Sunday, January 17, 2016

எலய எடுடான்னா

நம்ம ஊரில் ஒரு பழமொழி உண்டு:

'எலய எடுடான்னா, தலய எண்ணுற வேலை உனக்கெதுக்கு?'

அதாவது, திருமண விருந்து முடித்து இலையை எடுடான்னு ஒருவனுக்கு வேலை கொடுக்கப்பட, அவன் அத்தோடு சேர்ந்து தலையையும் எண்ணிக்கொண்டிருந்தானாம்!

அதாவது, நமக்குச் சொல்லப்படும் வேலை ஒன்று. ஆனால் நாம் செய்யும் வேலை வேறொன்று.

இதை நம்ம ஊர் கடைகளில் நிறைய பார்க்கலாம்.

'நாம் 'ரின் சோப்' கொடுங்கள்!' என்று கேட்டால், கடைக்காரர், 'ஏரியல்' சோப் கொடுத்து, 'இது நல்லா இருக்கும் தம்பி!' என்பார். கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள் கேட்பதை தரவேண்டுமே தவிர, தங்களிடம் இருப்பதை தரக்கூடாது. இல்லையா?

இப்படித்தான் நடக்கிறது நாளைய முதல்வாசகத்தில் (1 சாமு 15:16-23).

சவுலிடம், 'இலையை எடுடா' என ஆண்டவர் சொல்ல, அவரோ, 'தலையை எண்ணிக்கொண்டு' நிற்கிறார்.

அமலேக்கியருக்கு எதிரான போர். இதுதான் சவுலின் முதல் போர்.

அமலேக்கிய நாட்டிலுள்ள உடைமைகள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், பாலகர்கள், மாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறு சவுலுக்கு கட்டளையிடுகின்றார் இறைவன்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு கேள்வி வரலாம். அன்பும், இரக்கமும் உள்ள இறைவன் எப்படி எல்லா உயிர்களையும் கொல்லுமாறு சொல்லலாம்? வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலர் குடியிருக்கும்போது, அது நன்றாக அழித்து, சுத்தம் செய்யப்பட்ட புதிய கரும்பலகை போல இருக்க வேண்டும். இதற்காகத்தான் இந்தக் கட்டளை.

சவுல் அமலேக்கியரை வென்றாலும், தான் கண்டதில் சிறந்தவற்றையெல்லாம், தனக்கும், தன் வீரர்களுக்கும் என வைத்துக்கொள்கிறார் - பெண்கள், ஆடுகள், மாடுகள் போன்றவற்றில் சிறந்தவற்றை வைத்துக்கொண்டு, பயனற்றவற்றை அழித்துவிடுகின்றனர்.

இது ஆண்டவருக்குப் பிடிக்கவில்லை. சாமுவேலை அனுப்பி, 'தம்பி! ராசா! ஏம்ப்பா இப்படி செய்தாய்?' என்று கேட்டபோது, சவுல் ரொம்ப கூலா, 'இது எனக்கா! இல்லை கடவுளுக்கு பலி செலுத்த!' என்கிறார்.

ஆனால், இந்தக் காரணத்தை ஆண்டவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

சவுல் புறக்கணிக்கப்படுகிறார்.

மூன்று காரணங்கள்:

அ. தனக்கு எல்லாம் தந்தவர் கடவுள். இன்னும் தனக்கு தரவல்லவர் அவர் என்பதை சவுல் மறந்துவிட்டு, தன் கையிருப்பை பார்க்கத் தொடங்குகிறார்.

ஆ. 'அவர் சொன்னதைச் செய்துவிட்டு அமைதி காண்போம்' என்று இருப்பதற்கு பதிலாக, தானே ஒரு புதிய செயலைச் செய்து, அதை பலி என்ற பெயரில் நியாயப்படுத்துகிறார்.

இ. சவுல், கடவுளை மகிழ்ச்சிப்படுத்துதலை விட்டு, தனக்கு கீழ் இருக்கும் படைவீரர்களுக்கு அன்பளிப்பு கொடுத்து குஷிப்படுத்த நினைக்கிறார்.

இலையை எண்ணச் சொன்னாலோ, எடுக்கச் சொன்னாலோ,
இலையை மட்டும் எண்ணலாமே! எடுக்கலாமே!

2 comments:

  1. பல நேரங்களில் நம் வழிபாடுகளின் நோக்கம் கடவுளைத் திருப்துபடுத்துவது எனத் தவறாக எண்ணுகின்றோம்.இதே மனநிலைதான் சவுலிடம் காணப்பட்டது.சிறந்த ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு கடவுளுக்குப் பலி செலுத்தினால்,அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று எண்ணினார்.ஆனால்,சாமுவேலோ கடவுள் விரும்புவது கீழ்ப்படிதலையே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.கீழ்படிதல் என்பது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றாற்ப்போல் ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ளுதல் ஆகும்.கீழ்ப்படிதல் இல்லாமல் எவ்வளவு உயர்வான பலிகளைக் கடவுளுக்குச் செலுத்தினாலும் அதனால் பயனேதும் கிடையாது.இதையே தந்தை மிக மிக அழகாக தனது பதிவில் இவ்வாறு கொடுத்து இருக்கார் அதாவது "இலையை எண்ணச் சொன்னாலோ, எடுக்கச் சொன்னாலோ,
    இலையை மட்டும் எண்ணலாமே! எடுக்கலாமே"! கீழ்ப்படிதலின் அவசியத்தை சொல்லாமல் சொல்லிய தந்தைக்கு எனது நன்றியும் பாராட்டுக்களும்!!!

    ReplyDelete
  2. அழகான,அர்த்தமுள்ளதொரு நாட்டுப்புறப் பழமொழியோடு தன் பதிவை ஆரம்பித்திருக்கிறார் தந்தை.பல நேரங்களில் நாம் அனைவருமே சவுலைப்போன்று இப்பேற்பட்ட 'அதிகப்பிரசங்கித்தன'மான வேலைகளில் ஈடுபடத்தான் செய்கிறோம்.நிலைமை சுமுகமாக இருக்கும்போது சரி,ஆனால் சுமைகள் நம் கழுத்தை நெரிக்கையில், செய்வது இன்னதென்று குழம்பிய பொழுதுகளில் இறைவனைத் துணைக்கழைப்பதற்கு பதில் மாற்று வழிகளில் மனத்தை செலுத்துகிறோம். கையில் இருப்பதன் அருமை தெரியாமல் பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுகிறோம்.இன்றையப் பதிவில் வரும் சவுலைப் போன்று நாமும் படைத்தவருக்கே சவால் விடுகிறோம்.இம்மாதிரி சமயங்களில் நாம் செய்ய வேண்டியதென்ன? கண் மூடி நம் மனத்தின் அமைதியில் இறைவன் குரலைக் கேட்க முயல்வதே நாம் செய்ய வேண்டிய செயல்."இதுமட்டும் காத்த இறைவன் இனியும் என்னைக் காப்பார்" என்று நமக்கு நாமே சொல்ல வேண்டிய நேரமிது.எடுக்கச் சொன்ன,எண்ணச்சொன்ன இலைகளை மட்டும் எடுப்போம்; எண்ணுவோம். மற்ற வேலைகளை கவனிக்க அதற்கேற்ற ஆட்களை அவர் அனுப்புவார்.ஒரு 'எதார்த்தமான',அன்றாடம் நம்மைப் பாதிக்கக் கூடிய விஷயத்தை அலசிப்பார்க்க காரணமான தந்தைக்கு நன்றிகள்!!!!

    ReplyDelete