Friday, January 8, 2016

உடன் நிற்க

'மணமகள் மணமகனுக்கே உரியவர்.
மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்.
அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார்.
என் மகிழ்ச்சியும் இது போன்றது.
இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது.
அவரது செல்வாக்கு பெருக வேண்டும்.
எனது செல்வாக்கு குறைய வேண்டும்.
(காண். யோவான் 3:22-30)

நாளைய நற்செய்தி வாசகத்தில் வரும் யோவானின் மேற்காணும் வார்த்தைகள் பெரிய வாழ்க்கை தத்துவத்தை நமக்கு சொல்லித் தருகின்றன.

'மற்றவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடன் நிற்க முடிகின்ற நம்மால், அவர்களின் மகிழ்ச்சியில் அவர்களோடு உடன் நிற்க முடியவில்லை.'

இது உண்மைதானே.

ஒருவர் அழுதால் அவரோடு சேர்ந்து நாம் அழ முடிகிறது. ஆனால், நம் அடிமனதில், 'அவரின் துன்பம் நமக்கு இல்லை' என்ற சின்ன சந்தோஷமும் மின்னி மறைகிறது.

ஒருவர் மகிழ்ந்தால், உயர்வு பெற்றால், நன்றாக இருந்தால், நாம் அவருடன் உடன் நிற்க முடிவதில்லை. நாம் அவரின் நிலையோடு நம்மை ஒப்பிடத் தொடங்குகிறோம். அந்த ஒப்பீடு பொறாமையாக உருவெடுக்கிறது. நமக்கு நாமே ஏதோ சமாதானம் சொல்லிக் கொள்ளவும் நினைக்கிறோம்.

இந்த உணர்வை நாம் வெல்லாவிட்டால், இது காலப்போக்கில் பெரிய மனவருத்தமாக, ஏமாற்றமாக நம்மில் உருவாகிவிடும்.

அதற்கு யோவான் தரும் பாடங்கள் மூன்று:

அ. 'நான் யார் என்று அறிவது.' நான் மணமகனின் தோழன்தான், மணமகன் அல்ல என்று ஏற்றுக்கொள்கிறோம். தன்னை அறிதல்தான் முதல் படி. 'நானும் மணமகன்தான்!' என்று நாம் சொல்ல நினைப்பதுதான் பல நேரங்களில் ஏமாற்றங்களுக்கு, அதீத எதிர்பார்ப்புகளுக்கு வழி வகுக்கின்றது. 'நானும் நல்லா படிப்பேன்!' 'என்னிடமும் அந்த ஃபோன் இருக்கிறது!' 'எனக்கும் அவங்களைத் தெரியும்!' 'நானும் நிறைய காசு வச்சிருக்கிறேன்!' என்று நாம் 'ம்' போடும் எல்லா வாக்கியங்களும், நாம் இன்னும் சரியாக நம்மை அறியவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆ. 'இருக்கும் நிலையில் மகிழ்ச்சி காண்பது.' தோழனாய் இருப்பது தாழ்வாக இருந்தாலும், அதில் மகிழ்ச்சியைக் காண்பது மட்டுமல்லாமல், அந்த மகிழ்ச்சியில் நிறைவும் காண்கிறார். எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு டாக்டரேட் டிஃபென்ஸ் சமயத்திலும் மைக் ஏற்பாடு செய்யும் எங்கள் கல்லூரி பணியாளர் அந்தோனியோ ஒரு ஆச்சர்யமான மனிதர். அருள்பணியாளராக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்திற்காக அதிலிருந்து வெளியே வந்துவிட்டார். எங்கள் கல்லூரியில் படிப்பை தொடங்கியவர். பாதி வரைதான் அவரால் முடிக்க முடிந்தது. அட்மினிஸ்ரேடர் வேலை காலியாக இருந்ததால் படிப்பை விட்டுவிட்டு அவர் அதில் சேர்ந்துவிட்டார். அவர் மைக் ஏற்பாடு செய்யும்போதெல்லாம் எனக்கு இந்த கேள்வி வரும்: 'அடுத்தவரின் படிப்பு நிறைவிற்கு மைக் ஏற்பாடு செய்யும் இவர் தன் படிப்பு முடியாமல் போனதே என்று என்றாவது வருந்துவாரா?' இல்லை என்றே நினைக்கிறேன். தான் வாழ்வில் தோற்றுவிட்டோம் என்றோ, தாழ்ந்துவிட்டோம் என்றோ அவர் என்றும் எண்ணியதில்லை. தான் இருக்கும் இடத்தில், வேலையில் மகிழ்வைக் காண்பதோடு மட்டுமல்லாமல் அதை நிறைவாகவும் காண்கிறார்.

