Wednesday, January 27, 2016

மனித வழக்கம்

மனித வழக்கம் இதுவல்லவே!

தாவீது இறைவனுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க, நாத்தான் இறைவாக்கினரை அவரிடம் அனுப்புகின்ற கடவுள், தானே தாவீதுக்கு வீடு ஒன்றை, அதாவது சந்ததி ஒன்றைக் கட்டி எழுப்புவதாக வாக்களிக்கின்றார்.

இதைக் கேட்டவுடன் ஆண்டவரின் இல்லத்திற்கு ஓடிச் செல்கின்ற தாவீது பாடும் நன்றிப்பாடலே நாளைய முதல் வாசகம் (2 சாமு 7:18-27)

ஆண்டவர் இதுவரை தமக்கும், தம் வீட்டாருக்கும் செய்த அனைத்தையும் பட்டியல் போடுகின்றார் கடவுள்.

தாவீதின் பாடலை கொஞ்சம் அரசியல் கலந்து பார்ப்போம்.

நேற்று 67ஆம் குடியரசு தின விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தோம்.

கடந்த வருடம் நம்ம பிக் பிரதர் ஒபாமா. இந்த வருடம் பிரெஞ்சு அதிபர் ஹாலந்தே.

நம் இந்திய பாதுகாப்பின் மேல் நம்பிக்கை இல்லாததால் என்னவோ, தானே தன் இராணுவத்தை அழைத்துவந்திருந்தார். மேலும், அந்த இராணுவத்தை நம் இராணுவத்தின் அணிவகுப்பில் சேர்த்ததுதான் கேலிக்கூத்து.

இன்னொரு கேலிக்கூத்து நம்ம ரஜனிக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்தது. அவர் நடிக்கிறார். பணம் சம்பாதிக்கிறார். அவ்வளவுதான். மடையனுக! இதற்கெல்லாமா விருது கொடுப்பார்கள்? என்ன டயலாக் தனக்கு கொடுக்கப்படுகிறதோ, அதை வாசித்து சம்பளம் வாங்கப்போகிறவர் அவர். அவர் பேசும் டயலாக்கினால் என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில் சோற்றுப்பானை பொங்கி வழியுமா? இன்னொரு கூத்து கேரளாவில். நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனாவின் (அவரும் நடிகைதான்) அடக்கத்தின் போது 21 குண்டுகள் முழங்க அரச மரியாதை வழங்கப்படுமாம். கலைக்கூத்தாடிகளின் உலகம் ஆகிவிட்டது கண்ணம்மா!

திரிபுரா குடியரசு தின விழாவில் பங்கேற்ற பெண் அமைச்சர் ஒருவர், 'எல்லாருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்' என முக்கா, முக்கா மூணு தடவை சொல்லிவிட்டார். பாவம் புள்ள. பாதித்தூக்கத்துல விழாவுக்கு வந்துருச்சு போல.

கடந்த வாரம் எஸ்.வி.எஸ். ஓமியோபதி கல்லூரி வளாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மூன்று மாணவியர், நாம் வாழும் குடியரசு என்னும் குட்டிச்சுவற்றைக் காட்டிவிட்டார்கள். தங்கள் உரிமைக்காக அவர்கள் 19 அரசு எந்திரங்களிடம் முறையிட்டிருக்கிறார்கள். யாரும் கண்டுகொள்ளவில்லை?

குடியரசு என்பது நம்ம ஊரில் தேர்தலோடு மட்டும் முடிந்துவிடுகிறது. குடிமக்கள் ஓட்டு போடுகிறார்கள். ஆனால், அரசு என்னவோ விளம்பரதாரர்களுக்கும், வியாபாரிகளுக்கும்தான் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இப்போது தேர்தல் காய்ச்சல் அடிக்கிறது. திராவிட கட்சிகள் வழக்கம்போல ஒருவர் மற்றவரை வசைபாடிக்கொண்டும், தங்களைத் தாங்களே துதி பாடிக்கொண்டும் இருக்கின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் குடும்ப ஆட்சி நடத்துபவை என குற்றம் சுமத்துகின்றார் திருமா. விஜயகாந்த் இன்னும் ஸ்டெடி ஆகவில்லை. சீமான் போன்றவர்கள் எப்படியாவது அரசாண்டு பார்க்க நினைக்கிறார்கள்.

நம் எல்லாருக்கும் நடப்பது என்னவோ வேடிக்கையாகவே இருக்கிறது.

மேலே மோடி அடுத்த எந்த நாட்டிற்கு சுற்றுலா போவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள் வாங்க பிரான்சுடன் ஒப்பந்தமாம்.

குடியரசு என்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

இந்த உலகிற்கு வருகிறோம். கொஞ்ச நாள் இருக்கிறோம். சுவடுகளே இல்லாமல் சென்று விடுகிறோம்.

கொஞ்ச நாள் இருக்கும் இந்த கொஞ்சப் பொழுதில் எவ்வளவு பிரச்சினைகள்?

ரொம்ப பாவம் நாம்!

தாவீதுக்கு தானே ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்களித்த இறைவன் ஏனோ, நம் குடியரசை இந்த அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றி நமக்கே தர மறுக்கின்றார்.


1 comment:

  1. அழகான அரசியல் நையாண்டி. குடியரசு பெற்ற நம் தாய்த்திரு நாட்டின் அவலங்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் தந்தை. 'இந்தியன்' என மார்தட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் கூனிக்குறுக வேண்டிய செய்திகள்.இவற்றிற்கு யார் பொறுப்பேற்பது? ஓட்டுப்போடும் குடிமக்களை வீதியில் நிற்கவிட்டு,விளம்பரதார்ர்களுக்கும்,வியாபாரிகளுக்குமாக மட்டும் அரசு இயந்திரங்கள் செயல்படும் வரை தவிர்க்க முடியாத்து இந்தக் கேலிக்கூத்து.பூனைக்கு மணிகட்ட முயற்சி எடுக்கும் திரு.சகாயம் போன்றவர்கள் புறக்கணிக்கப்படுவது மட்டுமின்றி ஓரங்கட்டப்படுகிறார்கள்.இந்த நிலை நீடிக்கும் வரை இப்படி 'யாரேனும் ஒருவர்' நம் அவலங்களைப் பட்டியலிட நம்மைப்போன்றோர் அதைப்படித்து 'அப்படியா?' எனக் கேட்கும் இழிநிலை மட்டுமே நீடிக்கும்.ரொம்பப் பாவம் தான் நாம்! தாவீதுக்குத் தானே வீட்டைக்கட்டுவதாக வாக்களித்த இறைவனை,நம் குடியரசை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றி நம்மிடமே திருப்பித் தர வேண்டுவோம்.அவலங்களே எனினும் அத்தனையையும் சேகரித்து " ஊர்ல எல்லாரும் என்னதான்டா பண்றீங்க?" என்பதுபோல் காரியத்தில் பெருசா ஒன்றும் நாம் செய்யப்போவது இல்லையெனினும் நம்மை யோசிக்கவாவது வைத்த தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete