Wednesday, January 6, 2016

பெஃபானா

சனவரி 6ஆம் நாளை ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா என்று கொண்டாடுகின்றோம். வசதிக்காக, இந்த நாளின் முந்தைய ஞாயிறன்றும் இது கொண்டாடப்படலாம்.

இந்த நாளை இத்தாலியில் 'பெஃபானா' என்று சிறப்பிக்கிறார்கள்.

பெஃபானா என்பதற்கு மூன்று அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன:

அ. 'எபிஃபானியா' என்ற இத்தாலிய வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரியாமல், காலப்போக்கில் அது 'பெஃபானா' என்று மாறிவிட்டது.
ஆ. 'பெஃபானா' என்றால் 'முகம் மாற்றம்.' அதாவது, குழந்தை இயேசுவைச் சந்திக்க வந்த மூன்று ஞானியரும், அவரை சந்தித்துவிட்டு போய்விடுகின்றனர். குழந்தையை தேடி நான்காவது ஞானி ஒருவர் வருகிறார். அவர் ஏரோதின் கண்ணில் அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு மூதாட்டியை போல தன் உடையை மாற்றிக்கொண்டு, குழந்தை இயேசுவைத் தேடுகின்றார். இவரால் இறுதிவரை குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆக, தான் கையில் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையெல்லாம் சின்னக் குழந்தைகளுக்கு கொடுத்துவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் இதே நாளில் குழந்தையைத் தேடுகிறார் என்பது பரவலான நம்பிக்கை.

இ. உரோமைக் கடவுள் ஸ்த்ரினா என்பவர் சூரியக் கடவுளின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாருக்கும் பரிசுகள் கொடுப்பாராம். உரோமையில் கிறிஸ்தவ மதம் வேரூன்றிய போது, ஏற்கனவே அங்கு இருந்த மதத்தின் மற்றும் மக்களின் நம்பிக்கையை தன்வயமாக்கிக் கொள்கிறது. ஆக, கிறிஸ்தவம் சூரியக் கடவுளாக இயேசுவை உருவகித்து பிறந்த நாள் கொண்டாட, அதன் தொடர்ச்சியாக, ஸ்திரினா என்பவரும் 'பெஃபானா' என்று பெயர் மாற்றம் பெற்று உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டார்.

இன்றைய நம்பிக்கை

இன்று கடைகளில் இந்த மூதாட்டியின் பொம்மைகளை விற்கிறார்கள்.

மூதாட்டியின் கையில் ஒரு விளக்குமாறு இருக்கும். இவர் உடல் முழுவதும் கறுப்பாக இருக்கும்.

அதாவது, ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் குழந்தையைத் தேடி பறக்கின்ற இந்த மூதாட்டியின் வாகனம் விளக்குமாறு. மேலும், இவர் வீட்டிற்குள் புகைக்கூடு வழியாகத் தான் நுழைவார். ஆக, இவர் உடலெல்லாம் கறுப்பாய் இருக்கிறது. விளக்கமாறுடன் நுழையும் இந்த மூதாட்டி, வீட்டைத் துப்புரவு செய்து, குழந்தைகளின் சாக்ஸில் மிட்டாய்களை, பரிசுப் பொருட்களை - அவர்கள் சமத்தாக இருந்தால் - வைப்பார். குழந்தைகள் சுட்டியாக இருந்தால் விளக்குமாற்றின் ஒரு குச்சியை அல்லது கரிக்கட்டையை வைத்துவிடுவார்.

மேலும், இந்த பாட்டிக்கு சாப்பிட கொடுப்பதற்காக, எல்லா வீடுகளிலும் இன்று மேசையில் ஒரு கிளாசில் ஒயினும், ஒரு தட்டில் அந்தந்த ஏரியா ஸ்பெஷல் ஸ்வீட்டும் வைப்பார்கள்.