இ. 'அடுத்தவரின் வளர்ச்சிக்கு உதவுவது.' இந்தாண்டு புத்தாண்டு வாக்குறுதி எடுத்தபோது நான் இப்படி யோசித்தேன். 'புதிய மொழி' ஒன்றை நான் கற்பதற்கு பதிலாக, மற்றவருக்கு ஏன் புதிய மொழியை கற்றுக் கொடுக்கக் கூடாது? அடுத்து என்ன படிக்கலாம் என நினைப்பதற்கு பதிலாக, அல்லது தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக, நான் ஏன் படிக்க இயலாத ஒருவருக்கு உதவக் கூடாது? அடுத்தவரைச் செய்ய வைத்து அழகு பார்ப்பதை நான் அருட்பணி. ஜான் பிரிட்டோ பாக்கியராஜ் அவர்களிடம்தான் கற்றுக்கொண்டேன். நான் பிரிட்டோ பள்ளியில் களப்பணியில் இருந்தபோது, 'எல்லாவற்றையும் நீங்களே செய்யுங்கள்' என்று எனக்கும், என் நண்பர் இஞ்ஞாசிக்கும் அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்று பல நேரங்களில் துணிச்சலாக முடிவெடுக்க உதவுகிறது. அவர் எங்களை எப்போதும் முன்னிறுத்தி, தான் திரைக்குப் பின் நின்று கொள்வார். எங்கள் வளர்ச்சியை அவரின் வளர்ச்சியாக நினைத்து உற்சாகமும் தருவார்.

அடுத்தவரின் கண்ணீரில் உடன் நிற்பதைவிட, மகிழ்ச்சியில் உடன் நிற்கலாமே!


2 comments:

  1. Dear Father,Congrats for your valuable scribbling on "Withstand".I knew that you are practicing this in your life.
    Most of the time you live or you keep up the walk the talk.My sincere appreciation to you.

    When are you going to teach me Italian language?

    Thanks for your generous heart!!!

    ReplyDelete
  2. பல நேரங்களில் நமக்குத் தரப்படும் அஅஅறிவுரைகள் வாழ்ந்து காட்ட முடியாத அளவுக்கு abstract ஆ இருப்பதை உணர்ந்திருப்போம்.ஆனால் தந்தை நமக்குத் தரும் விஷயங்கள் அவர் வாழ்ந்து பார்த்து,அதில் ஜெயித்து நம்மோடு பகிர்ந்து கொள்பவையாகவே இருக்கின்றன.கண்டிப்பாக ஏணியின் உச்சியில் ஏறி அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்க்கும் போது அவருக்காகப் பெருமைப்படுவதை விட ' நாமும் அந்த இடத்தில் இருக்க மாட்டோமா' என்ற எண்ணம் தான் மேலோங்கி நிற்கும்.ஆனால் இதற்கு விதிவிலக்காக நிற்கும் தந்தையின் கல்லூரியில் மைக் ஏற்பாடு செய்யும் 'அந்தோணி'யைப் பற்றிப் பேசும்போதும் சரி,அவர் களப்பணியில் இருந்தபோது அவரையும்,அவரது நண்பர் இஞ்ஞாசியையும் ஊக்கப்படுத்திய தந்தை ஜான் பிரிட்டோ பாக்கியராஜை நன்றியுடன் நினைவுகூறும் போதும் சரி எந்த சாயப்பூச்சுமின்றி உள்ளதை உள்ளது போல் எடுத்துரைக்கும் அந்த மனநிலையை உணரமுடிகிறது.இது அடுத்தவரின் மகிழ்ச்சியைத் தன்னதாக நினைக்கும் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.நாமும் கூட அடுத்தவரின் கண்ணீரில் மட்டுமல்ல; அவர்களின் மகிழ்ச்சியிலும் உடன் நிற்கலாமே! உந்துதலுக்குக் காரணமான தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete