Thursday, January 7, 2016

விரும்பினால்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 5:12-16) இயேசுவிடம் வருகின்ற தொழுநோய் பிடித்தவர், 'ஆண்டவரே, நீர் விரும்பினால் (if you will) எனது நோயை நீக்க உம்மால் முடியும் (you can)!' என்கிறார்.

ஆங்கிலத்தில் 'modal verbs' என்னும் துணை வினைச்சொற்களில் 'to be able' ('முடியும்') மற்றும் 'to will' ('விரும்பும்') என்பதன் அர்த்தத்தை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இரண்டும் ஒன்றல்ல.

உதாரணத்திற்கு, நம்மால் இரவு முழுவதும் விழித்திருந்து படிக்க முடியும். ஒருவேளை அதற்கான விருப்பம் நம்மிடம் இல்லாமல் இருக்கலாம்.

நம்மால் மருத்துவமனையில் இருக்கும் நம் நண்பரை போய் சந்திக்க முடியும். ஆனால் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

நம்மால் முடிகின்ற காரியத்தை செய்வதைக் காட்டிலும், நாம் விரும்புகிற காரியத்தில்தான் நாம் நம் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடிகிறது.

நேற்று மாலை எலிசா பாட்டியுடன் காஃபி குடிக்கச் சென்றிருந்தேன்.

முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட தன் தங்கையை பார்த்து வந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

தான் விரும்பாத ஒரு இடத்தில் தன் தங்கை இருப்பதை, அவரின் கண்கள் உணர்த்தியதாக அவர் சொன்னார்.

மேலும், நாம் எல்லாரும் நம் விருப்பப்படி செய்கிறோம். ஆனால் ஆண்டவரின் விருப்பம்தான் வெற்றி பெறும் என்பதை மறந்துவிடுகிறோம் என்றும் சொன்னார்.

அதற்கு அவர் சொன்ன ஒரு பழமொழி: 'ஆண்டவர் சனிக்கிழமை நமக்கு படியளக்கவில்லையென்றால், ஞாயிறு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது!'

நல்லா இருக்குல சொலவடை!

தொழுநோய் பிடித்தவருக்கு இயேசுவால் 'முடியும்' அல்லது 'முடியாது' என்பது பிரச்சினையல்ல.

இயேசுவுக்கு, 'விருப்பமா' அல்லது 'விருப்பமில்லையா' என்பதுதான் அவரின் தேடல்.

'நான் விரும்புகிறேன்' என்கிறார் இயேசுவும்.

நாம் ஓர் அடி எடுத்து வைக்க, கடவுள் இரண்டு அடி எடுத்து வைப்பார் என்பது இயேசுவின் செயலில் வெளிப்படுகிறது. 'கையை நீட்டி,' 'தொட்டு,' குணம் தருகின்றார்.


2 comments:

  1. நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை விவிலியத்தின் பின்புலத்தை வைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக அவற்றின் அர்த்தம் வேறுபடுகிறது என்பது மட்டுமல்ல; அவற்றின் முக்கியத்துவமும் கூட மிகையாகத் தெரிகிறது. உடலால் முடியக்கூடிய பல காரியங்களை உள்ளம் செய்ய விரும்புவதில்லை.நாம் விரும்பிச் செய்யும் செயல்களில் மட்டுமே நம் திறன் வெளிப்படுகிறது எனில் நாம் எதையும் உடலாலும்,உள்ளத்தாலும் விரும்பிச் செய்ய வேண்டும் என்றுதானே அர்த்தம்?நாம் உடலாலும்,உள்ளத்தாலும் சோர்ந்த நேரங்களில் 'அவரின்' கையை நீட்டி,நம்மைத் தொட்டு குணப்படுத்த அவர் 'விரும்புமாறு' வேண்டுவோம்.எங்கேயோ இருந்துகொண்டு தான் வாழும் முறையால் என்னில் அதிகமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் 'ரோசாப்பாட்டிக்கும்', அவரை அறிமுகப்படுத்திய தந்தைக்கும் என் வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Rev.Fr.Yesu,well said and congrats for the below said precious words of yours.

    நாம் ஓர் அடி எடுத்து வைக்க, கடவுள் இரண்டு அடி எடுத்து வைப்பார் என்பது இயேசுவின் செயலில் வெளிப்படுகிறது. 'கையை நீட்டி,' 'தொட்டு,' குணம் தருகின்றார்.

    Let almighty God be with us whenever we feel his presence in our life.Thanks a lot.

    ReplyDelete