் சொல்வதாக சில பத்திரிக்கைகள் சொல்கின்றன. இன்னும் சில பத்திரிக்கைகள், மெட்சுகோர்யே அமைந்திருக்கும் போஸ்னியா நாடு இன்னும் கம்யூனிச கொள்கையைப் பிடித்துக்கொண்டிருக்கும் நாடு. வத்திக்கானுக்கும், கம்யூனிசத்திற்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் அது மெட்சுகோர்யேயைச் சாடுகிறது என்பதும் சிலரின் கருத்து.

வெளிப்பாடுகளைக் கண்டுகொள்ளாதீர்கள். ஆனால், மக்களின் நம்பிக்கையைப் பாருங்கள். எத்தனை பேர் இந்தத் திருத்தலத்தால் சுகம் பெறுகின்றனர் என மற்றும் சிலர் வாதம் செய்கின்றனர்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி: மாதா எதுக்கு வெள்ளைக்காரங்களுக்கே காட்சி கொடுக்கணும்? ஆப்பிரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா எல்லாம் அவங்களுக்குப் பிடிக்காதா? 'வேளாங்கண்ணியில' காட்சி கொடுத்தாங்கனு சொல்லாதீங்க. வேளாங்கண்ணியில போர்ச்சுகீசியருக்குதானே காட்சி கொடுத்தாங்க.

இன்று இரவு நல்லா தூங்கிக்கொண்டிருக்கும்போது உங்க அறையில திடீர்னு வெளிச்சமாகி, மாதா வந்து நின்னாங்கன்னு வச்சிக்குவோம். அதை நீங்க நாளைக்கு வத்திக்கானுக்கு சொன்னீங்கன்னா, அவங்க அதை நம்ப மாட்டாங்க. ஏன்னா, தனிநபர் வெளிப்பாடுகளை வத்திக்கான் ஏற்றுக்கொள்வதில்லை என்று அவர்களுக்கு விதிமுறையும் இருக்கின்றது.

இந்த நிறுவனங்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையில் நடக்கும் இந்த சண்டையில் தவிப்பது பாவம் இந்தக் கடவுள்கள்தாம்!


குடியிருந்தாலும், குடிபெயர்ந்தாலும்

'குடியிருந்தாலும், குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம்!' (2 கொரிந்தியர் 5:9) (நாளைய இரண்டாம் வாசகம்)

உடலின் உயிர்ப்பு பற்றியும், இறுதித் தீர்ப்பு பற்றியும் கொரிந்த நகரத் திருச்சபைக்குப் போதிக்கும் பவுலடியார் 'குடியிருத்தல்', 'குடிபெயர்தல்' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்திகின்றார். ஒரு ஆறு ஓடுவதாக வைத்துக்கொள்வோம். ஆற்றிற்கு இந்தப் பக்கம் உடல். அந்தப் பக்கம் ஆண்டவர். 'உயிர்' உலகில் இருக்கும்போது, உடலில் 'குடியிருக்கின்றது'. இறந்தபின் ஆண்டவரில் குடிபெயர்கின்றது.

'அன்பிற்கும், அன்பிற்கும் இடையே இருக்கும் மெல்லிய வேலிதான் இறப்பு' என்பார்கள். அதாவது, நாம் அன்பு செய்பவர்களிடமிருந்து, நாம் அன்பு செய்தவர்கள் பக்கம் இந்த இறப்பு என்னும் வேலியின் வழியாக கடந்து செல்கின்றோம்.

பவுலடியாரின் இந்த இறைவாக்குப்பகுதிதான் 'இறந்தோர்க்கான திருப்பலியின் முதல் தொடக்கவுரையாக' இருக்கின்றது: 'ஏனெனில் ஆண்டவரே, உம் விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை. இந்த மண்ணக வாழ்வின் உறைவிடம் (அதாவது 'உடல்'), விண்ணகத்தில் நிலையான வீடு (அதாவது 'ஆண்டவர்') ஆயத்தமாயிருக்கின்றது'.

இடம்பெயர்தல் அல்லது குடிபெயர்தல் நமக்கு அவ்வளவு எளிதானதல்ல. ஒரு செடியை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று நடும்போது, அந்தச் செடியின் வேரோடு சேர்த்து கொஞ்சம் மண்ணும் கொண்டு செல்வதுபோல, வீடு மாறிச் செல்லும்போதும், பணிக்காக, படிப்புக்காக நாடுகடந்து செல்லும்போதும் அந்த மண்ணைப்போல பெட்டி நிறைய நாம் பயன்படுத்திய துணிமணி, பணம், புத்தகம் என கொண்டுவருகின்றோம். பழையதை விடுவது நமக்குக் கடினமாக இருக்கிறது. 'இதை மட்டுமாவது என்னோடு கொண்டு போகிறேனே!' என எதையாவது நாம் இறுகப்பிடித்துக்கொள்கிறோம். ஆனால், இந்த குடிபெயர்தலில் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அது என்னவென்றால், நாம் எங்கிருந்தாலும் நான் நான்தான். எனது இயல்பிற்கு ஒன்றும் கூட்டுவதுமில்லை. குறைப்பதுமில்லை. என் மகிழ்ச்சி, என் உணர்வு நான் எங்கிருந்தாலும் மாறப்போவதில்லை. இதை உணர்ந்தவர்கள் எளிதாக எந்த இடத்திலும் இருந்து விடுவார்கள்.

