Thursday, January 21, 2016

நல்லவராக

சவுலுக்கு கெட்ட நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

யாரோ ஒரு குரூப், வாட்ஸ்ஆப்பில், 'தாவீது உன்னைக் கொல்லத் தேடுகிறான்! கவனமாக இரும்!' என்று தட்டிவிட, அதை சீரியசா எடுத்துக்கொண்டு, அரச வேலைகளை விட்டு, காடு, மேடு என்று சுற்றி, தாவீதைத் தேடித் திரிகிறார் சவுல்.

சவுலுக்கு ஒன் பாத்ரூம் வர ஒரு குகைக்குள் நுழைகிறார். அந்த குகைக்குள் ஏற்கனவே ஒன் பாத்ரூம் போயிருந்த தாவீது, சவுலுக்கு தெரியாமல், சவுலின் ஆடையின் நுனியை தன் கத்தியால் வெட்டிவிடுகிறார்.

சவுல் வெளியே சென்றபோது, தூரத்தில் நின்று கொண்டு தான் அறுத்தெடுத்த துணியைக் காட்டி, தான் சவுலுக்கு ஒருபோதும் தீங்கு நினைப்பதில்லை என சத்தம் போட்டு அறிக்கையிடுகின்றார் தாவீது.

தாவீது ரொம்ப நல்லவராக இருக்கிறார்:

1. தீமை கிடைக்க வாய்ப்பு கிடைத்தும் தீமை செய்யாமல் இருக்கிறார். தாவீதின் நல்ல குணம் எனக்கு இரண்டு திருக்குறள் வரிகளை நினைவுபடுத்துகிறது:

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல் (203)

(அறிவினுள் சிறந்த அறிவு என்பது தமக்கு தீமை செய்தவர்க்கும் தாம் தீமை செய்யாது இருந்துவிடல்)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (314)

2. 'Character is what you are in the dark' (நல்ல பண்பு என்பது நீ இருளில் எப்படி இருக்கிறாயோ அதுவே!)
யாரும் பார்க்கவில்லையென்றாலும் நாம் எப்படி நடக்கிறோமோ அதுதான் நம் கேரக்டர். அடுத்தவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காக நல்லவர்களாக இருப்பதைவிட, எப்போதும் நல்லவர்களாக இருப்பது.

3. திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைக்க கூடாது. அதாவது, ஆண்டவரின் கை பட்ட ஒருவர்மேல் தன் கையை வைக்கக் கூடாது என்று இங்கே தாவீது ஆண்டவரின் அருள்பொழிவை மதிக்கிறவராக இருக்கின்றார்.

4. 'என் தந்தையே.' தனக்கு தீங்கிழைக்க வந்த சவுலை, 'அப்பா' என அழைக்கிறார் தாவீது. ஒரு தந்தை தன் மகனுக்கு தீங்கிழைக்கலாமா? அல்லது மகன்தான் தந்தைக்கு தீங்கிழைப்பானா? என நினைவுபடுத்துகிறார் தாவீது.

5. இறுதியாக, தன்னை செத்த நாய் என்றும், தௌ;ளுப்பூச்சி என்றும் தாழ்த்திக்கொள்வதோடல்லாமல், 'நீ அரசனுக்குரிய நிலையிலிருந்து உன்னையே தாழ்த்திக்கொள்ளலாமா?' என சவுலுக்கு, தன்மதிப்பை அறிந்துகொள்ளத் தூண்டுகிறார்.

சவுலும் தாவீதின் நல்ல உள்ளத்தை உடனே புரிந்து கொள்கிறார்.

'இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
நீ அரசனாய் இஸ்ரயேலை உறுதிப்படுத்துவாய்!'

என வாயார தாவீதை வாழ்த்துகிறார்.

தாவீதும் சவுலின் வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைந்துகொள்கிறார்.

2 comments:

  1. நல்லவராக இருப்பது’ என்பதற்கான விளக்கங்கள் நபருக்கு நபர் வேறுபடுகின்றன என்பது உண்மைதான். ஆனால், பைபிள் மூலமாக நம் தந்தை மிக மிக அர்த்தமுள்ளதாக்கியிருக்கார்.

    எனவே, கடவுளுடைய கண்ணோட்டத்தில் ‘நல்லவராக இருப்பது’ என்பது அவருடைய நெறிகளைக் கற்றுக்கொள்வதையும் அவற்றுக்கு ஏற்றார்போல் நம் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்வதையும் அவசியமாக்குகிறது.

    இந்த வாரமும்,கடந்த வாரமும்,வரப் போகும் வாரமும் தாவீதின் வாரம். அற்புதமான கருத்துக்களை வேறு வேறு கோணத்தில் பகிர்ந்து கொண்ட தந்தைக்கு பாராட்டுகள்!!!

    இந்த வாட்ஸ்ஆப் க்ரூப்பில் நீங்களும் இருக்குறீர்கள் என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

    ReplyDelete
  2. ஒரு சுவையான தொடர் புதினம் போல ஓடிக்கொண்டிருக்கிறது சவுல்- தாவீதுக்கு
    இடையே நிகழும் நிகழ்வுகள்.தாவீது,சவுல் போன்ற இறைவனின் திருக்கரத்தால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்களை நாம் கையாளும் விதம் குறித்து விவரிக்கத் திருக்குறளிலிருந்தும், விவிலியத்திலிருந்தும் தந்தை மேற்கோள் காட்டும் வரிகள் நம் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன.தனக்குத் தீங்கிழைத்த சவுலை 'அப்பா' என்றழைக்கும் தாவீதும், 'இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!' என அவரை வாயார வாழ்த்தும் சவுலும் நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டிய பாத்திரங்கள்.நல்ல பதிவே எனினும் அங்கங்கே தந்தையின் சேட்டையும் வெளிப்படுகிறது. ஆனாலும் கூட சிந்திக்க வைக்கும் பதிவுக்காக தந்தையைப் பாராட்டியே தீர வேண்டும்.!!!

    ReplyDelete