Friday, January 29, 2016

ஏன் நடந்தது

தாவீது பெத்சபாவுடன் செய்த பாவத்தை சுட்டிக்காட்ட, இறைவன் நாத்தான் இறைவாக்கினரை அவரிடம் அனுப்புகிறான்.

அரசன் முன் எப்படி நேரிடையாகச் சொல்வது என யோசிக்கின்ற நாத்தான், 'ஒரு ஊருல...' என ஒரு குட்டிக் கதையையும் சொல்கின்றார்.

கதையின் முடிவில், 'அந்த மனிதன் கொல்லப்படவேண்டும்' என்று எழுகிறார் தாவீது.

'தம்பி...அந்த மனிதன் நீங்கதான்!' என நாத்தான் சொன்னவுடன்,

'நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்!' என சரணாகதியாகின்றார் தாவீது.

இதுதான் தாவீதிடம் பாராட்டப்படவேண்டிய குணம்.

தாவீது நல்லவர்தான். அடுத்தவர்களை நீதியோடு நடத்த வேண்டும் என நினைப்பவர்தான். ஆகையால்தான், 'ஒரு ஆடுதான!' என்று சும்மா விடாமல், நீதியைக் காக்க துடிக்கின்றார். கொஞ்சம் சபலப்பட்டு மயங்கிவிட்டார்.

மதிய நேரத்துல அவர் தூங்கியிருந்தார்னா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காது.

பாவி மக! பெத்சபா! அந்த நேரத்துலதான் குளிக்கணுமா? விளக்கு வச்சதுக்கப்பறம் குளிச்சுருக்கலாம்?

சரி பரவாயில்லை! நடந்தது நடந்து போச்சு, நடக்காதது நட்டுனு போச்சு! என விட்டுவிடுவோம்.

நாத்தான் சொன்ன கதை பாதியில் முடிவதுபோல இருக்கிறதை கவனித்தீர்களா?

அதாவது, விருந்தினர் வந்தவுடன் ஏழைக்குடியாவனின் ஆட்டுக்குட்டியை எடுத்து விருந்து வைக்கிறான் பணக்காரன். ஆனால், தாவீது, அந்தக் குட்டியை குழம்பு வைத்து குடித்தது மட்டுமல்லாமல், குடியாவனையும் கொன்றுவிடுகிறார்.

இனி தாவீதுக்கு வருவதெல்லாம் கெட்ட நேரம்தான்.

'நீ யாருக்கும் தெரியாமல் செய்ததை நான் வெட்ட வெளிச்சமாக்குவேன்!' என்றும், 'உன் வீட்டை விட்டு வாள் நீங்காது!' எனவும் ஆண்டவர் சொல்லிவிடுகின்றார்.

இனி 2 சாமுவேல் நூல் இரத்தமயமாகவே இருக்கும்.

'பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா பிற்பகற் தானே வரும்!' என்பது உண்மைதான் போல!

உப்பைத் திண்ணவன் தண்ணி குடிச்சிதானே ஆகணும்!

(சோறு இருக்கும்போது உப்பை ஏன் திண்ணான்? - கேட்க வேண்டிய கேள்வி)

ஆனால், ஆண்டவர் பச்சிளம் குழந்தையை தாக்கியதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அவர் ஆண்டவர். அவர் மனதுக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்வார்.

நாம் ஒன்றும் கேட்க முடியாது.

இன்று மாலை வாக்கிங் போய் திரும்பியபோது ஒரு வீட்டின் முன் ஒரே கூட்டம். எங்கும் புகைமூட்டம். என்னவென்றால், மதியம் சமைத்துக்கொண்டிருந்த ஒரு வயதான பாட்டி அப்படியே பாதியில் இறந்துவிட, அடுப்பு பற்றி, அறை பற்றி, வீடே பற்றி எரிந்துவிட்டது.

'இதுதான் முதிர்வயது தனிமையின் சாபம்!' - என வெளியே நாலுபேர் பேசிக்கொண்டனர்.

இது ஏன் நடந்தது என்று நம்மால் கேள்வி கேட்க முடியவில்லையே!


2 comments:

  1. Why? This is an unanswerable question when we ask it over our life's past and present... our Lord's final question was also 'why'... why have you forsaken me?? Our own life has many a mystical whys.. .

    ReplyDelete
  2. " உன் வழிகள் என் வழிகள் அல்ல; உன் எண்ணங்களும் என் எண்ணங்கள் அல்ல"... என்கிறார் இறைவன். இராயப்பருக்கும்,நல்ல கள்ளனுக்கும் மனம்மாற ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்த இறைவன் அதை ஏன் யூதாஸ் ஸ்காரியோத்துக்கு மட்டும் மறுத்து விட்டார்? தந்தை தாவீது செய்த தவறுக்குத் தனயன் தண்டனை பெறுவதும் நியாயமில்லைதான்..ஆனால் அதுதானே நடந்தது? கேள்வி கேட்கமட்டுமே முடிந்த மனிதனால் அதற்கான பதிலை இறைவனிடமிருந்து
    மட்டுமே பெற இயலும். வாழ்வின் அத்தனை நிகழ்வுகளையும் 'ஏன்,எதற்கு' எனும் கேள்விகளுடன் எதிர்கொள்வோமேயானால் வாழ்க்கையின் அத்தனை சுவாரஸ்சியங்களையும் இழந்து விடுவோம்.அதுமட்டுமல்ல....நம் அத்தனை கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்து விடுமேயானால் நாமும் கடவுளர் தானே! எத்தனை கடவுளர்களைத் தாங்கும் இந்த பூமி? அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவனே " ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?" எனும் பதில் தெரியா கேள்வியோடு தன் உயிரைக் கையளித்தாரெனில் நீங்களும், நானும் எம்மாத்திரம்?எனவே திருப்பாடலின் ஆசிரியருடன் இணைந்து " தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே உருவாக்கும் இறைவா!" என்பதை மட்டும் நம் தாரகமந்திரமாக்க் கொள்வோம்.அது போதும் நம்மைக்காத்துக்கொள்ள!தந்தைக்கு ஒரு வார்த்தை....மேலை நாடுகளில் வியாதியும்,முதுமையும் சாபக்கேடு எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இன்றையத் தங்களின் அனுபவம் கொடுமையின் உச்சம்.இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய விஷயங்களை சந்திக்கிறீர்கள்! நாளை நீங்கள் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கையில் தங்களின் அத்தனை அனுபவங்களும் 'ஆசானாய்' நின்று தங்களுக்கு வழிகாட்டியிருப்பதை உணர்வீர்கள். இறைவனின் பிரசன்னம் என்றும் தங்களுடன் இருப்பதாக! அன்புடன்......

    ReplyDelete