நாம் முதல் வாசகத்தில் பார்த்த நுனிக்கிளை தன் தாய் மரத்தை விட்டு வர மறுத்தால் அது புதிய மரமாக வளர்ந்து, வலிமை பெற முடியுமா. ஆக, பிரிவும், வலியும் வளர்ச்சிக்கு அவசியம். நம் உயிர் நம் உடலைப் பிரிந்து செல்லும்போது வலி இருக்கின்றது (நமக்கு வலி இருக்குமா என்று தெரியாது! ஆனால் நமக்கு நெருக்கமானவர்களுக்கு வலி இருக்கும்). ஆனால் இந்த வலியை வெற்றிகொள்ளும்போதுதான் நிலையான வீடு என்னும் ஆண்டவர் கிடைக்கின்றார்.

1. இது எப்படி நடக்கும்? பவுலடியாரே பதிலும் தருகின்றார்: 'நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. நம்பிக்கையின் அடிப்படையிலேயே!' (5:7). ஆக, கண்ணுக்குத் தெரிவது மட்டும் நிஜம். தெரியாதது நிஜமல்ல என்பதல்ல. கண்ணுக்குத் தெரிவதைப் போலவே கண்ணுக்குத் தெரியாததும் நிஜமே. நிதர்சனமான உண்மையே.

2. 'உகந்தவராய் இருப்பது'. யாருக்கு? ஆண்டவருக்கு! நாம் உடலில் இருந்தாலும், ஆண்டவரில் இருந்தாலும் நாம் அவருக்கு ஏற்றவர்களாக இருக்க வேண்டும். இது நாம வைத்திருக்கும் பாஸ்போர்ட் அல்லது விசா போல. நாம் எங்கிருந்தாலும் இவை இரண்டும் இருந்தால், அந்த நாடு நமக்கு உரிமைகளைத் தருகின்றது. ஆக, வாழ்வில் நமக்கு உரிமைகள் வருவது நாம் ஆண்டவருக்கு உகந்தவராய் இருப்பதிலிருந்தே.

3. நன்மை தீமைகளுக்குக் கைம்மாறு. ஆண்டவரில் குடிபெயர்ந்தவுடன், நம் நன்மை, தீமைகளுக்கு கணக்கு கேட்கப்பட்டு, கைம்மாறு செய்யப்படும் என்று இறதியில் நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் ('புளியைக் கரைப்பது' என்பதும் ஒரு உருவகம்!) பவுலடியார். ஆனால், நாம் ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தால் இந்த கைம்மாறு பற்றிக் கவலைப்படத்தேவையில்லை. சிம்பிள் லாஜிக் இதுதான்: 'இறப்பிற்கு முன் உள்ள வாழ்வு இனிமையாக, இறைவனுக்கு உகந்ததாக இருந்தால், இறப்பிற்கு பின் உள்ள வாழ்வு பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை!' 'உடலில்' உகந்தவராக வாழ்பவருக்கு, 'ஆண்டவரில்' உகந்தவராக வாழ்வது எளிதுதானே!

Saturday, June 13, 2015

அன்பின் கோடி அற்புதர்


நாளை தூய அந்தோணியார் திருநாள்.

எனக்கு மிகவும் பிடித்த புனிதர் இவர். இவருடைய சுரூபம் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டே ஊர் சுற்றுவேன் சின்ன வயதில்.

இவரைத்தான் திருச்சபை 'அன்பின் கோடியற்புதர்' என்று பெயர்சூட்டி அழைக்கிறது. ஆனால் இன்று இந்த பெயரை பல புனிதர்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம்.

கடந்த ஆண்டு பதுவை நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மிக அழகான இடம். சின்ன கிராமம். இன்று கொஞ்சம் நகரமாயிருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் அந்தோணியார் இன்னும் அங்கே வாழ்ந்து கொண்டிருப்பது போல ஒரு உற்சாகம் நம்மைப் பற்றிக்கொள்ளும்.

இன்று பெரும்பாலும் புனிதர்களை வெறும் ரெகமண்டேஷன் லெட்டர் தரும் ஒரு எம்.எல்.ஏ-வாக மட்டுமே பார்க்கத் தொடங்கிவிட்டோம். அல்லது அவர்களை மேலே நிற்க வைத்து, நாம் கீழே நின்றுகொண்டு, 'உங்களைப் போல நாங்க ஆக முடியாது!' என்று அந்நியப்படுத்திவிடுகிறோம்.

அன்றாட வாழ்க்கையை திறம்பட வாழ்ந்தாலே, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நிறைவாக செய்தாலே நாமும் அன்பின் கோடியற்புதர்களே!

Friday, June 12, 2015

அறிவுக்கு எட்டாத இந்த அன்பை

'இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர்மேல் இயேசு அன்புகொண்டிருந்தார்.' (யோவான் 13:23)

'ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும், தண்ணீரும் வடிந்தன.' (யோவான் 20:34)

'பின்னர் இயேசு தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு.' என்றார்.' (யோவான் 20:27)

நாளை இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

மனித உருவில் இறங்கி வந்து கடவுளின் இதயத்தை நமக்குக் காட்டிய இயேசுவுக்கு நாம் எடுக்கும் விழா இது.

மூளைதான் மனித சிந்தனை, உணர்வு என அனைத்துக்கும் காரணம் என்று இன்று அறிவியல் சொன்னாலும், இதயம் என்பது வெறும் இரத்தத்தை சுத்திகரிக்கும் எந்திரம் என்று சொன்னாலும், இதயம் உணர்வுகளின் உறைவிடமாகவே கருதப்படுகிறது.

இதயம் அன்பிற்கு அடையாளமாகவும், அன்பில்லாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் அல்லது கடினமான இதயம் கொண்டவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். 