இந்த மூதாட்டி ஒவ்வொரு புதிய ஆண்டின் பிரச்சினைகளையும் தன் விளக்குமாறால் பெருக்கி வெளியேற்றிவிடுகின்றார் என்பதும் நம்பிக்கை.

புதிய அர்த்தம்

அ. சாக்ஸ். மனித உடைகள் வளர்ச்சி பெறத் தோன்றிய காலத்தில், கைப்பைகள் உருவாகக் காரணமே காலில் அணியும் சாக்ஸாகத்தான் இருந்தது. அதாவது, குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் தங்கள் பாதங்கள் மற்றும் காலை மறைக்கும் அளவிற்கு தோல் மற்றும் துணி ஆடைகளை அணிந்தனர். மேலும், தங்களின் மதிப்பிற்குரிய பொருட்களை இந்த சாக்ஸில் மறைத்து வைத்தனர். மேலும், பாட்டிமார்களின் சுருக்கு பை போல இருந்தது இந்த சாக்ஸ். ஆகையால்தான், இன்றைய நாளில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் சாக்ஸில், அல்லது சாக்ஸ் போன்ற வடிவ பைகளில் வழங்கப்படுகின்றன.

ஆ. பாட்டி. பாட்டியின் பண்பு கொடுப்பது. பாட்டிமார்கள் மிக ஆச்சர்யமானவர்கள். அவர்கள் வாழ்வை வாழ்ந்து முடித்தவர்கள். இதுவரை தாங்கள் கை நீட்டி பெற்றதை, அவர்கள் இனி கைவிரித்துக் கொடுப்பார்கள். ஆகையால்தான், கொடுத்தல் மையப்படுத்தப்படும் இந்த நாளில் மனித சிந்தனை பாட்டி என்ற உருவத்தை எடுத்திருக்கிறது. அம்மா, அப்பா பிள்ளைகளுக்கு கொடுப்பதில் ஒரு ரிசர்வேஷன் இருக்கும். அதாவது, எல்லாவற்றையும் அப்படியே கொடுத்துவிட மாட்டார்கள். நம் நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் கொடுத்தலில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கும். ஆனால், இந்த பாட்டிகள் அப்படியில்லை. அவர்களுக்கு கொடுத்தலில் எதிர்பார்ப்பு இருக்காது. பொறாமை இருக்காது. மற்றவர்கள் கிள்ளிக் கொடுக்கும்போது, இவர்கள் மட்டும் அள்ளிக் கொடுப்பார்கள்.

(நான் இந்த இடத்தில் என் அய்யாமை (அப்பாவின் அம்மா) மற்றும் சின்ன அய்யாமை (அப்பாவின் சித்தி) இவர்களை நினைத்துப் பார்க்கிறேன். என் அய்யாமை தன் முதிர்ந்த வயதிலும், வயலில் வேலை பார்த்து சேர்த்த பணத்தை தன் மகன்களிடம் கூட கொடுப்பதில்லை. அதை அப்படியே எனக்கும், என் தங்கைக்கும் கொடுப்பார். தனக்கென்று ஒரு புதிய சேலையைக் கூட வாங்காமல், இருந்த இரண்டு சேலைகளையே மாற்றி, மாற்றி அணிந்து, எங்கள் எல்லாரையும் உடுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். இப்படி உங்கள் வீட்டிலும் உங்கள் பாட்டிமார் இருந்திருப்பார்கள்.

தமிழ் மொழி பேரன், பேத்தி என அழைப்பதற்கு காரணம் என்ன? இவர்கள்தாம் தங்கள் மூதாதையரின் பெயரை எடுத்துச் செல்லக் கூடியவர்கள் - பெயரன், பெயர்த்தி. ஆக, இந்த பேரன், பேத்திகள்மேல் பாட்டிகளுக்கு கொள்ளைப் பிரியம்.