மேற்சொல்லப்பட்ட மூன்று இறைவார்த்தைப் பகுதிகளைக் கவனித்தீர்களா? மூன்றுமே யோவான் நற்செய்தியாளரால் எழுதப்பட்டவைதாம். மனிதர்கள் இயேசுவின் இதயத்தை நெருங்குவதை மூன்று படிகளாக இங்கே நாம் காணலாம். முதலில், இயேசுவின் நெஞ்சில் சாய்தல். இரண்டாவது, அவரின் இதயத்தை மற்றொரு பொருளால் (ஈட்டியால் தொடுதல்). மூன்றாவது, அவரின் இதயத்தை விரலால் தொடுதல். இந்த மூன்றுமே நாம் கடவுளை நெருங்கிச்சென்றுவிட்டோம் என்றே காட்டுகிறது. 

ஆக, இயேசுவின் இதயத்தை நாம் கொண்டாடுகிறோம் என்றால் இந்த மூன்று படிகளில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று நம்மையே கேட்பது அவசியம்.

எபேசு நகரத்திருச்சபைக்கு பவுலடியார் மிக அழகாக வலியுறுத்துகின்றார்:

'... கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!' (எபேசியர் 3:18)


Wednesday, June 10, 2015

எறும்பைப் பாருங்கள்!

'எறும்பைப் பாருங்கள். அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்.
அதற்குத் தலைவனுமில்லை. கண்காணியுமில்லை. அதிகாரியுமில்லை.
எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்.
அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.'
(நீமொ 6:6-8)

கடனைப் பற்றிப் பேசிய நீதிமொழிகள் நூல் ஆசிரியர் தொடர்ந்து சோம்பலைத் தவிர்ப்பதைப் பற்றிச் சொல்வதோடு, சுறுசுறுப்பின் அடையாளமாக எறும்புகளை முன்வைக்கின்றார்.

எறும்புகள் ஏறக்குறைய எல்லா மரபுகளிலும் சுறுசுறுப்பின் அடையாளமாகச் சொல்லப்படுகின்றன. மிக மிக பலவீனமான உயிர்கள் இந்த எறும்புகள். ஒரே ஒரு விரலை வைத்து இழுத்து ஒரு 1000 எறும்புகளை ஒரே நேரத்தில் நாம் கொன்றுவிட முடிகிறது. இப்போ எறும்பு சாக்பீஸ், எறும்பு பவுடர், ஏன் எறும்பை விரட்டும் செயலிகள்கூட ஆன்ட்டிராய்ட் மற்றும் ஐஃபோன்களில் வந்துவிட்டன.

இந்த எறும்புகள் இப்படி மாய்ந்து, மாய்ந்து சேர்த்து வைக்கின்றதே! ஆனால், ஒரு மழை பெய்தால் எல்லாம் நனைந்துவிடும்தானே! மேலும், இந்த எறும்பு இருப்பதே சிறியது. அதன் வயிறு இன்னும் சிறியதாக இருக்கும். அந்தச் சின்ன வயிற்றை நிரப்ப அது ஓடிக்கொண்டே இருக்கின்றது.

சித்தெறும்பு, கட்டெறும்பு, சாமி எறும்பு, விஷ எறும்பு என நாம் எந்தவகை எறும்பைப் பார்த்தாலும், ஒன்று அவைகள் ஓடிக்கொண்டிருப்பதாகப் பார்க்கிறோம். அல்லது இறந்து கிடப்பதாகப் பார்க்கிறோம். எறும்பு தூங்குவது போலவோ, அல்லது ஒரு இடத்தில் நின்றுகொண்டிருப்பதுபோலவோ நாம் பார்த்ததில்லை. அவைகள் எப்போதுதான் தூங்கும்?

ஆக, எறும்பு என்றால் இயக்கம். ஒன்று இயங்க வேண்டும். அல்லது இறக்க வேண்டும். இதுதான் அவைகளின் பாலிசி. இரண்டிற்கும் இடையே 'வயா மீடியா' கிடையாது.

சுறுசுறும்பு என்பதன் அர்த்தம் இதுதான். வாழ்வில் இயக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது முடிந்தால், அடுத்த வேலை வந்துவிடுகிறது என்று புலம்புவார்கள் சிலர். ஆனால், அதுதான் வாழ்க்கை. ஒரு அடி முடிய, நாம் அடுத்த எடி எடுத்து வைப்பதில்லையா? ஒரு சுவாசம் முடிய, நாம் அடுத்த முறை சுவாசிப்பதில்லையா? ஆக, அடுத்தடுத்து வாழ்க்கை நிகழ்வுகள் வந்து கொண்டேதான் இருக்கும். நாம் இயங்க வேண்டுமா அல்லது ஒரே இடத்தில் இருக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.

இன்று நாம் பரபரப்புதான் சுறுசுறுப்பு என நினைக்கின்றோம். நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கிறோம். இரவில் உட்கார்ந்து, 'இன்று நான் என்ன செய்தேன்?' என்று சுயஆய்வு செய்தால் நம்மிடம் பதில் இல்லை.

வாழ்வின் இயக்கம் நம் இலக்கு நோக்கி நம்மை நகர்த்தியது என்றால் நாமும் எறும்புகளே!


Tuesday, June 9, 2015

நீ கடன் வாங்கினால்

'பிள்ளாய்! நீ கடனுக்காக பொறுப்பேற்றால்,
நீ கடன் வாங்கினால்,
அன்னியர் ஒருவருக்குப் பிணையாய் நின்றால்,
உன் வார்த்தைகளை முன்னிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,
உன் வாய்ச்சொல்லால் நீ பிடிபட நேரிட்டால்,
... ... ...
அவரை வருந்தி வேண்டிக்கொள்.
அதைச் செய்யும்வரை கண்ணயராதே.
வேடன்கையில் அகப்பட்ட மான்போலவும்,
கண்ணியில் சிக்கிய குருவிபோலவும் இருப்பாய்.
உன்னை விடுவித்துக்கொள்ளப்பார்!'
(நீதிமொழிகள் 6:1-5)

'கடன் கொடுக்காதே! கடன் வாங்காதே!
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும். நண்பனும் போய்விடுவான்!'
என்பார் ஷேக்ஸ்பியர்.

கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். சிலர் கடனே வாங்கக் கூடாது என்பார்கள். சிலர் அவசியம் ஏற்படும்போது வாங்கலாம் என்பர். சிலர் எளிதாகக் கடன் கொடுப்பர். சிலர் அதிகம் வட்டி வாங்குவர். எல்லா நாடுகளின் மேலும் கடன்கள் இருக்கின்றன. நம் ஒவ்வொருவர் மேலும் நம் நாடு கடன் வாங்கியிருக்கிறது. நகைக்கடன், தனிநபர்கடன், வட்டியில்லாக்கடன், கல்விக்கடன். திருமணக்கடன், கடன் அட்டை என வங்கிகளும், வணிக நிறுவணங்களும் கடன்களைத் தருகின்றன.

பிள்ளைகளுக்கு பெற்றோர் மேல் உள்ள கடன், பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மேல் உள்ள கடன். 'உன் அன்பிற்கு வாழ்நாள் முழுவதும் நான் கடன்பட்டிருக்கிறேன்' எனச் சொல்லும் அன்புக்கடன் என கடனுக்கு மற்ற அர்த்தங்களும் உள்ளன.

பொருளாதார அல்லது பணப்பரிவர்த்தணை சார்ந்த கடனைப் பற்றிய இன்றைய நீதிமொழிகள்பகுதி பேசுகின்றது.

கடன் என்றால் என்ன? ஒருவருக்கு ஒரு தேவை இருக்கிறது. ஆனால் அந்த தேவையை சந்திக்க அவரிடம் பொருள் இல்லை. தேவையின் நிர்பந்தத்தால் அவர் கடன்பட்டு பொருளைப் பெற்றுக்கொள்கிறார். பின் பொருள் வந்தவுடன் அவர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்து விடுகிறார். இந்தக் கடனைத் தவிர்க்க அவர் பொருளைத் தவிர்க்கலாம். சில நேரங்களில், கடன் தானாகவே தரப்படும். எப்படி? கடைக்குப் போகிறோம். இரண்டு வடை வாங்க 10 ரூபாய் எடுத்துப்போகிறோம். அன்றையதினம் பனியாரமும் இருக்கின்றது. ஆனால் நம்மிடம் காசு இல்லை. கடைக்காரர் தானாகவே 'சும்மா வாங்கிட்டு போங்க! அப்புறம் கொடுங்க!' என்று சொல்கிறார். இது நம்மேல் தானாகவே வரும் கடன். இதைத் தவிர்க்க எளிய வழி. பனியாரத்தைப் பார்த்தவுடன் நாக்கை அடக்கிக்கொள்வது. வாகனக்கடன் கூட ஏறக்குறைய இதுபோலத்தான்.

கடன் என்று வரும்போது தவணை என்ற ஒன்றும், வட்டி என்ற ஒன்றும் ஒட்டிக்கொள்கிறது. வடைக்கடைக்காரர் எத்தணை தவணையில் நாம் கட்ட வேண்டும் என்றும், எவ்வளவு வட்டி என்றும் நமக்குச் சொல்வதில்லை. ஆனால், நம் தொடர் வருகையே அவருக்கு வட்டி. எல்லாரையும் பார்த்து வடைக்கடைக்காரர் 'அப்புறம் கொடுங்க!' என்று சொல்வதில்லை. பரிச்சயமே அவரின் தாரள மனதைத் தூண்டுகிறது. ஆனால், வங்கிகள் தவணை மற்றும் வட்டி ஆகியவற்றை நமக்கு எழுத்தில் கொடுத்து, கையெழுத்தும் வாங்கிக்கொள்கின்றன.

'அடுத்தவரிடம் கடன் பட்டால் அன்று இரவே அடைத்துவிட வேண்டும்' என்று சொல்வார் என் அம்மா. ஏனென்றால் அந்த இரவில் நமக்கு ஏதாவது ஆகி, கடனைக் கொடுக்க இயலாமல் போய்விட்டால், 'பாவி! கடனைக் கொடுக்காமலேயே போய்விட்டான்!' என்று மற்றவர்கள் சொல்ல நேரிடுமாம்.

'கடன்பட்டார் நெஞ்சம்போல்!' என்ற சொல்லாடலை, நீதிமொழிகள் நூல் 'மான்', 'குருவி' என்ற இரண்டு உருவகங்களாகத் தருகின்றது. மானும், குருவியும் இயல்பாகவே மென்மையானவை. இப்பொழுது கண்ணியிலும், வலையிலும் அகப்பட்டுவிட்டால் இன்னும் வலுக்குறைந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ஆக, கடன் தருபவர் வலிமையானவர். கடன் பெறுபவர் வலுக்குறைந்தவர். மானையும், குருவியையும் வேடன் என்னவும் செய்ய முடியும்! அதுபோலத்தான் கடன் தருபவரும் என்னவும் செய்ய முடியும்!

இன்றைய இளைய தலைமுறை நம் பெற்றோர் சம்பாதித்;ததை விட மாதாமாதம் 10 மடங்கு கூட சம்பாதித்தாலும், மாத இறுதியில் ஒன்றும் கையில் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதற்கிடையில் 21 வயதில் ஒரு இளைஞன் வேலைக்குச் செல்லத் தொடங்கும்போதே, வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் சுமை. தன் வாழ்நாளைக் கடனைக் கட்டுவதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கடைக்குப் போய்தான் வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, கைபேசியிலேயே வாங்க முடிவதால், நினைத்தவுடன் எல்லாவற்றையும் வாங்க நினைக்கின்றோம்.
வங்கிகளும், வணிக நிறுவனங்களும் வேடன் போல வலைகளை வைத்துக்கொண்டு நிற்கின்றன.

'கடன் வாங்காதே! கடன் கொடுக்காதே!'


Monday, June 8, 2015

நல்ல தண்ணீரையே பருகு

உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி.
உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு.
உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா?
உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
(நீதிமொழிகள் 5:15-16)

இன்று கிரேக்க மொழி தேர்வு இருந்தது. தேர்வில் படிக்க வேண்டிய பகுதிகளுள் ஒன்று ரூத்து நூல். ரூத்து நூலை கடந்த ஆண்டு எபிரேய மொழியில் படித்தோம். இந்த ஆண்டு அதே நூல் கிரேக்க மொழிபெயர்ப்பில் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதைப் பார்ப்பதற்காக இந்த நூலை எடுத்துப் படித்தோம்.

எபிரேய மொழியின் பதிப்பிற்கும், கிரேக்க மொழியின் பதிப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, 'எலிமேலக்' என்னும் பெயர் எபிரேய பதிப்பிலும், 'அபிமேலக்' என்னும் பெயர் கிரேக்க பதிப்பிலும் இருக்கிறது. 'எலிமேலக்' என்றால் 'என் கடவுள் என் அரசர்' என்றும், 'அபிமேலக்' என்றால் 'என் அப்பா என் அரசர்' என்றும் பொருள். இந்த இரண்டு அர்த்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே. இப்படி நிறைய சொல், வாக்கிய அமைப்பு மாற்றங்கள் இருக்கின்றன.

மேலும், ரூத்து நூலை எபிரேயத்தில் எழுதப்பட்ட ஒரு erotic literature (இன்பம்தரும் இலக்கியம் - இப்படி மொழிபெயர்க்கலாமா?) என்று பலர் கருதுகின்றனர். நிறைய இடங்களில் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன:

'நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார்' (1:21) என்று நகோமி தன் ஊர் மக்களிடம் சொல்கின்றார். நகோமி பெத்லகேமை விட்டுச்சென்றதே இங்கு ஒன்றுமில்லாமல் இருந்ததால்தான். பெத்லகேமில் பஞ்சம் நிலவியதால், மோவாபு நாட்டிற்குப் பஞ்சம் பிழைக்கச் செல்கின்றார். அப்படியிருக்க அவர் 'நிறைவுடன் சென்றேன்' என எப்படிச் சொல்ல முடியும்? பதில் ரொம்ப சிம்பிள் தான். நகோமி மோவாபு நாட்டில் குடியேறும்போது அவருக்கு இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். பின் கொஞ்ச நாட்களில் இறந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாசூக்காக ஆசிரியர் எழுதுகின்றார்: 'நான் நிறைவயிறாய் (கர்ப்பமாய்) இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் வெறுமையாய் (மகன்கள் எல்லாம் இறந்து போய்) திரும்பிவரச் செய்தார்' எனச் சொல்வதாக எழுதுகின்றார்.

'அவர் உறங்கியதும், நீ சென்று அவர் கால்களை மூடியிருக்கும் போர்வையை விலக்கிவிட்டு, அங்கேயே படுத்துக்கொள்' (3:4) என நகோமி தன் மருமகளிடம் சொல்லி அனுப்புகின்றார். தமிழில் அடக்க ஒடுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். உண்மையில் எப்படி இருந்திருக்க வேண்டும் மொழிபெயர்ப்பு? 'அவர் உறங்கியதும். நீ சென்று அவரின் பாதங்களை விலக்கி, அவரின் போர்வைக்குள் படுத்துக்கொள்!' 'பாதம்' என்பது 'ஆண்குறிக்கான' euphemism. Euphemism என்றால் தெரியும்தானே! பொதுவில் சொல்ல கூடாத ஒன்றை அல்லது சொல்வதற்கு அமங்கலமான ஒன்றை மங்கலமாகச் சொல்வது: 'அவர் இறந்தார்' என்று சொல்வதற்கு பதிலாக 'அவர் இயற்கை எய்தினார்' என்று சொல்வதும் ஒரு யுஃபமிசம்தான். ஆக, பாதம் என்பது யுஃபமிசம் என்றால் ரூத்து என்ன செய்திருப்பார் அல்லது என்ன செய்திருக்க வேண்டும் என்பதை நாமே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

எல்லாத்துக்கும் இப்படி sexist அர்த்தம் கொடுக்குறீங்களே எனச் சொல்ல வேண்டாம். 

விவிலியம் ஒரு இலக்கியமாக பார்க்கப்படும்போது இலக்கியக்கூறுகள் அங்கே பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நாம் இரசிக்க வேண்டும். வெறும் ஆன்மீக அர்த்தம் கொடுத்தால் ரொம்ப ட்ரையாக இருக்கும்.

இன்று நாம் எடுத்துள்ள நீதிமொழிகள் நூல் பகுதியிலும் உருவகம்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலோட்டமாக வாசித்தால் நம் குடத்தில் உள்ள நீரை மட்டும் பருக வேண்டும் என்று ஆசிரியர் சொல்வதாக நினைக்கத் தோன்றும். ஆனால், இங்கே நீர்த்தொட்டி என்பது 'பெண்ணையும்', 'ஊற்றுநீர்' அல்லது 'வாய்க்கால்' என்பது 'ஆணையும்' குறிக்கின்றது. இந்த உருவகங்கள் எந்த அளவிற்கு இந்த ஆசிரியர்கள் அறிவியல் அறிவையும் பெற்றிருந்தார்கள் என்றும் குறிக்கின்றது. நீர்த்தொட்டி எப்போதும் தண்ணீர் கொண்டிருப்பதில்லை. மேலும், ஆண்குறி ஆண்களின் கழிவுநீர் வெளியேற்றும் வாய்க்காலும்கூட. ஆக, விவிலியத்தை இலக்கியமாகப் பார்க்கும்போது, இதை எழுதியவர்களின் உலக அறிவும் நமக்குத் தெளிவாகிறது.