இ. விளக்குமாறு. நம்ம ஆம் ஆத்மி இதை தேர்தல் சின்னமாக வைத்து நன்றாக தொடங்கினார்கள். ஆனால், மிக மோசமாக சொதப்பிவிட்டார்கள். இன்று நம் வீடுகளில் புகைக்கூடுகள் இல்லை. ஆனால், நம் இறந்து போன முன்னோர் இன்றும் நம் கூரை வழியே இறங்குகின்றனர். நம் வீடுகளை எல்லா பிரச்சினைகளிலிருந்தும் துப்புரவு செய்கின்றனர்.

ஆக, நம் வாழ்வின் அஸ்தமனத்திலும் நாம் அழகாயிருக்க முடியும்.

நம் முகத்தில் சுருக்கம் தோன்றினாலும், உள்ளம் நேராக இருக்கும்.

நம் தலைமுடி நரைத்தாலும், கொட்டினாலும், நம் அன்பும், தியாகமும் கறுத்து நிற்கும்.


3 comments:

  1. தந்தைக்கு வணக்கம். "பெஃபானா "மிகவும் சிறப்பான ஒரு பதிவு.உங்கள் பதிவின் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.இந்த மாறி நல்ல விஷயங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ள குழந்தை இயேசு உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்.

    இது இந்த வருடத்தின் ஆறாவது பதிவு.ஆரம்பமே ரொம்ப அமர்க்களமாக இருக்கிறது .இன்னும் நிறைய நிறைய நல்ல செய்திகளை எங்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள புது புது பதிவுகளை படைக்க உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    தந்தைக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  2. "மூன்று இராஜாக்கள் திருவிழா" என்பது குழந்தை இயேசுவைக் காண வந்த மூன்று அரசர்களைப் பற்றியது மட்டுமே என்று தான் நினைத்திருந்தேன்.இன்றுகாலை தான் ஒரு யோசனை...அதென்ன 'திருக்காட்சி விழா என்று?நம் ஊர்களில் 'மூன்று இராஜாப் பொங்கல்' என முடிந்துவிடும் ஒரு சாதாரண விஷயத்துக்குள் இத்தனை விஷயங்கள் ஒளிந்திருப்பதைவெளிக்கொணர்ந்த தந்தைக்கு நன்றிகள்!புகைக்கூடு,சாக்ஸ்,விளக்குமாறு ...அத்தனையையும் தாண்டி என் நினைவில் நிலைத்திருப்பது 'பாட்டி' என்ற ஒரு நிலை மட்டுமே.தந்தை தனது இரு 'அய்யாமை'களின் குணாதிசயத்தைப் பெருமையுடன் நினைவு கூறுவதன் வழியாக அத்தனை பாட்டிகளையும்( என்னையும் சேர்த்துத்தான்) பெருமைப்படுத்தியுள்ளார்.ஆம்! இந்தப் பாட்டிகளின் செயல்களில் பிறர் நலன் காப்பது தவிர எந்த உள் நோக்கமும் இராது. மற்றவர்கள் கிள்ளிக்கொடுப்பதை இவர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள்.உண்மைதான்.இதற்குக் காரணம் அவர்கள் கையிலிருக்கும் பொருளல்ல; அவர்களின் தாராளமனம்.எல்லாவற்றிற்கும் மேலாக ஆணி அடித்தாற்போல் தந்தையிடமிருந்து வரும் அந்த வரிகள்....." நம் வாழ்வின் அஸ்தமனத்திலும் அழகாய் இருக்க முடியும்; நம் முகத்தில் சுருக்கம் தோன்றினாலும் உள்ளம் நேராக இருக்கும்; நம் தலைமுடி நரைத்தாலும்,கொட்டினாலும் நம் அன்பும்,தியாகமும் கருத்து நிற்கும்"... ...அனைத்துப் பாட்டிமாரின் பெயரால் தந்தையை உச்சிமுகர்ந்து என நன்றியை உரித்தாக்குகிறேன்!!! இறைவன் தங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக!!!

    ReplyDelete