Sunday, June 7, 2015

நீங்கள் தலித்தா?

'நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்' என்றார்... 'நான் ஒன்றும் உண்ணவில்லை. நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்து கொள்ளுங்கள்'.
(தோபித்து 12:15,19)

நேற்று தொடங்கிய இரபேல் நிகழ்வை இன்று முடிப்போம்.

இரபேல் தான் ஒரு வானதூதர் என்பதை வெளிப்படுத்துகிறார். தன்னை ஏழு வானதூதர்களுள் ஒருவராகக் குறிப்பிடுகிறார். இசுலாம் மதமும், யூத மதமும் ஏழு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள் மூன்று என அறிக்கையிடுகின்றனர்.

தன்னை வெளிப்படுத்துமுன் இரபேல் தோபித்து குடும்பத்தாருக்கு அறிவுரையும் சொல்கின்றார். அவரின் அறிவுரைகள் மூன்று விடயங்களை மையப்படுத்தியதாக இருக்கின்றன:

அ. அநீதியாகச் சொத்து சேர்க்கக் கூடாது.
ஆ. ஆண்டவரைப் புகழ வேண்டும்.
இ. இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும்.

இந்த மூன்றையும் இரபேல் சொல்லக் காரணம் என்ன?

தோபித்து நூல் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கி.மு. 721. இந்த ஆண்டில் தான் அசீரியப் படையெடுப்பு நிகழ்ந்து இஸ்ரயேல் நாடு அழிக்கப்பட்டு, யூதர்கள் நாடுகடத்தப்பட்டனர். ஆக, எங்கு பார்த்தாலும் இரத்தம், கண்ணீர், இழப்பு.

இந்தச் சூழலில் 'எரிகிற வீட்டில் பிடுங்குகிற மட்டும் லாபம்' என்பது போல, இறந்தவர்களின் உடைமைகளை இருந்தவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். மேலும், இறந்தவர்கள் தெருக்களில் வானத்துப் பறவைகளுக்கு உணவாக விழுந்து கிடந்தனர். அவர்களை அடக்கம் செய்வார் யாருமில்லை. மேலும், எரோபாவாம் மன்னன் பெத்தேலில் கட்டிய ஆலயமும் இந்த படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டது. ஆகவே, கோயில் இல்லையென்றாலும் நீங்கள் ஒரே குடும்பமாக ஆண்டவரை பாடிப்புகழுங்கள் என அறிவுறுத்துகின்றார் இரபேல்.

ஆக, ஆண்டவரின் தூதர்கள் அந்தந்த நேரத்திற்கு தேவையானவற்றை அறிவுறுத்த வருகிறார்கள். ஒருவேளை இன்று இரபேல் நம்ம ஊருக்கு வந்தால், 'மேகி நூடுல்ஸ் சாப்பிடாதீங்க! தலைவர்களைப் பார்த்து தேர்ந்தெடுங்க! ரொம்ப வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதீங்க!' என்றுதான் சொல்வார்.

இன்று எங்கள் பங்கில் நற்கருணைப்பவனி இருந்தது. இந்த நிகழ்வில் ஒன்று பிடிக்கவில்லை. மற்றொன்று பிடித்தது.

பிடிக்காததை முதலில் சொல்லிவிடுகிறேன். இன்றைய நிகழ்வுக்குத் தலைமை வகித்தவர் மேதகு கர்தினால் ஃபிலோனி. இவர் வத்திக்கானின் மறைபரப்பு அமைச்சகத்தின் தலைவர். இவர்தான் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன்-அமெரிக்க நாடுகளிலிருந்து செல்லும் 'ப்ராஜக்ட்களுக்கு' பணம் தருபவர். இவரோட பணத்தை இவர் தருவதில்லை. யாராரோ கொடுத்ததை இவர் பகிர்ந்து கொடுப்பார்.

'சில பெண்களைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும். சில பெண்களைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றும்!' என்பார்கள். சிலரின் பிரசன்னம் காந்தம்போல நம்மை இழுக்கும். சிலர் சிரித்து சிரித்து பேசினாலும், அவரின் கண்கள் அவரின் கள்ளத்தனத்தைக் காட்டிவிடும். நம்ம கர்தினால் இரண்டாம் வகை. கைகுலுக்கியதைத் தவிர ஃபோட்டோ எடுக்கணும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை.

'வணக்கம். கர்தினால்! எப்படி இருக்கீங்க?' என்றேன்.

'வணக்கம்!' என்றார்.

'நீங்க எந்த நாடு?' என்று கேட்டார்.

'இந்தியா!' என்றேன்.

'நீங்கள் தலித்தா?' என்றார். 'அங்கே இன்னும் தலித் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்களின் சாதிய அமைப்புக்குள் வராதவர்கள். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தலித்துகள்....' என்று சொல்லிக்கொண்டே போனார்.

'நான் தலித்தா இருப்பது தவறா?' என்றேன்.

என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

இவர் இப்படிப் பேசுவதில் எனக்கு அவர் மேல் கோபம் இல்லை. என் மேலும், நான் ஒரு காலத்தில் எழுதிய ப்ராஜக்ட் மேலும்தான் கோபம் வந்தது. அப்படித்தானே நாங்கள் எழுதுகிறோம். எங்களிடம் ஒன்றுமில்லை என்றும், நாங்கள் சாலையில் தூங்குகிறோம் என்றும், ஒருவேளை உணவே அரிது என்றும் எழுதி, சின்னப் பிள்ளைகளை கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து, இடிந்த கட்டிடத்தின் பின்புலத்தில் ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறோம். அவர்கள் நம்மை அப்படித்தானே நினைப்பார்கள். பின் பணம் வாங்கி வேலை முடிந்தவுடன் அவர்களுக்கு கல்வெட்டு வேறு. முட்டாள்தனம்!

இந்தக் கல்வெட்டை அவர்கள் நம்ம ஊரில் வைப்பதற்கான விளம்பரக் கட்டணம்தான் அவர்கள் அளிக்கும் காசு என்று நான் சொல்வேன். சும்மாவா காசு கொடுக்குற! எங்கள் தரவுகளையெல்லாம் வாங்கிக்கொண்டு வாய்க்கரிசி போடுறமாதிரி போடுற! என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

'இங்கே படிக்க வருபவர்கள் எல்லாம் எங்கள் நாட்டின் வளங்களைத் திருடும் திருடர்கள்!' என்று தொடர்ந்து வம்பிழுத்தார். 'உங்கள் நாட்டின் ஆயர்களும் திருடர்கள். அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது. இங்கே வந்து கைநீட்டுகிறார்கள்!' என்று சொல்லிக் கொண்டே போனார். கஷ்டப்பட்டு நானும் மௌனமாக நின்றேன். காலில் ஏதோ அசிங்கத்தை மிதித்தது மாதிரி இருந்தது.

தன்மானம் இழந்துதான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்றால் அந்த மதம் தேவையில்லை.

இவ்வளவு பேசி முடித்துவிட்டு நல்ல கோல்டன் நிற பூசையுடையை போட்டுக்கொண்டு சிலுவை போட்டுக்கொண்டே பவனியில் சென்றார். இவர் இன்று கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்ன அர்த்தத்தை எனக்குத் தரும்? 'இடது கை செய்வது வலது கைக்குத் தெரியக்கூடாது!' என்ற இயேசுவைப் பற்றி இவர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

இரண்டாவதாக, பிடித்த விடயம்.

பவனி செல்லும் நேரம். ரொம்ப வெயில். அருட்பணியாளர்களுக்கு முன்னால் சென்றவர்கள் கடந்த வாரத்தில் முதல் நற்கருணை வாங்கியவர்கள். அந்த அரும்புகளின் கூட்டத்தில் இருந்த ஒரு இளவலின் அப்பா பவனி தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு வாட்டர் பேக் கொண்டு வந்து கொடுத்தார். கொடுத்து விட்டு, கொஞ்சம் தள்ளியே உடன் வந்தார். அவரின் கண்கள் முழுவதும் தன் மகளின்மேல் தான் இருந்தது. நடந்து சென்றுகொண்டேயிருக்க, சில நிமிடங்கள் கழித்து அவளிடம் வந்து, அவளின் தலையில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு வைத்தார். முகம் துடைத்துவிட்டார். இவளின் கையில் மட்டும் வாட்டர் பேக். மற்ற அரும்புகள் வாடிக்கொண்டே நடப்பதைப் பார்க்கின்றார். பவனி செல்லும் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தார். பவனியில் வந்த அனைத்து அரும்புகளுக்கும் ஒரு பாட்டில் வீதம் 20 பாட்டில்கள் வாங்கி வந்தார். அவர்கள் எல்லாருக்கும் உடைத்துக் கொடுத்தார். பவனி முடியும் நேரம் அவரைக் காணவில்லை. அந்த இளவலையும் காணவில்லை. எங்கிருந்தோ வந்தவர், வந்த சில மணித்துளிகளில் குழந்தைகளின் தாகத்தைத் தணித்துவிட்டார். இந்தக் குழந்தைகளுக்கு இன்று இறைவன் தண்ணீரில்தான் தன் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார் என நினைத்துக்கொண்டேன்.

தாகம் தணித்தவர் இரபேலா? அல்லது தங்க உடை அணிந்தவர் இரபேலா?


Saturday, June 6, 2015

நலமே சென்று வருக!

அதற்கு தோபியா, 'அப்பா, அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கட்டும்?
நாங்கள் கொண்டு வந்த தொகையில் பாதியை அவருக்குக் கொடுத்தாலும் தகும்.
ஏனெனில் அவர் என்னை நலமே திரும்ப அழைத்து வந்து சேர்த்தார்.
என் மனைவியை நலம் பெறச் செய்தார்.
பணத்தை என்னுடன் கொண்டுவந்தார்.
உங்களுக்கு நலம் அளித்தார்.
இவற்றுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கொடுக்கலாம்?'
என்று கேட்டார்.
தோபித்து அவரிடம், 'மகனே அவர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைப் பெறுவதற்கு
அவருக்கு தகுதி உள்ளது' என்றார்.
பின்னர் இரபேலை அழைத்து, 'நீர் கொண்டுவந்த அனைத்திலும் பாதியைச் சம்பளமாக எடுத்துக்கொண்டு நலமே சென்று வருக!' என்று கூறினார்.
(தோபித்து 12:2-5)

தோபித்து கதையை நாம் நிறைய நேரங்களில் வாசித்திருப்போம். அல்லது கேட்டிருப்போம். இன்று மேற்காணும் பகுதியை முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டோம்.

தோபியோ தன்னோடு உடன் வந்த ஒரு மனிதருக்கு (இரபேல் இன்னும் வானதூதர் என்று அவருக்குத் தெரியாது!) செய்ய வேண்டிய கடனைச் செய்கிறார்.
அவரின் உடனிருப்பால் தனக்கு நிகழ்ந்த அனைத்தையும் பட்டியலிடுகின்றார்.
அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என தன் அப்பாவிடம் கேட்கிறார்.
பாதியை எடுத்துக்கொண்டு சென்று வருக என்று கூறுகின்றார்.

இந்தப் பகுதியை உன்னிப்பாகக் கவனித்தால், கதையாசிரியரின் புலமை வெளிப்படுகிறது. எப்படி? இவ்வளவு நாட்களாக பார்வையிற்றிருந்த தோபித்து, பார்வை பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிற தோபியா கண்ணிருந்தும், தனக்கு முன்னிருப்பவர் தூதர் என்பதை கண்டுகொள்ள மறுக்கிறார். அல்லது இயலாமல் இருக்கிறார்.

இவ்வளவு காரியங்களையும் சாதாரண ஒரு நபர் செய்ய முடியுமா? தோபியாவுக்கு ஏன் தோன்றவில்லை இது கடவுளின் தூதர்தான் என்று? கடவுளின் தூதரின் வேலைக்கு சம்பளம் பேசுவதோடு மட்டுமல்லாமல், 'சென்று வருக!' என்றும் சொல்லயனுப்புகின்றார்.

நம் காவல்தூதர்கள் நம்மோடு உடன் வருகிறார்கள் என்று நமக்கு சின்ன வயதில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஆனால், இதை நாம் எந்த அளவிற்கு நம்புகின்றோம்? அல்லது உணர்கின்றோம்?

இன்றைய வாசகம் எனக்கு இரண்டு சவால்களை வைக்கின்றது:

அ. வானதூதரின் பிரசன்னத்தை என் வாழ்வில் கண்டுகொள்வது. வானதூதர் என்றால் இரண்டு இறக்கைகள் வைத்துக்கொண்டு, வெள்ளைக் கலரில் பறந்து என் முன்னும், என் பின்னும் வருவார் என்பது பொருளல்ல. என்னைச் சுற்றிலும் அவர்கள் நடமாடிக்கொண்டே இருக்கின்றார்கள். எனக்கு உணவு தயாரிப்பவர், என் அறையை சுத்தம் செய்பவர், எனக்கு வாகனம் ஓட்டுபவர், எனக்கு பாடம் நடத்துபவர், என்னைப் பார்த்து புன்னகை செய்பவர், என் தோல்வியில் உடன் நிற்பவர், என் வெற்றியில் மகிழ்பவர் - இவர்கள் எல்லாருமே இரபேல்கள் தான்.

ஆ. 'உனக்குடையதைப் பெற்றுக்கொண்டு சென்று வருக!' - என் வேலை முடிந்தவுடன் பல நேரங்களில் வாழ்க்கைப் பயணத்தில் என் உடன் வருபவருக்கு நான் சொல்வது இதுதான். 'உனக்குரியதைத் தான் நான் கொடுக்கிறேனே!' என்று தராசில் வைத்துப் பார்ப்பதும், 'உன் பிரசன்னம் போதும்! சென்று வரலாம்!' என்று சொல்வதும் தவறுதானே. தோபியாவுக்குத் தெரியாதா வாழ்வின் சவால்கள் இன்னும் வருமென்று? அப்படியிருக்க, இரபேலைப் பார்த்து 'எங்களோடு தங்கும்!' என்று சொல்லியிருக்கலாமே! 'இவ்வளவு நன்மைகள் செய்த இரபேல் இனி இடைஞ்சலாகவா இருக்கப் போகிறார்?'


Friday, June 5, 2015

விவேகத்தையும் முன்மதியையும்

'பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்.
இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்திவை.
இவை உனக்கு உயிராகவும்,
உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்.
உன் கால் ஒருபோதும் இடறாது.
நீ படுக்கப்போகும்போது உன் மனத்தில் அச்சமிராது.
உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.'
(நீதிமொழிகள் 3:21-24)

கடந்த வாரம் இத்தாலியின் ஒரு அருட்பணியாளர் ஒருவர் ஒரு பெண்ணுடன் கடற்கரைக்குச் சென்றிருந்த ஃபோட்டோ நாளிதழ்களில் வெளியானது. சாப்பாட்டு அறையில் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த எங்கள் பங்குத்தந்தை சொன்னார்: 'நட்பு வச்சுக்கலாம். அதுக்காக இப்படியா ஓப்பனா? அவரிடம் விவேகம் இல்லை!' என்றார். ஆக, தவறு செய்யலாம். மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வதே விவேகம் என்ற புதிய சிந்தனை இந்த நாட்களில் உருவாகி வருவது தவிர்க்க முடியாத ஒன்று.

விவேகம் பற்றிச் சொல்லும்போது, இயேசு பாம்பைப் போல விவேகம் உள்ளவராக இருங்கள் என்று சொல்கின்றார். அதன் அர்த்தம் எனக்கு இன்னும் புரிந்தபாடில்லை. முன்மதிக்கு 'பத்து கன்னிப்பெண்கள்' உவமையைத் தருகின்றார். ஆக, விவேகம் மற்றும் முன்மதி இயேசுவின் போதனையிலும் காணக்கிடக்கிறது.

யோசேப்பைப் பற்றிச் சொல்லும்போது, அவரை திருக்குடும்பத்தின் விவேகமான கண்காணிப்பாளர் என்று நாம் சொல்கிறோம்.

'வேகம்' இருக்கக் கூடாது. 'விவேகம்' இருக்க வேண்டும். இப்படி டி.ஆர்.ஆர் பாணியிலும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இந்த இரண்டும் என்ன என்பதைப் பற்றி நீதிமொழிகள் நூல் சொல்லவில்லையென்றாலும், இவை இருந்தால் என்ன பயன் என்பதை அழகாகச் சொல்கிறது.

முதலில் அச்சம் போகும். 'குற்றம் செய்த மனம் குறுகுறுக்கும்!' என்றும், 'மடியில் கனம், வழியில் பயம்!' என்றும் சொல்வார்கள். விவேகமும், முன்மதியும் இருந்தால் நாம் எதைப்பற்றியும், நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அச்சம் விலகும் இடத்தில் தூக்கம் நம் கண்களை எளிதாகத் தழுவிக்கொள்ளும்.